அபிதன் திகைத்துப் போய் அமர்ந்திருந்தான். அதுநாள் வரை, பண்பாளனாக, எப்போது பார்த்தாலும் ஒரு நட்புப்புன்னகையுடன் கடக்கும் ஜீவிதன் அவனை அடித்தது ஒரு காரணம் என்றால், அன்னை சொன்னது மற்றொரு காரணம். அவனது அக்கா, ஜீவிதனை… ஜீ..வி..தனை…க் காதலிக்கிறாளா? அடியை விட இந்த அதிர்ச்சி கொடுத்த திகைப்புதான் அவனுக்கு அதிகம்.
சில நேரங்களில் ஜீவிதன் மொட்டைமாடியில் கால்தேயத்தேய நடந்தபடி யாரிடமோ பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறான். அவனுடைய முகத்தில் இருக்கிற மலர்ச்சியே பேசுபவர்கள் அவனுக்குப் பிடித்தவர்கள் என்று தெரியும். ஒருமுறை கேட்கக் கூடச் செய்திருக்கிறான், “உங்க ப்யான்சேவாண்ணா?”என. “கூடிய சீக்கிரம்…” என்று சொல்லிச் சென்றிருந்தான். அது தன் அக்காவா?, நானல்லவா கோபப்படவேண்டும் என்று நிமிர்ந்தவன், அருகில் அழுதுஅழுது வடிந்திருந்த மையைக் கூடக் கழுவாமல் உறங்கிப்போய்க்கிடந்த வனபத்ராவைப் பார்த்தான். அவனுக்கு அதுவும் ஆச்சரியமே. அவன் ஏதாவது நாய், பூனை அருகில் சென்றேன் என விளையாட்டுக்காக அவள் அடிக்கும்போது சொன்னால் கூடப் போய்க் குளித்துவிட்டு வருவாள். இங்கானால், ஜீவிதன் கானுயிர் மருத்துவன் என்று தெரிந்தபின்னாலும் இன்னும் சென்று குளிக்கவில்லையே.
உறக்கத்திலும் அவள் முகத்தில் தெரிந்த வருத்தத்தில் அவனுக்குள் தானாக ஒரு குற்றவுணர்ச்சி உருவாகத் தொடங்கியிருந்தது. நேரடியாக இல்லாவிட்டாலும் தானும் மறைமுகக் காரணம்தானே? “நீ பெட்ஸ் வளர்க்கப் போறேன்ன்னுதான போன? ஏன் வளர்க்கல? ஹவுஸ் ஓனர் அதுக்கு ஓகே சொல்வாரான்னு கேட்டுட்டுத்தான போன?” என்று அக்கா கேட்டது ஞாபகம் வந்தது. உண்மையில், என்னதான் சண்டை போட்டு வீம்பாக இதைச் செய்வேன் என்று வந்திருந்தாலும் வந்தபின் அக்காக்குப் பிடிக்காது என்று தெரிந்தும் அதைச் செய்ய அவனுக்கு விருப்பமில்லை. ஆனால், ஆசையில்லாமலும் இல்லை. அதனால் அப்போது அந்தக் காரணத்தை அக்காவின் சொல்ல வேண்டாம் என நினைத்தவன், பழியைத் தூக்கி ஜீவிதன் மேல் போட்டான். ஒருவகையில் ஜீவிதனும் காரணம் என்பது உண்மையும் கூட.
அவனிடம் எந்த நாய் வளர்க்கலாம் என ஆலோசனை கேட்க, அந்த ஊரில் எந்த நாயும் வளர்க்க வேண்டாம் என்றான் அவன். ” காட்டுக்குள்ளருந்து ஆனெ இறங்கும் அப்பப்ப. நாய் வளர்த்தா, அது ஆனெயப் பார்த்துக் குரைச்சுக் கோபப்படுத்தும். ஆனெய சீண்டிட்டு வளர்க்கற நம்ம காலுக்கக் கீழ வந்து ஒளியும். கோபமா வர்ற ஆனெ யார சவட்டும்ன்னு நெனக்க?” என்று பயமுறுத்தி விட்டிருந்தான். “எங்கக்காக்கு இருக்கது நான் ஒரே தம்பி” என்று மனதில் நினைத்தவன், அந்த ஊரில் நாய் வளர்க்கும் எண்ணத்தை விட்டிருந்தான்.
வனபத்ரா கேட்டபோது அதையே கொஞ்சம் மாற்றி, “கீழ் வீட்டு அண்ணா, ஹவுஸ்ஓனர் ட்ட குடிவரும்போதே சொல்லிருந்தாங்களாம் க்கா, பெட்ஸ் லாம் வளர்த்தா வரமாட்டேன்னு. அதனால ஹவுஸ் ஓனர் அனுமதிக்கல…” என்று அடித்துவிட்டிருந்தான். அவன் சொல்லவும் தமக்கையின் முகம் பிரகாசமானது தனக்காக என்று நினைத்திருந்தது அந்தப் பிஞ்சு உள்ளம். இப்போது யோசிக்கும்போது, ஜீவிதனால் என்று புரிந்தது.
அபிதனைப் பொறுத்தவரையில் பூமி பால்வெளி மண்டலத்தை விட்டுக் குதித்தோடி வேறு கேலக்ஸிக்கு வெகேஷனுக்குப் போகும் என்று நினைத்தாலும் நினைத்திருப்பானே ஒழிய, தன் அக்கா ஜீவிதனைக் காதலிப்பாள் என்று மறந்து கூட நினைத்ததில்லை. நினைத்திருந்தால் நிச்சயம் இதை மறைத்திருக்க மாட்டான். இப்போது ஏதோ பெரிய தவறு செய்துவிட்டதைப் போல உணர்ந்தான். அவன் தமக்கையின் அருகிலேயே அமர்ந்திருக்க, கிட்டத்தட்ட மதியம் 12 மணிக்கு உறங்கிய வனபத்ரா, மாலை நான்கு மணிபோலத்தான் எழுந்தாள். எழுந்தவள், முகத்தை மட்டும் கழுவிவிட்டு வந்து அமர்ந்து அன்னை சமைத்து வைத்திருந்த உணவை உண்ணலானாள். எளிமையான மோர்க்குழம்பும் காலிப்ளவர் வறுவலுமாக இருக்க, காலிப்ளவரைச் சீண்டாமல், மோர்க்குழம்பை மட்டும் ஊற்றி, இரண்டு வாய் பெயருக்கு உண்டவள், பின் ஜீவிதனை அழைத்தாள்.
“ஹலோ…” என்ற அவனுடைய குரலே சரியில்லாமல் இருக்க, இவளுக்கும் தொண்டை அடைப்பது போல இருந்தது.
“பார்க்கணும் ஜீவி…”
“எங்கே வரணும்?”
“எங்க வீட்டுக்கு வர முடியுமா?”
“எப்ப வரணும்?”
“இப்ப?”
“பத்து நிமிஷத்துல இருப்பேன்…”
வந்தவனின் முகமும் காலையில் கண்ட மலர்ச்சிக்கு அநியாயத்திற்கு வாடித் தெரிந்தது. அவன் வீட்டிற்குள் நுழைகையில், வனபத்ராவின் தந்தை பாலமுருகன்தான் வந்து கதவைத் திறந்தார். மகனைக் குடிவைக்கும்போது பார்த்திருந்தமையால், அவனை அடையாளம் தெரிந்திருந்தது அவருக்கு. வரவேற்று அமரச் செய்தார்.
“என்ன சாப்பிடுறீங்க தம்பி?”
“இருக்கட்டும் சார்… வனா… வனபத்ரா…” என்று இழுத்தான்.
“முதல்ல நாம கொஞ்சம் பேசுவோம் ப்பா…”
“சொல்லுங்க சார்…”
“ஆறு வயசுல ஒரு ஆறேழு நாய் அவளைக் கடிக்கப் பார்த்துச்சு… நல்ல வேள ஒண்ணும் ஆகல… ஆனா அதுல இருந்து நாய் மட்டுமில்லாம எந்த விலங்கப் பார்த்தாலும் பயம் ன்னு ஆகிருச்சு.. நாங்க முதல்ல கவனிக்கல. பாப்பா வளர்ந்த பிறகுதான் பார்த்தோம். அப்ப அந்த பயமும் வளர்ந்துருச்சு… சைக்யாரிஸ்ட்ஸ் கிட்டயும் பார்த்தாச்சு… குறைஞ்சுச்சே தவிர, சரியாகல. நீங்க ரெண்டுபேரும்… எவ்வளவு தூரம் சரியா வரும்ன்னு எனக்குத் தெரியலப்பா…”
“எல்லா விலங்குக்கும் பயப்படுவாங்களா அங்கிள்…”
“டிஸ்க்ரிமினேட் பண்ணாம பயப்படுவாப்பா என் பொண்ணு…” அவர் சொன்ன விதத்தில், அவன் முகத்தில் லேசாகச் சிரிப்பு கூட வந்தது.
“நான் வனாட்ட பேசிப்பார்க்கட்டுமா அங்கிள்?”
ஒரு பெருமூச்சு விட்டவர், “பேசிப்பாருப்பா… எங்க பொண்ணு சந்தோஷம்தான் எங்களுக்கு முக்கியம். அவ சொல்றதுதான்…” என்றார்.
அவன் எழ, “தம்பி ஒரு நிமிஷம்…” என்று நிறுத்தினார்.
“சொல்லுங்க அங்கிள்…”
“என் பையன் மறைச்சது உங்களுக்கான சிக்கலுக்கு அடிப்படை. எனக்குப் புரியுது. அதுக்காக, அவனைக் கைநீட்டுனத…”
“மன்னிச்சுருங்க அங்கிள்… நான் அபி மேல கோபப்பட்டு.. அப்படி பண்ணனும்ன்னு பண்ணல.. எல்லாம் சேர்ந்து…அந்த நேரத்துல… நான் அபிகிட்ட மன்னிப்பு கேட்டுரேன் அங்கிள்…”
“அக்கா உங்கள… சம்மதம்ன்னு சொன்னா மட்டும் சாரி கேளுங்க… இல்லன்னா வேணாம்.” பேச்சுச்சத்தம் கேட்டு, அபிதனும் அஞ்சனாவும் வந்திருக்க, அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த அபிதன் இப்படி பதிலளித்திருந்தான்.
“இதுக்கு நீ சாரி கேட்க வேணாம்ன்னே சொல்லிருக்கலாம்…” என்ற அஞ்சனாவை அபிதன் முறைக்க, வனபத்ராவும் அறைக்குள்ளிருந்து வந்தாள். காலையில் கட்டியிருந்த சேலையும் அவளோடு சேர்த்து நலுங்கியிருந்தது.
“மேல கூடப் போய்ப் பேசிட்டு வாங்க… கூட்டிட்டுப் போ பத்ரா…” என்றார் அஞ்சனா.
அழுது கழுவி முடித்திருந்த முகத்தோடு நின்றவள், மறுப்பாகத் தலையசைத்தாள். “பேசுறதுக்கு ஒண்ணுமில்லம்மா…” என்றவள், ஜீவிதனின் கண்களை நேராகப் பார்த்தாள்.
“சாரி ஜீவி… சரிபட்டு வராது…”
“என்ன சரிபட்டு வராது?”
“எதுவுமே சரிபட்டு வராது…”
“வனா… கொஞ்சம் தனியா பேசலாம். நான் சொல்றதைக் கொஞ்சம் கேளு…”
“பேசுறதுக்கும் கேட்கறதுக்கும் ஒண்ணுமில்ல ஜீவி…”
“ஆறுமாசம் நீதான் என் எதிர்காலம் ன்னு நெனச்சு வாழ்ந்திருக்கேன் வனா… எனக்கு ஒரு அஞ்சு நிமிஷம் ஒதுக்கற அளவு கூட உன் மனசுல என் மேல ஒரு அடிப்படையான மரியாதை கூட இல்லையா வனா?” அவன் உடையப்போகிறேன் என்று கட்டியம் கூறிக்கொண்டிருந்த குரலில் கேட்க, முடிந்த வரை சமாளித்து அவன் கண்களைப் பார்த்துக் கொண்டிருந்த வனபத்ராவின் கண்களில் திடீரெனக் குளம்கட்டியது.
பாலமுருகன் கண்காட்ட, அஞ்சனா மகனையும் இழுத்துக் கொண்டு அறைக்குள் சென்றிருந்தனர்.
“மிருகங்க கிட்ட உனக்கு என்ன பயம் வனா?”
“எல்லாமே பயம்… அதுங்க மேல பராண்டிருங்களோன்னு பயம்.. கடிச்சுருமோன்னு பயம்… மேல பட்டுருமோன்னு பயம்…”
“பட்டாதான் என்ன?”
“எனக்குப் பிடிக்காது…” என்று வெறிபிடித்தவள் போலக் கத்தினாள்.
“ஏன்ப்பா கத்துற?”
“கத்தணும்ன்னு கத்தல ஜீவி…” என்று ஆதங்கத்தோடு பார்த்தவள், “இதுதான் பிரச்சனை, விலங்குன்னு வரும்போது என்கிட்ட எப்பவும் இருக்க அமைதி இருக்காது…ஒரு கட்டத்துல உங்களுக்கு வெறுத்துரும் ஜீவி… அதோட…”
“அதோட?”
“எனக்கு விலங்குங்க மேல இருக்கறது பயம் மட்டும் கிடையாது.. அருவருப்பும்தான்.. நீங்க அதையெல்லாம் தொட்டுட்டு என்னையும்…” உள்ளே போன குரலில் சொன்னவள், அதற்குமேல் முடிக்காமல் நிறுத்தினாள். “எனக்குப் பிடிக்காது ஜீவி…உங்களுக்கும் என்னைப் பிடிக்காம போயிரும் ஜீவி… வேணாம் ப்பா.. விட்டுருங்க…”
சொன்னவளைப் பார்த்தவனது விழிகளில் வலி அப்பட்டமாகத் தெரிந்தது. வனபத்ராவுக்கும் வலித்ததுதான், ஆனால் இது தொடர்ந்தால் இதே வலி வேறு உருவத்தில் வரும். கொஞ்சம்கொஞ்சமாக இருவருக்கும் இடையில் இருக்கின்ற அன்பைக் கொன்று தின்று கடைசியில் எந்த வலி வந்தாலும் வலிக்காத அளவு மரத்துப்போய் நிற்கின்ற நிலை வரும். அதனாலயே வனபத்ரா உறுதியாக மறுத்தாள்.
“என்ன ஆறுமாசம் பழகிருப்போமா? மிஞ்சிமிஞ்சிப் போனா ஒரு ஒன்பதுதடவை நேர்ல பாத்துப் பேசிருப்போம்… போன்லயுமே நாம தெனமும்லாம் பேசுனதுல்ல… காதல்தான் வாழ்க்கையே ன்னு நெனக்கறதுக்கு நாம ஒண்ணும் டீனேஜ் காதலர்களும் இல்லல்ல. இதை விட ஏதோ காவியக்காதல் லாம் பிரிஞ்சு வேற முறைல வாழ்க்கயப் பார்த்துட்டு நிம்மதியாதான இருக்காங்க… சில நேரம் நம்மள விட்டுப் போறத விட, நல்லதா வாழ்க்க நமக்குக் கொடுக்கும். நெஜமாவே ஒரு சூப்பரான, உங்களுக்கு ஒத்து வர்ற மாதிரி ஒரு பொண்ணு உங்களுக்குக் கிடைப்பாங்க ஜீவி.. அவங்க கூட வாழுங்க.. என்னை விட்டுருங்க…”
அவள் சொல்லவும் ஜீவிதன் சிரிக்க ஆரம்பித்திருந்தான். “ஓ.. த ஐகானிக் நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கோங்க டயலாக்… நான் இதை என் வாழ்க்கல கேப்பேன்னு நெனச்சுப் பாத்தது கெடயாது…” அவன் விரக்தியும் வலியுமாகச் சொல்ல, வனபத்ரா அசராமல் நின்றாள்.
“சாரி ஜீவி புரிஞ்சுக்கோங்க.. என்னை விட்டுருங்க…ப்ளீஸ்…”
“உன்னெ யார் இப்ப விடாம பிடிச்சுட்டுத் தொங்குறது? போடி…” என்றவன், பாலமுருகன், அஞ்சனா மற்றும் அபிதன் நின்றிருந்த அறைவாயிலில் சென்று நின்றான். அவள் குரலைத் தாழ்த்திச் சொன்ன சில விஷயங்கள் கேட்டிருக்காதுதான். ஆனால், பெரும்பாலானவை கேட்டிருக்கும்.
அபிதனைப் பார்த்து, “நெஜமாவே சாரி அபி… நீ தெரிஞ்சே பொய் சொல்லிருந்தாலும் உன்னெ நான் அடிச்சுருக்கக் கூடாது. அப்படியிருக்கும்போது தெரியாம சொன்னதுக்குக் கைநீட்டுனது ரொம்ப தப்பு. மன்னிச்சுடு…” என்றவன் பாலமுருகன் மற்றும் அஞ்சனாவிடம் ஒரு தலையசைப்புடன் வெளியேறியிருந்தான். மீண்டும் வனபத்ராவிடம் வந்தவன், அவளை ஒருகணம் பார்த்துவிட்டுப் பின் அவள் கையில் வைத்திருந்த அலைபேசியைப் பிடுங்கினான். அவள் முகத்தைக் காட்டினால் திறக்கும் பூட்டைப் போட்டு வைத்திருக்க, அவள் முகத்துக்கு நேராக அலைபேசியை நீட்டவும் அது திறந்திருந்தது. உள்ளே சென்று ஏதோ செய்தவன், அலைபேசியை அங்கிருந்த சோபாவில் வைத்துவிட்டுச் சென்றான். அவன் வாயிலை நோக்கிப்போக, வனபத்ரா அதை எடுத்து, என்ன செய்திருக்கிறான் எனப் பார்த்தாள். அவனுடைய அலைபேசி எண்ணைப் பதிந்திருந்தான், அது “Ex” எனக் காட்ட, அதையே பார்த்தபடி நின்றிருந்தாள் வனபத்ரா.
(தொடரும்…)

Interesting 😍
Thanks a lot sis