புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

எனக்காக வந்தவனே – 15

யானையின் பிளிறலைக் கேட்கவும் உச்சகட்ட பதற்றத்திற்கு மாறியிருந்தவள், பிடித்திருந்த இருவரது கையையும் இழுத்தபடி வந்த வாகனத்தை நோக்கிச் செல்லத் தொடங்கியிருந்தாள்.

வனா என்றும் பத்ரா என்றும் மாறிமாறி அழைத்தவனையோ, அக்கா அக்கா என்றவனையோ அவள் கண்டுகொள்ளவில்லை. வளர்ந்த இரு ஆண்களை முழு பலத்துடன் இழுத்துச்சென்றவளை ஒருகட்டத்தில், “வனபத்ரா… ” என்று அதட்டி நிறுத்தினான் ஜீவிதன்.

அவள் மலங்க மலங்க விழித்தாள். அவள் காதில் எதுவும் விழவில்லை. மீண்டும் கேட்ட அந்தப் பிளிறலைத் தவிர. அவளை நன்றாக அதட்டவும்தான் அவன் முகம் பார்த்தாள்.

“அந்த ஆனெ என்னெத் தேடித்தான் வருது… நான் எங்கெ போனாலும் என்னெ கரெக்டா கெண்டு வந்துரும்…நான் முன்னுக்கப் போறென்.. பதறாத… ஒண்ணும் செய்யாது…” என்றபடி அவன் நகரப்போக,

“காட்டுயான ஏன் உங்கள தேடி வருது?”

“காட்டான இல்ல.. கும்கி. அந்த ஆனெய எனெக்கு ஏழு வருஷமா தெரியும்…நாலைஞ்சு மாசமா என்னெப் பாக்கல.. அதனால தேடுது… வேறொண்ணும் இல்ல.. ஒண்ணும் செய்யாது… நீங்க ரெண்டுபேரும் வேணும்ன்னா வண்டிக்குப்போங்க… அபி.. அக்காவ பாத்துக் கூட்டிட்டுப் போயிருவியா? இல்ல என்கூட வாங்க… ஆராவது கூட அனுப்புறேன்…”

“நேத்துதான யானய பார்த்தேன்னீங்க…”

“அதுவும் உள்ளுக்கதான் உண்டு…அதுக்கு உடம்பு சரியில்லன்னுதான் வந்தேன்.. இதுக்கும் ஒரு தடவ மெடிக்கல் செக்கப் பண்ணனும். “

“அப்ப இங்க ரெண்டு யான இருக்கா?”

“முப்பத்ரெண்டு ஆனெ உண்டு…”

அவர்கள் இருவருடைய உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த அபிதனுக்கு ஏனோ எங்காவது தனியாகப் போய் நின்று நன்றாகச் சிரித்துவிட்டு வரவேண்டும் போல இருந்தது. கும்கி படத்தின் போஸ்டரைப் பார்த்துக் கொண்டு நின்றதற்கு அவன் தலையில் தட்டி வீட்டுக்கு இழுத்து வந்திருக்கிறாள். அவ்வளவு ஹிட்டான அந்தப் படத்தின் பாடல்களைக் கூட அவனறிந்து இன்னும் ஒருமுறை கூட வனபத்ரா பார்த்ததில்லை. காரணம், யானை. 

‘எப்படி வந்து சிக்கியிருக்க பார்த்தியாக்கா?’ என்று அக்காவைக் கிண்டல் செய்ய வேண்டும் போல இருந்தது. ஆனால், அதன் பின் தன் நிலைமை சிக்கலாகிவிடும் என முகத்தை மாற்றாமல் தீவிரமாக வைத்தபடியே நின்றான்.

ஜீவிதன் இயல்பாகச் சொல்லிவிட்டு முன்னால் நடக்கத் தொடங்கியிருந்தான். விட்டால் அந்த யானை அங்கு வந்துவிடும் என்பது அவனுக்குத் தெரியும். அவன் பயந்ததுபோலவே சற்றுதூரம் சென்றதுமே அந்த யானை இவனை நோக்கிப் பிளிறியபடி ஓட்டநடையில் வருவது தெரிய, இவனும் வேகமாகவே அதனருகில் சென்றான். முகத்தில் தானாகப் புன்னகை வந்திருக்க, அதுவும் காதுகளை வேகமாக ஆட்டித் தன்னுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்தபடி தும்பிக்கையை இவனை நோக்கி நீட்டியது.

அதனை மென்மையாகப் பற்றியவன், அதனுடைய முகத்தையும் தூண்போல இருந்த காலையும் ஆதுரமாகத் தடவிவிட்டபடியே, “எப்படியிருக்க?” என்றான். அவனுக்குப் பதில் சொல்வது போல அதுவும் பிளிறியது.

இந்தக் காணக்கிடைக்காத காட்சியைக் கண்டு வனபத்ரா அசையாமல் நின்றாள். அந்த யானையின் தந்தத்தில்தான் அவளது பார்வை சென்று வந்தது. ஜீவிதனுக்கு மிக அருகில், மிக அருகில், உராய்ந்தால் அவன் உடல் கிழிந்துவிடும் என்பதுபோன்ற அருகில் நீட்டியபடி இருந்தது. அதை அவன் கண்டுகொண்டது போலவே தெரியாமல் இருக்கவே, ஒரு பெருமூச்சை விட்ட வனபத்ரா முன்னால் நடந்துசென்றாள். அதிர்ச்சியாகப் பார்த்த அபிதனும் அவளைத் தொடர, சற்றுத்தொலைவில் நின்றவள், “ஜீவி… தந்தத்துக்கிட்ட இருந்து தள்ளிநில்லுங்க…” என்றாள்.

அவன் திரும்பும் முன்னால், தும்பிக்கையால் அவனைக் கொஞ்சிக் கொண்டிருந்த அந்த யானை நிமிர்ந்து அவளை நோக்கியது. அவனும் அவளுடைய குரலை விட, யானையின் அசைவுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்தான். பொதுவாக, கும்கி யானைகளுக்குக் கோவில் யானைகளுக்கு அந்நியர்களிடம் இருக்கும் பொறுமை இருக்காது. அதிலும் குறிப்பாக இந்த யானை அந்தப் பொறுமையின்மைக்குப் பெயர்பெற்றது. கோபத்தோடு இறங்கும் காட்டு யானைகளை அஞ்சாமல் எதிர்கொண்டு கட்டுக்குள் கொண்டுவருவதற்கு அது அவசியமானதும் கூட. அதனைக் கவனிக்கும் மாவூத்கள், ஜீவிதன், இன்னும் இரு மருத்துவர்கள் இவர்களைத் தவிர, பிறரை அந்த யானை அருகே அனுமதிக்காது.

காட்டு யானையாக இருக்கும்போது, வழித்தடமோ உணவோ தேடி ஊருக்குள் வந்த யானையின் மீது யாரோ பட்டாசைக் கொளுத்திப் போட்டிருக்க, அந்த வலியில் சுற்றிக்கொண்டிருந்த யானை இது. வனபத்ரா சொன்னாளே, தள்ளிநிற்கச் சொல்லி, அது சரியானதுதான். அப்படி நிற்கும்போது யானை கோபப்பட்டால் கஜமோட்சத்தைத் தவிர வேறு கதி கிடையாது.

ஆனால், ஜீவிதன் அந்தக் காலகட்டத்தில் பிடிபட்டிருந்த யானைகளிலேயே கோபக்கார யானை என்று பெயர் பெற்றிருந்த, தமிழ்நாடு – கேரளா இரண்டு மாநிலங்களிலும் சேர்த்து பதினெட்டுப் பேரை மிதித்துக் கொன்றிருந்த இதே யானைக்கு அந்த இடத்தில் நின்றுதான் மாதக்கணக்காகச் சிகிச்சையளித்திருக்கிறான். வேறு வழி கிடையாது. முகத்துக்கும் காலுக்கும் கீழே இருந்த பகுதியில் காயம் பட்டிருந்தது. முதலில் ஜீவிதனுக்குப் பயமாகத்தான் இருந்தது. இத்தனை பேரை மிதித்துக் கொன்ற யானை என்று.

பயிற்சிக்கு வந்திருந்த அவனுடைய அச்சத்தை ஒரு பார்வையில் கண்டிருந்த மூத்த மருத்துவர், அந்த அச்சம் தீரவேண்டும் என்பதற்காகவே அவனை அந்த யானையைப் பெரும்பாலும் கவனிக்கச் செய்தார். அவருடைய வழிகாட்டுதல், காலங்காலமாக மாவூத்களாகச் செயல்பட்டு வரும் பழங்குடியின மக்களின் ஆலோசனைகள் எனப் பழகியிருந்தான். சாக்லேட் கொடுத்தால் ஊசிபோட விடும் குழந்தை போல, கரும்போ பழமோ கொடுத்து இந்தக் கொலைகார யானைக்குச் சிகிச்சையளிக்க முடிவது முதலில் அவனுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஒரு இரண்டு நாட்கள்தான் அந்த பயம் இருந்தது. அதன்பிறகு இருந்தது கவனம் மட்டுமே. இன்றுவரை, அவனுடைய வேலையின் அடித்தளம் இந்த யானை.

வனபத்ராவையோ, அபிதனையோ அது அச்சுறுத்தலாகக் கருதிவிடக்கூடாது என்கிற கவனம் அவனிடம் இருக்க, அதன் முகத்தைத் தடவிவிட்டபடியே,”பார்யே…பார்யே…என்டெ பாரியே…” என்றான் அதனிடம்.(பாரியை – மனைவி, என்டெ – என்னுடைய)

அவனுடைய தடவலோ, அவள் ஏற்கனவே பயப்படுவாள், நீ வேறு ஒன்றும் செய்துவிடாதே என்று சொல்லாமல் தொனித்த கெஞ்சலான குரலோ, வனபத்ராவும் அபிதனும் கடைபிடித்த தூரமோ அது அவர்களை ஒரு பார்வை மட்டும் பார்த்துவிட்டு மீண்டும் ஜீவிதனிடம் கவனத்தைத் திருப்பியது.

“அக்கா அது மலையாள யானை போல…” என்றான் அபிதன் முணுமுணுப்பாக வனபத்ராவிடம். அவனுக்கு அக்கா இன்னும் மயங்காமல் இருப்பதே ஆச்சரியமாகத்தான் இருந்தது. எதற்கும் இருக்கட்டும் என அவன் விழுந்தால் பிடிப்பதற்கு ஏதுவாகவே நிற்க, இவர்கள் அருகில் பாதுகாப்புக்காக வந்திருந்த மாவூத் ஒருவர், “எல்லா யானைக்கிட்டயுமே மலையாளம், தமிழ் ரெண்டுலயும் பேசுவோம்..” என்றார் சிரித்தபடி. இவர்கள் யார் என்ற கேள்விக்கான பதிலைத்தான் ஜீவிதன் யானையிடம் சொல்லியிருந்தானே?

“அண்ணா… இது நான் கெட்டிக்கப்போற பெண்ணும், அவங்க தம்பியும்… ஆனெக்குப் பேடிக்கும். கொஞ்சம் வண்டி வரை கொண்டு விட்டுட்டு வரமுடியுமா?” என்றுகேட்டான்.

யானையின் மேல் அமர்ந்திருந்த மாவூத், “ஆனெக்குப் பேடிக்கும்ன்னாதான் ஆனெ பாக்கணும்… பார்த்தா பயம் போயிரும்… மோளே… வா…” என்றார். அந்த யானை வேறு பிளிறிவைக்க, “அண்ணனும் கூப்பிடுறான் பாரு.. வா…மோனே.. வா…” என அபிதனையும் அழைத்தார்.

“அண்ணனா?” என்று வனபத்ராவைப் பார்த்த அபிதன், அவரிடம் சிரித்துவைத்தபடி தலையாட்டினான்.

அந்த யானை வந்தால் வா, இல்லாவிட்டால் போ என்பது போல ஒருமுறை பிளிறிவிட்டு, தும்பிக்கையால் ஜீவிதனின் கையைப் பற்றியபடி திரும்பிச்செல்ல, அதனைத் தடவிக் கொடுத்தபடியே உடன் சென்றவன், அவளைத் தான் திரும்பிப் பார்த்தான். அருகே நின்ற மாவூத், “வண்டிக்குப் போலாம்.. ஆனா, வேற மிருகங்க, காட்டான கூட வந்தாலும் வரும். தனியா இருக்கதுதான் ஆபத்து… ஆனெ எங்கள மீறி ஒண்ணும் செய்யாது.. வாங்க…” என்றார்.

அபிதன் அக்காவைப் பார்க்க, அவள் அவன் கையைப் பிய்த்து எடுத்துவிடும் நோக்கத்தில் இருப்பதுபோல இறுகப்பற்றியபடி முன்னே நடந்தாள். இதில், “பின்னாடி வந்தா இவனுக்குப் பிடிக்காது… பக்கவாட்டுலயே வாங்க…” என்றார் அந்த மாவூத். 

வனபத்ரா எடுத்துவைத்த ஓரடியிலேயே வேரோடி நிற்க, அபிதன் அக்காவை இழுத்தபடி நடக்கத் தொடங்கியிருந்தான். 

யானை, யானையின் மேலே அமர்ந்திருந்த மாவூத், யானைக்கு இடதுபுறம் ஒரு மாவூத், அவருக்கு அருகில் அபிதன், அபிதனின் கைப்பிடியில் வனபத்ரா, யானையின் வலதுபக்கம் அதன் தும்பிக்கைப்பிடியில் ஜீவிதன், இப்படி இவர்கள் செல்ல, பிரமாண்டமாக அசைந்துகொடுத்தபடி நடந்த அந்த உயிரினத்தின் அவ்வளவு பெரிய காலைப் பார்க்க அபிதனுக்குமே கூடக் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. தன் அக்கா எப்படி இன்னும் மயங்காமல் இருக்கிறாள் என்று நினைத்தபடி திரும்ப, அவள் கண்களை இறுக மூடியபடி நடந்து கொண்டிருந்தாள். யாராவது பிடித்து வலுக்கட்டாயமாகத் திறந்தால் கூடத் திறக்க முடியாது.

எல்லாரும் ஓரிடத்தில் நிற்க, கண்ணை மூடியேதான் இருந்தாள். திறக்கவில்லை. அபிதன் யானைகளை ஆச்சரியமாகப் பார்த்தாலும் அவன் கவனம் அவனுடைய தமக்கையிடம்தான் இருந்தது. காரணம், இவர்களை அழைத்து வந்த யானை, இன்னும் சில யானைகள் உண்டுகொண்டிருந்த இடத்திற்கு அழைத்துவந்திருந்தது.  அவை இவர்களைக் கண்டுகொள்ளவில்லை. ஜீவிதனுக்கு மட்டும் நேற்றுத்தானே பார்த்தோம் என்பது போல ஒரு ஹாய் மட்டும் அவற்றின் மொழியிலோ உடல்மொழியிலோ சோம்பலாகச் சொல்லிவிட்டு தான் உண்டுகொண்டிருந்ததைத் தொடர்ந்தன. 

அவற்றின் மாவூத்துகளில் ஒருவர், ஜீவிதனை அழைத்துவந்த யானையைப் பார்த்துவிட்டு, “அந்தக் காட்டானய அடக்க முடியலன்னு கோபத்துல இருந்துச்சு… டாக்ட்ரப்பார்க்கவும் சந்தோஷத்தைப் பாரு?” என்றபடி  அருகில் வந்தார்.

பின்னால் நகர்ந்த யானை எச்சரிக்கையாக ஒரு கோபப்பிளிறலைக் கொடுக்க, அந்த மாவூத் கவனிக்கும் யானை பதில் எச்சரிக்கை கொடுப்பது போலப் பிளிறியது. 

இதுவரை கண்ணை மூடியபடியே எப்படியோ தாக்குப் பிடித்திருந்த வனபத்ரா இரண்டு யானைகளின் பிளிறல் வித்தியாசமாகக் கேட்கவும் மெல்ல கண்ணைத் திறந்தாள்.மிரள்வது போலத் தோற்றமளித்த இரண்டு யானைகளின் கண்களைப் பார்த்தாள். அமைதியாக மயங்கியிருந்தாள். 

இதை எதிர்பார்த்தே நின்றிருந்த அபிதன் மயங்கியவளை அப்படியே பிடித்திருந்தான். இரண்டு யானைகளையும் அங்கிருந்தவர்கள் மெல்ல அமைதிப்படுத்தும் வரை அமைதியாக இருந்தவன், அதன்பின்தான் யோசித்து ஜீவிதனை அழைத்தான். 

“ஜீவிண்.. டாக்டர்…” எனவும் அவன் திரும்ப, பொம்மை போலத் தம்பியின் தோளில் மயக்கநிலையில் இருந்தது அவன் வனம்.


பின் யானைகளற்ற இடத்துக்கு அவளைத் தூக்கிச் சென்று தண்ணீரைத் தெளிக்க, அரைகுறை மயக்கத்தில் எழும்போதே, “ஒண்ணுமில்ல.. ஒண்ணுமில்ல.. நான் பயப்படல.. நான் பயப்படல…” என்றபடியேதான் எழுந்தாள்.

பின் அவளை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு, அந்த வயதான யானை உடல்நலக்குறைவில் இருக்கிறது என அதனைப் பார்க்க வந்த மாவட்ட வன அதிகாரியின் வாகனத்திலேயே கேட்டு இருவரையும் அனுப்பிவைத்திருந்தான். அவர் ஜீவிதனைப் பற்றி புகழ்ந்து பேசிக் கொண்டே வந்தார். 

என்ன அந்தப் புகழ்ச்சி அவன் சிகிச்சையளித்த விலங்குகளைப் பற்றியே இருக்க, கேட்கவும் முடியாமல் கேட்காமல் இருக்கவும் முடியாமல் கேட்டபடியே வந்தாள் வனபத்ரா. அபிதன் ஆர்வமாகவே கேட்டபடி வர, அதிலும் அவன் படிப்பது கானுயிர் உயிரியல் எனவும் அவரும் உற்சாகமாகி அவனுடனே பேச அதன்பின்தான் வனபத்ராவால் இயல்பாக முடிந்தது.

அவரிடம் நன்றி சொல்லிவிட்டு வீடு சேர்ந்திருக்க, மதியமே வனபத்ராவிற்கு காய்ச்சல் கண்டிருந்தது. மருத்துவரிடம் சென்றுவந்தும் ஜீவிதன் வீட்டுக்கு வந்த மூன்றாம் நாளும் காய்ச்சலில்தான் இருந்தாள் வனபத்ரா. ஆனாலும் அபிதனைப் படுத்தி எடுத்திருந்தாள் என்பது பளபளவென்றிருந்த வீட்டில் தெரிந்தது. வந்ததுமே, ஒட்டடை, அதைக் கட்டிய சிலந்திகள், தெரியாமல் வந்துவிட்டேன் விட்டுவிடு எனக் கதறிய பல்லிகள் என எல்லாவற்றையும் அவனைக் கூட்டுக் கொலை செய்ய வைத்தபிறகுதான் உறங்கப்போனாள். உறங்கி எழ, காய்ச்சல் வந்திருந்தது.

வனபத்ராவைக் கஞ்சி வைத்துக் கொடுத்து, மாத்திரை போட வைத்து என அவ்வளவு பக்குவமாகக் கவனித்துக் கொண்டான்தான் அபிதன். ஆனால் அவளைக் கவனித்த அளவு வீட்டைக் கவனிக்கவில்லை. காய்ச்சல் போயிருந்தாலும் சோர்வு போகாமல் இருந்தது. முடிந்திருந்தால் அவளே பெருக்கியிருப்பாள்தான். ஆனால், கொஞ்சம் ஓய்வு வேண்டும் போல இருக்க, அவனைக் “கூட்டு.. கூட்டு…” என உயிரை வாங்கிக் கொண்டிருந்தாள். 

தூய்மையற்ற வீட்டில்தான் பூச்சிகள் வரும் என அவளுக்கு வீடு மிகத்தூய்மையாக இருக்க வேண்டும். நேற்றிலிருந்து வீட்டைப் பெருக்க, அதாவது அவளது பாணியில் ஒரு தூசி கூட இல்லாமல் பெருக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறாள், ஞாயிறு விடுமுறை என. அவன் கேட்கவில்லை. அதில் கடுப்பானவள், அவனுடைய கல்லூரிப் பையை எடுத்துத் தனது தலைமாட்டில் வைத்திருந்தாள். 

அபிதனுக்கு எங்கு கிளம்பியிருந்தாலும் குறைந்தது அரைமணி நேரத்திற்கு முன்பாவது கிளம்பியிருக்க வேண்டும், கல்லூரியானாலும். அந்த வழக்கப்படி அவன் கிளம்பிப் பையைத் தேட, அதனைப் பிணைக்கைதியாக வைத்திருந்தவள், அவன் வீட்டைப் பெருக்கினால்தான் தருவேன் என அடம்பிடித்தாள். 

கல்லூரிக்குக் கிளம்பிநின்றவன் மாட்டேன் அடம்பிடிக்க, அவளும் தரமாட்டேன் என்றாள். உள்ளே இன்று ஒப்படைக்கவேண்டிய சில அசைன்மென்ட்கள் இருந்தன. இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று துடைப்பத்தைக் கையில் எடுத்தவனுக்கு, அக்காவை வெறுப்பேற்ற வேண்டும் போல இருந்தது.

கும்கி படத்தில் அறுவடைப்பாடல், கையளவு நெஞ்சத்துல கடலளவு ஆசை மச்சான் என்று வரும் இல்லையா?  ‘சொய்ங்க்.. சொய்ங்க்…’ எனத் துள்ளல் இசையில் வரும் அந்தப் பாடலைப் பிடிக்காமல் யார் இருப்பார்கள்? ஆனால், வனபத்ரா அந்தப் பாடலைப் போட விட மாட்டாள். சிறுவயதில் சில பாட்டிகள் எல்லாம் ஆறுமணிக்கு மேல் மவுத் ஆர்கன் ஊதினால், பாம்பு வரும் என்று ஊத விடமாட்டார்கள்தானே? அது போல அந்தப் பாடலைப் போட்டால், பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருந்து காட்டு யானை வீட்டுக்குள் வந்து பூட்டை உடைக்கும் என்பது போலக் கொடுமை செய்வாள். தொலைக்காட்சியில் பாடல் அலைவரிசையை வைக்க விடமாட்டாள். திடீரென இந்தப் பாட்டைப் போட்டு விடுவார்களாம்.

அபிதன் போராடி வாங்கிய சுதந்திரங்களுள் இந்தப் பாடலைக் கேட்பதும் ஒன்று. அப்போது கூடக் கண்ணை மூடிக் காதை அடைத்தபடியே எழுந்து சென்றுவிடுவாள். அவளை வெறுப்பேத்த என்றே வரிசையாக, இந்தப் பாடல் இருக்கும் எந்த நடனப்போட்டி என்றாலும் சேர்ந்துவைப்பான். அதில் ஆடி ஆடி அந்தப் பாடலின் நடன அசைவுகள் எல்லாமே அவனுக்கு அத்துப்படி.

அந்த காலகட்டத்தில் வனபத்ராவை வெறுப்பேற்ற வேண்டுமென்றால், வேறு எதுவும் செய்ய வேண்டாம், இந்தப் பாடலைப் போட்டிருந்தால் அவதாரம் எடுத்திருப்பாள், அவளை நன்றாக வெறுப்பேற்றிக் கோபப்படுத்திவிட்டு, பெற்றோர் பஞ்சாயத்துக்கு வருகையில் இளைய பிள்ளைகளுக்கே உரிய பாவமான முகத்தை வைத்தபடி “ஒரு பாட்டு கூட அக்கா கேட்க விடமாட்டேங்குது…” என்றபடி சென்றுவிடுவான். பெற்றோரிடம் அவள் திட்டுவாங்கும்போது கேட்கையில், அவன் அடைந்த அவ்வளவு துன்பத்திற்கும் மயிலிறகால் வருடிவிடுவது போல இருக்கும். 

இப்போதும் முதுமலைக்குச் சென்று வந்ததிலிருந்து இந்தப் பாடலைப் போட வேண்டும் என அவன் உள்ளம் அவனைத் துரத்திக் கொண்டேதான் இருந்தது. ஆனால், அக்கா பாவம் என இருந்தவன், அவள் அவனைப் படுத்தத் தொடங்கவே, தனது ஆயுதத்தைக் கையில் எடுத்திருந்தான். அலைபேசியை எடுத்து அந்தப் பாடலைப் போட்டான். சரியாக மின்சாரமும் போக, எடுத்தவுடன் ஒலித்த இசைக்கருவியின் ஒலியிலேயே படுத்திருந்த வனபத்ரா திடுக்கிட்டு அமர்ந்திருந்தாள்.

அவனை முறைத்தவள், ஏதோ சொல்லப்போக, ” இந்தப் பாடலைப் பற்றிக் கருத்துத் தெரிவிப்பதற்கான உரிமையைத் தாங்கள் இழந்துவிட்டீர்கள் மாண்புமிகு வனபத்ரா அவர்களே… ஒழுங்கா எந்திருச்சு யானைக்குச் சோறூட்டக் கத்துக்கோங்க…” என்றவன்,  வானத்தைப் பார்த்து, “காட் இஸ் ரியலி க்ரேட்…”  என்றுவிட்டு கும்கிப் பாடலைப் போட்டு ஆடியபடியே வீட்டைப் பெருக்கத் தொடங்கினான். அந்தப்பாடல் மீண்டும் மீண்டும் ஒலிக்கும்படி வைத்தவன்,

“நாம வேண்டிக் கொண்டாலும் 

வேண்டா விட்டாலும் 

சாமி கேட்கும் மச்சான்…”

என்று வருகையில் மட்டும் மீண்டும் மீண்டும் அழுத்தி இணைந்து பாடிக் கொண்டிருந்தான். 

வனபத்ராவால் என்ன சொல்ல முடியும்? எதையாவது செய், ஆனால் பெருக்கித் தொலை என்பது போல அமர்ந்திருந்தாள். பெருக்குவதற்காகக் கதவைத் திறந்துவைத்திருக்க, மின்சாரமற்ற நேரத்தில் ஜீவிதன் கதவைத் தட்டியது பாடல் சத்தத்தில் கேட்கவில்லை.

இருமுறை தட்டிவிட்டு உள்ளே வந்தவன் பார்த்தது, இடதுகையால் ஒருகண்ணை மூடிக் கொண்டே இடுப்பை அசைத்தபடி ஒரு நடனஅசைவு வரும் இல்லையா? அதை ஆடியபடியே கையில் இருந்த துடைப்பத்தால், சன்னலைத் தட்டிக் கொண்டிருந்த அபிதனையும் அவனை முறைத்தபடி முழங்காலைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்த வனபத்ராவையும்தான்.

யாரோ உள்ளே வரவும் ஆடுவதை நிறுத்தியிருந்த அபிதன், வந்தவன் ஜீவிதன் எனவும் சட்டெனப் பாடலை நிறுத்த அலைபேசியைத் தேட, அது எங்கே என்று வேறு தெரியவில்லை. அதைத் தேடியபடியே தவறாக எடுத்துக் கொண்டிருப்பானோ என்று பார்க்க ஜீவிதனைப் பார்க்க, அவன் சிரித்துக் கொண்டிருந்தான்.

ஜீவிதன் வந்த நேரத்தைப் பயன்படுத்தி, வனபத்ரா பிடுங்கிவைத்திருந்த பையையும் அலைபேசியையும் எடுத்துக் கொண்டு கீழே ஓடியிருந்தான் அபிதன். “நான் காலெஜ்க்குக் கிளம்புறேன்…” என்றபடி அவன் ஓட, “டேய்… கையக் கழுவிட்டுச் சாப்பாட எடுத்துட்டுப் போ… ” என்று குரல் கொடுத்தாள் வனபத்ரா.

“பையிலதான் இருக்கு…டாட்டா…”

“காலெஜ்க்குப் போறப்ப ஏன் வீட்டைத் தூத்திட்டு இருக்கான் அவன்?” (தூத்திட்டு – பெருக்கிட்டு அல்லது கூட்டிட்டு)

“வேண்டுதல்…”

“வனபத்ராக்கா?” கேட்டவனுக்குப் பதில் சொல்லாமல் முறைத்தாள்.

“ஏன் முறைக்கிற?”

“இதுதான் உங்கூர்ல யானைக்குப் பயப்படுறதா?”

அவள் கேட்கவும் சிரித்தவன், அவள் அருகில் அமர்ந்த அவள் நெற்றியில் படர்ந்திருந்த முடியை ஒதுக்க வர, சட்டெனப் பின்னால் நகர்ந்தாள் அவள்.

(தொடரும்…)

2 thoughts on “எனக்காக வந்தவனே – 15”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!