காலை விடியலில் விழிப்பு தட்ட, ஜீவிதன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த வனபத்ராவைப் பார்த்தான். அவன் இப்போதே கிளம்பிச் செல்ல வேண்டும். இன்று இரவு வரமுடியுமா? என்பதும் யோசனைதான். இவளைத் தனியாக எப்படி விட்டுச்செல்வது என்றிருந்தது. அவளை மெல்ல எழுப்பினான். அவள் தூக்கக்கலக்கத்தில் ஒருமுறை விழித்துவிட்டு எழுந்து அமர, தானும் எழுந்து அமர்ந்தான்.
“நான் இப்ப கெளம்பணும் வனா…”
“கௌம்புங்க…”
“அடியே.. வேலைக்குப் போணும்டி…”
“போங்க…”
“ராத்திரி வர முடியுமான்னு தெரியல.. அபி வேற நாளைக்கித்தான வாராங்கற? தனியா இருந்துக்குவியா?”
“நான் தனியா இருந்துக்குவேன், இல்ல சிங்கத்துக்கூட கேம்ப்பயர் போடுவேன்.. உங்களுக்கென்ன?”
“பத்ரா நான் சீரியசா பேசிட்டு இருக்கேன்…”
“நானும் சீரியசாதான் பேசிட்டு இருக்கேன்… நமக்குள்ள சரிபட்டு வராது…”
“நீ… இப்படியே சொல்லிட்டு இரு… நான் நாளைக்கு நம்ம பிள்ளைங்களுக்கு, செரி, பட்டு, வராது ன்னு பேர் வைக்கப்போறேன்…” என்றபடியே எழுந்தவன், “என்கூட வர்றியா?” என்றான்.
“எங்க போறீங்க?”
“முதுமலைக்கு…”
“யானைகள் முகாம்?”
“ஆமா…” என்றவனை, பாதகா… என்பது போலப் பார்த்தாள் அவள். பின், அவளுடைய தாய் அவர்கள் பக்கக் கோவில் யானை முகாம் முடித்துவிட்டு வந்துவிட்டது என்றது நினைவு வந்தது.
அவன், “வர்றியா?” என்று கேட்கவும் சரி என்று தலையசைத்தாள் அவள். இதனை ஜீவிதனே எதிர்பாராமல் திகைக்க, “நான் வந்ததே என் பயத்தைக் குறைக்கத்தான்.. ஞாபகம் வச்சுக்கோங்க…” என்றாள்.
“நெஜமா சொல்றியா?”
“ம்ம்…”
“சீரியசா?”
“சத்தியமா…”
அதற்குமேல் ஜீவிதன் ஒன்றும் கேட்கவில்லை. “அரைமணிநேரத்துல ரெடியாகிரு…” என்றுவிட்டு மட்டும் கீழே சென்றான்.
கீழே வந்து தன் வீட்டுக் கதவைத் திறந்துகொண்டிருக்கையில் அபிதன் வரவும் புருவத்தை உயர்த்தினான். வந்தவுடனேயே எதிரே ஜீவிதனைப் பார்க்கவும் அபிதனுக்கு ஒருமாதிரியானது. வனபத்ரா பெங்களூருக்குச் செல்கிறேன் எனச் செல்லவும், அபிதன் ஜீவிதனை மனம் விட்டுத் திட்டவே செய்தான். இரண்டுமுறை பார்த்த பாலமுருகன் அவன் பேசியதாக வனபத்ரா சொன்னதை மகனிடம் சொல்லியிருந்தார். அதன்பின்னும் ஏதோ சொல்லவந்து தயங்கியவர், பின் ஒன்றும் சொல்லாமல் நகர்ந்திருந்தார்.
தந்தை சொன்னதைக் கேட்ட அபிதனுக்கு அதன் மேல் ஜீவிதன் மேல் கோபப்பட இயலவில்லை. சொல்லப்போனால் அக்கா மீதுதான் கொஞ்சம் எரிச்சல் வந்தது. கண்டிப்பாக ஜீவிதனின் படிப்பிற்கு இராப்பகலாகப் படித்திருப்பான். அதிலும் கானுயிருக்கு மருத்துவம் பார்க்க வேண்டும் என்கையில், சில குறிப்பிட்ட உயிரினங்களுக்கு மருத்துவம் பார்க்க, குறிப்பிட்ட உரிமம் பெற்றிருக்க வேண்டும். அவ்வளவு கஷ்டப்பட்டுப் படித்து, அந்தப் படிப்புக்குத் தேர்வெழுதி, இந்த வேலைக்கு வருவதற்குத் தேர்வெழுதி, என்று கஷ்டப்பட்டு வந்த வேலையை விடுகிறேன் என்றிருக்கிறான், இவளுக்கென்ன? என்றிருந்தது.
ஒருவேளை தன்னிடம் இப்படி ஏதாவது ஒரு பெண் கேட்டால், வேறு என்ன வந்தாலும் பரவாயில்லை என்று நின்று மணமுடித்திருப்பான், தன் அக்கா என்ன இப்படி இருக்கிறாள்? ஒருவேளை இந்தத் திரைப்படப் பாடல்களில் எல்லாம் வருவது போலக் காதலில் பெண்கள் கொஞ்சம் கொடூரமானவர்கள்தானோ? தான் அந்தப் பக்கமெல்லாம் மறந்தும் சென்றுவிடக்கூடாது.
ஒழுங்காகப் படித்து முடித்துப் பெற்றோரைப் பெண் பார்க்கச் சொல்லி மணந்துவிட்டுச் செல்லவேண்டும். தேவையற்ற தலைவலி எதற்கு? என்றெல்லாம் யோசித்தபடியே வந்தான். இப்போது ஜீவிதனைப் பார்க்கவும் பேசவா? வேண்டாமா? என்பதைப் போலப் பார்க்க, அவன் புன்னகைத்து, “குட் மார்னிங் அபி…” என்றான்.
“குட்மார்னிங் அண்… சாவி…” எனவும் ஒருகணம் வியப்பாகப் பார்த்த ஜீவிதன், “வனபத்ரா மேலதான் இருக்கா…” என்றான்.
“யாரு மேல இருக்கா?”
“வனபத்ரா…”
ஒருகணம் குழப்பமாக விழித்தவன், “அக்கா கூட ப்ரேக் அப் ஆகிருச்சுன்னு ஏதாவது காக்காக்கு எங்கக்கா பேரை வச்சுருக்கீங்களா என்ன?” என்றான்.
“எடா.. உங்கக்காதான் மேல இருக்கா…”
“ஹான்?”
“ம்ம்…”
“ப்ராங்க்தான பண்றீங்க?”
“நெஜமா.. எனக்கும் ஷாக்காதான் இருந்துச்சு… அதைவிட பெரிய ஷாக் என்னன்னா முதுமலைக்கு வரேன்ங்கறா…”
“யானைகள் முகாம் க்கா?”
“ம்ம்…”
“நெஜமா?”
“சத்தியமா ன்னு சொன்னா…”
அபிதன் தன் நெஞ்சை மெல்ல தடவிவிட்டான்.
“ஆனா, எனக்குமே இப்படி திடுதிடுப்புன்னு கூட்டிட்டுப் போறது நல்லதான்னு தெரியல… இன்னைக்கு நைட் நான் அங்கதான் இருக்கற மாதிரி இருக்கும். இல்லன்னா நைட் தனியா இருப்பாளே ன்னு யோசிச்சு சும்மாதான் கேட்டேன்… சரின்னுட்டா… எனக்கே ஆச்சரியமாதான் இருக்கு…”
“இதுல ஏதோ இடிக்கற மாதிரி இருக்கு…”
“எனெக்கும்தான்… நல்ல வேள நீ வந்துட்ட… நான் மட்டும் போறேன்…” என்றபடி ஜீவிதன் உள்ளே செல்ல, அதிர்ச்சி குறையாமல் வந்த அபிதனைத் தலையைத் துவட்டிக் கொண்டிருந்த வனபத்ராதான் எதிர்கொண்டாள். சுடிதாரில் கிளம்புவதற்குத் தயாராக அவள் நிற்க, “நீ இங்க என்னக்கா பண்ற?” என்றான் அவன்.
“அதை நான் கேட்கணும்… நீ இங்க பெங்களூர்ல என்ன பண்ற?”
“பெங்களூரா?” என்றபடி நடப்பதை நம்ப இயலாமல் ஒருகணம் அபிதன் சுற்றிப்பார்க்க வனபத்ராவுக்குச் சிரிப்பு வந்திருந்தது.
அவள் சிரிக்கவும்”ஏன்க்கா? அப்பாம்மாக்குத் தெரியுமா? அதனாலதான் நாளைக்குப் போறேன்னு சொன்ன என்னை ஏதோ முதல்நாளே போனாதான் பதட்டம் இருக்காது, ஆச்சா பூச்சா சொல்லி அனுப்பிவிட்டாங்களா?” என்றான்.
“அப்பாம்மாக்கு நான் இங்க இருக்கது தெரியாது…”
“அக்கா? அப்பாம்மாட்ட சொல்லாம தப்புக்கா…”
“குட்… அப்பாம்மாட்ட சொல்லாம எதுவும் பண்ணக்கூடாது.. அதுதான் நல்ல பையனுக்கு அழகு…” எனத் தம்பியின் தலையைப் பாசமாகத் தடவிவிட்டாள், ” நான் இங்க இருக்க விஷயம் அப்பாம்மாவுக்கோ இல்ல எனக்கு நிச்சயம் எதுவும் நடக்கலங்கற விஷயம் இப்ப கீழே இருக்கே ஒரு ஜீவராசி.. அதுக்கோ தெரியக்கூடாது. தெரிஞ்சுச்சுன்னா உனக்கு நிஜமாவே சோத்துல எலிமருந்தக் கலந்துருவேன்…” என்றாள்.
அபிதன் மிடறு விழுங்க,”குளிச்சுக் கிளம்பு…” என்றாள்.
“எங்கே?”
“முதுமலைக்கு…”
அபிதன் திகைப்பு மாறாமலே கிளம்பி வர, உணவு என எதையோ கிண்டி வைத்திருந்தாள். ஜீவிதனுக்கும் சேர்த்து. வரவேண்டாம் என சொல்லவந்த ஜீவிதனை முறைத்தவள், “நான் சத்தியம் பண்ணிருக்கேன்.. நான் வருவேன்… அபியும் வரலாம்தானே?” என்றாள்.
“ம்ம்…தனியா சமாளிக்கறதுக்கு அபி இருந்தா பெட்டர்தான்…”
ஜீப் போன்று இருந்த அவனுடைய காரில் அபிதன் முன்னிருக்கையில் அமர, பின்னால் ஏறி அமர்ந்தவள், கண்ணுக்கு மாட்டும் மாஸ்க்கை மாட்டிக் கொண்டு அப்படியே இருக்கையில் படுத்துவிட்டாள்.
“பத்ரா.. மலைப்பாதை வளையும். எழும்பி இரி…”
“நான் பிடிச்சுக்குவேன்…”
அக்காவும் தம்பியும் பின்னால் அமர, காரை ஓட்டத்தொடங்கிய ஜீவிதனுக்கும் சரி, இருக்கையைக் கெட்டியாகப் பிடித்தபடி படுத்திருந்த வனபத்ராவை அவ்வபோது திரும்பிப் பார்த்தபடியே வந்த அபிதனுக்கும் சரி, ஏதோ இடிக்கத்தான் செய்தது. இருந்தாலும் இருக்கட்டும் என இருவரும் வர, ஜீவிதன் அந்த மலைப்பாதையில் லாவகமாகவே ஓட்டிச் சென்றான்.
அவர்கள் சென்ற நேரம், மசினக்குடி சாலைப்பகுதியில் ஒரு அழகான மான்கூட்டம் நின்று மேய்ந்தபடி இருக்க, ஜீவிதன் வேகத்தைக் குறைத்தான்.
“வாவ்… எவ்ளொ அழகழகா இருக்கு…” என்று அபிதன் அலைபேசியில் படமெடுக்கத் தொடங்க, “ப்ளாஷ் அடிக்காம பார்த்துக்கோ அபி…” என்றுவிட்டு ஜீவிதனும் புன்னகையுடனே ஓட்டினான்.
“ப்ளாஷ் எப்பவுமே ஆஃப்லதான் இருக்கும்.. அதோட இப்ப வீடீயோ தான் எடுக்கிறேன்…” என்றபடியே அபிதன் எடுக்க, “என்ன அழகா இருக்கு?” என்று ஒருகுரல் பூனைக்குட்டி போல, பின்னிருக்கையில் இருந்து கேட்டது.
“புள்ளிமான் க்கா… கூட்டமா இருக்கு.. எந்திருச்சுப் பாரேன்… குட்டி குட்டி மானும் இருக்கு.. செம அழகா இருக்கு…” அவன் சொன்னபடியே பின்னால் திரும்பிப்பார்க்க, முன்பாவது முன்னிருக்கையை நோக்கித் தலைவைத்துப் படுத்திருந்த வனபத்ரா, இப்போது இருக்கையை நோக்கித் திரும்பிப் படுத்திருந்தாள். கைகள் இருக்கையை நன்றாகப் பிடித்திருக்க, அவளுடைய கைபுஜத்திலேயே முகத்தைப் புதைத்திருந்தாள்.
“இது திருந்தாத கேஸ்…” அபிதன் சொல்ல, கண்ணாடி வழியாக அவளைப் பார்த்த ஜீவிதனும், “பத்ரா… மானுக்கு இப்டி பயந்தா ஆனெய எப்படி பாக்க? பேசாம அபி கூடத் திரும்பிப் போயிர்றியா?” என்றான்.
தன்னைச் சீண்டுகிறான் என்று நினைத்தவள், எழுந்து அமர்ந்து கண்ணிலிருந்த மாஸ்க்கை எடுத்துவிட்டு ஜன்னல் வழியாக வெளியே பார்க்க, சரியாகக் கலைமான் ஒன்று இவளது கண்களை நேராகப் பார்வையால் ஊடுருவியது. அதன் கொம்புகளைப் பார்க்கவே திகிலாக இருக்க, சட்டெனக் கழுத்தை அடுத்த பக்கம் திருப்பியிருந்தாள். உடனடியாகத் திரும்பியது பயந்தது போல இருக்கக்கூடாது என அப்படியே பின்னால் சாய்ந்து அமர்ந்தவள், கால்மேல் கால் போட்டு அமர்ந்து ஒன்றும் இல்லாத பக்கம் மரம்செடிகளை வேடிக்கை பார்த்தபடியே வந்தாள். அவளது செய்கையைக் கண்ணாடி வழியாகப் பார்த்தபடி அபிதனுக்கும் ஜீவிதனுக்கும் சிரிப்பு வர, ஒன்றும் சொல்லாமல் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்தபடி மேலே சென்றனர்.
சிறிதுநேரத்தில் மீண்டும் தூங்குவதைப் போலக் கண்ணை மூடி வனபத்ரா பின்னால் சாய, இருவரும் ஒன்றும் சொல்லவில்லை. அப்படியே, முதுமலையும் வந்திருக்க, வண்டியை ஓரிடத்தில் நிறுத்தியவன், “இதுக்குமேல கொஞ்சம் நடக்கணும்…” என்றான். அபிதன் தலையாட்ட, வனபத்ராவும் எழுந்து அமர்ந்தாள். கண்களை மூடிக் கொண்டு வந்தவள், எந்த பலகையையும் வாசித்திருக்கவில்லை. வீறாப்பாக நடப்பது போல நடந்தாலும் அவளுடைய வலது கை ஜீவிதனையும் இடது கை அபிதனையும் இறுக்கமாகப் பற்றியிருந்தது.
சில நிமிடங்கள் நடந்தவள், “எங்க? யானையக் காணோம்?” என்றாள் ஜீவிதனிடம் சீண்டலாக.
“இன்னும் கொஞ்சதூரம் போகணும்…”
“சென்னை வரைக்கும் போகணுமா? இல்ல மதுரை, திருச்செந்தூர்.. இப்படி போகணுமா?”
“ஹான்?”
“இல்ல கோவிலுக்குப் போனாதான கோவில் யானையைப் பார்க்க முடியும்? அம்மா கோவில் யானை கேம்ப் முடிச்சுட்டு வந்துருச்சுன்னு சொல்லிட்டு இருந்தாங்க…”
அவள் கேட்க, ஒருகணம் யோசித்த ஜீவிதன், “நீ இது கோவில் யானைங்க கேம்ப்… இப்ப இங்க யானை இல்லன்னு நெனச்சு வந்தியா?” என்றான்.
“வேற எந்த யானைக்குக் கேம்ப் போடுவாங்க?” என்று கேட்டவளைச் சிரிக்கவா அழுகவா என்று பார்த்தான் ஜீவிதன்.
“கோவில் யானை கேம்ப் முதல்ல ஆரம்பிச்ச காலகட்டத்துல மட்டும்தான் இங்க நடந்தது. அதுக்கப்பறம் இங்க காட்டுக்குள்ள யானைங்கள கொண்டு வர்றது கஷ்டமா இருக்குன்னு கோயம்புத்தூர் தேக்கம்பட்டி, அன்னைக்கு உன்கிட்ட கூட வீடியோ கால்ல காட்டுனேன்ல வனபத்ரகாளியம்மன் கோவில்.. அங்கதான் நடக்கும்…”
அவன் சொல்லவும் ஒருகணம் விழித்தவள், தம்பியும் அவனும் மாறிமாறித் தன் முகம் பார்க்கவும், “சரி… என்னவோ இப்ப இங்க யானை இல்லல்ல?” என்றாள் அலட்சியமாக.
அவள் சொன்னது கேட்டதோ என்னவோ, வழக்கமாக ஜீவிதனிடம் செல்லம் கொஞ்சும் கும்கி யானை ஒன்று, வேறொரு காட்டுயானை பிரச்சனையால் கேரளா வரை சென்று நேற்று இரவுதான் வந்திருந்தது. ஜீவிதன் வந்து சென்றிருக்கிறான் என்பதைப் புரிந்துகொண்டு அவனைத் தேடிக் கொண்டே இருந்தது. இப்போது வந்துவிட்டான் என்பதை அறிந்து, ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் இருக்கும்போதே, ஜீவிதனின் வாடையை உணர்ந்து மகிழ்ச்சியாகப் பிளிறியபடி வரத் தொடங்கியிருந்தது.
(தொடரும்…)

Super😍 interesting👍