”அபி?”
அழைத்தபடி உள்ளே வந்த வனபத்ரா, மகாதேவி மடியில் இருந்த அபிதாவை எதிர்பாராமல் திகைத்தாள். இரண்டடி பின்னடித்தவள், ”இத உன் ப்ரென்ட்கிட்ட விட்டுட்டேன்னு சொன்ன?” எனக் கேட்க, ”மகா என் ப்ரென்ட்தானக்கா?” என்று சமாளித்தான் அபிதன்.
அபிதா இவளைப் பார்க்கவும் ஒரு பார்வை பார்த்துவிட்டுக் கண்டுகொள்ளாதது போல முகத்தைத் திருப்பிக் கொண்டது.
”நான் உன்ன தேடித்தான் மகா வந்தேன்… ”
”என்னக்கா?”
”கீழ பங்க்ஷன் ஆரம்பிச்சுரும் மா… கீழ வா…”
”அத பொண்ணே வந்து கூப்பிடணுமாக்கா?”
”என்ன பண்றது?சொல்லிவிடலாம் ன்னா என் அருமைத்தம்பியக் காணோம்… அதான் நானே வந்தேன்…”
மகா அபிதாவைப் பார்த்துத் தயங்க, ”அபிய கீழேயே கட்டிப்போடுங்க…தனியா இருக்க வேண்டாம்…” என்றிருந்தாள்.
மகாதேவி உடனடியாக அபிதாவோடு கீழே இறங்க, ”ஏன் முருகான்னு கத்திட்டு இருந்த நீ?” என்றுகேட்டாள் அபிதனிடம்.
”அது சும்மாக்கா…”
வீட்டின் பின்கட்டுப்பக்கமாக நின்று ஏதோ அலைபேசியில் பேசிக்கொண்டிருந்த ஜீவிதனைப் பார்க்கவும் அபிதா உற்சாகமடைந்திருந்தது. அது அவன் காலடியில் உரசியபடி வாலாட்டவும் கீழே அமர்ந்து அதனைத் தடவிக் கொடுத்தவன், மேலிருந்து கீழே இறங்கிவந்த வனபத்ராவை எதிர்பாராமல் ஒருகணம் திகைத்தான். மகாதேவி அபிதாவைப் கட்டிப்போட அழைத்துச் செல்ல, ”அபி ஏன் இங்க இருக்கு அபி?” என்றான் ஜீவிதன்.
”அது வந்து த்தான்… இதோ வந்துட்டேன் பெரியப்பா…”
”நான்தான் கீழ கொண்டுவரச் சொன்னேன்… மேல தனியா இருக்கவேணாம்ன்னு….” என வனபத்ரா சொல்ல, ஜீவிதனுக்கே ஆச்சரியம்தான். அதில் அவன் கண்கள் மின்ன, ”ஜீவி…” என்றழைத்தாள்.
”ம்ம்…”
”நீங்க அழகாருக்கீங்கன்னு நான் என்னைக்காவது சொல்லிருக்கேன்?”
”…”
”நீங்க அவ்வளவு அழகு ஜீவி… அதிலயும் இன்னைக்கு அப்…டி இருக்கீங்க…”
அவள் சொல்லிவிட்டு வீட்டுக்குள் செல்ல, அப்போது மின்னத்தொடங்கிய ஜீவிதனின் கண்களும் அவன் நெற்றியில் லேசாகத் தீற்றியிருந்த சந்தனமும் என, வனபத்ராவுக்கு அவனைப் பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும் போல இருந்தது. சுற்றிலும் உறவினர்கள் இருக்க, நன்றாகப் பார்க்கவும் முடியாமல் அவ்வபோது வேறு எதையோ பார்ப்பது போல அவன்பக்கம் திரும்பிக் கொண்டேயிருந்தாள்.
அவனும் அதையேதான் செய்துகொண்டிருந்தான். வந்துபேசுகின்ற உறவினர் யாரிடமாவது பேசிக்கொண்டே இருந்தவன், அவ்வபோது அவள்பக்கம் பார்க்க, இருவருடைய பார்வையும் சந்தித்துக் கொண்டால் கண்களில் ஒரு இரகசியப்புன்னகை வந்து மறைந்தது. அடுத்த மாதத்திலேயே திருமணம் வைத்துக்கொள்ளலாம் என நிச்சயித்திருந்தனர்.
அந்த ஒரு மாதம் எப்படி போனது என்றே இருவருக்கும் தெரியவில்லை. பரபரப்பும் படபடப்பும் கலகலப்புமாகக் கலந்து எப்படியோ கடந்து எளிமையானதொரு திருமண வைபவத்தில் நல்லபடியாக வனபத்ரா ஜீவிதனின் மனைவியாக மாறியிருந்தாள்.
******
”அச்சோ… மறந்துட்டேன்…”
”என்னப்பா?”
”விசாலாட்சியப் பாக்க மறந்துட்டேன்…” அவன் சொல்லவும் கண்ணாடி வழியாக வனபத்ரா அவனை முறைத்தாள். கழுத்திலிருந்த புதுத்தாலியும் தலையில் நிறைந்திருந்த மல்லிகையுமென முறைக்கும்போது கூட மயக்கியவளைப் பார்த்த ஜீவிதனின் முகத்தில் குறும்புப்புன்னகை ஒன்று தெரிந்தது.
”ஜீவி…”
”ம்ம்…”
”கல்யாணமான மூணு நாள்லயே என் பதிபக்திய சோதிக்காதீங்க…”
”ஹையோடா… இந்த மூணு நாள்ல எவ்ளோ பதிபக்தி காட்டிடீங்க?” என்று கிண்டலாகச் சொன்னபடியே மீண்டும் வண்டியை எடுத்தான்.
”இப்ப என்ன பதிபக்தி காட்டல உங்களுக்கு?”
”உன் போன்ல என் நம்பர மாத்தி சேவ் பண்ணுடி… இன்னமும் எக்ஸ் ன்னே இருக்கு…”
”அது எத்தன வருஷமானாலும் எக்ஸ் ன்னுதான் இருக்கும்…”
”பாவி…ஏட்டி?”
“அது அப்படிதான்…”
இருவரும் இட்டுக் கொண்டது சண்டை என்ற கணக்கில் சேராதுதான், ஆனால், அதனை வேறு கணக்கிலும் சேர்க்கமுடியாது. இதில் இவர்கள் வீடுவந்து சேர, வீட்டில் அஞ்சனாவின் சகோதரர் குடும்பம் ஒன்று வந்திருந்தது. திருமணத்திலேயே வேறு சாதியில் மணமுடிக்கிறார்கள் என முகத்தைச் சுளித்தபடியே சுற்றி ஏதாவது குட்டையைக் குழப்பிவிட முயன்ற கும்பலை அங்கு காணவும் வனபத்ராவுக்குப் பிடிக்கவில்லை. ஆனால், வாயைத் திறந்துசொல்லமுடியாதே. நாம் ஜீவிதனைவேறு வெறுப்பேற்றி விட்டிருக்கிறோமே என்று பயந்தபடியே ஜீவிதனின் அருகில் அமர்ந்தாள்.
ஜீவிதன் வந்தவர்கள் சிக்கலானவர்கள் என்று புரிந்தும் மரியாதை நிமித்தம் நன்றாக முகம் கொடுத்துப் பேசிக் கொண்டிருந்தான். அபிதன் அம்மாவுக்கு உதவுகிறேன் பேர்வழி எனக் கம்பிநீட்டியிருந்தான். மகாதேவியை அஞ்சனாவே அருகில் அழைத்து வைத்திருந்தார்.
அவளுக்குக் கல்லூரி இறுதியாண்டு இன்னும் பத்து நாட்களில் தொடங்கும். கோடை விடுமுறையில் தனியே போகிறேன் என்றவளைத் தங்களுடன் வைத்திருந்தனர். தனியாக இருந்தால் சோகமாக இருப்பவள், இரண்டு அபியில் ஏதாவது ஒன்று அருகில் இருந்தால் தெளிச்சியாக இருந்தாள்.
அஞ்சனாவைப் பார்த்துக் காவல்துறை என முதலில் அஞ்சினாள்தான். ஆனால், அவர் அதட்டாமல் கொள்ளாமல் அன்பாகப் பார்த்துக் கொள்ளவும், அதைவிட மென்மையானவராகப் பாலமுருகன் இருக்கவும் அவளுக்கு வேறுபாடாக ஒன்றும் தெரியவில்லை. வனபத்ரா அங்கிருந்த வேலைகளை முடித்துக் கொடுத்துவிட்டு ஒருமாதம் கழித்துத்தான் வந்தாள்.
அவளுமே அன்று நடந்த எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் அவளிடம் இயல்பாகப் பேசிப்பழக, அவளுக்குப் பிடித்த உணவுகளைச் செய்துகொடுக்க, இருவரும் சேர்ந்து எதையாவது செய்து அபிதனைப் பரிசோதனைக்குட்படுத்த என அவளிடமும் ஒட்டியிருந்தாள். அதற்குமேல் அவளும் ஒன்றும் நினைக்கவில்லை. காதலுக்கும் நட்புக்கும் வித்தியாசம் தெரியுமோ என்னவோ காதலுக்கும் இரக்கத்துக்கும் வித்தியாசம் நன்றாகவே தெரியும்.
அபிதனுக்கும் அவன் குடும்பத்தினருக்கும் தன்மேல் இருப்பது ஒருவகை இரக்கம் என்பது புரிந்து தனக்குத்தானே ஒரு கோடிட்டிருந்தாள். அதைவிட, அபிதனை அவள் வேறுவிதமாக யோசித்திருக்கவும் இல்லை. முன்போல மனதில் நினைப்பதை எல்லாம் மறையாமல் பேசுவதில்லை. யோசித்துப் பேசினாள். அப்படி அமைதியாக இருப்பவளை என்னவென்று நினைத்தார்களோ வீட்டில் வந்த உறவினர்களில் சிலர் நோண்டிக் கொண்டே இருந்தனர். பார்த்துவிட்டு, ஜீவிதனின் உறவுக்காரப்பெண் தங்கள் வீட்டில் விடுமுறைக்காக வந்திருக்கிறாள் என்றுவிட்டார் அஞ்சனா.
அவளை யாரும் எதுவும் சொல்லிவிடுவார்களோ என அபிதன் அடைகாத்துநிற்க, வழக்கமாக வரும் சிக்கலான உறவுக்காரர்களிடம் இருந்து தனக்கு அரணாக இருக்கும் தம்பி இல்லாமல் வனபத்ராதான் பாவமாக அமர்ந்திருந்தாள்.
பேச்சுவாக்கில் யாரோ ஒருவர் தண்ணீர் கேட்டு, அவருக்குக் கொடுத்து, அங்கிருந்த எல்லாரிடமும் கேட்டனர். சிலர் வேண்டும் என்றனர், சிலர் வேண்டாம் என்றனர். அப்படி வனபத்ரா வேண்டாம் எனச் சொல்ல, அருகே இருந்த இளம்வயது உறவினன் ஒருவன், ”ஐயய்யோ பத்ரா.. என்ன தண்ணி வேணாம்ங்கற? உனக்கு ரேபிஸ் வந்துருச்சா?” என்று கிண்டலாகக் கேட்க, அவன் நினைத்தது போலச் சிரிப்பு பரவாமல் அங்கே ஒரு இறுக்கம்தான் பரவியது.
சூழல் ஒருமாதிரியாக மாறுவதை உணர்ந்து, சிரித்தபடியே சமாளிக்க முயன்றான் கேட்டவன். ”சின்ன வயசுல இப்படி சொன்னபிறகு எவ்வளவு தண்ணி கொடுத்தாலும் பத்ரா குடிப்பா தெரியுமா?” என்றான் சிரித்தமுகமாக.
”ஆமா…” என்று இன்னொரு உறவினரும் சிரித்தபடியே பேசத்தொடங்க, வனபத்ரா முகம் சோகமாகியது. அபிதன் வெட்டவா குத்தவா என்பது போலப் பார்க்க, அவ்வளவு நேரம் யார் என்ன சொன்னாலும் சிரித்துவைத்துக்கொண்டிருந்த ஜீவிதன், பாலமுருகன் முகத்திலும் சிரிப்பில்லை.
ஐந்துநிமிடம் போல இப்படியே பேச்சுப் போக, ”உங்கள நாய் எதுவும் கடிச்சிருக்கா மாப்பிள?” என்று வேறு கேட்டார்.
”இல்ல சித்தப்பா…” ஜீவிதன் குரலில் இருந்த பொறுமை போயிருந்தது.
”அதெப்படி கடிக்காம இருக்கும்? வளத்தாலே கடிக்கும்தான?”
”நான் வளக்கலயே… எனக்கு நாய் வளக்கப் பிடிக்காது…ட்ரீட் பண்ணும்போது சேப்டி மெசர்ஸ் இல்லாம பண்ணமாட்டோம்…”
”ஏன்?”
”தெரியாது.. சின்னவயசுல இருந்தே எனக்குப் பெட் ன்னு எந்த விலங்கையும் வீட்ல வச்சு வளக்கப் பிடிக்காது…”
அவனை அறிந்தவர்கள் தவிர, எல்லார் முகத்திலும் ஒரு அதிர்ச்சி பரவ, ”அப்பறம் எப்படி வெட்னரி டாக்டர் ஆனீங்க?” என்றார் ஒருவர்.
”எங்க டீச்சர வெறுப்பேத்தறதுக்காக ஆனேன்?” என்றவன், வேறு கேள்விகளுக்கு இடம்கொடாமல் தொடர்ந்தான், ”ரேபீஸ் மோசமான நோய்தான்… ஆனா, அலட்சியமா இல்லாம, கடிச்ச இருபத்துநாலுமணிநேரத்துக்குள்ள ஊசி போட்டுட்டா 100 சதவீதம் தடுத்துரலாம். கொத்துக்கொத்தா பரவுன கொரானாக்கே வனபத்ரா பயப்படலதானே? அப்பறமென்ன?” தன் வழக்கம்போல வேகமாகப் பேசாமல் நிறுத்திநிதானமாக அவன் சொல்ல, தெரிந்துசொன்னானா தெரியாமல் சொன்னானா என்று தெரியாமல் அந்தக் கூட்டம் ஒருமாதிரி அமைதியானது.
கொரானா தொற்று பரவிய நேரத்தில் வனபத்ரா ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்தாள். மகனுடைய குடும்பத்தின் அருகில் தனிவீட்டில் இருந்த அஞ்சனாவின் பெற்றோருக்குத் தொற்று பரவியிருக்க, அவர்கள் யாருமே எட்டிப்பார்க்கவில்லை. வயதானவர்கள்… யாராவது இந்நேரம் துணை இருக்க வேண்டும் என ஏற்கனவே இருமுறை கொரானா வந்துபோயிருந்த அஞ்சனா போய் பெற்றோரைப் பார்க்கவேண்டும் என அடம்பிடிக்க, அவரை இருக்கச் சொல்லிவிட்டு, வனபத்ராதான் மருத்துவமனையில் சேர்த்து, அவர்கள் சரியாகவும் உடனிருந்து என அந்த வீட்டில் அவர்களுடன் போய் இருந்தாள்.
Work from home என்றாலும் வேலை நேரத்தில் வேலைதான் பார்க்கிறோம் என்பதைக் கவனிப்பார்கள் என யாராயிருந்தாலும் தயங்கவைக்குமளவு சம்பளத்தை வேண்டாம் என விட்டுவிட்டு அவள் தனித்து வேலை செய்யத் தொடங்கியதும் அப்போதுதான். ஜீவிதன் இதெல்லாம் தெரிந்தே தெரியாதது போலச் சொல்லிவைக்க,பேச்சு மாறியது. அப்படியே பேசிக்கொண்டே எழுந்தவர்கள், கிளம்பும்முன் விருந்துக்கு அழைக்க, சிரித்துக்கொண்டே விடுமுறை கிடைப்பது கடினம் என அங்கேயே மறுத்திருந்தான் ஜீவிதன். அவர்களும் கேட்டது வாய்வார்த்தைக்கு என்பது போல அதற்குமேல் வற்புறுத்தவில்லை.
வீட்டுக்கு ஆட்கள் வந்துகொண்டே இருக்க, இரவு அயர்ச்சியாக அருகில் விழுந்தவனை வனபத்ரா நெருங்கிப்படுத்தாள்.
”என்னடி பண்ற?”
”நீங்கதான நான் சரியா பதிபக்தி காட்டலன்னு சொன்னீங்க?”
”இதுக்குப் பேர்தான் உங்க ஊர்ல பதிபக்தியா? ஒழுங்கா எழும்பிக் கைகால் அமுக்கிவிடு… திண்டுக்கல், நாகர்கோவில், சென்னை ன்னு சரியான அலைச்சல்…”
”உங்களத் தூக்கிப்போட முடியுமான்னு தெரியல… அப்படியே உருண்டு விழுங்க… ஏறி மிதிக்கிறேன்…”
அவளுடைய தலையில் கொட்டியவன், ”இப்படிதான்டி நீ மூணு நாளா பேசிட்டு இருக்க… அதனாலதான் பதிபக்தியான்னு கேட்டேன்… நீ தப்பா நெனக்காத…” என்றான்.
”அப்பறம் ஏன் பக்கத்துலயே வரமாட்டிங்கறீங்க ஜீவி?”
அவள் கொஞ்சம் சோகமாகக் கேட்க, ஜீவிதன் வனபத்ராவின் புறம் திரும்பிப் படுத்தான்.
அவன் முகத்தைப் பார்த்தவள்,”நான் சொல்றேன்… உங்களுக்குக் கொஞ்சங்கூட சதிபக்தியே இல்ல…” என்றாள்.
சேலையிலேயே இரு… என அஞ்சனா சொல்லியிருக்கக் கோவிலுக்கு எனக் கட்டிய சேலையோடே படுத்திருந்தாள். மாலையில் மொட்டாக இருந்த மல்லிகை இன்னும் மலராமல் தலையில் அழகாக இருக்க, கழுத்தில் இருந்த தாலியும் அதனை அடுத்துத் தெரிந்த மச்சமும் ஜீவிதனை அருகில் வா வா வென அழைத்தன.
நெருங்கி, இன்னும் நன்றாக உள்ளிழுத்து அணைத்தவன், ”இவ்வளவு பக்கத்துல போதுமா?” என்றான். அவள் ம்ஹும் எனவும் சிரித்தவன் அந்தக் கழுத்து மச்சத்தில் மென்மையாக முத்தமிட்டான். ” கல்யாணமான அன்னைக்குத் திண்டுக்கல்ல ரெண்டுபேர் குடும்பமும் வெளிய இருந்துச்சு… நேத்து நாகர்கோவில்ல எங்கப்பாம்மா கூட இருந்தாங்க… இன்னைக்கு அத்த, மாமா, அபி, மகா எல்லாரும் வெளிய இருக்காங்க… இதுல எங்க பக்கத்துல வர? ஊட்டிக்குப் போய்த் தனியா இருக்கும்போது நம்மளோட மிச்ச பதிபக்தியையும் சதிபக்தியையும் காட்டிக்கலாம்டி…” என்று அவளுடைய கழுத்தோடு முகம்புதைத்தபடியே அவன் சொல்ல, அவனுடைய கேசத்தை மென்மையாகக் கோதிவிட்டவள் ”நெஜமாவே வேறெதுவும் இல்லயா ஜீவி?” என்றாள் மெல்லிய குரலில்.
”வனாம்மா…”
”ம்ம்…”
”எனெக்கு உன்னெ ரொம்பப் பிடிக்கும்டா…” அவன் குரல் ஆழ்ந்து ஒலிக்க, அவன் வேறெதுவும் சொல்லாமலே அவனைப் புரிந்தது அவளுக்கு. இன்னும் நன்றாக ஒட்டிப்படுத்தவள், ”ஜீவி…” என்றாள் மீண்டும்.
”ம்ம்…”
”எனெக்கு ஒரு காதள் காடித்தம்…” அவள் குறும்பாகக் கேட்க, தலையில் கொட்டியிருந்தான். பின் அவள் முகத்திலிருந்த குறும்பை அவன் முகம் பிரதிபலிக்க, ”கண்ணே வனபத்ரா…” என்றான். அதை ஒருகணம் எதிர்பாராமல் முறைத்தவள், ”நான் பேச்சுக்குக் கேட்டா?” என்று அவனைக் கிள்ளிவைக்கத் தொடங்கியிருந்தாள். அதில் ஒருகணம் கொஞ்சம் சத்தமாகச் சிரித்திருந்தவன், சட்டெனச் சிரிப்பை நிறுத்தியிருந்தான். சத்தமாகச் சிரிக்கக்கூட இயலாத தனிமையற்ற சூழலுக்காகப் பார்க்கிறான் என்பது புரிய, அவள் மனதில் இருந்த அலைப்புறுதலும் மெல்ல மெல்ல குறைந்து உறங்கிப்போயிருந்தாள்.
முதல் நாள் ஜீவிதன் கோவிலுக்குச் செல்லவேண்டும் என்றிருந்ததால் அசைவம் சமைக்காமல் இருந்த அஞ்சனா, அடுத்தநாள்தான் சமைத்தார். வனபத்ராவுக்குப் பிடித்த உணவுவகைகளாகச் செய்தவர், ஜீவிதனுக்குப் பிடித்த மாட்டுக்கறியையும் செய்துவைத்திருக்க, ஜீவிதனுக்கே வியப்புதான்.
”ஏன் த்த சிரமப்பட்டுருக்கீங்க?”
”சிரமம்லாம் இல்லப்பா… மட்டன் செய்ற மாதிரி தான? அபிக்கு வச்சுப் பழகிருச்சு தம்பி…” என்றவர், ஒருவாய்ச் சோற்றை எடுத்து வாயில் வைக்கப்போன மகளும் கணவரும் மகனும் ஒன்றாக நிறுத்தி நிமிர்ந்து பார்க்கவும்தான், சொன்னது புரிந்து சட்டெனப் பதறியிருந்தார்.. ”மாப்பிள மன்னிச்சுருங்க… நான் தப்பா சொல்லல…”
”ஐயோ அத்த… இதுல தப்பா எடுக்க என்ன இருக்கு?எங்கம்மெ பக்கத்துலயே வரமாட்டாங்க.. நீங்க சமைச்சே வச்சுருக்கீங்க… அருமையா வேற இருக்கு…”
அஞ்சனாவுக்கே தன்மேலேயே வருத்தம். மறுவீட்டுக்கு அழைத்துவந்து விருந்து வைக்கும்போது, நீயும் நாயும் ஒன்று என்பதுபோலத் தான் சொன்னது தொனித்துவிட்டதோ எனக் கவலையாகவே முகத்தை வைத்திருந்தார். தன்னிடம் வெளிப்படையாகக் காட்டாவிட்டாலும் மகளிடம் முகம் காட்டுவாரோ எனப் பயந்தபடியே மாலைவரை அவர் சுற்ற, ஜீவிதன் ”அத்த… நான் ஒரு வெட்… அது உங்களுக்கு ஞாபகம் இருக்கா?” என்றான்.
அவர் என்ன எனப் பார்க்க, ”நாய் கூட ஒண்ணா வச்சுச் சொன்னீங்கன்னுலாம் நான் கோபப்பட மாட்டேன் த்த… அதைவிட ஆல்ரெடி நீங்க என்னைக் கழுவிக்கழுவி ஊத்திருக்கீங்கதானே? ஏன் புதுசா ஃபீல் பண்றீங்க?” என்றான் சிரித்தபடியே.
அஞ்சனா வனபத்ராவை முறைத்துவிட்டு, ”நெஜமாவே சாரி தம்பி…” என்றார் பாவமாக.
”அச்சோ… விடுங்கத்த… சில மனுஷங்களுக்கு நாய் எவ்வளவோ பரவால… அதுலயும் அபி தங்கம்… அபி கூடத்தான வச்சுச் சொன்னீங்க? அபி அறிவாளிப் பொண்ணு… என்னம்மா?” எனப் பின்னால் கட்டிப்போட்டிருந்த அபிதாவைப் பார்த்துக் கேட்க, அது இவனுக்குப் பதில் சொல்வது போலக் குரைத்தது.
”பாத்தீங்களா த்த…” என்றபடி அதன் அருகில் சென்று தடவிக் கொடுத்தான்.
”த்தான்…”
”ம்ம்…”
”நெஜமாவே உங்களுக்கு நாய் வளக்கப் பிடிக்காதா?”
”ம்ம்… பிடிக்காதுதான்…” என்றவன், அபிதாவிடம் ”நீ விதிவிலக்கு தங்கமே…” என்றான்.
”ஏன்?”
”எங்க டீச்சர் ஒருத்தர் வீட்டுல நாய் இருக்கும்…”
”த்தான்…”
”ஏன் மக்கா?” என்றான் ஜீவிதன் சிரித்தபடி.
”நீங்க ஏன் எல்லாத்துக்கும் டீச்சரக் காரணங்காட்டிட்டு இருக்கீங்க?”
”அவங்கள நான் காரணங்காட்டல… ஆனா, நான் அப்ப அதத்தான் காரணமா நெனச்சேன்…” என்றபடி கைகாலைக் கழுவிவிட்டு உள்ளே வந்தான்.
”அப்ப நெஜமாவே உங்க டீச்சர வெறுப்பேத்ததான் வெட்னரி சயின்ஸ் எடுத்தீங்களா?”
”ம்ம்…”
”நீங்க வெட்னரி டாக்டராகறதுக்கும் உங்க டீச்சர் வெறுப்பாகறதுக்கும் என்ன சம்பந்தம்?”
”அவங்க எப்பப் பாத்தாலும் இன்னும் பத்து வருஷத்துல நீ ப்ளேயராலாம் இருக்க மாட்ட…மாடுதான் மேச்சிட்டு இருக்கப் போறன்னு ஏசிட்டே இருப்பாங்க… மாடு மேய்க்கறதுல என்ன தப்பு? நாம அண்ணாமல ரஜினி மாதிரி மாடு மேச்சு நல்ல பெரிய ஆளா வரணும்ன்னு யோசிச்சேன்…”
அவன் சொல்லும்போதே ஏற்கனவே, வனபத்ரா போய் மகா என வந்ததில் நொந்துபோயிருந்த அபிதனின் முகத்தில் ‘ரொம்ப நேரமா நல்லாப் பேசிட்டு இருந்தானேடா…’ என்ற வடிவேலுவின் முகபாவம் வந்திருந்தது. அதில் ஜீவிதன் சிரித்திருந்தான்.
”எங்கப்பாட்ட நாலு மாடு வாங்கிக் கொடுப்பான்னு கேட்டேன்… அவரு பக்கத்துல இருக்க ஒரு பால் பண்ணைக்குப் போய் என்னலாம் பண்றாங்கன்னு பாத்துட்டு வான்னு அனுப்பிவிட்டுட்டாரு… நானும் தொடர்ச்சியா ஒரு நாலு வாரம் போனேன்… அங்க வந்த வெட்னரி டாக்டர் என்னெ ப்ரென்டு பிடிச்சுட்டாரு…”
”அந்த டாக்டர் உங்கள ப்ரென்டு பிடிச்சுட்டாரு?”
”ஆமா… அவர்தான் கூப்பிட்டுப் பேசினாரு… கூடவே கூட்டிட்டுச் சுத்துனாரு…அவர் எக்ஸ்ப்ளைன் பண்ணப்பண்ண இன்ட்ரஸ்டிங்கா இருக்கிற மாதிரி இருந்துச்சு… என் கண்ணுல ஒரு ஆர்வம் தெரியறதப் பாக்கவும் வெட்னரி சயின்ஸும் மாடு மேய்க்கறதுதான்… நீ இதப்படின்னு என்னெக் குழப்பி விட்டுட்டாரு…”
”சீரியசா சொல்றீங்களாத்தான்?”
”ஆமாடா.. அதனாலதான் நான் பயோக்ரூப்பே எடுத்தேன்…இல்லன்னா அக்கவுன்ட்ஸ்தான் எடுத்துருப்பேன்… அவர் சிங்கிள்… சோ, லீவுன்னு வரும்போதெல்லாம் பக்கத்துல இருக்க கூந்தன்குளம், முண்டந்துறை, களக்காடு இப்படி சரணாலயமா சுத்திட்டு இருப்பாரு… நான் ப்ரென்டாகவும் என்னெயும் கூடக் கூட்டிட்டே சுத்துவாரு…ஒவ்வொரு பறவ, விலங்கு, இதெல்லாம் காட்டி அதுகிட்ட இருக்க வித்தியாசமான குணம், பழக்கம் இதெல்லாம் சொல்லிட்டே வருவாரு…”
”அன்னைக்குக் கல்யாணத்துக்கு வந்துருந்தாரே அவரா மாப்ள?”
”இல்ல மாமா… அவர் என் ப்ரபசர்… இந்த டாக்டர் நான் படிச்சுட்டு இருந்தப்பவே இறந்துட்டாங்க…” என்றவன், குரலே ஒரு மாதிரி ஆகியிருக்க அதன்பிறகு யாரும் அதைப்பற்றி கேட்கவில்லை.
***
”தம்பி… அந்த ஆனெய நீதான் கவனிச்சுக்கணுமாடா?” மனோன்மணியின் குரல் அலைபேசி வழியாகத் தயக்கமாக ஒலித்தது. என்னவோ பேசிக் கொண்டிருந்தவர் ஏன் இங்கு வருகிறார் என்பதுபோல ஜீவிதன் பார்த்தான். அவன் மார்பில் ஒன்றியிருந்த வனபத்ராவும்.
இவர்களை மிதிக்க வந்த யானையைக் காட்டுக்குள் விரட்ட இயலவில்லை. சில வருடங்களாகவே அந்த யானையால் தொடர் இறப்புகள் வேறு நிகழ்ந்துகொண்டிருந்தது. கர்நாடகப்பகுதியில் நான்கு பேரை மிதித்துவிட்டுத்தான் இந்தப்பக்கம் இறங்கியிருக்கிறது எனப் பிடிப்பது என முடிவானது. அதனுடைய உணவு, உடல்நிலையைக் கவனிக்காமல் மயக்கமருந்தை செலுத்த இயலாது என அந்த யானை பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்த வனத்துறையினரில் ஜீவிதனும் அதில் அடக்கம். நாட்கணக்காகப் போராடித்தான் பிடித்திருந்தனர். அதை முகாமுக்குக் கொண்டு சென்று பயிற்சிகள் அளிக்கப்பட்டு தற்போது கும்கியாக மாற்றப்படுகிறது என்றதில் ஜீவிதன் அதன் அருகில் செல்வது மனோன்மணிக்குப் பயமாக இருந்தது.
”அப்பறம்? உங்க மருமகளயா கவனிக்கச் சொல்லமுடியும்?”
”டேய்…”
”பயப்பட ஒண்ணுமில்லம்மா… எப்பேர்ப்பட்ட ஆனெயா இருந்தாலும் கரால்ல இருக்க இருக்க அடங்கிரும்… இது மட்டும் என்ன? அஞ்சு மாசமாச்சு… சொல்பேச்சு கேட்குது… ஆள் கூட இருப்பாங்க…”
”முத்துக்கருப்பன் சார ஆனெ தூக்கித் தூண்ல அடிச்சப்ப நீ கூடத்தானடா இருந்த?”
அன்னைக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தவன்,”ம்மா… படிப்பக் கூட முழுசா முடிக்காம இருந்த நானும், காலங்காலமா ஆனெக்குப் பயிற்சி கொடுக்கறதையே தொழிலா வச்சுருக்க மாவூத்துகளும் ஒண்ணாம்மா?” என்றான் சிறிய அமைதிக்குப் பின்.
“இருந்தாலும் இனி ஆபத்த குறைச்சுக்கணும்ல ஜீவி… உன்னை நம்பி ஒருத்தி வந்துருக்கா… அவளையும் உன்னையும் நம்பி, இன்னும் ஒரு உயிர் வரப்போகுதுங்கறப்ப… கவனமா இருக்கணும் ல டா?”
”அம்மா.. நான் என்னைக்குமே கவனமாதான் இருப்பேன், அது என்ன விலங்கா இருந்தாலும் அது விலங்கு ங்கற கவனம் எனெக்கு எப்பவும் உண்டு. புதுசா எதையாவது ஆரம்பிக்காதீங்கம்மா… கண்டதையும் போட்டுக் குழப்பாதீங்க…வைக்கேன்…”
கொஞ்சம் கோபமாகவே சொல்லிமுடித்தவன், தன் மடியில் அமர்ந்திருந்தவளைக் குனிந்து பார்த்தான். இருவருக்குமே தங்கள் திருமணவாழ்வில் ஏதாவது கரைச்சல் வருமோ என்று உள்ளுக்குள் ஒட்டியிருந்த அச்சத்தை இந்த மூன்றுமாதத் திருமணவாழ்வு கரைத்திருந்தது. குழந்தை என அந்தத்திருமணவாழ்வின் அடுத்த அத்தியாயம் என்று மகிழ்ந்திருந்தவன், அன்னை பேசியதில் மீண்டும் வனபத்ரா ஏதாவது முருங்கை மரம் ஏறிவிடுவாளோ என்பது போல அவளது முகத்தையே பார்த்தான்.
அவனது முகத்தில் தெரிந்த கலவரத்தில் வனபத்ராவுக்குச் சிரிப்பு வந்திருந்தது. ”பயப்படாதீங்க… பயப்பட மாட்டேன்…”
”நெஜமா?”
”நெஜமா… குழந்த பெத்துக்கறதுல கூடத்தான் ஆபத்து இருக்கு.. கொஞ்சிக்காமலா இருக்கோம்? அதோட நான் கோவில் யான மிதிச்சுருக்கு ன்னுதான் நியூஸ் படிச்சுருக்கேன்… கும்கி யான யாரையும் மிதிச்சதா இதுவரைக்கும் நியூஸ் படிச்சதில்ல…”
அவளுடைய உச்சியில் நாடி புதைத்தவன், ”சில நேரங்கள்ல நீ எவ்ளோ தைரியமா இருக்க தெரியுமா பத்ரா?” என்றான்.
”ஆஹான்?”
”ம்ம்… நெஜமா.. இன்னைக்குச் சென்னையாக்குச் சரியாயிட்டு… அந்த மனுஷன் நார்மலா நடமாடுறாரு…ன்னு பாக்கவே ஒரு மாதிரி பிரமிப்பா இருக்குத் தெரியுமா?”
”என்னை சின்ன வயசுல நாய் கடிக்க வந்துச்சுல ஜீவி?”
”ம்ம்…”
”என்னால அன்னைக்கு நாள மறக்கவே முடியாது.. ஆறுவயசுல நடந்த பெரும்பாலான நினைவுகள் ஞாபகம் இல்ல.. ஆனா, பல்ல அப்டி காட்டிட்டு ஒருமாதிரி உறுமிட்டு வந்த அந்த நாய்ங்களோட முகம் மட்டும் எனக்கு மறக்கவே இல்ல… நல்லவேளயா அங்க பூ கட்டிட்டு இருந்த அண்ணா அவங்க வச்சுக் கட்டிட்டு இருந்த டேபிளையே மடிச்சுத் தூக்கிட்டு ஓடிவந்தாங்க… எல்லாப் பூவும் கீழ போய் அவங்க வியாபாரமே அன்னைக்குப் போயிருக்கும். ஆனா அந்தண்ணா மட்டும் அன்னைக்கு அங்க வரலன்னா கண்டிப்பா எனக்கு ஏதாவது ஆகிருக்கும் ஜீவி… ஒரு கையால டேபிள வச்சுச் சுத்திட்டு இன்னொரு கைல என்னைச் சட்டுன்னு தூக்கிட்டு வந்தாங்க… அன்னைக்கு யான வருதுன்னு பாக்கவும் என் கை ஆக்சிலேட்டரைத்தான் பிடிச்சுச்சு… ஆனா, அந்தண்ணா ஞாபகம் திடீர்ன்னு வந்துச்சு.. அவங்க என்னை அன்னைக்கு விட்டுட்டு ஓடிருந்தா ன்னு?”
”நாயும் காட்டானெயும் ஒண்ணாடி?”
”எனக்கு ஒண்ணுதான் ஜீவி…”
அவள் சொல்லவும் ஜீவிதன் சிரித்தான், ”எங்க மாமனார் முத தடவ என்னைப் பாத்தப்ப என்ன சொன்னாரு தெரியுமா? என் பொண்ணு பாகுபாடு பாக்காம பயப்படுவா ன்னு… சரியாதான் இருக்கு…”
”ம்ம்.. எனக்கு இந்தப்பக்கம் காட்டுமாடு வரும் ன்னு பயம்ன்னா, அந்தப் பக்கம் வீட்டுமாடு வரும்ன்னு பயம்… எங்க இருந்தாலும் எனக்கு அந்த பயம் இருக்கத்தான் செய்யும்.சொல்லப்போனா எனக்கு யானய விட தெருநாய்கிட்டதான் பயம் அதிகம்…”
”தப்புன்னு சொல்லவும் முடியாது…”
அவன் சொல்லவும் அவனை நிமிர்ந்து முறைப்பும் சிரிப்பும் கலந்து ஒருபார்வை பார்த்தாள்.
”என்னடி?”
”இப்படி ஒரு தடவ, தெருநாய்க்கு பிஸ்கட் போட்டுட்டு இருந்த சிலரைப் பாத்துத் திட்டினீங்க தெரியுமா? அறிவுகெட்டவங்கன்னு…அப்பதான் எனக்கு நீங்கதான் ன்னு நான் பிக்ஸ் பண்ணேன்…”
”ஹான்? ஹாஹா.. சாரிடி… எனெக்கு ஓர்ம(ஞாபகம்) இல்லயே.. திட்டிருப்பனா இருக்கும்? எனெக்கு தெருநாய்க்குச் சோறு வச்சா பிடிக்காதுதான்…”
”ஏன்?”
”சாப்பாடு போட்டா அந்த இடத்துல தெருநாய் அதிகமாகும்ல?”
அவனை ஒரு பார்வை பார்த்தவள், ”இப்படிலாம் பேசுனா உங்கள யார் வெட் ன்னு நெனப்பா? இதுல தான் விழுந்துட்டேன்” கிண்டலாகச் சொல்ல , அவனும் சிரித்தான்.
”வெட்னரி டாக்டர் ங்கறதுக்கு முன்னாடி நான் மனுஷன்தான? மனுஷனா நாயா ன்னா எனக்கு மனுஷன் தான் முக்கியம்… நாய் ரொம்ப நல்ல விலங்குதான். ஆனா, அதுக்காக அதெ தெருவுல விட்டு மனுஷங்களைக் கடிக்கவிடணும்ன்னு கெடயாது…நாய்க்குச் சாப்பாடு கொடுக்கக் கூடாதுன்னு சொல்லல. தெருநாய்க்குக் கொடுக்கக் கூடாது.
நாம போடுற உணவுக்காக, வேற வேற பக்கத்துல இருந்த எல்லா நாயும் ஒரு பக்கம் குவியும். அதுங்களுக்குள்ள சண்ட வரும், வெறிநாய் ஏதாவது இருந்துச்சுன்னா, எல்லா நாய்க்கும் ஈஸியா பரவும்,
வெறி பிடிக்காமலே, நாய் அடிப்படைல வேட்டையாடி. அதுலயும் ரொம்ப நல்ல வேட்டையாடி. தனியா, பாதுகாப்பு இல்லாம வர்ற குழந்தைங்கள பாத்தா கூட்டமா வாழுற தெருநாய்களுக்கு இத வேட்டையாடி சாப்பிட்டா என்னங்கற உணர்வு வரலாம்…
உண்மையாவே, தெருநாய்க்கு நல்லது பண்ணனும்ன்னு தோணுச்சுன்னா அடாப்ட் பண்ணியோ செல்டர்ல விட்டோ வளக்கணும். இல்ல அப்படி இருக்க செல்டர், என். ஜி. ஓ இப்படி டொனேஷன் கொடுக்கலாம். அதைவிட்டுட்டு இப்படி பிஸ்கட் வாங்கிப் போடுறது, மிஞ்சிப் போன சோத்த எடுத்துட்டு வந்து நாய்க்குப் போடுறதுலாம் நாய்க்கு நல்லது பண்ற கணக்குல சேராது…”
அவன் சொல்லிமுடிக்கவும் சிறிது நேரம் அமைதியாக இருந்தவள், ”ம்ம்…. அத்த சொன்ன அந்த முத்துக்கருப்பன் சார் தான், உங்கள ப்ரென்டு பிடிச்ச டாக்டரா ஜீவி?” என்றுகேட்டாள்.
ஒரு பெருமூச்சு விட்டவன், ”ம்ம்…” என்றான்.
”நீங்க படிச்சு முடிக்கலன்னா நீங்க ஏன் கூடப் போனீங்க?”
”அன்னைக்கு ஆனெய பாக்கலன்னு கோவிலுக்குப் போகல.. அந்தக் கோவிலுக்கு அவர் சும்மாவே அடிக்கடி போவாரு… நானும் போய்ப் பேசுவேன். அப்படி பேசிட்டு இருக்கும்போதுதான், திடீர்ன்னு பாகன் வந்து ஆனெ ஒருமாதிரி இருக்குன்னவும் போனோம். அப்ப கூட நான்தான் முன்னாடி நடந்துட்டு இருந்தேன். அது பாக்கவுமே அவருக்குத் தோணிருக்கும் போல… ஜீவி இருன்னு என்னெ நிறுத்திட்டு அவர் முன்னுக்கப்போனாரு… போகவும் சட்டுன்னு தூக்கி எறிஞ்சுருச்சு…”
”அத பார்த்தும் பயம் இல்லாம இருக்கணும்ன்னா உங்களுக்கு யான அவ்ளோ பிடிக்குமா ஜீவி?”
”எந்த உயிரினத்தையும் இது இப்படிதான் நடந்துக்கும்ன்னு பொதுமைப்படுத்த முடியாதும்மா… சில பொது குணங்கள் இருக்கும். ஆனா, தனித்தனி உயிரினத்துக்கு உயிரினம் வேறுபடும். எனக்கு நெறய ஆனெய பிடிக்கும். ஆனா, பொதுவா ஆனெய பிடிக்குமான்னு கேட்டா, கேள்வி தப்புன்னு தான் நான் சொல்வேன்…”
”இல்லப்பா.. ஒரு வண்டில இருந்து கீழே விழுந்தாவே வண்டிய எடுக்கும்போது பயமா இருக்கும்தான?”
”எனக்கும் பயம் இல்லாம இல்ல…ஆனா, சார ஆனெ அடிச்சப்பவே, ஹாஸ்பிட்டல் தூக்கிட்டுப் போணும் ன்னாலே அதத் தாண்டிதான் போகணும்… அங்க இருந்த பாகன் தூக்கப்போறேன் ன்னு போறாரு… என்ன பண்ணன்னு அங்க இருந்த கொய்யாப்பழத்த அதுக்கு எடுத்துக் கொடுத்துட்டு இருந்தேன்… பத்துநிமிஷம் போல அதுகிட்டதான் நின்னுட்டு இருந்தேன்… ஒண்ணும் பண்ணல… அந்தக் குறிப்பிட்ட ஆனெ கிட்டயே நின்னதால எனக்கு மத்த ஆனெகளெ ஒண்ணும் தெரியல…
ஆனா ஒருமாதிரி கோபம் நிறைய இருந்துச்சு… இரத்தமும் சதையுமா மனுஷங்க சவமா கெடக்கறதல்லாம் பாக்கிறப்ப ரொம்ப ஒருமாதிரி கோபம்கோபமா வரும். மனுஷன் இருக்கணும் ன்னா,காடு இருக்கணும். காடு இருக்கணும் ன்னா ஆனெ இருக்கணும். அதுக்காகத்தான் இந்த வேல பாக்கிறேன். இப்படிதான் முதல்ல என் மென்டாலிட்டி இருந்துச்சு…”
”நெஜமாவா?”
”ம்ம்…காடு இல்லாம மனுஷன் நல்லா வாழலாம் ன்னு தெரிஞ்சா, இயற்கை,சூழலியல் ன்னு பேசுற அளவு மனுஷன் நல்லவன் இல்லம்மா… நானும் அந்த மனுஷன்தானே? ஒரு ஆனெ… ஆனெ அடிக்கடி ஊருக்குள்ள இறங்கற இடத்துல எவனோ ஒருத்தன், அவன என்னன்னு சொல்லித் திட்டன்னு தெரியல… இங்க அவுட்டுக்காய் இல்லன்னா பன்னிக்காய் ன்னு சொல்வாங்க… நாட்டு வெடிகுண்டு… ஆனெ தின்னு சாகட்டும்ன்னே அதைச் சக்கக்குள்ள வச்சுருக்கான்…
ஆனெ பொதுவா மத்த எதையாவது சாப்பிட்டா, காலால உருட்டிப்பாத்துக் கவனிச்சுச் சாப்பிடும். ஆனா, சக்க அதுக்கு ரொம்பப் பிடிக்கும். அதுவா? இல்ல என்ன பசின்னு தெரியல…இவ்வளவுக்கும் குட்டியோட இருந்த ஆனெ… அதைச் சாப்பிட்டுருச்சு… வெடிச்சு.. மொத்தமா நாக்குத் துண்டாகி… அதால தண்ணி கூடக் குடிக்க முடியல… ரெண்டு மாசம் வலிலயும் வேதனலயும் சுத்திட்டு இறந்திருச்சு… நாங்க அதை மானிட்டர் பண்றதுக்காக அது பின்னாடியே போயிட்டு இருந்தோம்… அது வலில பிளிருறப்பலாம் அது இப்ப வந்து சவட்டுனா கூட சவட்டிட்டுப் போகட்டும் ன்னு தோண ஆரம்பிச்சுருச்சு…
அந்தக் குட்டியும் இறந்துருச்சு… தாய் ரெண்டுநாள் அந்த வேதனலயும் குட்டிக்குப் பால் மட்டும் கொடுத்துட்டே இருந்துச்சு… அதுக்கப்பறம் குட்டியயையும் பக்கத்துல விடல… ஒரு மாசக்குட்டிதான்… நாங்க அதைப்பிடிச்சு அந்த ஆனக்கூட்டத்துல விடப்பாத்தோம்.. ஆனா, அதுங்க சேத்துக்கல… வேற ஆனக்கூட்டமும் சேத்துக்கல… நாங்க வனத்துறை பராமரிப்புல வச்சுருந்தோம்… ஆனா அது அஞ்சு மாசத்துக்குள்ளயே இறந்துருச்சு…
அந்த ரணவேதனயப் பாத்த பிறகு அதுங்க மேலயும் கோபப்பட முடியல… நம்ம மனசுதான எல்லாமும்? ஆனானப்பட்ட ஆனெ, அவ்ளோ கோபம், மனுஷங்களக் கண்டா வெறுப்புன்னு கண்டாலே தூக்கிப்போட்டுச் சவட்டிட்டு இருக்கும். அதுவே,கரால்ல போட்டு அடைச்சுட்டா, மனுஷங்கள விட்டா வேற கெதி இல்லன்னு நெனச்சுட்டா மனச மாத்திக்குது… அதே மாதிரி எனெக்கும் பழகப்பழக, இதுங்கக்கூட தான் மனசு செட்டாயிட்டு… உனக்காக ஒருவேள வேலய விடலாமான்னு யோசிக்கும்போதுதான் எனெக்கு என் வேல எவ்ளோ பிடிக்கும்ன்னே தெரிஞ்சுச்சு தெரியுமா?”
”நீங்க என்கிட்ட அப்படி கேக்கலன்னா நான் என் மனச மாத்திக்கலாம்ன்னே நெனச்சுருக்க மாட்டேன் ஜீவி…”
”ஆமா ஆமா… நம்மக்காதல்தான் காவியக்காதல் இல்லல்ல?”
”சொல்லிக்காமிக்கிறீங்க பாத்தீங்களா?”
”என் நம்பர இன்னும் எக்ஸ் ன்னு சேவ் பண்ணிருக்கவ பேசக்கூடாதுட்டி…”
”அப்பறம்? இது எங்கப்பத்தா எனக்குக் கொடுத்த செயின மாத்தி செஞ்சுவச்சுருந்த மோதிரம்…எனக்கு அவங்கள ரொம்பப்பிடிக்கும். எவ்ளோ ஸ்ட்ராங்கான பர்சன் தெரியுமா? ஒருமாதிரி முடிவெடுக்கக் கஷ்டமா இருக்கும்போதெல்லாம் அவங்ககிட்டதான் கேப்பேன். அவங்க கூட இருக்கமாதிரி இருக்கட்டும் ன்னு நான் இந்த மோதிரத்தைப் போட்டுருப்பேன்…அதைப் பாத்துட்டு நீங்க பேசுவீங்க… அதுக்குப் பனிஷ்மென்ட் வேணாமா?”
”அடியே…” என்றவன் பாவமாகப் பார்க்க, சிரித்தவள், அவனின் இடதுகன்னத்தைத் தன் இடதுகையால் பற்றியவள் அவனுடைய வலதுகன்னத்தில் முத்தமிட்டாள்.
”சும்மா சொன்னேன் ஜீவி… பனிஷ்மென்ட் ன்னா, எக்ஸ் பக்கத்துல ஒரு ஹார்ட் ஏன் போட்டுருக்கேன்?”
”அதுதான் இன்னும் மோசம்… எக்ஸ்ன்னு ஹார்ட் போட்டு சேவ் பண்ணிருந்தன்னா பாக்கிறவங்க என்னடி நெனப்பாங்க?”
”கொஞ்சம் கேவலமாதான் நெனப்பாங்க…”
”தெரியுது ல்ல?”
”இல்ல ஜீவி… இது ஒரு ரிமைன்டர்தான். நானும் நெறய பேர்ட்ட பாத்துட்டேன்… கொஞ்சம் நல்ல ஹஸ்பன்ட், பணம், குடும்பம், வாழ்க்கன்னு செட்டில் ஆகவும் ஒரு மாதிரி அடுத்தவங்கள மதிக்காம, இல்லன்னா அடுத்தவங்களோட கஷ்டத்தை மதிக்காம இருக்கற போக்கு வந்துருது… நானும் அப்படி மாறிரக்கூடாதுன்னு ஒரு பயம்… உன் புருஷன் தனக்குத்தானே நெனச்சுட்டு இருக்க மாதிரி அவ்ளோ பொறுமக்காரன் லாம் கெடயாது.. கொஞ்சம் கோபக்காரன்தான்… அடக்கிவாசின்னு எனக்கு நானே சொல்லிக்கிற மாதிரி… ”
”ஏட்டி இவ்ளோ ஓவர்திங்க் பண்ற?”
”ஆமா, நான் ஓவர்திங்க் பண்றேன், அந்தக் கெல்ப்பணா டீச்சர் கேட்கவும் யோசிக்குதா இல்லையான்னே தெரியாம டக்குடக்குன்னு பதில் செல்லும்…”
”ஏட்டி.. நான் ப்ரைமரி ஸ்கூலிங் முடிச்சது திருவனந்தபுரத்துல. அங்க மலயாளத்ததான் பர்ஸ்ட் லாங்க்வேஜா படிச்சேன்.. தமிழ மூணாவது மொழியாதான் படிச்சேன்.. அதான் அப்படி.. அதுக்கப்பறம், தமிழ் படிக்கவும் சரியாயிட்டு. இப்பலாம் நல்லாதான் எழுதுவேன்.. வேணும் ன்னா, ஒரு பேப்பரும் பேனாவும் எடுத்துட்டு வா… உனக்கொரு காதல் கடிதம் எழுதித்தரேன்…”
அவள் அவனைச் சந்தேகமாகப் பார்த்தாள்.”நெஜமா?”
”பேப்பரக் கொடு…”
அருகில் அவள் வரைவாக வரைந்து பார்ப்பதற்கு வைத்திருக்கும் காகிதங்களை எடுத்து அவன் கையில் திணித்தாள். ”கெல்ப்பணாக்கு ஏழு பக்கம்… எனக்கு அப்ப ஒரு எழுபது… சரிசரி… எழுபது ஜாஸ்திதான்… அட்லீஸ்ட் ஒரு இருபது பக்கமாவது வேணும்…”
அவள் சொல்லிமுடிக்கும்முன் அவன் எதையோ எழுதி அவளிடம் காட்டினான்.
‘வனமே, நீயென் ஜீவிதம்…’ என்றிருந்ததைப் பார்த்துவிட்டு, ”மூணு வார்த்ததான்…” என முறைக்க முயன்றவளின் பார்வையில் காதல்தான் வடிந்தது.
”காதலுக்கு மூணுதான் அழகு…”
”ஹையோடா…”
(முற்றும்.)

Super sis… Alaga story end panni erukinga…
Thank you sis🤎💚
Romba romba azhagu 🐘🐘🐘❤️
Kadhal vida kadhum athu sarntha vazhkaium thaan Inga athigam pagirapattruku 👌🏻👏🏻
Jeevi oda poorumai yanakku romba viyappa irruku ….athaye mari vana oda muyarchium …
Kadhala thakka vaikka atha adaiya rendupayr panikkara effect lam 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
Abi oda pasam kadaisiya avanoda mind voice dialogue lam 😁😅😂🤣 ultimate
Jeevitham nirainthu vittathu ❤️
ஹை! எவ்ளோ அழகான கமென்ட். ரொம்ப நன்றி சிஸ் 💚💚
Super story sis😍😍 Good ending👏👏👏 hero vet doctor ‘nalum Oru melody feel👍