அத்தியாயம்-1
இடம் : மதுரை
மதுரை மாநகரம் தூங்கா நகரம் என பெயர் பெற்றது.
அதற்கேற்றது போல சிவகாமி இரவெல்லாம் பொட்டு உறக்கமின்றி இருந்தார்.
அதிகாலையிலேயே தலைவிரி கோலத்தில் வீற்றிருந்தாள். அவளது மடியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மகள் கவிநிலா உறங்கியிருந்தாள்.
ஆம் வீட்டு வாசலில் தான்.
அதே தெருவில் இருந்த எதிர் வீட்டு லட்சுமி, எழுந்ததும் வாசலில் தண்ணீர் தெளித்துபடி, “என்ன சிவகாமி நேத்து உட்கார்ந்த இடத்துலயிருந்து நகராம இருக்க?” என்று வார்த்தை விட்டப்பின்னே, தண்ணீர் வாளியை துடைப்பத்தை தூரயெறிந்துவிட்டு “ஏ சிவகாமி பையன் வீட்டுக்கு வந்துட்டானா?” என்று பயந்து கேட்டார்.
இல்லையா பின்னே நேற்று பையனை காணோமென சிவகாமி கதறியவளாயிற்றே. அதெல்லாம் உன் வீட்டுக்காரர் கூட்டிட்டு வந்துடுவார் என லட்சுமி ஆறுதலுரைத்து சாந்தப்படுத்தியது மறந்து போகுமா?
அடுத்த நிமிடம் சிவகாமி “அவன் இன்னும் வீட்டுக்கு வரலைக்கா. நான் என்ன பண்ணுவேன். இந்த மனுஷன் நேத்து தேட போனவரு. ஒரு தகவலும் சொல்லலையே. போனும் சுவிட்ச்ஆப்னு வருது” என்று கூறி அழுதிட, லட்சுமிக்கு பகீரென்றது.
“என்னம்மா சொல்லற. இன்னுமா வரலை?” என்று கேட்க, “இல்லையேக்கா” என்று கதறவும் சிவகாமி மடியிலிருந்து பெண் கவிநிலா அன்னை அழவும் உடல் குலுங்க எழுந்தாள்.
கண்ணை கசக்கி எழுந்தாலும் அன்னை அழுவுவதால் கவிநிலா இன்னமும் திகிலோடு இருந்தாள். நேற்று வீதி வீதியாக அன்னை அழைத்து சென்று அண்ணனை தேட இனம் புரியாத பயத்தோடு கூடவே தேடினவள் தானே.
“ஆத்தி… இந்த பையன் எங்க போயிருக்கான். இப்படியா பெத்தவங்களை பதற விடுவாங்க? நேத்து அப்படியென்ன கோபம். எட்டாவது தானே படிக்கறான். இந்த காலத்து பிள்ளைங்க என்னனு சொல்லறது. வீட்டுக்காரர் வர்றப்ப பையனை இழுத்துட்டு வருவாரு. நீ அழாத, ஏன்டி கவி போய் பல் தேச்சிட்டு வா. நான் பாலாத்தி தர்றேன். பையன் வந்துடுவான் சிவகாமி அழாத” என்று நேற்று போலவே நம்பிக்கையாக கூறிவிட்டு, லட்சுமி கவிநிலாவை அழைத்து சென்றார்.
சிவகாமிக்கு இதே கவலை தான். மகன் நிரஞ்சன் எட்டாவது தான் படிக்கின்றான். நேற்று வீட்டுக்கு வந்தப்பொழுது கொஞ்சம் கூடுதலாக திட்டிவிட்டார்கள். படிக்கவில்லை என்ற சாதாரண காரணம் தான். ஆனால் ஜெய்சங்கர் கைக்கு மீறிய பள்ளிக்கூடத்தில் சேர்த்ததின் விளைவு நிரஞ்சன் மதிப்பெண் குறைவாகவும் கும்மி விட்டார்.
எப்பொழுதும் சிவகாமி ஆதரவாய் பேசுவார். நேற்று அன்னையும் திட்டி விட நிரஞ்சன் எங்கயோ சென்று விட்டான். மகன் காணவில்லையென்றதிலிருந்து சிவகாமி துடித்து விட்டார்.
பாழாய் போன கோபம் கண்ணை மறைக்க திட்டிவிட்டாரே.
சிவகாமி போனை எடுத்து மீண்டும் கணவருக்கு அழைக்க அந்த எண்ணோ சுவிட்ச் ஆப் என்று வந்தது. போன் உயிர் பெற்று தன்னை உயிர்பாக வைக்கும் பதிலை கூறுவாறென்ற நப்பாசை. ஆனால் நடந்தது என்னவோ ஏமாற்றமே.
சிவகாமி தெருவையே பார்த்து தவமிருந்தாள்.
அவள் கணவர் ஜெய்சங்கரோ, வேறொரு இடத்தில் “இல்லைங்க என் பையனுக்கு ஒன்னும் ஆகாது” என்று புலம்பினாலும், கான்ஸ்டேபிள் அழைத்து சென்ற இடத்தில், கைகள் நடுங்க மார்ச்சுவரில் பிணத்தை மூடியிருந்த போர்வையை நீக்கி திறந்து பார்த்தார்.
அடுத்த கணம் தொப்பென மயங்கி சரிந்தார் ஜெய்சங்கர்.
என்ன தான் அது தன் பையன் இருக்க கூடாதென்ற திடத்தோடு வந்தாலும், அவர் பையன் வயதில் இறந்து இருந்த சிறுவனை கண்டு மயங்கி விட்டார்.
ஜெய்சங்கர் கூட வந்த கான்ஸ்டேபிளே தண்ணீரை தெளித்து எழுப்ப, “என் பையன் இல்லை சார். என் பையன் இல்லை. என் பையன் நிரஞ்சன் இல்லை சார்” என்று அலறாத குறையாக கத்தினார்.
“சரி சார் அதுக்கு எதுக்கு கத்தறிங்க” என்று தள்ளி அமர வைத்தார்.
நீரை கொடுக்க ஜெய்சங்கர் நீரை சட்டையில் சிந்தி சிதறி பருகி முடித்தார்.
கான்ஸ்டேபிளோ மற்றொரு காவலதிகாரியிடம் “என்னய்யா இது இவரோட பையனா இருப்பான். கேஸ் பைல் முடிச்சி அடுத்த வேலையை பார்க்கலாம்னா, இவர் பையன் இல்லைன்னு சொல்லிட்டார்.
இனி இவன் யார்னு விசாரணை பண்ணணும். அனாதை பொணத்தை வச்சிட்டு காவல் காக்கணும். இவர் பையன் எங்க அடிபட்டு செத்து கிடக்கானோ” என்று தன் பணியில் அலுப்பு தட்ட பிணத்தை மூடி பேசினார்.
“சார் பையனோட அப்பா இருக்கார். பார்த்து பேசுங்க” என்று கூற, “யோவ் தினமும் ஆயிரம் கேஸு வருது. குழந்தைகளை காணோம்னு. இவங்க டீனேஜை தொடுற அறியா வயசு பிள்ளைகளை கண்ட மேனிக்கு திட்டறது. அவங்க வீட்டை விட்டு ஓடி நம்ம தாலியை அறுக்கறாங்க.
ரோட்டுல அடிப்பட்டு பசி பட்டினியோட சாக துணியறாங்க இந்த காலத்து பசங்க. பிறந்ததிலயிருந்து ஒன்னும் சொல்லிடாம வளர்த்துட்டு எதுக்காவது கத்தினா பசங்க என்ன செய்வாங்க. வீட்டை விட்டு எங்கயாவது கிளம்பிடறாங்க.
இங்க இல்லைனா என்னய்யா? சொந்தக்காரங்க வீட்ல இருக்காங்களானு பார்த்தாரா?” என்று கத்தியபடி வந்தார்.
ஒவ்வொரு பணியிலும் ஒவ்வொரு எரிச்சல் மண்டியிருக்கும். இவருக்கு நேற்றிலிருந்து அலைவதிலும், விடிந்ததும் பிணத்தை பார்க்க வேண்டுமா என்ற கடுகடுப்பிலும் அவ்வாறு பேசினார்.
“சொந்தக்காரங்க வீட்ல போன் பண்ணி கேட்டேங்க. நேத்து வரலைன்னு சொன்னாங்க. இப்ப போன் சார்ஜ் போயிடுச்சு.” என்று ஜெய்சங்கர் கூறினார்.
“அறிவிருக்காயா உனக்கு? இந்நேரம் பையன் வீட்டுக்கு வந்திருந்தா என்னய்யா பண்ணிருப்ப? போனை முதல்ல சார்ஜர்ல போடு. நீ சோறு திங்கறியோ இல்லையோ இந்த போன் தினமும் சார்ஜர் போட்டு இருந்தா தானே மத்தவங்க போன் செய்து தகவல் கொடுப்பாங்க. வந்துட்டானுங்க சாவு கிராக்கிங்க” என்று திட்டிவிட்டு காவலதிகாரி கடந்தார்.
தன்னை கடிந்தாலும் தன் பையன் நிரஞ்சன் வீட்டுக்கு வந்திருப்பானோ என்ற கலக்கத்தோடு வீட்டுக்கு நடையிட்டார் ஜெய்சங்கர்.
இடம் : சென்னை
சிங்கார சென்னை, வந்தாரை வாழ வைக்கும். எப்பொழுது பரபரப்புக்கு பஞ்சமில்லாது, நடமாட்டம் கொண்ட இடம். தினமும் பேருந்தில், இரயிலில் என ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களை வரவேற்கும்.
சென்னைக்கு கால் பதித்த அனைவரையும் தொழிலதிபராக மாற்றுமோ என்னவோ சிலரை இடம் தெரியாமல் காணாமல் செய்யவும் வைக்கும்.
அப்படிப்பட்ட சென்னையில் வசிப்பவனே வினோத். வினோத்தின் அலைப்பேசி தொடர்ந்து மணியடித்து அவனை உலுக்கியது.
அதில் மானஸ்வி’ என அவன் காதலி பெயர் மின்னி மின்னி ஒளிர்ந்தது.
அப்பா அம்மா ஊரிலிருக்க, தனியாக ரூம் எடுத்து வேலைக்கு செல்லும் காளை. அதனால் பணிக்கு செல்வதை கூட மறந்து உறங்கி தொலைவான்.
இவன் உறங்கி வழிவானென்றதை அறிந்ததால் அவன் காதலி தான் எழுப்பி விடுவாள். காதலி மானஸ்வி பெரும்பாலும் வினோத்திற்கு சுப்ரபாதம் எல்லாம் பாடி எழுப்புவது வாடிக்கை.
வினோத் காண்பதற்கு அழகானவன். எந்த பெண்ணும் அவனை கடந்து சென்றால் திருட்டு பார்வையில் வினோத்தை ரசிப்பார்கள்.
அந்தளவு ஆணழகனே. வயதிற்கு ஏற்ற உடற்கட்டும் உண்டு. மானஸ்வி வினோத் இருவருமே கடற்கரையில் தான் முதல் சந்திப்பு நிகழ்ந்தது. ஒரே நேரத்தில் ஒரேயிடத்தில் பார்க்கிங்கிற்காக நிறுத்த வந்து சண்டையிட்டு, அதே கடற்கரையில் மானஸ்வியை தொடர்ந்து வந்து சீண்டி, காதல் புறாவை பறக்க விட்டுவிட்டான்.
கண்டதும் காதலா என்று மானஸ்வி திடுக்கிட்டாலும், வினோத்தை பிடித்திருந்தது.
கலகலவென பழகுபவன் மானஸ்வியை ஈர்த்துவிட்டான்.
வினோத் சண்டையிட்டு பின்னாலே வந்து ரசித்து நம்பரை தர, போனில் அவன் எண்ணை ஏற்ளினாள்.
அதன் பின் காதலை உரைத்து பேசியவனிடம், மானஸ்வி மனம் ஒரு கட்டத்தில் விரும்ப துவங்கியது. அதன் காரணமாக அவன் கொடுத்த எண்ணிற்கு ஒரு மாதம் கழித்து காதலை பகிர்ந்தாள்.
அதன் பின் ஒரு வருடமாக வினோத் மானஸ்வி காதல் தொடர்கிறது. இன்று போலவே தினமும் மானஸ்வி அழைத்துவிடுவாள்.
வினோத் தட்டு தடுமாறி மேஜையிலிருந்த போனை எடுத்து, ”சொல்லு மானஸ்வி” என்று அரையுறக்கத்தில் கேட்டான்.
“டேய் மணி எட்டாகுது எந்திரிச்சியா இல்லையா?” என்று கேட்டாள்.
அலைப்பேசியிலிருந்த மணியை பார்த்து, “எட்டாகிடுச்சா” என்று உடலை முறுக்கி எழுந்தான்.
“இடியட் காலையில திட்டு வாங்காம எந்திரிக்க மாட்டியா? போய் பல் தேய்ச்சிட்டு கிளம்பு. இன்னிக்கு ஹார்பர்ல ஏதோ முக்கியமான மீட்டிங் இருக்கு அதுயிதுன்னு நேத்து சீன் போட்ட” என்றதும் “அட ஆமா. தேங்க்ஸ் டி மானஸ்வி. நான் வேலைக்கு கிளம்பிட்டு அப்பறம் பேசறேன். உம்ம்ம்ம்மா” என்று அழுத்தமாய் முத்தமிடும் வார்த்தையை வீசி அணைத்தான்.
மானஸ்வி அவனது செயலில் நகைத்து கொண்டாள்.
வினோத் ஹார்பரில் வேலை செய்பவன். அப்பா அம்மா எல்லாம் ஊரில் இருக்க ஒற்றை படுக்கையறையை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளான்.
ஹார்பரில் கணினி முன் அமர்ந்து வண்டியின் வாகன எண்ணை பதிவு செய்யும் பணி. ஹார்பரில் பணி செய்பவரை ஒன்றிணைந்து பத்து மணிக்கு வரச்சொல்லி மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இப்பொழுதே மணி எட்டு என்றதால் அரக்க பறக்க கிளம்பினான். குளித்து முடித்து உடையணிந்து, இருந்த பிரெட் ஜாம் தடவி உணவாக விழுங்கி, ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வீட்டை பூட்டினான்.
இங்கிருந்து இருசக்கர வாகனத்தில் ஹார்பருக்கு அரைமணி நேரம் பயணம். நேரத்திற்கு வந்து சென்று கையெழுத்துயிட்டான்.
அலைப்பேசி எல்லாம் வேலை செய்பவரின் விருந்து பெறப்பட்டது. வினோத்தும் தன் போனை கொடுத்துவிட்டு, நுழைந்தான்.
-தொடரும்.
-Mark-19

Super super….nice 😍😍
Superb started nice
Super 😍
சூப்பர்…அன்ட் பெரு நைஸ் கோயிங்.
😜😜😜
Super interoooooo😍
Starting yae oru pakkam paiyan ah kanum nu thedura parents innonru pakkam vinoth nu oruthar ah intro kuduthu irukiga
Good start👍
👌👌👌
Interesting
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️