புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

எனக்காக வந்தவனே – 12


இருந்தாலும் என மீண்டும் ஒரு சல்லடை போட்டு வீட்டைச் சலித்திருந்தான். பாம்பு எதுவும் அங்கு இல்லை. சுற்றுப்புறம் முழுவதும் பார்த்துவிட்டு கீழே இறங்கிவரும்போது கதவை அடைத்திருந்த துணிகளும், கையில் அணிந்திருந்த கையுறையும் அவனைப் பார்த்துச் சிரிக்க, ஒரு செல்லக்கடுப்போடு உள்ளே வந்தவன், பயத்தில் உறங்கிப்போயிருந்த வனபத்ராவைத்தான் பார்த்தான்.

வனபத்ரா தன்னுடைய முழங்கால்களைச் சாய்த்து அதிலேயே தலைவைத்துப் படுத்திருந்தாள், அம்பர்லா கட்டிங்கில் ஒரு கரும்பச்சை நிற முழுக்கை சுடிதார் அணிந்திருந்தாள். அதனுடைய நிறம் அவளுடைய நிறத்திற்கு முரணாக, அழகாக அவளுடைய முகத்தையும் கழுத்தையும் எடுத்துக்காட்டியது. ஜீவிதனின் கவனத்தைச் சட்டெனக் கவர்ந்தது, அவளுடைய இடதுபக்கக் கழுத்தில் இருந்த மச்சம்தான். 

மேல்கழுத்தில் இருந்த அந்த மச்சத்தைப் பொறுமையாக ரசிக்கவேண்டும் என்பது அவனுடைய வெகுநாள் ஆசை. ஆனால், எங்கே பார்வை கண்களை விட்டுக் கீழே இறங்கினால் தவறாக நினைத்துக் கொள்வாளோ என்ற பயத்தில், மேலோட்டமாகப் பார்த்திருந்ததோடு சரி. இன்று அவனுடைய வனம் தானாகத் தேடிவந்து வாய்ப்பை வழங்கியிருக்க, ஒருகணம் நின்று ஆற அமர இரசித்தான்.

இரண்டுபக்கமும் இரண்டிரண்டு சொடக்குக் கிளிப்புகளை மட்டும் பயன்படுத்தி, முடியைச் சுருளாக எடுத்துக் குத்தியிருந்தவள், மீதியிருந்த முடியை அப்படியே விரித்து விட்டிருந்தாள். அதில் அவ்வபோது சில முடிக்கற்றைகள் வந்து சுருளாக அந்த மச்சத்தை மறைத்துப் பின் விலகி என விளையாட்டுக் காட்ட, சில மணித்துளிகள் கண்ணெடுக்காமல் பார்த்திருந்தான்.

அவள் லேசாக அசைவது போல் தோன்ற, சட்டெனப் பார்வையைத் தழைத்தான். கணுக்காலைத் தாண்டி மட்டும் தெரிந்த கருநிற பேன்ட்டும் வெண்ணிறக்கொலுசும் அலங்கரிக்க பிஞ்சுபிஞ்சு என்றிருந்த பாதம் கண்ணில் பட்டது. அதை மென்மையாக மடியில் எடுத்துவைத்து, சொடக்கிழுக்கவேண்டும் போலப் பரபரத்த கைகளை அடக்கக் கடினமாகத்தான் இருந்தது அவனுக்கு. அவன் பார்வையால் அவளை அள்ள அள்ள, அவனை அள்ளி அருகிலிழுத்தபடி இருந்தாள் அவள்.

வேறெதுவும் அவன் தவறாகப் பார்க்கவில்லை. பார்க்கும்படி அவள் அமர்ந்திருக்கவும் இல்லை. தெரிந்ததெல்லாம் முகமும் கழுத்தும் பாதமும் உள்ளங்கையும் மட்டும்தான். முழுமையாக மறைத்திருந்த தொளதொள ஆடை, வரிவடிவாக அவளுடைய வளைவுகளைக் காட்டினாலும் அவன் நிதானித்துப் பார்க்கவில்லை. காதலிதான், அவனுக்காக அவ்வளவு பயத்தை மனதில் வைத்துக்கொண்டு இவ்வளவுதூரம் வந்திருக்கிறாள்தான், ஆனால் அவள் உறங்கும்போது அப்படி பார்க்கத் தோன்றவில்லை. ஆசை? அது இருக்கிறது நிறைய. ஆனால், அவள் அனுமதி வேண்டும்.

அவனுக்கு அவள் சொல்வது புரிந்தது, அவளுடைய பயத்தையும் அவன் தவறாகவோ இலகுவாகவோ எடுத்துக்கொள்ளவில்லை. அவனுக்குக் கோபமெல்லாம், ஒரு சிக்கல் இருக்கிறது என்றால், அதைத் தீர்க்க வழி இருக்கிறதா என்று கூடப் பார்க்காமல் அவள் சரிபட்டு வராது, சரிபட்டு வராது என்றதுதான். அந்தக் கோபத்தில், தேவையே இல்லாமல் வேறு விஷயத்திற்குப் போய் வார்த்தைகளை விட்டிருந்தான். அவனுக்கே வருத்தமாகத்தான் இருந்தது.

அவளைப் பார்க்கவும் இன்று அமர்ந்து பேசவேண்டும் என்றுதான் நினைத்தான், ஆனால் அவள் செருப்பு பிய்ந்துவிடும் என்பாள் என எதிர்பார்க்கவில்லை. அந்த வார்த்தைகளை அவனைப் பார்த்து யாரும் சொன்னதில்லை. தோழர்கள் கூட. தகாத வார்த்தைகளில் திட்டிக்கொள்வதுதான் நட்பு என்ற கொள்கை கொண்ட யாரையும் அவன் நண்பர்களாக அனுமதித்தது இல்லை.

நம்மிடம் யார் எப்படி பேசவேண்டும் என்பது நாம் தீர்மானிப்பது என்கிற எண்ணத்தில் அவனுக்குக் கொஞ்சம் தீவிரம் அதிகமாகவே உண்டு.வனபத்ரா டா போட்டு அழைத்திருந்தால் ஒன்றும் தெரிந்திருக்காது, செல்லக் கொஞ்சல் என்று இரசிக்கத் தோன்றியிருக்கும். ஆனால், செருப்பால் அடிப்பேன் என்பதைக் கொஞ்சலில் சேர்க்க இயலாதே.

இப்போது கூட, நான் பேசியதற்கு இது குறைவுதான் என்று தோன்றியதுதான். ஆனால், ஏனோ அதை இயல்பாகவும் அவனால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அதற்காகத் தனக்காக, இவ்வளவு தூரம் வந்திருப்பவளைப் புறக்கணிக்கவும் மனம் இடமளிக்கவில்லை. அந்தப்பக்கம் இந்தப்பக்கம் என மாறிமாறி வந்துகொண்டிருந்தான் ஜீவிதன்.

தன்னை ஒருவன் விழுங்கிவிழுங்கி இரசித்துக் கொண்டிருக்கிறான் என்பது அறியாமல், விழிப்பு தட்டவும் பாம்பு நினைவு வர, சட்டென நிமிர்ந்து அமர்ந்தாள் வனபத்ரா. அவள் எழுந்து அமர்ந்த வேகத்தில், அப்படியே வைத்து படுத்திருந்த கழுத்து வலிக்க, “அம்மா…” என்றபடி கழுத்தைப் பிடித்தவள், அதன்பின்தான் ஜீவிதனைக் கவனித்தாள்.

“ஜீவி…” என்றவள், கழுத்தை அழுத்திவிட்டபடியே, “ஜீவி… அது கருநாகம் ன்னு நினைக்கிறேன்… இப்போ கொஞ்சம் அமைதியாகவும் யோசிக்க முடியுது… அது கருப்பு கலர்ல இருந்த மாதிரிதான் இருந்துச்சு…” என்றாள்.

“அது கருநாகம் இல்லப்பா…” என்றான் ஜீவிதன் பொறுமையாக.

“அப்பறம்?”

“ராஜநாகம்.. இப்பதான் ரெஸ்க்யூ டீம் வந்து பிடிச்சுட்டுப் போனாங்க…”

“நெஜமாவா?”

“நம்புறதும் நம்பாததும் உன் இஷ்டம்…எழுப்புனா பயந்துருவன்னுதான் சொல்லல…”

ஒருகணம் அவள் குழப்பமாக விழிக்க, எழிலரசியெனக் கொஞ்சத் தோன்றியது ஜீவிதனுக்கு. உள்ளே கொஞ்சவும் செய்தவன், வெளியேதான் முகத்தில் ஒன்றும் காட்டாமல் அமர்ந்திருந்தான்.

“சரி அப்ப நான் மேலே போறேன்…” என்று எழுந்தவள், “கதவைத் திறந்துக்குறேன்..” எனப் பூட்டும்போது பெறாத அனுமதியைக் கேட்டாள். கதவைத் திறக்கவும் வெளியே முழுவதும் இருளும் நீலமுமாக இருக்க மீண்டும் கதவைப் பூட்டியவள், அசையாமல் அமர்ந்திருந்த ஜீவிதனிடம் “மணி எத்தன?” என, அவன் பார்த்துவிட்டு “ஒன்பது” என்றான்.

அவள் கலவரமாகப் பார்க்க, “என்னப்பா?” என்றான் மீண்டும்.

“துணைக்கு வர்றீங்களா?”

“மேலே தூங்கவா?”

“ம்ஹும்… மாடிவரைக்கும் போதும்…” அவள் தீவிரமாகப் பதிலளிக்க, “தனியா இருந்துருவியா?” என்றான் ஜீவிதன்.

“அபி என்னை விட அஞ்சு வயசு சின்னப்பையன், அவனே தனியாதான தூங்குவான்? நான் தூங்கறதுக்கென்ன?”

“அபி தனியா தூங்குவான்னு உனக்கு யார் சொன்னது?”

“ஹான்?”

“ம்ம்…”

“… உங்க கூடயா தூங்குவான்?”

“எனக்குத் தனியா தூங்கலன்னா தூக்கம் வராதும்மா…”

“அப்பறம் அபி வேற யார்கூட…”

“ரெண்டு சிங்கம் வந்து வாசல்ல படுத்துக்கும்…”

வனபத்ரா அவனை முறைத்தாள். “என்னைப் பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது?”

“கண்ணுக்கு முன்னாடி உண்மை இருந்தாலும் கண்டுக்காத ஜீவராசின்னு தெரியுது?”

“நீங்க இப்ப எதைப் பத்திப் பேசுறீங்க ஜீவிதன்?”

“சிங்கத்தப் பத்திம்மா…”

“ஹலோ.. நாங்க ஒண்ணும் சும்மா இங்க வரல… இந்த ஊர்ல என்னென்ன இருக்குன்னு நெட்ல பார்த்துட்டுதான் வந்துருக்கேன், அதோட என்னை என்ன சிங்கம் குஜராத் கிர் காடுகள் ல மட்டும்தான் இருக்கும்ங்கற ஜெனரல் நாலெட்ஜ் கூட இல்லாத கூமுட்டைன்னு நினைச்சீங்களா என்ன?”

“சேச்சே… உன்னைப் போய் அப்படி நெனப்பனா சொல்லு…” என்றவன், ” சில சமயம், அதோட இயல்பான இருப்பிடமா இல்லன்னா கூட சில விலங்குகளைச் சில இடத்துல வந்து விட்டுப் பழக்குவாங்க தெரியுமா?”

“…”

“வெளிநாட்டுல இருந்து கூட சில விலங்குகளைக் கொண்டுவந்து விடுவாங்க, வைல்ட் லைப்க்கு ஹெல்ப் பண்ணும்ன்னு…”

“…”

“அப்படி கிர் நேஷனல் பார்க்ல இருந்து ஒரு நாலு சிங்கத்தை இந்தப் பக்கம் வந்து விட்டுருக்காங்க… நம்ம ஊர்லயும் சிங்கம் இருக்கட்டும்ன்னு. அங்க சிங்கம்லாம் நார்மலா ஊருக்குள்ளயே இங்க நாய் நடமாடுற மாதிரி நடமாடும் தெரியுமா? அப்படி பழகின சிங்கம் போல… காட்டுக்குள்ள இருன்னு விட்டா கட்டெடத்துல படுத்தாதான் தூக்கம் வரும் வந்துருது…”

வனபத்ராவின் முகத்தைப் பார்த்தபடியே சிரிக்காமல் சொல்லிக் கொண்டிருந்தவனுக்குக் கொஞ்சம்கொஞ்சமாக மாறத்தொடங்கிய அவளது முகத்தைப் பார்க்கவும் சிரிக்காமல் இருக்க கடினமாகத்தான் இருந்தது. ஆனாலும் தொடர்ந்து கோர்வையாகச் சொன்னான்.

“பொய் தான சொல்றீங்க?”

“நீ வேணா அபிகிட்ட கேட்டுப் பாரு… அவனே ரெண்டு மூணு தடவை பார்த்துருக்கான்…”

“நெஜமாவா?” 

நிச்சயமாக அவன் சொன்னதை வனபத்ரா நம்பவில்லைதான். இருந்தாலும் அவன் சொன்னதைக் கேட்டபின் மாடிக்குச் சென்று தூங்கவும் தைரியம் வரவில்லை. அதற்காக? இவனுடன் இங்கா உறங்க முடியும்? அவள் குழப்பமாக நிற்க, “வா…” என்றபடி சமையலறைக்குள் நுழைந்தான்.

அவள் தயங்கியபடி வரவும் ஒரு பகுதியில் இருந்த பாத்திரங்களைக் காட்டினான். “எங்கம்மை ஃபீப் கழிக்காது. நானும் அப்பாவும் மட்டும்தான். அம்மாவுக்குத் தொடவே பிடிக்காது. அப்பாதான் சமைப்பாங்க. ஊர்ல இருக்கும்போது, ஃபீப்க்காகத் தனியா பாத்திரம் வச்சுருப்பாங்க. எனக்கு இங்க அப்படிலாம் நேரம் இல்ல… எது கைக்கு வருதோ அதுதான் பண்ண முடியும். அதனால அம்மை வந்தா சமைக்கன்னு அவங்களுக்கு மட்டும் தனியா வெச்சுருக்கது அது. நான் அதைப் புழங்குனது இல்ல. இந்தப் பெட்டில இருக்க சாமான்லாம் டோர் டெலிவரி, நான் பெட்டிய மட்டும்தான் தொட்டேன். உள்ள எதுவும் திறக்கல. நீயா ஏதாவது செஞ்சு சாப்பிடு…”

அவன் தன்மையான குரலில் சொல்லவும் மிடறு விழுங்கியவள், மறுப்பாகத் தலையசைத்தாள். அவள் கண்ணில் மீண்டும் நீர் தளும்பியது.

“எனக்கு எதுவும் வேண்டாம்…” அவள் சொல்ல, அவன் அமைதியாக அடுப்பின் பக்கம் சென்றான். “காலைல இருந்து எனக்குப் பயங்கரமான அலைச்சல்… நிச்சயமா எதையாவது உள்ளுக்கப் போட்டாதான் தெம்பே வரும். விட்டுட்டுச் சாப்பிடுறேன் ன்னு தப்பா எடுத்துக்காத…” என்றபடி குக்கரில் சோறு வைத்தான். அவன் செய்வதைப் பார்த்தபடியே ஓரமாக நின்றாள்.

“நான் ஏதாவது செய்யவா?”

“இல்ல… சோறு மட்டும்தான். குழம்பு காலல வச்சது உண்டு…”

சோறு வேகவும் இறக்கி வைத்தவன், ஒவ்வொரு பாத்திரமாகத் திறந்து திறந்து மூடினான். பின், வெறும் சோற்றை மட்டும் தட்டில் வைத்து அவன் உண்ண அமர, கேள்வியாகப் பார்த்தாள் வனபத்ரா.

“இன்னைக்குக் காலைல குழம்பு வைக்கல… கூப்பிடவும் அவசரமா கௌம்பிப் போனது. மறந்துட்டேன்…”

“அப்ப காலைல சாப்பிடலயா?”

“சாப்பிட்டேன்… சாப்பிட்டேன்…” அவனுடைய தொனியிலேயே அது உண்மை இல்லை என வனபத்ராவுக்குத் தெரிந்திருந்தது.

“சரி… இப்ப ஏதாவது வச்சு சாப்பிடுங்க… வெறுஞ்சோத்த எப்படி சாப்பிடுவீங்க?”

“எது செஞ்சாலும் அட்லீஸ்ட் பதினைஞ்சு நிமிஷமாவது எடுக்கும்.எனக்குப் பசிக்கி…” என்றபடியே அவன் வெறும் சோற்றைச் சாப்பிட, “அட்லீஸ்ட் தண்ணியாவது ஊத்திச் சாப்பிடுங்க ஜீவி…” என்றாள் அவள்.

“எனக்கு அந்த டேஸ்ட் பிடிக்காது…”

அவனை முறைத்தவள், கதவைத் திறந்து வெளியே செல்ல, “பத்ரா… சிங்கம் இருக்கும்…” என்றபடி பின்னால் வந்தான்.

“பொய்.. பொய்.. சொல்றதெல்லாம் பொய்…” என்றபடி அவள் விளக்கெரிந்து கொண்டிருந்தபடியில் ஏற , “நான் உன்ட்ட வெட் இல்லன்னு பொய் சொல்லல பத்ரா…” என்றான் ஜீவிதன் கடினமான குரலில்.

நின்று திரும்பியவள், “நீங்க வெட் இல்லன்னு பொய் சொன்னீங்கன்னு யார் சொன்னது… இந்த மூஞ்சிக்கு மேல வர்ற கோபத்துக்கு மட்டும் ஒரு குறைச்சல் கிடையாது…” என்றுவிட்டு மேலே சென்றாள்.

அவள் கதவைத்திறந்து உள்ளே செல்லவும் பின்னோடு வந்தவன், “தனியா இருக்க வேணாம் பத்ரா… அபி வேற… ஏதாவது வந்தாலும் அவன் கிட்ட கொஞ்சம் நிதானம் இருக்கும்… அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்ங்கற மாதிரி தெரியும். கீழேயே படு… தப்பு கிடையாது…” என்றான்.

அவனுக்குப் பதில் எதுவும் சொல்லாமல் தன்னுடைய பையைக் கவனமாகத் திறந்தவள், அதிலிருந்து சில பொருட்களை எடுத்துக் கொண்டு மீண்டும் கீழே இறங்கினாள்.

“சர்வம் பயமயம்.. ஆனா, கதவத் தொறந்து போட்டுட்டுப் போறதே பொழப்பா வச்சுருக்கா…” என்றபடி பூட்டிவிட்டுக் கீழே வந்தவன் முன்னால் இரண்டு டப்பாக்களை வைத்தாள்.

“இது புளிக்காய்ச்சல், புளிச்சோறு செய்றதுக்குப் போடுறது, ராத்திரி.. புளி ஓகேன்னா போட்டுக் கிண்டிட்டு சாப்பிடுங்க. இல்லன்னா இது பருப்புப் பொடி… சோத்துல போட்டு நெய் ஊத்திச் சாப்பிடுங்க…நல்லாருக்கும்…”

“வேணாம்…”

“எனக்கு இது ரெண்டும் பிடிக்காது… அபிக்குத்தான் பிடிக்கும்… அதனால நீங்க சாப்பிடலன்னாலும் நான் இத சாப்பிட மாட்டேன்…” அவன் எதனால் வேண்டாம் என்கிறான் என்பதைப் புரிந்தவளாக அவள் சொல்ல, அவனுக்கு உள்ளுக்குள் ஒரு லேசாகப் புன்னகை பூத்தது. 

“செரி… நீயே எடுத்து வை…” என அவன் பருப்புப்பொடியைக் காட்ட, அவளே தான் வைத்திருந்த ஸ்பூனிலேயே கொஞ்சத்தை எடுத்து, அவன் தட்டில் வைத்தாள். அவள் சொன்னது போல ஒருவாய் வைத்துப் பார்த்தவன், “நல்லாருக்கு…” என்றபடி உண்டான்.

“தொட்டுக்க எதுவும் வேணாமா?”

“இப்போதைக்கு இது போதும்…”

சற்றுப் பசி அடங்கவும், அவளது முகம் பார்த்தவன், “அப்ப சிங்கமே இருந்தாலும் தனியா மேல போற அளவுக்குப் பத்ராக்கு தைரியம் உண்டு?” என்றான் சீண்டி விடுவது போன்ற குரலில்.

“உங்க மூஞ்சி… கூட வருவீங்கன்னு தெரியும்…” என்றாள் எரிச்சல் குரலிலேயே.

“ஆனா, கல்யாணத்துக்கப்பறம் உன் கூட வருவேன் ங்கற நம்பகம் இல்ல… அப்படித்தான?”

“ஆமா… இல்ல… போதுமா?” என்றவள், மீண்டும் வெளியேறி மாடிக்குச் சென்றிருந்தாள். இம்முறை ஜீவிதன் உடன் செல்லவில்லை.

(வருவான்…)

2 thoughts on “எனக்காக வந்தவனே – 12”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!