புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

எனக்காக வந்தவனே – 20


கிளம்பிக் கொண்டிருந்த ஜீவிதன், அழைப்புமணி அடிக்கவும் சென்றுபார்த்தான். வனபத்ராதான் நின்றிருந்தாள். இருவரின் பெற்றோரும் ஊருக்குத் திரும்பியிருந்தனர். அபிதன் கல்லூரிக்குப் போயிருந்தான்.

“ஜீவி… ஒரு பத்து நிமிஷம் நேரம் இருக்குமா?”

“இருக்குமே.. உள்ளே வா.. அபி எங்கெ?”

“என்சிசி ன்னு சீக்கிரமே போய்ட்டான்…”

என்றபடி உள்ளே வந்தவள் கையில் வைத்திருந்த கிண்ணத்தை அவனிடம் நீட்டினாள்.

“என்னெது?”

அவள் திறந்துகாட்டினாள்.

ஒரே ஒரு இட்லி ஏதோ சட்னியில் மிதந்துகொண்டிருந்தது.

“எனக்கு ஒரு இட்லி பத்தாது பத்ரா…”

“ப்ச்… எனக்கு ஜீவி… ஊட்டிவிடுங்க ஜீவி”

“வேணாண்டி…”

“எனக்கு வேணும்…”

“வனாம்மா… அன்னைக்கு நான் அஃபென்ட் ஆகல… நீ அப்படி ரியாக்ட் பண்ணுவன்னு தெரிஞ்சுதான் பண்ணேன். அது உன் தப்பு கெடயாது…”

“ஆமா… நான் முதல்ல அதுக்கு உங்களோட ஒரு சண்ட போடணும்… அப்படி ஏன் பண்ணீங்க?”

“சண்ட? அது நான் போடணும்டி… எப்படியெப்படி? நான் பேசாம உங்கள கல்யாணமே… பண்ணிக்கிறேன் ஜீவி…ஹாங்?”

“பாத்தீங்களா? அஃபென்ட் ஆகிருக்கீங்கதானே?”

“ப்ச்.. அது வேற பக்கம், இது வேற பக்கம்…”

“எல்லாம் ஒரே பக்கம்தான்… எனக்கு ஊட்டிவிடுங்க ஜீவி…”

“வேணாம் பத்து…”

“பத்து.. எட்டு ன்னீங்கன்னா பிச்சுப்புடுவேன்.. ஒழுங்கு மரியாதையா ஊட்டிவிடுங்க.. இல்லன்னா உங்களுக்குத் தான் வேலைக்கு லேட் ஆகும்…”

அவள் சொல்லவும் கைகளை நன்றாகக் கழுவிவந்தான். அவள் சோபாவில் அமர்ந்திருக்க, அருகில் அமர்ந்தவன், “நெஜமாவே ஓகேவா?” என்றுகேட்டான் மீண்டும். 

அவள் இருகை கட்டைவிரல்களையும் உயர்த்திக் காட்டிப் புன்னகைக்க, “ஏன்டி ஓட்டுக் கேட்டுப் பிரச்சாரம் பண்ற மாதிரி பண்ற?” என்று கிண்டல் செய்தபடியே அந்த இட்லியைப் பிய்த்தான். அது சட்னியில் ஊறியிருந்ததில், இவன் தொடவுமே பிசைந்துகொண்டு வந்தது.

அவன் பொறுமையாக ஊட்டிவிடச் சமத்தாக வனபத்ரா வாங்கினாள். அவனுக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது. முழு இட்லியையும் ஊட்டிவிட்டவன், இப்போது இடதுகை கட்டைவிரலை உயர்த்திக்காட்ட, அவளும் புன்னகைத்தாள்.

“நாம இதை தெனமும் பண்ணனும் ஜீவி…”

“தெனமுமா?”

“தெனமுமு் எனக்கு ஒரு ரெண்டு வாய் ஊட்டிவிட மாட்டீங்களா ஜீவி?”

“எனக்கு ஒண்ணும் இல்லட்டி…”

“பிறகென்ன? அப்பறம் ஒரு அரைமணிநேரம் தெனமும் உங்க வேலைல நடந்த இன்ட்ரஸ்டிங்கான விஷயம் ஏதாவது எனக்குச் சொல்லணும்…”

ஜீவிதன் இரண்டு கண்களையும் உருட்டி ஒரு கணம் யோசித்துவிட்டு, “அது நல்ல ஐடியா ன்னு எனக்குத் தோணல…” என்றான்.

“ம்ஹும்.. பேச்சுத்தொடர்பு ரொம்ப முக்கியம் ஜீவி… எங்கப்பாம்மாலாம் அவங்க வேலைல என்ன நடந்துச்சுன்னு வீட்ல பேசிக்குவாங்க… நாம பாக்கிற வேலை நம்ம வாழ்க்கல ரொம்ப முக்கியமான பகுதி ஜீவி… வேலைய வாசல்ல விட்டுட்டு வீட்டுக்குள்ள வா ங்கறதெல்லாம் சரிபட்டு வராது… எல்லாத்தையும் சொல்லணும்ன்னு அவசியமில்ல… ஆனா, ஏதாவது சொல்லிட்டே இருக்கணும். அப்பதான் எனக்கும் உங்க வேலை பரிச்சயமாகும்…”

“அப்பாவும் அம்மையும் வேலைல நடந்தது பேசிக்குவாங்கதான்…” என்று யோசித்தான் ஜீவிதன்.

“பாத்தீங்களா? நேத்து என்ன பண்ணீங்கன்னு…இல்ல… நீங்க சில நேரம் வேலை விஷயமா சென்னை வருவீங்கதான? ஸ்டார்டிங் க்கு எதுக்கு வந்தீங்கன்னு மட்டும் சொல்லுங்க… கொஞ்சகொஞ்சமா போகலாம்… உங்களுக்கு நேரம் இருக்குத்தானே?”

“அதெல்லாம் இருக்கு… இன்னைக்கு நான் சீக்கிரமே கௌம்பிட்டேன்…”என்றவன் எதைச் சொல்லலாம் என்று யோசித்தான், உயிரியல் பூங்காவில் இருக்கும் விலங்குகளுக்குக் காயம் காரணமாக என்பதை விட, நோய்வாய்ப்படுகையில்தான் வந்திருக்கிறான். ஆனால் வனபத்ரா விலங்குகள் வழியாக நோய்பரவும் என்றுதான் பயப்படுகிறாளோ என்று அவனுக்கு ஒரு எண்ணம் இருந்தது. 

அதனால், அதைச் சொல்லாமல் வேறு என்ன சொல்லலாம் என்று யோசித்தவன், “ம்ம்… ஒரு தடவ ஒரு கழுதப்புலிக்குப் பிரசவம் பார்க்க வந்திருக்கேன்…” என்றான்.

வனபத்ரா ஒருகணம் மிடறு விழுங்கினாள். வேறு எதையும் யோசிக்க விடாமல் அவள் மூளையைத் தடுத்தவள், “பிரசவமா?” என்றாள் பேச்சைத் தொடரும்படி.

“ம்ம்…”

“அதுவா குட்டி போட்டுக்காதா?”

“அதுவாதான்டி குட்டிபோடும்.. இருந்தாலும் அசிஸ்ட் பண்ணனும்தான?”

“அதுல என்ன அசிஸ்ட் பண்ணுவீங்க?”

“மனுஷங்களுக்குப் பிரசவம் பார்க்கும்போது டாக்டர் என்ன அசிஸ்ட் பண்ணுவாங்க? அந்த மாதிரிதான்… சரியான பொஸிஸன்ல இருக்கா? ஸ்ட்ரெஸ் லெவல் எப்படி இருக்கு? மெடிக்கேஷன் எதுவும் வேணுமா? தொப்புள்கொடி குட்டி கழுத்துல எதுவும் சுத்திருக்கா… இந்த மாதிரி…”

“காட்டுக்குள்ள இருக்கும்போது யாரு பிரசவம் பார்ப்பா?”

“மனுஷங்க யாரும் போய் பிரசவம் பார்க்க மாட்டாங்க… ஆனா, அதோட கூட்டத்துல இருக்க மத்த பெண் விலங்குகள் உதவி பண்ணும். குட்டிய பாதுகாப்பா பெத்தெடுக்கறதுக்கு தகுந்த மாதிரி தனியா பாதுகாப்பான இடம், அப்ப தாய்க்கும் குழந்தைக்கும் தேவையான உணவு, மத்த விலங்குங்க கிட்ட இருந்து பாதுகாப்பு… இதெல்லாம் பார்த்துக்கும்…”

“அப்ப கழுதப்புலி மனுஷன் மாதிரிதானா?”

அவள் கேட்கவும் சிரித்தான், “கழுதப்புலின்னு இல்ல.. கூட்டமா வாழ்ற எல்லா விலங்குங்க கிட்டயுமே இது நார்மல் பிஹேவியர். பிரசவத்தப்ப சகாயம் பண்ணும். அதனாலதான் தனியா இந்த மாதிரி இருக்கற விலங்குகள் ரொம்ப ஸ்ட்ரெஸ்ல ரெஸ்ட்லெஸா ஆக வாய்ப்பிருக்கு…”

“வேற என்ன விலங்குக்கு பிரசவம் பாத்துருக்கீங்க?”

“ம்ம்.. ஆனெக்குப் பாத்துருக்கேன்… என் பொரபஸர் ஒருத்தர் ஒரு சிங்கத்துக்குப் பிரசவம் பாக்கறத கூட இருந்து பாத்துருக்கேன்…அப்பறம்… இரு… கைகழுவிட்டு வாரேன்…” என்று எழுந்து சென்றவன், ஒரு அலைபேசி அழைப்பு வரவும் பேசத் தொடங்கினான். 

வனபத்ரா சும்மா இராமல் அலைபேசியில் யானை, பிரசவம் என இணையத்தில் அடித்துத் தேடினாள். அதில் காணொளியாகவே வர, திறக்கவுமே ஒரு யானையின் உடலிலிருந்து அருவி போல இரத்தம் கொட்டுவதைப் பார்த்தவளுக்குக் குடல் உள்ளே பிறழுவது போல இருந்தது.

வாயைக் கையால் இறுக மூடியபடி எழுந்த வனபத்ராவை அலைபேசியில் பேசியபடியே ஜீவிதன் கேள்வியாகப் பார்த்தான். அவளுக்குக் குமட்டுகிறது என்பது அவனுக்குத் தெரிந்தது. அவனிடம் நீ காரணமில்லை என சைகையில் சொன்னாள். 

ஆனால், ஒற்றைக்கையில் அவசரத்தில் அவள் சொல்லிவிட்டுச் சென்றது ஜீவிதனுக்குப் புரியவில்லை. அவனுக்குப் புரியவில்லை என்பது அவளுக்குப் புரிந்தது. இருந்தாலும் அவனிடம் நின்று பேசமுடியாமல் உடல் அழைக்க, மேலே ஓடியிருந்தாள். முடித்துக் கீழே வர ஜீவிதன் இல்லை.

“சாரி… வொர்க்…” என்று இரண்டு வார்த்தைகள் மட்டும் குறுஞ்செய்தியாக வந்திருந்தன.

******

பயிற்சி முடிந்து ஒரு ஓரமாக அமர்ந்து உண்ண அமர்ந்த அபிதனின் முகம் உணவுப்பாத்திரத்தைத் திறக்கவும் மலர்ந்தது. கூடவே, வனபத்ரா, ஜீவிதன் அந்த அத்தான் எல்லாம் நினைவுவர, ஜீவிதன் சொன்னதுபோல நாம் அழைக்கும்விதம்தான் ஒருமாதிரி இருக்கிறது, அழைத்துப் பழகுவோம் எனத் தோன்றியது. பகவதி இயல்பாகத் தன் தந்தையை அழைக்கும்போது கேட்டால், ஒன்றும் தெரியவில்லை. சுற்றும்முற்றும் பார்த்தான். அமர்ந்திருந்ததே ஒரு மரத்தின் முன்தான் தனியாகத்தான் அமர்ந்திருந்தான்.

பகுதி 5 என, தேசிய மாணவர் படை, நாட்டுநலப்பணித் திட்டம், சாரணர் இயக்கம்,செஞ்சிலுவை இயக்கம் இதுபோன்றவற்றில் ஏதாவது ஒன்றில் இளநிலை பயிலும் மாணவர்கள் கண்டிப்பாகச் சேர்ந்திருக்க வேண்டும். அப்படி அபிதன் சேர்ந்திருந்தது தேசிய மாணவர் படை. என்னவோ, மூன்று வருடமும் இருக்க வேண்டும், கொஞ்சம் வாட்டுவார்கள் என இவன் நண்பர்கள் யாரும் சேரவில்லை.

உண்ணத் தொடங்காமல் உணவுப்பாத்திரத்தை மூடிவைத்தவன், தனியாக இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்திவிட்டு அத்தான் என்று அழைத்துப்பார்த்தான். இரண்டுமுறை அழைத்துப்பார்த்தபிறகு, மெதுவாக அழைப்பதால்தான் ஒருமாதிரி கேட்கிறது எனச் சத்தமாக அழைக்கத் தொடங்கினான். 

ஒரு நான்கு முறை அழைத்துப் பார்த்தபிறகு பிடிபடுவது போல இருக்க, அவன் ஐந்தாவது முறை அத்தான் என அழைக்கும்போது, “அத்தான், என்னத்தான்… என்னைத்தான்…” என்று கிண்டலாகப் பாடியபடியே கையில் தட்டுடன் குரங்குபோல மரத்தின் பின்னாலிருந்து குதித்தாள் மகாதேவி.

ஏற்கனவே இராணுவம் போல் அளிக்கப்பட்ட பயிற்சியில் கால்நொந்து போய்த் துவண்டு அமர்ந்திருந்தவனால் சட்டென எழுந்து செல்லவும் முடியவில்லை. இல்லாவிட்டால் அவன் முகம் சிவந்த சிவப்பிற்கு எழுந்து ஓடியிருப்பான். இருந்தாலும் சமயோசிதமாக யோசித்தவன், சட்டென அலைபேசியைக் காதில் வைத்திருந்தான். 

“ஹலோ… அத்தான் கேட்குதா?” என்றபடியே பைக்குள் கைவிட்டு, பயிற்சியின்போது அணியக் கூடாது என உள்ளே வைத்திருந்த மின்னணுக்கடிகாரத்தின் வாயிலாக ஜீவிதனை அழைத்திருந்தான். எந்தப் புண்ணியமோ ஜீவிதன் உடனே எடுத்துவிட, அத்தான்.. கேட்குதா? என்றான் அபிதன் மீண்டும். இம்முறை அவன் அத்தான் என்று நன்றாக அழைக்க, குரலில் ஒரு புன்னகையுடன் “கேக்குது மக்கா… சொல்லு…” என்றான் ஜீவிதன்.

அவனிடம் என்ன பேச என்று தெரியாமல் ஒருகணம் விழித்தவன், “உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் த்தான்… ஃப்ரீயா இருக்கீங்களா?” என்றான்.

“ஃப்ரீதான் அபி.. சொல்லு…”

“ஓ… பிஸியா அத்தான்? சாரி த்தான்…நான் அப்பறம் கூப்பிடுறேன் த்தான்…”என்று வைத்துவிட்டான். 

ஊட்டிவிடச் சொல்லிக் கதைகேட்டுவிட்டு வாயைப் பொத்தியபடி மேலே ஓடிய தமக்கை, அழைத்து இப்படி பினாத்திவிட்டு வைத்த தம்பி என இவர்கள் இருவரையும் வைத்துக் கொண்டு… என ஜீவிதன் மானசீகமாகத் தலையில் அடித்தது அபிதனுக்குத் தெரியாதே…

மேற்புறம் மூடப்பட்டிருக்கும் வகையில் இருக்கும் அலைபேசி உறையைத் திறந்து, அழைப்பு சென்றிருக்கிறது என்பது அவளுக்குத் தெரியும்படி வைத்துவிட்டுப் பின்தான் அவளிடம் நிமிர்ந்தான். மகாதேவி விழித்தாள். அவள் பார்க்க, அவன் மரத்தைப் பார்த்துத்தான் அத்தான் என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தது போல இருந்தது.

“அதிகப்பிரசங்கி…”

“ஆமா.. நான் அதிகப்பிரசங்கிதான்.. இப்ப என்ன?” என்று தன்கையிலிருந்த தட்டை அவன் கையில் திணித்துவிட்டு அவன் உணவுப்பாத்திரத்தைப் பிடுங்கியிருந்தாள்.

“ஏய்.. அரைக்கத்திரிக்கா… என்ன பண்ற?”

“ப்ச்.. நான் ஹாஸ்டல்ல இருக்கேன்.. ஒரு நல்ல சாப்பாடு போட மாட்டேங்குறானுங்க.. நீ டேஸ்காலர்தான? தெனமும் வீட்டுச்சாப்பாடு சாப்பிடுவல்ல… நான் எங்கம்மா சாப்பாட மிஸ் பண்றேன்… நீ ஒரு நாள் இந்த ஹாஸ்டல் சாப்பாடு சாப்பிடு… கொடு…” என்று திறந்தாள்.

அபிதன் அவள் கையில் திணித்திருந்த தட்டில் விறைத்துக் கொண்டு தெரிந்த இட்லியை வெறித்துப்பார்த்தான். வனபத்ரா இவனுக்கு இட்லி ஆறினால் பிடிக்காது என்றுதான் ஊற்றிவைத்த இட்லியைக் கட்டிக்கொடுக்காமல் வேறு செய்துகொடுத்திருந்தாள். அவளுடைய இட்லியாவது மென்மையாக இருக்கும். இதைக் கொண்டுபோய் கண்ணாடியில் எறிந்தால் சுக்கல்சுக்கலாகச் சிதறிவிடும் போலத் தெரிந்தது.

“இது என்னது?” என்றாள் மகாதேவி ஆவலாகப் பார்த்தபடி. அதைப் பார்க்கவும் இந்தக் கல் இட்லியைத் தினமும் உண்ணுவாள்தானே, பாவம் உண்டுவிட்டுப் போகட்டும் எனத் தோன்ற, “முட்டைச்சப்பாத்தி…” என்று அவளுக்குப் பதில் சொன்னான்.

“அப்படின்னா?”

“கொத்துப்பரோட்டா செய்வாங்கல்ல.. அதுல பரோட்டாக்குப் பதிலா சப்பாத்தி,முட்டை இன்னும் நிறைய காய்கறிலாம் போட்டு எங்கக்கா செஞ்சு கொடுக்கும்… நல்லாருக்கும்.. சாப்பிட்டுப்பாரு…”

“ஓ… நைட்டு மிஞ்சிப்போன சப்பாத்தில முட்டைய ஊத்திக் கொடுத்துருக்காங்க… அப்படிதான?”

” இன்னைக்கு என்சிசி இருக்குன்னு எங்கக்காட்ட நான் சொல்லல… இட்லி ஊத்திவச்சுருந்துச்சு… நான் கட்டிக் கொடுக்கச் சொல்லவும் எனக்காக வேகமா செஞ்சுக்கொடுத்துச்சு…”

“சாப்பாட வேஸ்ட் பண்ணதுல என்ன பெரும உனக்கு?”

“ப்ச்.. வேஸ்ட்லாம் பண்ணாது… நைட் அதை இட்லி உப்புமா செஞ்சுக் கொடுக்கும்…”

“இந்த சூரிய வம்சம் படம் வந்தாலும் வந்துச்சு.. இந்த இட்லி உப்புமா ஒண்ணு பேமஸ் ஆகிருச்சு… எப்படினாலும் மிஞ்சிப்போனதைத்தான உங்கக்கா உனக்குக் கொடுக்கறாங்க…”

“நீ ஏன் எங்கக்காவ ஒரு மாதிரி டீஸ் பண்றமாதிரியே பேசிட்டு இருக்க?”

“லூசு.. நான் உங்கக்காவ டீஸ் பண்ணல.. உன்னைத்தான் டீஸ் பண்றேன்… அவங்கள வம்பிழுக்கிற மாதிரி பேசுனா நீ கோபப்படுற… அது எனக்கு ஜாலியா இருக்கு..அதனால பண்றேன்…”

“அதுக்காக, உன்னை விட ஆறுவயசுப்பெரியவங்கள, சரியா தெரியாதவங்கள மட்டம் தட்டுற மாதிரியே பேசுவியா?”

“நான் மட்டம் தட்டுற மாதிரிலாம் பேசல..கிண்டல்தான் பண்ணேன்.. அதுக்கு ஏன் பூமர் மாதிரி பேசிட்டு இருக்க? அதோட எனக்கென்னவோ உங்கக்கா மேல ஆறு வயசுப் பெரியவங்க ங்கறதத் தாண்டி மத்த மரியாத வரல… அந்த நாய்க்குட்டி… அது என்ன பாவம் பண்ணுச்சு? ஆசையா விளையாடதான வந்துச்சு? அதை அப்படி உதைச்சு விடுறாங்க? இதே நாளைக்கு இப்படி ஏதாவது துரத்தும்போது கூட இருந்தன்னா, உன்னை அதுகிட்ட பிடிச்சுத் தள்ளிவிட்டுட்டு ஓடிருவாங்க… மிஞ்சிப்போன சப்பாத்தில முட்டை ஊத்தி தர்றாங்கன்னு அக்கா அக்கான்னு உருகாத… கவனமா இரு… இந்தா நீயே வச்சுக்க…” என்று அவனிடமே கொடுத்துவிட்டுத் தன் தட்டைப்பிடுங்கிக் கொண்டு சென்றிருந்தாள்.

****

உதவியாளர் ஒருவர் பாதுகாப்பாகப் பிடித்திருக்க, அந்தப் பாம்பின் வால் பகுதியின் அடிப்புறத்தைப் பஞ்சொன்றால் மென்மையாகத் துடைத்துவிட்டு, சரியாக வென்ட்ரல் நரம்பில் ஊசியைச் செலுத்தி, இரத்தத்தை எடுத்தான் ஜீவிதன். பொதுவாகவே இராஜநாகத்திற்கு மனிதர்களிடம் கொஞ்சம் பொறுமை உண்டு. ஜீவிதனும் சரி, அனுபவம் வாய்ந்திருந்த அந்த உதவியாளரும் சரி, பதமும் பக்குவமுமாகக் கையாள, அந்தப் பாம்பு சீற எதுவும் செய்யவில்லை. மயக்க மருந்து கொடுத்திருக்கலாம்தான், ஆனால் அதனுடைய உடல்நிலை கொஞ்சம் மோசமாக இருந்தது. கூடவே அதற்கு அடுத்து அறுவைசிகிச்சை செய்வதற்காக மயக்க மருந்து கொடுத்துத்தான் ஆக வேண்டும்.

அதனுடைய மூச்சைக் கவனிக்கும்போதே, நுரையீரலில் பிரச்சினை என்பது ஜீவிதனுக்குப் புரிந்திருந்தது. இரத்தத்தைப் பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு ஸ்கேன் எடுத்துப் பார்க்க, அவன் ஐயப்பட்டதைப் போலவே, நுரையீரலுக்கும் நுரையீரல் சுவருக்கும் இடையில் திரவக்கசிவு இருந்தது. இராஜநாகங்களுக்கும் பெரும்பாலான பாம்புகளைப் போலவே வலது நுரையீரல் நன்றாக வளர்ச்சியடைந்திருக்கும். இடது நுரையீரல் சிறிதாக செயல்பாடற்ற நிலையிலோ இல்லாமலோ கூட இருக்கும். இந்த நாகத்திற்கும் அப்படிதான் இருந்தது.

இன்னொரு இராஜநாகத்தோடு ஏற்பட்ட சண்டையில், நீரற்ற ஆழ்கிணற்றுக்குள் விழுந்திருந்ததில், நுரையீரலோடு சில எலும்புகளையும் உடைத்து வைத்திருந்தது. இருந்தாலும் முக்கியப்பிரச்சனைக்கு முதல் கவனம் என்பதற்கிணங்க, முதலில் அறுவைச்சிகிச்சையின் மூலம் அந்தத் திரவக்கசிவை நிறுத்தியிருந்தான். அதனுடைய உடல்நிலையைச் சற்றுநேரம் அருகிலேயே இருந்து கவனித்துவிட்டுப் பின் வேண்டிய உத்தரவுகளைக் கொடுத்து வெளியேறியவனின் கவனம், அதுவரை அவசரநிலை என்பதால் வேறுபக்கம் செல்லவில்லை. அந்த நிலை கடக்கவும், நூலாம்படையைப் பார்த்துப் பாம்பெனப் பயந்தவளின் ஞாபகம் மொத்தமாக வந்தது.

காலையில் அவள் செய்த கூத்தை நினைத்தவனுக்குச் சிரிப்புதான் வந்தது. ஊட்டிவிடு, ஊட்டிவிடு என்று அவள் அடம்பிடித்ததை யாராவது பார்த்திருந்தால் அவனைத்தான் காதலிக்கத் தெரியாதவன் என்று நினைத்திருப்பார்கள். தானாகச் சிரித்தபடி வந்தவனைப் பார்த்துவிட்டு,”டாக்ட்ரே?” என்றார் வனக்காவலர் ஒருவர்.

அவர் பெயர் சென்னையா. கன்னடத்துக்காரர். இந்தப்பக்கம் போனால் கர்நாடகா, அந்தப்பக்கம் போனால் கேரளா என இடைப்பட்ட பகுதியில் இருப்பதுதானே நீலகிரி? இவர் வீட்டில் கன்னடம் பேசினாலும் பிறந்தது வளர்ந்து எல்லாம் தமிழக எல்லைப்பகுதியில்தான். வேலையும் தமிழ்நாடு வனத்துறையில்தான்.

இந்தப் பாம்பும் கூட, கர்நாடக வனப்பகுதி பக்கம் மீட்கப்பட்டிருந்தது.மேல்சிகிச்சை தேவைப்பட இங்கே அனுப்பியிருந்தார்கள். அவன் வேலைக்குத் தேவை இருக்குமளவு வேலையைப் பார்க்க ஆட்கள் இல்லை என்பதுதான் சிக்கல். பெரும்பாலான வன உயிரினங்களுக்கான மருத்துவம் கானுயிர் மருத்துவர்களை விட, பிற விலங்குநல மருத்துவர்களின் கருணையில்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்படியுமே கூட குறிப்பிட்ட வன உயிரினங்களுக்குச் சிகிச்சையளிக்க, குறிப்பிட்ட உரிமம் போலப் பெற்றிருக்க வேண்டும்.

ஜீவிதன் அவனுடைய வேலையில் திறமைசாலி என்பதோடு, துப்பாக்கி சுடுதலைத் தொடர்ந்திருந்தால் நிச்சயம் உலக அளவில் இல்லை என்றாலும் ஆசிய அளவிலாவது பதக்கங்களைப் பெற்றுக் கொடுத்திருப்பான். அவனுக்கு இந்த வயதில் இந்த வேலை கிடைக்க விளையாட்டுப்பிரிவு இடஒதுக்கீடும் ஒரு காரணம். மற்றபடி தமிழ்நாட்டில் இருக்கின்ற கானுயிர் மருத்துவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அப்படி எண்ணுமளவு கூட இல்லாமல் இருக்கும் மாநிலங்களும் உண்டு என்பதுதான் வருத்ததற்குரிய விஷயம்.

வந்தவர்கள் சொல்லிய சில நுண்ணிய தகவல்கள் ஜீவிதனுக்குப் புரியவில்லை. அதனால் வேலைநேரம் இல்லையென்றாலும் அவரை உதவிக்கு அழைத்திருக்க, உடனே வந்திருந்தார். சென்னையாவுடைய பூர்விகம் அருகில் இருந்த நாகர்ஹொளே. ஜீவிதனுடைய சொந்த ஊரிலும் நாகர் என வருவதாலேயே அவருக்கு என்னவோ அவன் அவர் ஊர்க்காரன் போல ஒரு பிடித்தம்.

வனவிலங்குகளை அவன் பதறாமல் கையாள்வதும் சலிக்காமல் சிகிச்சையளிக்கத் தேவைப்பட்டால் எந்தக் காட்டுக்குள்ளும் அஞ்சாமல் சென்று மருத்துவம் அளிப்பதும் சிக்கலான நேரங்களில் சொல்லவேண்டியதை ஜவ்வுஜவ்வென இழுக்காமல் தேவையான முடிவுகளைச் சட்டெனச் சொல்வதும் அதற்காக மனதில் பட்டதைப் பேசுகிறேன் பேர்வழி என எடுத்தெறிந்து பேசுகின்ற தொனியும் இல்லாமல், பொறுமையாக இருக்கின்ற ஜீவிதனின் குணமும் அவருக்கு மிகவும் பிடிக்கும். ஜீவிதனுக்கும் அவரைப் பிடிக்கும். முதலில் ஊர் பழக அவன் கொஞ்சம் சிரமப்பட்ட போது அவர்தான் உதவிசெய்தார். அதோடு அன்பு செலுத்துகிறவர்களை என்றுமே அவன் அலட்சியப்படுத்தியதில்லை.

அவர் அழைக்கவும் முகத்துக்கு ஒரு புன்னகையைக் கொடுத்தான். “நன்றி சார், நீங்க இல்லன்னா ஹேன்டில் பண்றது கஷ்டமா போயிருக்கும். பாம்பையும் செரி, கன்னெடத்தையும் செரி…” என்றான்.

அவன் சொல்லவும் சிரித்தார் அவர். “ஓடைல தண்ணி ஓடுற மாதிரி பேசவேண்டிய மலையாளத்தையே நல்லாப் பேசுறீங்க… கன்னடா ஈசி டாக்டரே…”

“எனெக்கு அர்த்தம் ஆக மாட்டேங்கிதே…” என்றபடியே தனது அலுவலகப் பகுதிக்கு வந்தவன், கதவைத் திறக்கவும் மெலிதாக என்றாலும் தெளிவாகக் கேட்ட  அலறல் சத்தத்தில் ஒருகணம் திகைத்து, பின் காத்திருப்புநாற்காலியின் மேலே ஏறி நின்ற வனபத்ராவை அமைதியாகப் பார்த்தான்.

(தொடரும்…)

1 thought on “எனக்காக வந்தவனே – 20”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!