ஆறு மாதங்களுக்கு முன்பு
“அடிச்சிருவேன் பத்ரா…” அஞ்சனா கோவில் வாசலில் வைத்து மகளை மிரட்டிக் கொண்டிருந்தார். விடுமுறைக்கு வந்த அபிதன், அக்காவின் நடவடிக்கையை வருத்தத்தோடு சுட்டியிருக்க அவருக்குமே தாளவில்லை. அதில் வழக்கமாக மகளிடம் காட்டாத சிடுசிடுப்பு அவரையறியாமல் வந்திருந்தது.
“இப்ப உள்ள வரப்போறியா என்ன?” அதிகாரமாய்க் கேட்டவரைக் கெஞ்சலுடன் பார்த்தவள் கொஞ்சல் மொழியில் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள்.
“அம்மா.. ப்ளீஸ்மா.. யானை இல்லாத வேற கோவிலுக்குப் போலாம்…”
“நீ ஏழு வயசுல கோவில்ல யானை இருக்கும்… வரமாட்டேன்னு அடம்பிடிச்சது சரி… இப்ப ஏழு கழுதை வயசாச்சு.. இன்னும் யானைக்குப் பயந்து வரமாட்டேன்னுட்டு இருக்க… யானை அந்தப்பக்கம்தான் இருக்கும்.. நாம இப்படிகூடி போயிட்டு வந்துரலாம்.. வா…”
“அதுக்கு மதம் பிடிச்சு சங்கிலியை அத்துக்கிட்டு வந்துச்சுன்னா எந்தப்பக்கம் வரும்ன்னு அதுக்கே தெரியாதும்மா… வேணாம்மா…”
“அதுக்கு ஏன்டி மதம் பிடிக்கப்போகுது?”
“அதெல்லாம் அதுக்கு ஆயிரத்தெட்டு காரணம் இருக்கும்… நம்மகிட்ட சொல்லிக்கிட்டாமா இருக்கும்?”
சுருசுருவென வந்த கோபத்தோடு மகளைப் பார்த்தவர் பல்லைக் கடித்தார்.
“சரி… நீ வெளியவே இரு.. நான் மட்டுமாவது போயிட்டு வந்துர்றேன்…” நகர்ந்தவரை முன்னால் வந்து மறித்தாள்.
“இப்ப என்னடி?” சலித்துப்போன குரலில் முகத்தைப் பாவமாக வைத்தபடி கேட்டார்.
“அம்மா… யானைக்கு மதம்பிடிக்கும்போது நீங்க உள்ளே இருந்தா நான் எப்படி நிம்மதியா இருப்பேன்? அதோட உள்ள இருக்க யானை வெளியே ஓடி வர எவ்ளோ நேரம் ஆகும்?”
“இங்கபாரு..தரையில உடைக்கவேண்டிய தேங்காயை உன் தலைல உடைச்சுருவேன்… சும்மா இருக்க யானைக்கு மதம் பிடிக்கும் மதம் பிடிக்கும்ன்னு எனக்கு வெறி பிடிக்க வச்சுராத… மரியாதையா என்கூட உள்ள வர்றதுன்னா வா.. இல்ல வெளியே நில்லு.. என்னைப் படுத்தாத… இப்ப என்ன உள்ள வர்றியா? இல்ல வெளியே நிற்கிறியா?”
அவர் போட்ட போட்டில் நிஜமாகவே தேங்காயைத் தலையில் போட்டாலும் போட்டுவிடுவார் எனத் தோன்ற “வெளியவே நிக்கிறேன். வண்டி பக்கத்துல…” என்றவளைப் பார்த்து முறைத்துவிட்டு கோவில் வாசலை நோக்கி நடந்தார் அஞ்சனா. இரண்டெட்டு வைக்கவும் அம்மா என்றழைத்தபடி மகள் ஓடிவர, நின்றார்.
“என்ன வர்றியா?”
“இல்லம்மா.. யானை பக்கத்துல போயிராதீங்க…” என்றவளை அவளது அன்னை பார்த்த பார்வையில் பறந்துவந்து வண்டியின் அருகில் நின்றுவிட்டாள். சற்றுநேரம் போவோர் வருவோரை வேடிக்கை பார்த்தாள். அலைபேசியை எடுத்துப்பார்க்கலாம் என்று தோன்றியதுதான். ஆனால் அவள் அலைபேசியில் மூழ்கிவிட்ட நேரம் யானை சங்கிலியை அத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டால்?
பாகனைக் கொன்ற யானை.. பக்தரை மிதித்த யானை என்று எத்தனை செய்திகளைப் படித்திருப்பாள்? அதுபோன்ற செய்திகளில் தன்பெயர் வராமல் இருக்கவேண்டுமானால் கவனத்துடன் நிற்பது அவசியம் எனத் தனக்குத் தானே அறிவுறுத்திக்கொண்டவள், வண்டியில் கூட அன்னை ஓடிவந்தால் ஏற்றிச்செல்லுவதற்கு வசதியாக உடனே இயக்கும் நிலையில்தான் அமர்ந்திருந்தாள். பெரும்பாலும் வயதானவர்களும் இளம்பெண்களும் இல்லை, குடும்பஸ்தர்களுமாக வந்துகொண்டிருக்க அவளுக்கு ஒருகட்டத்தில் சலிப்பு தட்டியது.
அவள் தேடியதென்னவோ ரசிப்பதற்கு ஒரு குழந்தைதான். குழந்தைகள் என்ன செய்தாலும் பார்க்க அழகாயிருக்கும். பொழுது போய்விடும். எனக் கன்னத்தில் கைவைத்து வண்டியில் அமர்ந்திருந்தவளின் பார்வை வட்டத்தில் அவன் பட்டான். பொதுவாக, அறிமுகமற்ற இளம் ஆண்களைக் கண்டால் கண்ணில் பாராமல் வேறுபுறம் திரும்பிவிடுவதுதான் அவளது வழக்கம். ஆனால், இவன் கொஞ்சம் நன்றாக இருந்தான். கூடவே, வண்டிக்கண்ணாடி வழியாகத் தான் பார்ப்பது அவனுக்குத் தெரியவும் செய்யாது எனத் தோன்ற அவனைப் பார்த்தாள். அவள் பின்னால் வண்டியை நிறுத்திவிட்டு இறங்காமல் அலைபேசியை எடுத்து ஏதோ எண்களைத் தட்டிக் காதில் வைத்தவன் நிமிரவும் அவள் வேறுபுறம் திரும்பியிருந்தாள்.
பேசத்தொடங்கியவன் பேசிய மொழி மலையாளம் போல இருக்க வியப்பாகப் பார்த்தவள், சற்றுநேரம் கழித்துத்தான் நிதானித்தாள். அது மலையாளம் அல்ல. தமிழ்தான். ஆனால் பேசிய தொனி மலையாளம் போல இருந்தது. வேகமாக வேறு பேசிக் கொண்டிருக்க, அந்தத் தமிழ் மலையாளம் போலக் கேட்டது. ‘கேரளத்துச் சேட்டனாணோ?’ என நினைத்தபடி அவள் மீண்டும் அவன் பக்கம் பார்க்க, அவன் வாயிலிருந்து விழுந்த வார்த்தைகளில் வியந்தாள். எதிரே இருப்பவரும் அவன் பேசிய வேகம் புரிபடவில்லை என்றார் போல. சொன்னதையே மீண்டும் நிறுத்திச் சொன்னான்.
“வந்துட்டென்… ஆனா என்னால உள்ளுக்க வரமுடியாது… உனக்கு வேணுமின்னா வெளிய வா…ஆமா…ஆனெதான். அதுனாலதான் உள்ள வர மாட்டேன்னு சொல்லிட்டு இருக்கேன்…” காட்டத்தைத் தூவிய சொற்களில் போனில் பேசிக்கொண்டிருந்தான். ஏற்கனவே அவன் சொன்னது அவளுக்குப் புரிந்திருந்தது. ஆனால், அந்த வழக்கில் அவன் பேசுவதால் தான்தான் தவறாகப் புரிந்துகொண்டோம் என்றிருந்தவள், மீண்டும் அவன் தெளிவாகச் சொல்ல, ‘யானை னால உள்ளே போக மாட்டானா?’ எனத் தன்னைப்போல் ஒருவன் என்று தோன்றியதில் வண்டியை விட்டு இறங்கியே அவன் புறம் கூர்ந்தாள்.
அவன் இவளைக் கவனிக்கவில்லை. முன்னால் இருந்த ஹெல்மெட்டில் தாளமிட்டபடி, கடுப்பாகப் பேசிக் கொண்டிருந்தான். சில விநாடிகள் கழித்து, உள்ளுணர்வினாலோ என்னவோ இவள்புறம் திரும்ப, சட்டெனக் குனிந்து, யானை மதம்பிடித்து வெளியே ஓடிவந்தால் தப்பிக்க இயக்குவதற்கெனத் தயாராக மாட்டி வைத்திருந்த வண்டிச்சாவியைச் சட்டென வண்டியிலிருந்து பிடுங்கினாள். பின் என்ன செய்வதெனத் தெரியாமல் அதனை மீண்டும் மாட்டிவைத்தாள்.
ஜீவிதனுக்கு அவள் தன்னைப் பார்த்துவிட்டுத்தான் வண்டியைத் திருகுகிறாள் என்பது புரிந்தது. அதிக சத்தமாகப் பேசிவிட்டோம் போல என நினைத்தவன், மெதுவான குரலில் பேசத் தொடங்கியிருந்தான். அவன் பேசிமுடித்து வண்டியிலிருந்து இறங்கி நடப்பதற்குள் சாவியைப் பத்துமுறை போட்டுப்போட்டு எடுத்திருப்பாள் வனபத்ரா. பின்னே? அவன் தன்னைக் கவனிக்கிறான் என்று தெரிந்ததே?
தன்னை அவன் கடக்கும்போது இன்னும் உன்னிப்பாக ஏதோ அந்தச் சாவியில் உலகம் உய்வதற்கான வழி எழுதிக்கொடுத்திருப்பது போல முகத்துக்கு நேராக வைத்துப் பார்த்தவள், மீண்டும் வண்டியில் போட்டுத் திருக முயற்சி செய்வது போலச் செய்தாள். பின் திருகி விட்டால் வண்டியை எடுக்க வேண்டுமே… தன்னருகே நின்ற கால்கள் நகராமல் நிற்பதைக் கீழ்க்கண்ணால் பார்த்தவளுக்கு ஏனோ லேசாகப் பதட்டம் வந்தது.
“ஏங்க…” என்றவனை நிமிர்ந்து பார்த்தவளின் மனதில் ஒரு பதட்டம், ஒரு ஆர்வம் சரிவிகிதத்தில் கலந்திருந்தாலும் அதை முகத்தில் காட்டாமல் நின்றாள். ஆனால் அவளை ஒருமாதிரிப் பார்த்தவன் “இந்த வண்டி உங்களோடதுதானா?” என்றதில் நொந்திருந்தாள்.
‘எலேய் என்னைப் பாத்தா வண்டி திருடுறவ மாதிரியாடா இருக்கு உனக்கு…’ என்று மனதிற்குள் கேட்டவள் அதை வெளியே கேட்காமல் திருதிருவென விழித்தாள்.
அதில் அவனது கண்களில் சந்தேகம் இன்னும் கூட, “இது உங்க வண்டிதானா?” மீண்டும் அழுத்திக் கேட்டான். இப்போது தூங்கிக்கொண்டிருந்த அவளது தன்மானம் விழித்துவிட, “என் வண்டிதான் சார்…” என்றாள் அதே அழுத்தத்துடன்.
“வண்டி நெம்பர் சொல்லுங்க…”
இப்போது இன்னும் திருதிருவென்று விழித்தாள். உண்மையில் அது அவளது அப்பாவுடைய வண்டி. ஆயிரம் முறை எடுத்துச் சுற்றியிருப்பாள். ஆனால் வண்டி எண்ணைக் கருத்தில் பதித்ததில்லை. வண்டியின் முன்னால் ஒரு ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும். பின்னால் ஒரு ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும். தம்பியின் புண்ணியம். அதனால் எண்ணை வைத்து வண்டியை அடையாளம் காணவேண்டிய சிக்கல் அவளுக்கு ஏற்பட்டதில்லை. அதுதான் உண்மை. ஆனால் இதைச் சொன்னால் நம்புவானா இல்லையா என்று தெரியாதே என்று இன்னும் திருதிருவென விழித்தாள்.
“சார்… இது எங்க வண்டிதான். வேணும்ன்னா சாவி போட்டுப்பாருங்க…” என்று தன் கையிலிருந்ததை அவனிடம் நீட்டினாள்.
“அதுதான்நீங்க போட்டே எடுக்கலயே… ஒருவேளை கரெக்டான சாவியைக் கெண்டு எடுத்துட்டீங்களா என்ன?”என்றான் அவன். அவளுக்கு நிஜமாகவே என்ன சொல்வதென்று தெரியவில்லை.கூடவே அவன் பேசுவதைப்புரிந்துகொள்ளவே அவளுக்கு ஒருகணம் தேவைப்பட்டது. இப்படிப்பட்ட சூழலை அவள் எதிர்கொண்டதில்லை. அவள் விழித்தபடி இருக்க, “அண்ணா…” என்று ஒருகுரல் உற்சாகமாய்க் கேட்டது.
அது அவளுடைய தம்பியின் குரலாக இருக்க, “என்ன இவன் என்னை அக்கான்னு கூப்பிடாம அண்ணன்னு கூப்பிடுறான்? எதுவும் புதுப் பழிவாங்குதல் நடவடிக்கையோ?” என எண்ணியபடி தம்பியைப் பார்த்தாள்.
அவனோ, இவளைப் பார்த்திருக்கவே இல்லை. பார்த்திருந்தால்தான் பக்கத்தில் வந்திருக்க மாட்டானே?ஆவலாக ஜீவிதனைப் பார்த்தபடி வந்தவன், வனபத்ராவைப் பார்த்துத் திகைத்தான். அவனோ, “ஹாய் அபி…” எனப் புன்னகைக்க, வனபத்ராதான் தம்பியைக் குறுகுறுவெனப் பார்த்தாள். அவளிடம், “அக்கா, நான் தங்கியிருக்க வீட்டுல கீழ் வீட்டுலதான் இந்த அண்ணா இருக்காங்க” என்றவன், அவள் மேலும் ஏதோ கேட்டுவிடுவாள் என்று பயந்தவன் போல, வேகமாக ஜீவிதனிடம் திரும்பினான்.
“அண்ணா… இது எங்கக்கா…”
“ஜீவிதன்…” என்று புன்னகைத்தவன், கைநீட்ட, “வனபத்ரா” என்றவளும் சிறுபுன்னகையோடு கைகுலுக்கினாள். அக்கா அவனது கையைப் பற்றிக் குலுக்குவதை ஒரு திகிலோடு பார்த்திருந்தவன், அதற்குமேல் அங்கே நிற்கப் பயந்தவன் போல, “அம்மா உள்ளே காத்திருக்காங்கண்ணா… வாக்கா” என்று சொல்லிவிட்டு கோவிலைப் பார்த்து நகர்ந்தான். அவன் நகர்ந்தால், அவர்களும் நகர்ந்திடுவார்கள்தானே?
அவன் உள்ளே சென்றும் அவள் நகராமல் நிற்க, “நீங்க போகலயா?” என்று கேட்டான் ஜீவிதன்.
ஒருகணம் தயங்கியவள், “எனக்கு யானைன்னா பயம்…” என்றாள். அவள் சொல்லவும் புன்னகைத்தவன், தன்னுடைய வலதுகையை உயர்த்தினான். அவள் கேள்வியாகப் பார்க்க, “ஹைபை… எனக்கும்…” என்றான். அவள் முகம் அவளையறியாமல் மலர, அவனுடைய கையில் லேசாகத் தட்டினாள். பின் ஒரு சிறுபுன்னகையுடன் நெற்றியை ஒற்றைவிரலால் தேய்த்துவிட்டவன், “சாரி…” என்றான் வண்டிச்சாவியைக் காட்டி.
தம்பியை அனுப்பிவிட்டு அவளிடம் தன்மையாக மன்னிப்பு வேண்டியிருந்த விஷயம் அவளுக்குப் பிடித்திருந்தது. இதமாக இருக்கவே இயல்பாக மன்னித்திருந்தாள்.
“அது ஒண்ணுமில்லங்க.. யார் பார்த்தாலும் அப்படிதான் நினைச்சுருப்பாங்க…” என்றவள், “அது வந்து.. போரடிச்சுச்சுன்னு சும்மா சாவியைப் போட்டுத் திருகி விளையாடிட்டு இருந்தேன்…” என்று விளக்கம் அளித்தாள். அவளது விளக்கத்தில் அவன் ஒருமாதிரியாகப் பார்ப்பதுபோலத் தோன்ற, மீண்டும் திருதிருவென விழித்தவளைப் பார்த்து அழகாகப் புன்னகைத்தான் அவன்.
“ஒரு பேரைக் கேட்டு அழகா இருக்குன்னு நெனச்சு ரொம்ப நாளாச்சுன்னு யோசிச்சுட்டு இருந்தேன்… உங்க பேர் அந்தக் குறையைத் தீர்த்துருச்சு…” வழிதல் போல இல்லாமல் இயல்பான தொனியில் அவன் அதைச் சொல்ல, அவளுடைய மதிப்பில் அவன் இறங்கவில்லை. இதே வேறு யாராவது இருந்திருந்தால், காதில் வாங்காதது போலக் கடந்திருக்கக் கூடியவள், அவனிடம் பேச்சுக்கொடுத்தாள்.
“ம்ம்? முழுசா வச்சது வனபத்ரகாளி…” என்றாள் அவள் அவனுடைய புகழ்ச்சியை மறுக்கும் தொனியில்.
“காளிக்கு என்னங்க குறைச்சல்? தேவைப்படுறப்ப கோபப்படுன்னு சொல்ற சாமி…அந்தப்பேரும் அழகுதான். முழுசா இன்னும் அழகா இருக்கு…”
அவன் நிதானமாகவும் முடிந்தவரை புரியும்படியும் பேசியதில் புரிந்தது. ஆனாலும் இதற்கு என்ன சொல்வதெனத் தெரியாமல் அவள் நிற்க, அவன் அலைபேசி மீண்டும் அடித்தது. “சரிங்க…ப்ரெண்ட் வந்துட்டான்னு நினைக்கிறேன்…வாரேன்…” என்றபடி அவன் நடக்கத் தொடங்க, “பை…” என்றவளுக்கு அதற்குமேல் அங்கு நிற்க என்னவோ போல் இருக்கவே, தாய்க்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு வீட்டுக்கு வந்திருந்தாள். வீட்டிற்கு வந்த அன்னை அவள் இப்படி பாதியில் வந்ததற்குத் திட்டத் தொடங்க, “அம்மா… திட்டாதீங்க… ப்ளீஸ்…” என்றாள்.
“இதுக்குப் பேரெல்லாம் திட்டுறதா? அங்க ஒரு மனுஷன் திட்டுனாரே… அதைப் பார்த்துருக்கணும்… அப்ப தெரியும் திட்டுறதுன்னா என்னன்னு?”
“யாரு யாரைத் திட்டுனா?”
“நீ யானை.. யானை ன்னு பதறுனல… அதுக்கேத்த மாதிரி யானையே வெளிய நிக்கல.. அதுக்கு உடம்பு சரியில்லையாம்… சுகராம்… அதைப் பார்க்க வந்த டாக்டர், அங்க கவனிச்சுட்டு இருந்தவங்களைத் திட்டுனாரு… திட்டுன்னா திட்டு… அப்படி ஒரு திட்டு… யானையை சரியா வாக்கிங் கூட்டிட்டுப் போறதில்ல… கண்டதையும் சாப்பிடக் கொடுக்காதீங்கன்னு… யானை காபி குடிக்கும்ன்னு எனக்கு இன்னைக்குத்தான் தெரியும்…”
“அம்மா.. நான் உங்களை யானை பக்கத்துல போகாதீங்கன்னு சொன்னேன்… நீங்க என்னன்னா அதுக்கு வைத்தியம் பார்க்கறதைப் பார்த்துட்டு வந்துருக்கீங்க…”
“நான் பார்க்கல… உன் தம்பிதான்…” என்றவர், மகனின் கண்ணசைவில் நிறுத்தினார். அவர்களுடைய சைகையைக் கவனிக்காமல், அவள் வேறு சிந்தனையில் உள்ளே சென்றிருந்தாள். வழக்கமாக இருந்திருந்தால், யானை, யானை என்று மனம் யானையில் நின்றிருக்கும். இன்று “ஒரு பேரைக் கேட்டு அழகா இருக்குன்னு நினைச்சு ரொம்ப நாளாச்சுன்னு யோசிச்சுட்டு இருந்தேன்..” என்றவனின் குரலும் வழக்கும் என நினைவில் நின்றிருந்தான். மெத்தையில் விழுந்து இரண்டுமுறை அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் உருண்டவள், “ஜீவிதன்…” என்று லேசாக உச்சரித்துப்பார்த்தாள்.
“ஜீவிதனும் அழகாதான் இருக்கு…”
(வருவான்…)

Super😍
Thank you so much sis 🤎