🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

Completed Novels Archives - Page 20 of 78 - Praveena Thangaraj Novels
புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.

Category: Completed Novels

இந்த பகுதியில் காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.

Completed Novels

  • எனக்காக வந்தவனே – 2


    ஆறு மாதங்களுக்கு முன்பு 

    “அடிச்சிருவேன் பத்ரா…” அஞ்சனா கோவில் வாசலில் வைத்து மகளை மிரட்டிக் கொண்டிருந்தார். விடுமுறைக்கு வந்த அபிதன், அக்காவின் நடவடிக்கையை வருத்தத்தோடு சுட்டியிருக்க அவருக்குமே தாளவில்லை. அதில் வழக்கமாக மகளிடம் காட்டாத சிடுசிடுப்பு அவரையறியாமல் வந்திருந்தது. 

    “இப்ப உள்ள வரப்போறியா என்ன?” அதிகாரமாய்க் கேட்டவரைக் கெஞ்சலுடன் பார்த்தவள் கொஞ்சல் மொழியில் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள்.

    “அம்மா.. ப்ளீஸ்மா.. யானை இல்லாத வேற கோவிலுக்குப் போலாம்…”

    “நீ ஏழு வயசுல கோவில்ல யானை இருக்கும்… வரமாட்டேன்னு அடம்பிடிச்சது சரி… இப்ப ஏழு கழுதை வயசாச்சு.. இன்னும் யானைக்குப் பயந்து வரமாட்டேன்னுட்டு இருக்க… யானை அந்தப்பக்கம்தான் இருக்கும்.. நாம இப்படிகூடி போயிட்டு வந்துரலாம்.. வா…”

    “அதுக்கு மதம் பிடிச்சு சங்கிலியை அத்துக்கிட்டு வந்துச்சுன்னா எந்தப்பக்கம் வரும்ன்னு அதுக்கே தெரியாதும்மா… வேணாம்மா…”

    “அதுக்கு ஏன்டி மதம் பிடிக்கப்போகுது?”

    “அதெல்லாம் அதுக்கு ஆயிரத்தெட்டு காரணம் இருக்கும்… நம்மகிட்ட சொல்லிக்கிட்டாமா இருக்கும்?”

    சுருசுருவென வந்த கோபத்தோடு மகளைப் பார்த்தவர் பல்லைக் கடித்தார்.

    “சரி… நீ வெளியவே இரு.. நான் மட்டுமாவது போயிட்டு வந்துர்றேன்…” நகர்ந்தவரை முன்னால் வந்து மறித்தாள்.

    “இப்ப என்னடி?” சலித்துப்போன குரலில் முகத்தைப் பாவமாக வைத்தபடி கேட்டார்.

    “அம்மா… யானைக்கு மதம்பிடிக்கும்போது நீங்க உள்ளே இருந்தா நான் எப்படி நிம்மதியா இருப்பேன்? அதோட உள்ள இருக்க யானை வெளியே ஓடி வர எவ்ளோ நேரம் ஆகும்?”

    “இங்கபாரு..தரையில உடைக்கவேண்டிய தேங்காயை உன் தலைல உடைச்சுருவேன்… சும்மா இருக்க யானைக்கு மதம் பிடிக்கும் மதம் பிடிக்கும்ன்னு எனக்கு வெறி பிடிக்க வச்சுராத… மரியாதையா என்கூட உள்ள வர்றதுன்னா வா.. இல்ல வெளியே நில்லு.. என்னைப் படுத்தாத… இப்ப என்ன உள்ள வர்றியா? இல்ல வெளியே நிற்கிறியா?”

    அவர் போட்ட போட்டில் நிஜமாகவே தேங்காயைத் தலையில் போட்டாலும் போட்டுவிடுவார் எனத் தோன்ற “வெளியவே நிக்கிறேன். வண்டி பக்கத்துல…” என்றவளைப் பார்த்து முறைத்துவிட்டு கோவில் வாசலை நோக்கி நடந்தார் அஞ்சனா. இரண்டெட்டு வைக்கவும் அம்மா என்றழைத்தபடி மகள் ஓடிவர, நின்றார்.

    “என்ன வர்றியா?”

    “இல்லம்மா.. யானை பக்கத்துல போயிராதீங்க…” என்றவளை அவளது அன்னை பார்த்த பார்வையில் பறந்துவந்து வண்டியின் அருகில் நின்றுவிட்டாள். சற்றுநேரம் போவோர் வருவோரை வேடிக்கை பார்த்தாள். அலைபேசியை எடுத்துப்பார்க்கலாம் என்று தோன்றியதுதான். ஆனால் அவள் அலைபேசியில் மூழ்கிவிட்ட நேரம் யானை சங்கிலியை அத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டால்?

    பாகனைக் கொன்ற யானை.. பக்தரை மிதித்த யானை என்று எத்தனை செய்திகளைப் படித்திருப்பாள்? அதுபோன்ற செய்திகளில் தன்பெயர் வராமல் இருக்கவேண்டுமானால் கவனத்துடன் நிற்பது அவசியம் எனத் தனக்குத் தானே அறிவுறுத்திக்கொண்டவள், வண்டியில் கூட அன்னை ஓடிவந்தால் ஏற்றிச்செல்லுவதற்கு வசதியாக உடனே இயக்கும் நிலையில்தான் அமர்ந்திருந்தாள். பெரும்பாலும் வயதானவர்களும் இளம்பெண்களும் இல்லை, குடும்பஸ்தர்களுமாக வந்துகொண்டிருக்க அவளுக்கு ஒருகட்டத்தில் சலிப்பு தட்டியது. 

    அவள் தேடியதென்னவோ ரசிப்பதற்கு ஒரு குழந்தைதான். குழந்தைகள் என்ன செய்தாலும் பார்க்க அழகாயிருக்கும். பொழுது போய்விடும். எனக் கன்னத்தில் கைவைத்து வண்டியில் அமர்ந்திருந்தவளின் பார்வை வட்டத்தில் அவன் பட்டான். பொதுவாக, அறிமுகமற்ற இளம் ஆண்களைக் கண்டால் கண்ணில் பாராமல் வேறுபுறம் திரும்பிவிடுவதுதான் அவளது வழக்கம். ஆனால், இவன் கொஞ்சம் நன்றாக இருந்தான். கூடவே, வண்டிக்கண்ணாடி வழியாகத் தான் பார்ப்பது அவனுக்குத் தெரியவும் செய்யாது எனத் தோன்ற அவனைப் பார்த்தாள். அவள் பின்னால் வண்டியை நிறுத்திவிட்டு இறங்காமல் அலைபேசியை எடுத்து ஏதோ எண்களைத் தட்டிக் காதில் வைத்தவன் நிமிரவும் அவள் வேறுபுறம் திரும்பியிருந்தாள்.

    பேசத்தொடங்கியவன் பேசிய மொழி மலையாளம் போல இருக்க வியப்பாகப் பார்த்தவள், சற்றுநேரம் கழித்துத்தான் நிதானித்தாள். அது மலையாளம் அல்ல. தமிழ்தான். ஆனால் பேசிய தொனி மலையாளம் போல இருந்தது. வேகமாக வேறு பேசிக் கொண்டிருக்க, அந்தத் தமிழ் மலையாளம் போலக் கேட்டது. ‘கேரளத்துச் சேட்டனாணோ?’ என நினைத்தபடி அவள் மீண்டும் அவன் பக்கம் பார்க்க, அவன் வாயிலிருந்து விழுந்த வார்த்தைகளில் வியந்தாள். எதிரே இருப்பவரும் அவன் பேசிய வேகம் புரிபடவில்லை என்றார் போல. சொன்னதையே மீண்டும் நிறுத்திச் சொன்னான்.

    “வந்துட்டென்… ஆனா என்னால உள்ளுக்க வரமுடியாது… உனக்கு வேணுமின்னா வெளிய வா…ஆமா…ஆனெதான். அதுனாலதான் உள்ள வர மாட்டேன்னு சொல்லிட்டு இருக்கேன்…” காட்டத்தைத் தூவிய சொற்களில் போனில் பேசிக்கொண்டிருந்தான். ஏற்கனவே அவன் சொன்னது அவளுக்குப் புரிந்திருந்தது. ஆனால், அந்த வழக்கில் அவன் பேசுவதால் தான்தான் தவறாகப் புரிந்துகொண்டோம் என்றிருந்தவள், மீண்டும் அவன் தெளிவாகச் சொல்ல, ‘யானை னால உள்ளே போக மாட்டானா?’ எனத் தன்னைப்போல் ஒருவன் என்று தோன்றியதில் வண்டியை விட்டு இறங்கியே அவன் புறம் கூர்ந்தாள்.

    அவன் இவளைக் கவனிக்கவில்லை. முன்னால் இருந்த ஹெல்மெட்டில் தாளமிட்டபடி, கடுப்பாகப் பேசிக் கொண்டிருந்தான். சில விநாடிகள் கழித்து, உள்ளுணர்வினாலோ என்னவோ இவள்புறம் திரும்ப, சட்டெனக் குனிந்து, யானை மதம்பிடித்து வெளியே ஓடிவந்தால் தப்பிக்க இயக்குவதற்கெனத் தயாராக மாட்டி வைத்திருந்த வண்டிச்சாவியைச் சட்டென வண்டியிலிருந்து பிடுங்கினாள். பின் என்ன செய்வதெனத் தெரியாமல் அதனை மீண்டும் மாட்டிவைத்தாள்.

    ஜீவிதனுக்கு அவள் தன்னைப் பார்த்துவிட்டுத்தான் வண்டியைத் திருகுகிறாள் என்பது புரிந்தது. அதிக சத்தமாகப் பேசிவிட்டோம் போல என நினைத்தவன், மெதுவான குரலில் பேசத் தொடங்கியிருந்தான். அவன் பேசிமுடித்து வண்டியிலிருந்து இறங்கி நடப்பதற்குள் சாவியைப் பத்துமுறை போட்டுப்போட்டு எடுத்திருப்பாள் வனபத்ரா. பின்னே? அவன் தன்னைக் கவனிக்கிறான் என்று தெரிந்ததே? 

    தன்னை அவன் கடக்கும்போது இன்னும் உன்னிப்பாக ஏதோ அந்தச் சாவியில் உலகம் உய்வதற்கான வழி எழுதிக்கொடுத்திருப்பது போல முகத்துக்கு நேராக வைத்துப் பார்த்தவள், மீண்டும் வண்டியில் போட்டுத் திருக முயற்சி செய்வது போலச் செய்தாள். பின் திருகி விட்டால் வண்டியை எடுக்க வேண்டுமே… தன்னருகே நின்ற கால்கள் நகராமல் நிற்பதைக் கீழ்க்கண்ணால் பார்த்தவளுக்கு ஏனோ லேசாகப் பதட்டம் வந்தது.

    “ஏங்க…” என்றவனை நிமிர்ந்து பார்த்தவளின் மனதில் ஒரு பதட்டம், ஒரு ஆர்வம் சரிவிகிதத்தில் கலந்திருந்தாலும் அதை முகத்தில் காட்டாமல் நின்றாள். ஆனால் அவளை ஒருமாதிரிப் பார்த்தவன் “இந்த வண்டி உங்களோடதுதானா?” என்றதில் நொந்திருந்தாள். 

    ‘எலேய் என்னைப் பாத்தா வண்டி திருடுறவ மாதிரியாடா இருக்கு உனக்கு…’ என்று மனதிற்குள் கேட்டவள் அதை வெளியே கேட்காமல் திருதிருவென விழித்தாள். 

    அதில் அவனது கண்களில் சந்தேகம் இன்னும் கூட, “இது உங்க வண்டிதானா?” மீண்டும் அழுத்திக் கேட்டான். இப்போது தூங்கிக்கொண்டிருந்த அவளது தன்மானம் விழித்துவிட, “என் வண்டிதான் சார்…” என்றாள் அதே அழுத்தத்துடன்.

    “வண்டி நெம்பர் சொல்லுங்க…”

    இப்போது இன்னும் திருதிருவென்று விழித்தாள். உண்மையில் அது அவளது அப்பாவுடைய வண்டி. ஆயிரம் முறை எடுத்துச் சுற்றியிருப்பாள். ஆனால் வண்டி எண்ணைக் கருத்தில் பதித்ததில்லை. வண்டியின் முன்னால் ஒரு ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும். பின்னால் ஒரு ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும். தம்பியின் புண்ணியம். அதனால் எண்ணை வைத்து வண்டியை அடையாளம் காணவேண்டிய சிக்கல் அவளுக்கு ஏற்பட்டதில்லை. அதுதான் உண்மை. ஆனால் இதைச் சொன்னால் நம்புவானா இல்லையா என்று தெரியாதே என்று இன்னும் திருதிருவென விழித்தாள்.

    “சார்… இது எங்க வண்டிதான். வேணும்ன்னா சாவி போட்டுப்பாருங்க…” என்று தன் கையிலிருந்ததை அவனிடம் நீட்டினாள்.

    “அதுதான்நீங்க போட்டே எடுக்கலயே… ஒருவேளை கரெக்டான சாவியைக் கெண்டு எடுத்துட்டீங்களா என்ன?”என்றான் அவன். அவளுக்கு நிஜமாகவே என்ன சொல்வதென்று தெரியவில்லை.கூடவே அவன் பேசுவதைப்புரிந்துகொள்ளவே அவளுக்கு ஒருகணம் தேவைப்பட்டது. இப்படிப்பட்ட சூழலை அவள் எதிர்கொண்டதில்லை.  அவள் விழித்தபடி இருக்க, “அண்ணா…” என்று ஒருகுரல் உற்சாகமாய்க் கேட்டது. 

    அது அவளுடைய தம்பியின் குரலாக இருக்க, “என்ன இவன் என்னை அக்கான்னு கூப்பிடாம அண்ணன்னு கூப்பிடுறான்? எதுவும் புதுப் பழிவாங்குதல் நடவடிக்கையோ?” என எண்ணியபடி தம்பியைப் பார்த்தாள்.

     அவனோ, இவளைப் பார்த்திருக்கவே இல்லை. பார்த்திருந்தால்தான் பக்கத்தில் வந்திருக்க மாட்டானே?ஆவலாக ஜீவிதனைப் பார்த்தபடி வந்தவன், வனபத்ராவைப் பார்த்துத் திகைத்தான். அவனோ, “ஹாய் அபி…” எனப் புன்னகைக்க, வனபத்ராதான் தம்பியைக் குறுகுறுவெனப் பார்த்தாள். அவளிடம், “அக்கா, நான் தங்கியிருக்க வீட்டுல கீழ் வீட்டுலதான் இந்த அண்ணா இருக்காங்க” என்றவன், அவள் மேலும் ஏதோ கேட்டுவிடுவாள் என்று பயந்தவன் போல, வேகமாக ஜீவிதனிடம் திரும்பினான். 

    “அண்ணா… இது எங்கக்கா…” 

    “ஜீவிதன்…” என்று புன்னகைத்தவன், கைநீட்ட, “வனபத்ரா” என்றவளும் சிறுபுன்னகையோடு கைகுலுக்கினாள். அக்கா அவனது கையைப் பற்றிக் குலுக்குவதை ஒரு திகிலோடு பார்த்திருந்தவன், அதற்குமேல் அங்கே நிற்கப் பயந்தவன் போல, “அம்மா உள்ளே காத்திருக்காங்கண்ணா… வாக்கா” என்று சொல்லிவிட்டு கோவிலைப் பார்த்து நகர்ந்தான். அவன் நகர்ந்தால், அவர்களும் நகர்ந்திடுவார்கள்தானே?

    அவன் உள்ளே சென்றும் அவள் நகராமல் நிற்க, “நீங்க போகலயா?” என்று கேட்டான் ஜீவிதன்.

    ஒருகணம் தயங்கியவள், “எனக்கு யானைன்னா பயம்…” என்றாள். அவள் சொல்லவும் புன்னகைத்தவன், தன்னுடைய வலதுகையை உயர்த்தினான். அவள் கேள்வியாகப் பார்க்க, “ஹைபை… எனக்கும்…” என்றான். அவள் முகம் அவளையறியாமல் மலர, அவனுடைய கையில் லேசாகத் தட்டினாள். பின் ஒரு சிறுபுன்னகையுடன் நெற்றியை ஒற்றைவிரலால் தேய்த்துவிட்டவன், “சாரி…” என்றான் வண்டிச்சாவியைக் காட்டி.

    தம்பியை அனுப்பிவிட்டு அவளிடம் தன்மையாக மன்னிப்பு வேண்டியிருந்த விஷயம் அவளுக்குப் பிடித்திருந்தது.  இதமாக இருக்கவே இயல்பாக மன்னித்திருந்தாள்.

    “அது ஒண்ணுமில்லங்க.. யார் பார்த்தாலும் அப்படிதான் நினைச்சுருப்பாங்க…” என்றவள், “அது வந்து.. போரடிச்சுச்சுன்னு சும்மா சாவியைப் போட்டுத் திருகி விளையாடிட்டு இருந்தேன்…” என்று விளக்கம் அளித்தாள். அவளது விளக்கத்தில் அவன் ஒருமாதிரியாகப் பார்ப்பதுபோலத் தோன்ற, மீண்டும் திருதிருவென விழித்தவளைப் பார்த்து அழகாகப் புன்னகைத்தான் அவன். 

    “ஒரு பேரைக் கேட்டு அழகா இருக்குன்னு நெனச்சு ரொம்ப நாளாச்சுன்னு யோசிச்சுட்டு இருந்தேன்… உங்க பேர் அந்தக் குறையைத் தீர்த்துருச்சு…”  வழிதல் போல இல்லாமல் இயல்பான தொனியில் அவன் அதைச் சொல்ல, அவளுடைய மதிப்பில் அவன் இறங்கவில்லை. இதே வேறு யாராவது இருந்திருந்தால், காதில் வாங்காதது போலக் கடந்திருக்கக் கூடியவள், அவனிடம் பேச்சுக்கொடுத்தாள். 

    “ம்ம்? முழுசா வச்சது வனபத்ரகாளி…” என்றாள் அவள் அவனுடைய புகழ்ச்சியை மறுக்கும் தொனியில்.

    “காளிக்கு என்னங்க குறைச்சல்? தேவைப்படுறப்ப கோபப்படுன்னு சொல்ற சாமி…அந்தப்பேரும் அழகுதான். முழுசா இன்னும் அழகா இருக்கு…”

    அவன் நிதானமாகவும் முடிந்தவரை புரியும்படியும் பேசியதில் புரிந்தது. ஆனாலும் இதற்கு என்ன சொல்வதெனத் தெரியாமல் அவள் நிற்க, அவன் அலைபேசி மீண்டும் அடித்தது. “சரிங்க…ப்ரெண்ட் வந்துட்டான்னு நினைக்கிறேன்…வாரேன்…” என்றபடி அவன் நடக்கத் தொடங்க, “பை…” என்றவளுக்கு அதற்குமேல் அங்கு நிற்க என்னவோ போல் இருக்கவே, தாய்க்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு வீட்டுக்கு வந்திருந்தாள். வீட்டிற்கு வந்த அன்னை அவள் இப்படி பாதியில் வந்ததற்குத் திட்டத் தொடங்க, “அம்மா… திட்டாதீங்க… ப்ளீஸ்…” என்றாள்.

    “இதுக்குப் பேரெல்லாம் திட்டுறதா? அங்க ஒரு மனுஷன் திட்டுனாரே… அதைப் பார்த்துருக்கணும்… அப்ப தெரியும் திட்டுறதுன்னா என்னன்னு?”

    “யாரு யாரைத் திட்டுனா?”

    “நீ யானை.. யானை ன்னு பதறுனல… அதுக்கேத்த மாதிரி யானையே வெளிய நிக்கல.. அதுக்கு உடம்பு சரியில்லையாம்… சுகராம்… அதைப் பார்க்க வந்த டாக்டர், அங்க கவனிச்சுட்டு இருந்தவங்களைத் திட்டுனாரு… திட்டுன்னா திட்டு… அப்படி ஒரு திட்டு… யானையை சரியா வாக்கிங் கூட்டிட்டுப் போறதில்ல… கண்டதையும் சாப்பிடக் கொடுக்காதீங்கன்னு… யானை காபி குடிக்கும்ன்னு எனக்கு இன்னைக்குத்தான் தெரியும்…”

    “அம்மா.. நான் உங்களை யானை பக்கத்துல போகாதீங்கன்னு சொன்னேன்… நீங்க என்னன்னா அதுக்கு வைத்தியம் பார்க்கறதைப் பார்த்துட்டு வந்துருக்கீங்க…”

    “நான் பார்க்கல… உன் தம்பிதான்…” என்றவர், மகனின் கண்ணசைவில் நிறுத்தினார். அவர்களுடைய சைகையைக் கவனிக்காமல், அவள் வேறு சிந்தனையில் உள்ளே சென்றிருந்தாள்.  வழக்கமாக இருந்திருந்தால், யானை, யானை என்று மனம் யானையில் நின்றிருக்கும். இன்று “ஒரு பேரைக் கேட்டு அழகா இருக்குன்னு நினைச்சு ரொம்ப நாளாச்சுன்னு யோசிச்சுட்டு இருந்தேன்..” என்றவனின் குரலும் வழக்கும் என நினைவில் நின்றிருந்தான். மெத்தையில் விழுந்து இரண்டுமுறை அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் உருண்டவள், “ஜீவிதன்…” என்று லேசாக உச்சரித்துப்பார்த்தாள். 

    “ஜீவிதனும் அழகாதான் இருக்கு…” 

    (வருவான்…)

  • எனக்காக வந்தவனே-1

    “அக்கா… பச்சைல ரெண்டு அரைலிட்டர்… தயிர் இருக்காக்கா?” வனபத்ரா கூடையை நீட்ட, “இருக்குப்பா…” என்றபடி அந்தக் கடைக்காரர் பால் அடைக்கப்பட்ட நெகிழிப்பைகளை அதில் போட்டார்.

    “ஒரு தயிரும் கொடுத்துருங்கக்கா…” என்றபடி பணத்தை அவரிடம் நீட்டியவள், ஏதோ உறுத்த, காலருகே பார்த்தாள். ஒருகணம் மூச்சு மூக்குக்குள்ளேயே நின்றுவிட, திரும்பி ஓடத் தொடங்கியிருந்தாள். சில்லறையை எடுத்துவிட்டுத் தயிரோடு வந்த கடைக்காரர் இவளைக் காணாமல் பார்க்க, அவள் தன் வீட்டுக்கு எதிர் திசையில் ஓடிக்கொண்டிருந்தாள். அவளுக்குப் பின்னால், ஒரு அழகான, பார்த்தாலே அள்ளிக் கொஞ்சத் தோன்றும் நாய்க்குட்டி ஒன்று அப்பாவியான முகத்தோடு ஓடிக்கொண்டிருந்தது.

    “ஏம்பா… ஓடாதப்பா… ஓடுனாதான் துரத்தும்…ஒண்ணும் பண்ணாது.” அவருடைய உதவிக்கு அப்பாற்பட்ட தூரத்தில் இருவரும் சென்றிருந்தனர். அவர் சொன்னது அவள் காதில் விழுந்ததா என்று தெரியாததில் அவர் மீண்டும் கடைக்குள் சென்றுவிட்டார்.

    “இதுக்குத்தான் மாட்டேன் ன்னு சொன்னேன்.. எல்லாம் அபியால… மகனே வீட்டுக்கு வந்ததும் இருக்குடா உனக்கு…” மனதுக்குள் தன் உடன்பிறப்பைத் திட்டியபடி ஓடியவள், சிறிதுநேரம் கழித்துத் திரும்பிப் பார்க்க, இவள் எதைப் பார்த்து ஓடிவந்தாளோ அது இவளை விட வேகமாக இவளை நோக்கி வந்துகொண்டிருந்தது.

    “ஒருவேள அந்தக்கா சொன்னமாதிரி ஓடுறதுனாலதான் துரத்துதோ?” என்று தோன்ற நின்று திரும்பிப்பார்த்தாள். அதுவும் நிற்க, லேசாக மூச்சை இழுத்துவிட்டவள், மெதுவாக நடக்கத் தொடங்கினாள். அந்த நாய்க்குட்டி வேறுபுறம் திரும்ப, மீண்டும் ஒருமுறை மூச்சை இழுத்துவிட்டுவிட்டு நடைவேகத்தைக் கூட்டினாள்.

    வீட்டுக்கு எதிர்த்திசையில் நடக்கிறோம் என்று தெரிந்தாலும் திரும்பிப்பார்க்காமல் நடக்கத்தொடங்கியிருந்தாள். சிறிதுநேரம் கழித்துத் திரும்பிப்பார்க்கச் சற்றுத் தொலைவில் அதே நாய்க்குட்டியும் அவளைப் பின்தொடர்ந்துகொண்டிருந்தது. தன்னைத்தான் பின்தொடருகிறதா? என்ற சந்தேகம் வர, சாலையைக் கடந்துபார்த்தாள்.

    சற்று தொலைவைப் பின்பற்றி, அந்த நாய்க்குட்டியும் சாலையைக் கடக்க, மீண்டும் சாலையைக் கடந்து இந்தப்பக்கம் வந்தாள். அப்போதும் அந்த நாய்க்குட்டியும் அதே போலச் செய்ய, சாலையை நேராகக் கடக்காமல் முக்கோணத்தின் பக்கம் போலக் குறுக்காக மீண்டும் இரண்டுமுறை கடக்க, அந்த நாய்க்குட்டி இவளைப் போலக் குறளிவித்தையெல்லாம் செய்யாமல் ஒழுங்காகவே கடந்தது.

    திகைத்தவள், நின்றுபார்க்க, அந்த நாய்க்குட்டியும் சிறிதுநேரம் நின்றுவிட்டு, அவளை நோக்கி ஓடிவரத்தொடங்கியது. கையிலிருந்த பாலுக்காகத்தான் வருகிறது என அவளாகவே நினைத்தவள், அந்தக் கூடையை அதைத் தாண்டி வீசியெறிந்திருந்தாள். ஆனால், அது பாலைநோக்கிச் செல்லாமல் இவளை நோக்கியே வர, மீண்டும் ஓடத் தொடங்குவதற்குள் இரண்டு கைகள் அந்த நாய்க்குட்டியைத் தூக்கியிருந்தன.

    “ஏங்க? இவ்வளவு அழகா இருக்கு… இதைப் பார்த்து ஏன் பயப்படுறீங்க?” என்றான் அதைத் தூக்கியவன். இளைஞன். அவன் கண்களில் ஒரு ஆர்வம் தெரிந்தது. கலவரத்தில் இருந்தவள், அதைக் கவனிக்காமல் பதில் சொன்னாள்.

    “அழகா இருக்கதைப் பார்த்துதான் பயப்படணும். நன்றி. அதைக் கீழே மட்டும் விட்டுராதீங்க…தயவுசெஞ்சு…” என்றபடி அவள் மீண்டும் ஓட எத்தனிக்க, “அப்ப நான் உங்களப் பார்த்துப் பயப்படணும் ங்கறீங்க?” என்று புன்னகைத்தான் அவன். ஆனால் அவள் அவன் முகத்தைப் பார்த்தால் தானே? அவளுடைய கண்கள், அவனுடைய கைகளில் விளையாடத் தொடங்கியிருந்த நாய்க்குட்டியிடம்தான் இருந்தது.

    ஆனால், “நூறு சதவீதம்…” என்று ஒரு ஆண்குரல் பதிலளிக்க, இருவரும் அந்தப் பக்கம் பார்த்தனர். அவள் வந்தவனை முறைத்தாள். அவன், கிண்டலாக உதடுகளை இழுத்துப் புன்னகைத்தான். அவன் நீட்டிய சாவியைப் பிடுங்கியவள், அவன் வந்த வண்டியில் வீட்டை நோக்கிப் பறந்திருந்தாள். அவள் செல்லும் திசையை ஆர்வம் குறையாமல் பார்த்தவனை ஒரு செருமல் கலைத்தது.

    “ஹஹம்…”

    “ஹாய் ப்ரோ? அவங்க உங்களுக்குத் தெரிஞ்சவங்களா?”

    “ஆமாம்…” என்று சொன்னவனை எதிரில் இருந்தவனின் பார்வை ஆராய்ந்தது. எதிரில் நின்றிருந்தவனைப் பள்ளிச்சிறுவன் என்றும் சொல்ல இயலாது, முழு இளைஞன் என்றும் சொல்ல இயலாது. முகத்திலிருந்த தாடியும் மீசையும் அவனுடைய பால்வடியும் முகத்திற்கு அந்நியமாக இருக்க, அவளை விட வயது குறைந்தவன், என்பது போலத்தான் தெரிந்தது. இருந்தாலும் அவனுடைய நெடுநெடுவென்ற உயரம் வயதைக் கணிக்கவிடாமல் காட்டியது. அவளுக்கும் அவனுக்கும் என்ன தொடர்பு என்பதைத் தெரியாமல் தலைவெடித்துவிடும் போல இருக்க, கேட்டுவிட்டான்.

    “உங்களுக்கு அவங்க என்ன வேணும் ப்ரோ?”

    “என் அக்கா…”

    அவன் சொல்லவும் வெளியே காட்டாமல் பல பெருமூச்சுகளை விட்டவன், அக்காவை விட்டுவிட்டுத் தம்பிவழியாக நூல்விட முனைந்தான். “மச்சான்னு கூப்புட்டா கோவிச்சுப்பீங்களா ப்ரோ?” அவன் சிரித்துக் கொண்டே கேட்க, அபிதன் அவனைக் கொஞ்சம் பரிதாபமாய்ப் பார்த்தான். அவள் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது, முதல்முறை இப்படி ஒருவன் அக்காவிடம் நூல்விடப் பார்த்ததைக் கண்டபோது அவனுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அதன்பின் பழகிவிட்டது. அவன் அக்கா இதற்கெல்லாம் அசையமாட்டாள் என்று அவன் கண்கூடாகவே பார்த்திருக்கிறான். யாரையும் அவமதிக்க மாட்டாள், ஆனால் சம்மதிக்கவும் மாட்டாள். பிரதிபலிக்கின்ற இடத்தில்தானே பிம்பங்கள் விழும்? அவள் விழியில் யார் பிம்பமும் பிரதிபலித்ததில்லை.

    ஆனால் ஒரு நாலைந்துபேர் இப்படி வரவும் இந்தப் பைத்தியத்திடம் ஏன் இத்தனை பேர் விழுகிறார்கள் என்று பார்த்திருக்கிறான், அவளிடமே கேட்டிருக்கிறான். ஆனால், அவளுக்குப் பதிலாக அவர்களது அப்பத்தாதான் பதிலளித்திருக்கிறார். “என் பேத்தி அழகுடா…” என. மயிலைப் பார்த்தால் மாடு போலத் தோன்றும் சகோதரர்களுக்கே உரிய தனித்துவக்கண் கொண்டு பார்ப்பதால் அவனால் அதை ஒத்துக் கொள்ள இயலவில்லைதான்.

    ஆனால், இப்படி வந்து விழுவதற்கு அக்காவின் தோற்றம் மட்டுமல்ல, தொட்டதில் எல்லாம் துலங்கும் தமக்கையின் ஆளுமையும் காரணம் என்பது அவனுக்குக் கொஞ்சம் வளர்ந்தபிறகு புரிந்ததுதான். ஆனால், அப்படி எந்தக் காரணங்களுமின்றி, அவள் நாய் துரத்துகையில் ஓடியதைப் பார்த்து க்யூட் என்று வந்து நின்றவனைக் காண்கையில் அவனுக்கு எரிச்சலாகவும் வந்தது. அபிதனின் பார்வை, அவன் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்த நாய்க்குட்டியில் நிலைத்தது.

    “இது… இது ஒண்ணுமில்ல… அவங்களுக்குப் பிடிக்காதுன்னா எனக்கும் நாய் பிடிக்காது… அவங்களுக்கு என்ன பிடிக்குமோ அது வளர்த்துக்கலாம்…”

    “ம்ம்.. பிரச்சனை என்னன்னா அவளுக்கு எதுவுமே பிடிக்காது.”

    “ஹான்?”

    “நாய், பூனை, யானை, ஆடு, மாடு, பாம்பு, பல்லி, கரப்பான்பூச்சி, எறும்பு… சுருக்கமாச் சொல்லணும்ன்னா, மனுஷங்களைத் தவிர எந்த உயிரினத்தையும் பிடிக்காது. சிலது மேல அதிகமான பயம்… சிலத கண்டாலே கடுப்பாகி அதைக் கொல்லாம விடுறவரைக்கும் வீட்ல இருக்கறவங்களைக் கொன்னு எடுத்துருவா.. அவளால நான் பலக் கரப்பான்பூச்சிகளைக் கொன்ன பாவத்துக்கு ஆளாகியிருக்கேன். நீங்களும் அந்தப் பாவத்துக்கு ஆளாக வேணாம்ன்னு பார்க்குறேன்.” அபிதன் சொன்னதைக் கேட்டுச் சிரித்தவன், “க்யூட்…” என்றான்.

    “நானா?”

    “சீச்சி…”

    “ஹலோ?”

    சிரித்தவன், “என் பேர் சுந்தர்… உங்க பேரு?” என்றான்.

    “அபிதன்…”

    “வாவ்…உங்கக்கா பேரு?”

    அவனை மேலும் கீழும் ஒரு பார்வை பார்த்தவன், “பத்ரகாளி…” என்று புன்னகைத்தான்.

    “எக்ஸ்க்யூஸ் மி?”

    “நிஜமாவே பத்ரகாளிதான், வனபத்ரகாளி…சர்ட்டிபிகேட்ஸ்க்கு வனபத்ரா.”

    “வனபத்ரா” என்று ஒருமுறை சொல்லிப்பார்த்தவன், “பேரும் அழகா இருக்கு…” என்றான்.

    “ஏங்க… அவளே அவ வாயால சொன்னாதானே? கேட்கலயா? அழகா இருக்கறதைப் பார்த்துப் பயப்படணும்ன்னு… போய் வேற வேலையைப் பாருங்க…சுத்தமா செட்டாகாது.” என்றவன் சற்றுத் தள்ளி விழுந்துகிடந்த கூடையை எடுத்துக்கொண்டு நடக்கத்தொடங்கினான், தன்னை அவன் பின்தொடர்வதைக் கண்டும் காணாமல். வீட்டில் வனபத்ரா பத்ரகாளியாகவே காத்துக் கொண்டிருப்பாள் என்று தெரியும். ஏற்கனவே தன்மேல் கடுப்பில் இருந்தவள்.

    ஆறுவயதில் தனியாகச் சாலையில் நடந்துவந்து கொண்டிருந்த வனபத்ராவை சில தெருநாய்கள் கூட்டமாகச் சேர்ந்து கடிக்கப்பார்க்க அன்று அஞ்சத்தொடங்கியவள்தான். நாய்க்கு மட்டும் பயந்தால் பிரச்சினை இல்லை. நாயில் தொடங்கி, உயிரிருக்கின்ற எந்த ஒன்றிற்கும் அதற்கு மனிதன் என்றோ, மரம் என்றோ பெயரில்லாமல் இருந்தால் எல்லாவற்றுக்கும் பயந்து தொலைத்தாள்.

    அதற்குத் தன் பெற்றோரும் காரணம் என்பது அபிதனின் எண்ணம். அப்போதே அதற்குத் தகுந்த உளவியல் சிகிச்சை அளித்திருக்க வேண்டும். ஆனால், போதிய விழிப்புணர்வின்றி, உளவியல் மருத்துவர் என்றாலே சங்கிலியில் கட்டிப்போட்டு மருத்துவம் பார்ப்பவர் என்கிற காலகட்டமாக அது இருந்து தொலைத்திருக்க, பெற்றோர் அதைக் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தனர். படித்துப் பட்டம் பெற்றுப் பதவியில் இருந்தாலும் சில அறியாமைகள் யாராயிருந்தாலும் அண்டாமல் விடாதுதானே?

    அந்த அறியாமையோடு, ஒருவேளை சரியான நேரத்தில் அருகிலிருந்தவர்கள் காப்பாற்றியிருக்காவிட்டால் மகளது நிலை என்கிற அவர்களுடைய அச்ச உணர்வும், மகளைத் தனியாக விட்ட குற்றவுணர்வும் இணைந்து அவளைத் தாங்க, இந்தப் பயம் அவளிடம் வேரூன்றி வளர்ந்துசெழித்திருந்தது.

    கொஞ்சம் விவரம் தெரியதெரிய அபிதனுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. இன்னும் கொடுமையாக வனபத்ரா பயமுறுத்தி வைத்ததில் குழந்தைப்பருவத்தில் அவனுமே அவற்றுக்கெல்லாம் பயந்திருக்கிறான். ஆனால் பள்ளியென வெளியே செல்லச் செல்ல, தனக்கிருப்பது தேவையற்ற பயம் எனப் புரிந்தவன், அக்காவையும் வெளிக்கொணர முயன்றான். ஆனால், அவள் அசையவில்லை.

    மற்ற விஷயங்களில் மக்களுக்கிடையில் நடுநிலையில் நிற்கும் பெற்றோரும் இந்த விஷயத்தில் மட்டும் அவள் புறமே சாய அது கோபத்தைத் தந்தது. வேண்டுமென்றே வருடங்களுக்கு முன், அவனுடைய பதினொரு வயதில் ஒரு நாய்க்குட்டியை வளர்க்கிறேன் பேர்வழி என்று வீட்டிற்குத் தூக்கிவந்தான். அன்று ஆடினாளே ஒரு ஆட்டம், அக்கா என்றாலே அன்பையும் செல்ல வம்பையும் தாண்டி நினையாதிருந்தவன் அவளைப் பார்த்துப் பயந்தே போனான்.

    அதைவிட, தாயிடமிருந்து தனித்துப் பாவமாகச் சுற்றிக் கொண்டிருந்த நாய்க்குட்டியைப் பரிதாபப்பட்டுத்தான் எடுத்துவந்திருந்தான், அதை மீண்டும் வெளியேற்றிய பிறகும் கூட அவள் அவனிடம் ஒரு மாதம் பேசவில்லை. அவன் கெஞ்சோகெஞ்சென்று கெஞ்சி அவன் எந்த நண்பர்களோடு பேசி இப்படி செல்லப்பிராணிகளிடம் மீது ப்ரியம் கொள்ளத் தொடங்கினானோ அந்த நண்பர்களோடு எல்லாம் நட்பைத் துண்டித்தபிறகுதான் அவனோடு பேசவே செய்தாள்.

    அப்போதும் கூட வழக்கமாக அவனிடம் அடித்துவிளையாடுவது, பிடுங்கித் தின்பது என்பவற்றையெல்லாம் செய்யாமல் சரியான சொற்களில் சொன்னால் அவனிடம் கொஞ்சகாலம் தீண்டாமை பாவித்தபிறகுதான் இயல்புக்கு வந்தாள். அபிதனுக்கு இந்த நிகழ்வால் அக்காவின் மேலிருந்த அன்பு குறையவில்லை என்றாலும் அந்த அன்பில் ஒரு அதிர்ச்சி கலந்திருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.அவனுக்குப் பழகப் பிடித்திருந்த நட்புகளைத் துண்டிக்க வேண்டும் என்பது நியாயமான கோரிக்கையில்லையே. அவன் முயன்றாலும் பள்ளியில் யாரிடமும் பேசாமல் தான் மட்டும் தனித்திருப்பது போல ஒரு உணர்வு உண்டாகியிருந்தது.

    அதோடு, இவன் எதற்காக இப்படி இருக்கிறான் என்று தெரியாமல் அந்த நண்பர்களும் வந்து பேச அவனால் அப்படி மொத்தமாகத் தவிர்க்க இயலவில்லை. ஆனால், அப்படி பேசினால் எங்கே அக்கா பேசாமல் போய்விடுவாளோ என்று பயமாக இருந்தது. அவனுக்கு இருந்த அத்தனை நண்பர்களையும் ஒருபக்கம் வைத்தாலும் அன்பு என்னும் தராசில் அவன் மனம் அக்காவின்புறம்தான் தாழ்ந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தவன், அக்காவிடம் இருந்து சில விஷயங்களை மறைக்கத் தொடங்கினான்.

    கொஞ்சகாலம் கழித்துப் பதின்வயதில், இப்படி அக்கா ஊரில் இருக்கின்ற எல்லா ஜீவராசிகளுக்கும் பயப்பட, தான் அவளுக்குப் பயப்பட என்பது கடுப்பாக அவளிடம் மல்லுக்கு நிற்கத் தொடங்கினான். எந்த உயிரினத்தையும் உயிரோடு வீடுவரை கொண்டு வருவதில்லை. ஆனால், அவள் கண்பட எதையாவது கையிலெடுத்துக் கொஞ்சுவான். செல்லப்பிராணிகள் வைத்திருக்கும் நண்பர்களின் வீட்டிற்குச் சென்று வந்ததைக் கதைகதையாகப் பெற்றோரிடம் இவள் காதுபடச் சொல்லுவான்.

    ஒரு அளவிற்கு மேல், மகனது மனதையும் பார்த்த பெற்றோர் அவனுக்குத் தடைபோடவில்லை. ஆனால், அந்தப் பொழுதுகளில் வனபத்ரா அவனிடம் பாவிக்கின்ற தீண்டாமையைத் தொடர்வதையும் அவர்களால் தடுக்க இயலவில்லை. கண்டித்தார்கள்தான். ஆனால், அவளுமே அதை வேண்டுமென்று செய்யவில்லை. தவிர்க்க முனைகிறாள், ஆனால் அது அவளால் இயலவில்லை என்பதைக் கண்டபிறகு விட்டுவிட்டார்கள்.

    அபிதனுக்குக் கோபம்கோபமாக வரும். அவனுடைய தோழிகள் கூறிக் கேள்விபட்டிருக்கிறான், மாதாந்திரப்பிரச்சனை நேரங்களில் அவர்களுடைய வீட்டில் எல்லாம் இரவு பன்னிரெண்டு மணியானாலும் குளிக்க வேண்டும், தனித்தட்டு, தனிபாத்திரங்கள் என்று புழங்க வேண்டும் என்று செய்வார்கள் என. அப்படியெல்லாம் அந்த நேரங்களில்கூட அவன் அக்கா தங்கள் வீட்டில் இருந்து அவன் பார்த்ததில்லை. அப்படி இருக்கவும் அவன் சொல்லவில்லை. ஆனால், அவனையும் அப்படி நடத்தக் கூடாதுதானே? மகள் அதிகமாகச் செய்கிறாள் என்று கண்ட பெற்றோரே நீ வேண்டுமானால் அப்படியிருந்து தொலை அவனை விடு எனவும் அவள் தனித்தட்டு என்று ஒதுங்கிக் கொள்வாள். ஆனால், அவன் அந்த விலங்குகளைத் தொட்டதைப் பார்த்திருந்தால் குளிக்காமல் அவனை வீட்டிற்குள் விடமாட்டாள்.

    அவள் அழிச்சாட்டியம் அதிகமாக அதிகமாக, அபிதனின் மறுப்பும் அதிகரித்தது. அப்படிதான், பள்ளிப்படிப்பு முடிந்தவன் அக்காவை வெறுப்பேற்ற என்றே வைல்ட் லைப் பயாலஜி எடுப்பேன் என்று நின்றான். அதிலும் நீலகிரிக்குச் சென்று படிப்பேன் என்றான். அதுவும் விடுதியில் தங்கிப் படிக்காமல் வீடெடுத்துத் தங்கிப் படித்து, அந்த வீட்டில் ஏதாவது உயிரினத்தை வளர்ப்பேன் என்றான். வனபத்ரா வழக்கம்போல அவதாரம் எடுக்க, அதிசயமாக இந்தமுறை பெற்றோர் அவளைக் கண்டுகொள்ளவே இல்லை.

    “அவன் வாழ்க்க, அவன் படிப்பு பத்ரா…” என்று கடினமாக முடித்துவிட, கொஞ்சநாள் முகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டு திரிந்தாள். அதன்பின், தவணை முறையில் கடைபிடித்து வந்துகொண்டிருந்த தீண்டாமையை முழுநேரமாகக் கடைபிடிக்கத் தொடங்கினாள். அதிலும் இவன்தான் தள்ளியிருக்க, இவன் பயன்படுத்துவதற்கெனச் சொந்த வீட்டிலேயே தனித்தட்டு, தனிப்பாத்திரங்கள் என ஒதுக்கிவைத்திருக்க கல்லூரி முதலாமாண்டு முதல்பருவ விடுமுறையில் பொறுத்தவன், இரண்டாம் பருவ கோடை விடுமுறையில் பொங்கிவிட்டான். அவன் பொங்கலுக்கெல்லாம் அசைந்துகொடுப்பவள் எப்படி வனபத்ராவாக இருக்க முடியும்? அவள் அசராமல்தான் இருந்தாள். அதில் இன்னும் கடுப்பானது.

    வழக்கமாக இந்தப் பால் வாங்கிவரும் வேலையை அவர்களது தந்தை பார்ப்பார். ஒரு வேலை விஷயமாக அவர் வெளியூர் சென்றிருக்க, அன்னை அவனைப் போய்வரச் சொன்னார். அக்காவிடம் கடுப்பில் இருந்தவன், தான் போகமுடியாது, அவளைப் போகச் சொல்லுங்கள் என்று அடம்பிடித்தான். வீராவேசமாக வண்டியை எடுத்தவளை நடந்துபோக வேண்டும் என அவன் தூண்டிவிட, இப்போதெல்லாம் அந்த நேரத்தில் அவர்கள் பகுதியில் நாய்கள் இருப்பதில்லை என்ற தந்தையை நம்பி, அலைபேசியில் அவரிடம் மீண்டும் ஒருமுறை உறுதியும் படுத்திக் கொண்டுதான் வந்திருந்தாள். அதில் இப்படி வினையாகும் என்று தெரியாமல் நாய் துரத்தக் கடவதாக என ஆசிர்வதித்து அனுப்பியிருந்தான். இருந்தாலும் என்றுதான் பின்னால் வந்தது. இப்போது வீட்டில் என்ன காத்திருக்கிறதோ?

    அவன் பயந்தபடியே வீட்டில் அழுகையும் கண்ணீருமாக அவன் தமக்கை அமர்ந்திருந்தாள். கடுப்பாகி அவன் தாய் தாளித்துக் கொட்டிக் கொண்டிருந்தார். அவனை மட்டுமல்ல, அவளையும்தான், அவர்கள் இருவரையும் கடுகும் உளுந்துமாக சம அளவில் எடுத்துத் தாளித்தார் என்றால், அவர்களுடைய தந்தையை அவ்வபோது கருவேப்பிலை போல உருவிப்போட்டுக் கொண்டிருந்தார். அவர்கள் மூவரையும் மூன்றுமுறை முடித்து, அவன் அப்பத்தாவிற்கு அவர் சென்றபோது இன்றைக்குள் இது முடியாது எனத் தெளிந்தவனாக வீட்டுக்குள் சென்றான்.

    “ஒழுங்கா நீயே போயிட்டு வந்துருக்க வேண்டியதுதான? இப்ப பாரு… என்னாச்சுன்னு…” அஞ்சனா அவனைக் கண்டிக்கத் தொடங்க, அவன் “என்னாச்சு?” என்றான்.

    “டேய்…”

    “என்ன டேய்.. ஒரு குட்டி நாய்… அதுக்குப் பயந்து ரோடு முழுக்க ஓடுனதும் இல்லாம வாங்குன பால் பாக்கெட்ட வீசியெறிஞ்சுட்டு வந்துருக்கு… இதுல எவனோ ஒருத்தன் அந்தக் கருமத்தைக் க்யூட்டுன்னு நினைச்சு, மச்சான்னு கூப்பிடவா ன்னு ஏன்ட்டயே கேட்குறான்…”

    “என்னடா சொல்ற? யார் பத்ரா அது?” அன்னை கேட்க, வனபத்ரா திருதிருவென விழித்தாள். அவளுக்கு அப்படி ஒரு கதாபாத்திரமே மனதில் பதியவில்லை என்பதைப் புரிந்துகொண்டவனாக, அபிதன் அன்னையைப் பார்த்தான்.

    “யாருன்னு அதுக்கு எப்படி தெரியும்? எவனோ ரோட்டுல நின்னவன், இன்ஸ்பெக்டர் பொண்ணுன்னு தெரிஞ்சா அப்படியே போயிருவான், அதை விடுங்க… ஆனா, இந்தப் பயத்தைப் போக்கலன்னா ரொம்ப கஷ்டம் ம்மா…இப்ப கூட விடுங்க… நாளைப் பின்ன, கல்யாணத்துக்கு அப்பறமும் இப்படி நாயப் பார்த்தா பயம், மாட்டைப் பார்த்தா பயம், பூனையைப் பார்த்தா பயம்,பூச்சியப்பார்த்தா பயம்ன்னு போயிட்டு இருந்தான்னு வர்றவன் இவளைப் பார்த்துப் பயந்து ஓடிருவான்…”

    “ஏன்டா இப்படிலாம் பேசுற?”

    “பின்ன என்னம்மா?”

    “என்ன என்னம்மா… சரி… பேச்ச விடுங்க… நான் ஸ்டேஷன்க்குப் போகணும்… பத்ரா, தம்பிக்கு மதியத்துக்கு ஏதாவது செஞ்சுக் கொடுத்துரு…அபி, நீயும் அக்காகிட்ட வம்பிழுக்காம அக்கா சொல்ற வேலையைச் செய்…”

    “ம்மா… டீ…”

    “நீங்க போட்டுக் குடிங்க…நான் அப்பறம் பார்த்துக்கிறேன்…” என்றபடி அவர் கிளம்பிச் செல்ல, மெதுவாகத் திரும்பியவன், அவனை முறைத்துக் கொண்டிருந்த வனபத்ராவைப் பார்த்தான்.

    “அக்கா நான் உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்.. நீயே யோசிச்சுப் பாரு… மனுஷன்னு இருந்தா கண்டிப்பா ஏதாவது ஒரு உயிரினத்தைக் கண்டிப்பாப் பிடிக்கும்… சரி.. வளர்க்கலன்னா கூட விடு… அது பக்கத்துலயே போகக்கூடாதுன்னு டார்ச்சர் பண்ணா, எவன் வருவான் சொல்லு…”

    “அதெல்லாம் வருவான்… கண்டிப்பா என்ன மாதிரியே ஏதாவது ஒரு கேஸ் இருக்கும் எதையுமே பிடிக்காம… அதை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்… நீ சும்மா இரு…”

    “நெனப்…” என்றவனை முடிக்க விடாமல் அருகில் கிடந்த தலையணையை எடுத்து அவன் முதுகில் சாற்றத் தொடங்கியிருந்தாள் வனபத்ரா. அவனை அடிப்பதற்குக் கூடத் தனித்தலையணையை எடுத்துவைத்து அவள் அடிப்பதில்தான் அபிதன் கடுப்பாகியிருந்தான் என்றாலும் இப்போது ஏற்றுக் கொண்டான். அவனுக்குமே அக்காவின் பயத்தின் தீவிரம் தெரிந்ததுதானே?

    தம்பியிடம் அன்றைய சண்டைக்கு சமாதானமானபின் அன்னை சொன்னது போல உணவு தயாரித்து வைத்துவிட்டுத் தன் வேலையைப் பார்க்கவெனக் கணினியைத் திறந்தவளுக்குத் தம்பி சொன்னது மனதில் ஓடியது. அதைப் பொருட்படுத்தாமல் இருக்க முயன்றபடி, தன் மடிக்கணினியில் பென்-டேப்லட்டைப் பொருத்தியவள், வரைவதற்கான செயலியைத் திறந்தாள். லேசாக இரண்டு கோடுகள் இழுத்தவளுக்கு, வேலையில் மனம் செல்லாமல் இருக்க, அவளை அறியாமல், வேறொரு உருவத்தை வரையத் தொடங்கியிருந்தாள்.

    சிறிது நேரம் கழித்து தான் கோட்டோவியமாக வரைந்திருந்த அந்த முகத்தைப் பார்த்து அவள் புன்னகைக்கத் தொடங்க, அவளது அலைபேசி அதிர்ந்தது. அவள் பதியாமல் வைத்திருந்த எண்ணில் இருந்து கதவைத் தட்டுவது போன்ற ஸ்டிக்கர் வந்திருக்க, அவள் முகத்தில் இருந்த புன்னகை இன்னும் விரிந்தது. “எவன் வருவான் சொல்லுங்க?” என்ற தம்பியின் கேள்விக்கு “ஏன் வராம?” என்று முணுமுணுத்தன வனபத்ராவின் உதடுகள்.

    (வருவான்)

  • அறிவிப்பு – புதுக்கதை

    வணக்கம். எனக்காக வந்தவனே! என்னும் தலைப்பில் புது புதினம் ஒன்றை இத்தளத்தில் வெளியிடப் போகிறேன். விருப்பம் உள்ளவர்கள் படித்துக் கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி. இந்தக் கதை முடிந்து ஒரு வாரத்தில் நீக்கப்படும். நீக்கிய பின், சுடுகாட்டில் தென்றல் வீசினாலின் பாகம் இரண்டு விழிதாண்டும் வழிகள் கதை இங்கு பதிவேற்றப்படும். தங்கள் ஆதரவை விரும்பி, அன்புடன்.

  • 10. ஒரு மழைப்பொழுதினில்

    அவளிடம் தலையாட்டிவிட்டு வந்துவிட்டேன். ஆனால் அவளைப் பார்க்காமல் இருப்பது எப்படி என்று எனக்கு தெரியவில்லை. உலகிலேயே மிகவும் கொடூரமான வன்முறை எதுவென்று தெரியுமா? இதுவரை படித்ததும் கேட்டதும் இல்லை. முதலாம் இரண்டாம் உலகப் போர்களும் இல்லை. ஹிட்லர் கொத்து கொத்தாய் கொன்று குவித்த மனிதர்களும் அல்ல. அவளின் கருவிழிகள் என் மீது நிகழ்த்தும் வன்முறையே உலகின் கொடூரமான வன்முறை பட்டியலில் முதலிடம் வகிக்கும்.அடுத்த சந்திப்பு எப்போது என்று ஏங்கிக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு நாளும் முடியவும் இல்லை. தொடங்கவும் இல்லை. நேரமே இல்லாத பிரபஞ்ச கோடியில் அவளுக்காக காத்திருப்பதாக தோன்றியது‌. அவன் வீட்டுக் கதவுகள் திறந்தே இருந்தது, எப்போதாவது திறக்கும் அவள் வீட்டின் கதவுகளுக்காக. இனி இந்த அவஸ்தைகளை தாங்கவே முடியாது என்று முடிவெடுத்தான். மனக்கதவுகளை உடைத்து உள்நுழைந்துவிட்டதாக நினைத்திருந்தான். ஆனால் உள்ளே ஒரு கதவு வைத்திருக்கிறாள் அவள்.அன்று அவர்கள் வழக்கமாக சந்திக்கும் இடத்தில் காத்திருந்தான். அவளை எப்படியாவது சந்தித்துவிடுவது என்றும் முடிவு செய்திருந்தான்‌. அன்று நிலா வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பியவள், பல சிந்தனையுடன் அந்த வழியைக் கடந்து சென்றாள். அங்கு அவளுக்காக காத்திருந்த என்னை சட்டை செய்யாமலே அவள் செல்ல, எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. வெடுக்கென்று அவளின் கை பிடித்து இழுத்துச் சென்றேன்.அதிர்ச்சியில் அவள் கால்கள் தடுமாற, அவசரமாக அவளை எங்கள் ஆஸ்தான இடத்திற்கு இழுத்துச் சென்றேன். அவளுக்கு நான்தான் என்று நிச்சயமாக தெரிந்திருக்கும். ஆனால் என்னிடம் இப்படி ஒரு அதிரடியான செயலை அவள் எதிர்பார்த்திருக்க மாட்டாள். அதனால் தவிப்பு அடங்காமலே என்னை கோபமாக பார்த்தாள். நான் எதுவும் பேசாமல் அவளையே பார்த்திருந்தேன். அவள் எதுவும் பேசாமல் திரும்பி நடக்க தொடங்கினாள். எனக்கு கோபம் வந்துவிட்டது. அவளின் முன்னே சென்று வழியை மரித்து நின்றேன்.”என்ன வேணும் உங்களுக்கு?” என்றாள் கோபம் குறையாமல். நான் எதையெல்லாம் வேண்டுகிறேன் என்று சொன்னால் கொடுத்துவிடுவாளா என்ன? “உன்னோட பேசணும்” என்றேன் பொறுமையை இழுத்துப் பிடித்து.”எனக்கு இப்போ பேச விருப்பமில்லை” என்று மீண்டும் நகர்ந்தாள் அவள். அவளை வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தினேன். அவளின் கைகள் இரண்டும் என்னிடம் சிறைபட்டிருக்க, அவள் கொஞ்சம் தடுமாறினாள். ஒற்றைக் கையில் அவளின் கைகளை சிறையெடுத்து, அவளின் முன்னே சென்று நின்றேன். நெருக்கமாக. மிகவும் நெருக்கமாக. நெருக்கம் தாளாமல் அவள் விலக முயற்சிக்க, எனக்கு இன்னும் அனுகூலமாய் முடிந்தது. தடுமாறி வழுந்தவளை தாங்கி நிற்கும் தருணம் நானுமே தடுமாறிவிட்டேன்‌. ஒரே ஒரு நொடிதான் அவள் விழிகளை சந்தித்தேன். வாழ்வில் வசமிழந்த பொழுதனைத்தும் என் வசமான உணர்வு. பின் கணைகள் கோடி செலுத்தி, மீண்டும் வரைமுறையற்ற வன்முறைகள் பல நிகழ்த்திவிட்டாள்.நான் வசமிழக்க, என் வசமிருந்தவள், சுதாரித்துவிட்டாள். இன்னும் சில நொடிகள் கிடைத்திருந்தால் போதும்… கொடையுள்ளம் கொண்ட கர்ணனாக கனவுகளில் அள்ளி வழங்கிய முத்தங்களில், கொஞ்சம் கிள்ளியேனும் கொடுத்திருப்பேன். ஆனால் அவளோ ஆசையை துறந்த புத்தனை போல் இருக்க வேண்டும் என்கிறாள். அவள் ஆசைப்படியே அனைத்தையும் துறந்து விடலாம். புத்தனுக்கு போதிமரம். எனக்கு அவள். அவ்வளவு தான் வித்தியாசம். “இன்னொரு தடவை என்கிட்ட இது மாதிரி நடந்துக்காதீங்க. யூ ஆர் க்ராஸிங் யுவர் லிமிட்” என்றாள் அவள் கோபமாக.”எதுவுமே நான் பிளான் பண்ணி பண்ணல. உன் கூட பேசணும்.””உங்க வேலைக்கு ஒரு மரியாதை இருக்கு. அதை மனசுல வச்சுக்கிட்டு நடந்துக்கோங்க. இந்த ஆம்பிளைங்களே இப்படித்தான் போல” என்று அவள் சிறு எரிச்சலுடன் கூற, ‘அப்படி என்ன தரக்குறைவான காரியம் செய்துவிட்டோம் என்று எனக்கும் ஆதங்கம். “என்னைப்பத்தி பேசணும்னா என்னை மட்டும் பேசு. இப்பிடி பொத்தாம் பொதுவா பேச வேண்டாம்” என்று கூறி, இரண்டு அடிகள் நகர்ந்து நின்றேன்.மீண்டும் அவளின் அருகில் எதிர்பாராத விதமாக வந்து, என் கைகளை அவள் கழுத்தின் அருகில் கொண்டு சென்றேன். “இப்படியே உன் குரல்வளையை நெரிச்சு கொல்லணும் போல இருக்கு. நான் நானாவே இல்லை. உன்னை காதலிக்க ஆரம்பிச்சதிலிருந்து, என்னால எதையும் செய்ய முடியல. என்னோட நினைவுகளிலும் கனவுகளிலும், நீ இப்படி பத்தடி தள்ளியெல்லாம் இல்லை. அதனால உன்னை நேரில் பார்க்கும்போது இப்படி தொடாமல் தள்ளியிருப்பது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று நான் கூற, அவள் ஓரடி பின்னே நகர்ந்தாள். மருண்டு விழித்தாள். அவளை எதுவும் செய்ய முடியாமல் அங்கிருந்த கல்லில் எட்டி உதைத்தேன். தேயிலை தோட்டத்தின் சரிவுகளில் அது உருண்டு சென்றது. என்னின் கோபங்கள் அவளுக்கு புதிது. அவர்களின் சில சந்திப்புகளில் எல்லாம் வெறும் தவிப்பை மட்டுமே பார்த்திருக்கிறாள் அவள். நான் இப்படி அனைத்திற்கும் பொறுத்துப் போகும் ஆள் இல்லை. அவள் சொல்வதற்கெல்லாம் மண்டையை ஆட்டுகிறேன். அவள் முன். அவள் என் கண்களிலிருந்து மறைந்ததும், அவளெடுத்த பாடமெல்லாம் மறந்துவிடுகிறது. என்னுள் அவளை தொலைக்கப் போகும் உறுத்தல். “நீ உண்மையாவே என்னைக் காதலிக்கிறியா? எனக்கு உன்னை.. உன்னோட தினமும் கனவுகளில்” என்று முடிக்காமல் திணறினேன்.ஏனெனில் தள்ளியிருப்பது சிரமமாய் இருக்கிறது என்று கூறியதிலிருந்து, அவள் உடல் மொழியில் பெருத்த மாற்றம். கொஞ்சம் அவளையே அவளுக்குள் புதைப்பதுபோல் குறுக்கிக்கொண்டாள். துப்பட்டாவை போர்த்திக் கொண்டாள். குறிஞ்சி நில ஊதைக் காற்றின் ஊடுருவல் ஒரு காரணமாய் இருந்தாலும், என்னுடைய இந்த அவதாரம் மற்றொரு காரணம்.”மூச்சுக்கு முன்னூறு முத்தம் பிரமாறிக்கிறோம். எப்போதும் என்னோட ஒட்டிக்கிட்டே இருக்க. இப்படி இழுத்துப் போத்திக்கிட்டெல்லாம் நீ இல்லை” என்று கூறி, அவளின் துப்பட்டாவை மெதுவாகவே பறித்துக் கொண்டேன்‌.அவளிடம் கொஞ்சம் கடுமையாக நடந்துவிட்டேனோ என்ற தவிப்பு என்னுள். சொல்ல வந்த விஷயத்தை நிச்சயமாக சரியாக சொல்லவில்லை. நேரில் பார்க்கும்போது என்னால் தள்ளியிருக்க முடியாது என்று நான் கூறிய ஒற்றை வரியில் அவளின் புரிதல் என்னவென்று என்னால் நன்றாக உணர்ந்து கொள்ள முடிந்தது. துப்பட்டா என் கைகளுக்கு வந்தபின் அவளின் தவிப்பு இன்னும் அதிகமானது. என் மேல் இவ்வளவுதான் நம்பிக்கையா என்று கேட்க தோன்றியது.ஆனால் இது நம்பிக்கை சம்மந்தப்பட்ட விஷயமல்ல என்று அவள் கூறுகிறாள். அவளிடம் பொறுமையாக அமர்ந்து பேச வேண்டும் போல் தோன்றியது. அங்கிருந்த திட்டில் அவள் அமர்ந்திருந்தாள். நிலத்தை வெறித்தபடி அமர்ந்திருப்பதுபோல் தோன்றியது. அருகில் சென்று அமர்ந்தேன். அவள் நிலத்தை வெறித்தபடி அமர்ந்திருப்பதுபோல் இருந்தாலும் உண்மை அதுவல்ல. அவள் விழிகளில் நீர் கோர்த்து நின்றது. அதை மறைப்பதற்கே தலை தாழ்த்தி அமர்ந்திருக்கிறாள்.  சில நிமிடங்களுக்கு தள்ளி நின்று அவளைப் பார்க்கும்போது தோன்றிய எண்ணங்கள், அவள் அருகில் வந்ததும் பொய்த்துப் போனது. நம் பார்வை அனைத்து நேரங்களிலும் உண்மையென்று கூறிவிட முடியாதே. என்னோடு ஒன்றமுடியாமல் அவளுக்குள் வேறு புழுக்கங்கள் இருக்கிறதோ என்று தோன்றியது. அவளின் வலகரத்தை எடுத்து எனது இரு கரங்களுக்குள் புதைத்துக் கொண்டேன். அதில் ஆறுதல் கண்டாளோ என்னவோ? எனக்கு தெரியாது. ஆனால் அதுவரை விழிகளை குளமாய் நிரப்பியிருந்த கண்ணீர் திவளைகள் நிலம் தழுவியது. நிலம் தழுவும் முன் சில துளிகள் அவன் கைகளையும் தழுவிச் சென்றது. மனம் அழன்று அழுகிறாள். என்னால் எதுவும் செய்யமுடியவில்லை. கட்டியணைத்து உனக்கு நானிருக்கிறேன் என்று கூறிட ஆசைதான். ஆனால் அவள் எண்ணங்கிளில் இருந்து கீழிறங்கிவிடுவேனோ என்று பயமாக இருந்தது. என் அணைப்பில் ஆறுதல் தேட அவள் மனம் விழைய வேண்டுமே. அவளைக் காதலிக்கிறேன். அவளிடம் கூறியும்விட்டேன்‌. இனி அவளை திருமணம் செய்யப் போகும் நாள் என்றோ என்பது மட்டும்தான் என் கவலை. அவளுக்கும் அது மட்டும்தான் என்று நினைத்திருந்தேன். வேறு என்ன கவலை இருக்க முடியும். அவள் சொன்னால்தானே தெரியும். என்னைக் காதலிப்பதாக ஒப்புக் கொண்டவள், அவளின் கவலைகளையும் துயரங்களையும் ஏன் என்னிடமிருந்து மறைக்க வேண்டும். முதல்முறையாக அவளுக்கு ஆறுதல் அளித்தேன். விஷயம் என்னவென்றே தெரியாமல். என் கைகளுக்குள் புதைந்திருந்த கையை அவள் எடுக்கவில்லை. நான் அழுத்தம் கொடுக்கவும், உருவ முயன்றாள். ஆனால் நான் விடுவிப்பதாய் இல்லை. அவள் மனம் அமைதியுறும்வரை என்னிடமே இருக்கட்டும் என்று இன்னும் பாதுகாப்பாய் புதைத்துக் கொண்டேன்‌. பெண்களுக்கு கட்டாயமான அணைப்புகள் தேவையோ இல்லையோ.. ஆனால் கட்டாயமான ஆறுதல் தேவை. தன்னைத் தொடுவதை அனுமதிக்காத பெண்ணுக்கு ஆண் மேல் நம்பிக்கை இல்லாமலில்லை. அவள் சமூகத்தை நம்பவில்லை. காதலிப்பவனின் தீண்டல் அவளுக்கு நிச்சயம் பிடிக்கும். அவள் மனம் தேடும். ஆனால் வெளியில் அதை காட்டிக் கொள்ளக்கூடாது. அவ்வளவுதான். மகிழ்ச்சியாக இருக்கும்போது காதலனின் தீண்டலை தடுப்பாள். விலகி நிற்பாள். காதலன் படும் அவஸ்த்தையை கண்டு மனதிற்குள் ரசிப்பாள். தொடுவதும் தடுப்பதும் காதலில் ஒரு விளையாட்டு. ஆனால் கவலையில் இருக்கும்போது கட்டாயமான ஆறுதல் தேடுவாள் அவனிடம். சில நிமிடங்கள் அமைதியாக கழிந்தது. இருவரின் மனமும் லேசானது. சில பட்டாம்பூச்சிகள் பறந்தது. அவர்களை சுற்றியும் சில வண்ணத்துப்பூச்சிகள் பறக்க, அவள் இதழ்கள் லேசாக விரிந்தது. அவனுக்கு அவளைப் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் ஒரு விஷயம் முதல் சந்திப்பிலேயே தெரியும். அதுதான் பட்டாம்பூச்சிகள் அவளுக்கு பிடிக்குமென்பது. கொஞ்சம் பட்டாம்பூச்சிகளின் மேல் பொறாமைதான் எனக்கு. அதை பார்த்தவுடன் விரியும் விழிகள் எனைக் காணும் பொழுதும் விரியலாம். “என்ன பிரச்சனை உனக்கு?” என்றேன்.”பயமா இருக்கு?””எதுக்கு?”எனக்கொன்றும் புரியவில்லை.”வீட்டில் சொல்லவே பயமா இருக்கு. நான் ரொம்பவே முயற்சி பண்ணிட்டேன். ஆனாலும் சொல்ல முடியல” என்றாள்.”சரி.. சொல்லிடலாம்.. அப்புறம்?””சொன்னாலும் ஏத்துக்குவாங்களான்னு தெரியாது..””எல்லாத்தையும் நீயே ஏன் குழப்பிக்கிற. காதலில் இதெல்லாம் சகஜம்தானே. என்னை காதலிக்கிறேன்னு ஒத்துக்கும்போது இந்த எதிர்ப்பு எல்லாம் வரும்னு நீ எதிர்பார்த்ததானே..”அவள் பதிலே சொல்லாமல் அமர்ந்திருந்தாள். “சரி இந்த பிரச்சனையை நான் பாத்துக்குறேன். நம்ம கல்யாணம் என்னோட பொறுப்பு. யாராலும் தடுக்க முடியாது.””என்னால அம்மா அப்பா இல்லாம இருக்க முடியாது. எனக்கு அவங்களும் வேணும்.””உங்க வீட்ல சம்மதம் வாங்கி உன்னை கல்யாணம் பண்ண வேண்டியது என்னோட பொறுப்பு. நீ நிம்மதியா இரு.” இன்னும் அவளுடைய கை என்னுடைய கரங்களுக்குள்தான் அடங்கி இருந்தது. மேலிருந்த கரத்தை எடுத்தவன், மற்றொரு கரங்களின் ஐவிரல்களையும் அவள் விரல்களுடன் கோர்த்துக் கொண்டேன். ஆறுதல் படலம் முடிந்துவிட்டது.  முயங்கிய கைகளில் முத்தம் வைத்து, நெஞ்சில் குமைந்து கொண்டிருந்த முனகல்களை தீர்த்துக் கொண்டேன். என் மீசையின் மயிற்கால்கள் அவள் நியூரான்களை நீட்டியிழுக்க, பட்டென்று கைகளை உருவினாள். ஆனால் என் பிடி அழுத்தமாக, கொஞ்சம் தருமாறிவிட்டாள். இறைஞ்சுதலாய் என்னைப் பார்க்க, நான் இன்னும் இழைய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். அவளை உரசிக் கொண்டு அமர்ந்தேன்.ஒரு விஷயம் புரிந்தது. தள்ளியிருந்து கெஞ்சும்வரைதான் அவளால் அதிகாரம் செய்ய முடிந்தது. என்னை ஆட்டுவிக்க முடிந்தது. என் அணுக்கம் அதிகரித்ததில் இருந்து அவளை நான் ஆட்டுவித்தேன். அவள் இதயம் அதிகமாய் துடிப்பதை நானும் உணர்ந்தேன்‌. என்னை அருகில் விடாமல் தவிக்க வைத்தாயே. இந்த நொடியிலிருந்து தவிப்பு உன்னிடம் இடம்பெயரட்டும். என் தீண்டலில் செத்துப்போ. மீண்டும் பிழைக்க வைக்கிறேன் என் முத்தங்களால்.”என்னோட கண்ணை பாரேன்.. கையை விடுறேன்” என்று காதல் நாடகத்தை நான் தொடர, அவள் தவிப்பு அதிகமானது. “சரி.. இன்னைக்கு இது போதும்..” என்று அவள் கைகளை விடுவிக்க, அவள் வேகமாக நகர்ந்து அமர்ந்து கொண்டாள். சத்தமாக சிரித்துக் கொண்டேன். “கிளம்பளாமா?” என்றாள் அவள். “இன்னும் பேசணும்” என்றதும், அவள் பதிலே சொல்லவில்லை.”என்ன பேசணும்னு கேட்க மாட்டியா?””என்ன பேசணும்” என்றாள் அடிக்குரலில். இன்னும் என்னவெல்லாம் செய்யப்போகிறோனோ என்ற தவிப்பு அப்பட்டமாக வெளிப்பட்டது அவள் குரலில். “உனக்கு என்ன பிரச்சினைனு கேட்டு அதுக்கு ஆறுதல் சொல்லி, வழியும் சொல்லிருக்கேன். எனக்கு என்ன பிரச்சனைனு கேட்கவே மாட்டியா?””உங்களுக்கு என்ன பிரச்சனை?” என்றாள் குழப்பமாக. “கொஞ்ச நாளா செத்துட்டு இருக்கேன்டி. என்னால இனிமே உன்னை பார்க்காம பேசாம இருக்க முடியாது” என்று நான் கூற, அவள் பதிலே கூறாமல் அமர்ந்திருந்தாள். அவனும் பதில் கூறாமல் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். “இப்படி என்னோட பிரச்சினைக்கு பதில் சொல்லாம இருந்தா, அப்புறம் அதை எனக்கு பிடிச்ச மாதிரி நானே சரி செய்ய வேண்டியிருக்கும்” என்று அவன் மிரட்டும் தொனியில் கூற, “ஐயோ.. இனிமே தனியா பாக்கலாம். பேசலாம்..” என்றாள் அவசரமாக.”சரி.. பேசு..” என்று நான் கூற, “இன்னைக்கு இது போதும் நாளைக்கு பேசலாம்..” என்றாள். “அப்போ நாளைக்கும் இதே இடத்தில் சந்திக்கலாம்னு சொல்ற..” என்று அடுத்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை நான் செய்ய, அவள் நாக்கைக் கடித்துக் கொண்டாள். “சரி வா கிளம்பலாம்” என்று நான் எழ, அவளும் எழுந்து கொண்டாள் அவசரமாக. இருவரும் தேயிலையின் தோட்டத்தின் மழைப்பாதைகளில் நடந்து வந்தனர். தட்டாரபூச்சிகள் வொயிங் என்ற சத்தத்துடன் அந்த இடத்தை சூழ்ந்தது. தூவானத்தின் தூற்றலில் குறிஞ்சி காட்டின் வனப்பு வகைதொகையில்லாமல் வடிவாகியிருந்தது.

  • அலப்பறை கல்யாணம்-15

      அத்தியாயம்-15

      ஆவேசமாய் மலரின் வீட்டிற்கு வந்து சேர, அங்கே தமிழரசன் கண்ட காட்சியில் உறைந்து போனான்.

      “ஏன்ப்பா.. என் உசுரை வாங்கற. சாகணும்னு நிதமும் துடிக்கற. இப்படி மெத்தையில் இருந்து விழுந்தா செத்து போக மாட்ட. என்ன தான் பிரச்சனை உனக்கு?

      தினம் தினம் என்ன தான் நினைப்ப. நானும் பத்து வருஷமா பார்த்துட்டு இருக்கேன். விவரம் தெரியறதுக்கு முன்னயிருந்து உன்னை நல்லா தானே பார்த்துக்கறேன்.” என்று கீழே விழுந்தவரை மெத்தையில் படுக்க வைத்துவிட்டு, அவர் யூரின் பெய்ததால் அங்கே அவ்விடத்தை கழுவி கொண்டிருந்தாள்.

    பெரும்பாலும் கழுவி விட்டதும் சந்தில் வீட்டிற்கு வெளியே செல்லும் விதமாக வீட்டில் ஒரு சிறு ஓட்டையில் கழுவி வெளியேற்றும் விதமாக அமைத்திருக்க, டெட்டால் போட்டு துடைத்து விட்டு நிமிர, அங்கே அரசன் நின்றிருப்பதை கண்டாள்.

      கூடவே ஒருவர் வந்திருப்பதை கண்டதும் பார்வை இருபக்கம் பார்த்து “இங்க எதுக்கு சார் வந்திங்க? யாராவது பார்த்தா என்ன…” என்றாள்.

      முகத்தில் வேண்டாவெறுப்பை காட்டி வார்த்தையை முடிக்கும் முன், “உங்கப்பா செந்திலா? ரொம்ப வருஷத்துக்கு முன்ன ஒரு கல்யாண வீட்ல வேலை பார்த்தாரானு கேட்கணும். அந்த கல்யாண மாப்பிள்ளை வீட்ல விசுவாசமா இருந்திருக்கார். அந்த கல்யாணம் விமர்சனமா நடக்கும் போது, கல்யாண பொண்ணு நைட்டோட நைட் ஓடிப்போயிருக்கா. பொண்ணு வீட்ல ஓடிப்போனதை மறைக்க, மாப்பிள்ளை பையனோட மொத்த குடும்பத்துக்கும் விஷம் கலந்திட சொல்லிருக்காங்க. அதை மாப்பிள்ளை வீட்ல விசுவாசமா இருந்த செந்தில் தான் செய்திருக்கார். அந்த செந்திலுக்கு நகை பணம் தருவதா நம்பிக்கை தந்து பொண்ணோட அப்பா பேஷா திட்டம் போட்டு தர செந்தில் காரியத்தை கச்சிதமா செய்திருக்கார்.
       பொண்ணு ஓடிப்போனது மெதுவா தெரிந்து கலங்கியிருந்தவங்க, அடுத்த செகண்ட் இறந்திருக்காங்க. தான் ஏன் இறந்தோம் எதுக்கு இறந்தோம் எப்படி இறந்தோம்னு கூட தெரியாம மாப்பிள்ளை வீட்ல இருக்கற ஆட்கள் தினம் தினம் அந்த வீட்ல நாலு டூ ஆறு வந்துட்டு போறாங்க.
      இத்தனையும் செய்த அந்த செந்திலாவது பணம் வசதினு வாழ்ந்தாரா இல்லை. பக்கவாதம் வந்து படுத்தபடுக்கையா இருக்கான். யாருக்காக அந்த பெரிய பாவத்தை செய்தானோ அந்த பொண்ணு அவ அப்பாவுக்கு படுத்த படுக்கையில் ஒரு  நர்ஸ் மாதிரி சேவை செய்யறா.

      பை திவே மிஸ்டர் செந்தில் உங்க பழைய முதலாளி. இறந்தது தெரியாம ஆன்மாவா பையன் கல்யாணத்தை பார்க்க விரும்பி தினம் தினம் சுத்திட்டு இருக்கார்.” என்று அறிமுகப்படுத்தும் விதமாக பேச, செந்தில் கண்ணுக்கும் உதித்நாராயணன் தெரியவும் கண்ணீர் வழிய கைகள் ஆட்டம் கண்டது. வணக்கம் வைத்து மன்னிப்பு கேட்க துடித்ததை மலர் அறிவாள்.
     
      ஆனால் இதை இப்பொழுது விளக்கும் பக்குவம் அவளுக்கு இல்லை.

      அரசனை முதல் முதலில் கல்யாண வரன் தேடி ஆப்பில் பதிவு செய்தவனை புகைப்படத்தில் கண்டாள்.

      ஒரு அனாதைக்கு தான் அதிகப்படி என்ற இறுமாப்பு இருந்தது. நேரில் அவனை கண்டதும் இவ்வளவு பெரிய வீட்டை வாங்கி அதில் செடி கொடியை நட்டு விளைவிப்பதை கண்டதும் கூடவே வேறு தொழிலையும் கவனிப்பதை கண்டு பெருமையாக கவனித்து மரியாதையாக நடந்தாள். நடுவில் அரைகால் டவுசரை அணிந்து பால் வாங்க வந்தவனை கண்டு நகைப்புக்குரியவனாக தான் நினைத்தாள்.

      உறவுகள் சொந்தங்கள் வேண்டுமென்று பேசியதும் அதிகப்படியான மதிப்பு உருவானது. கூடுதலாக மதிப்பு காதலாக அரும்பியது. இதில் பேயாக பலரை கண்டும் அஞ்சாமல், ‘வாங்களேன் பழகுவோம்’ என்று அசாரது அங்கேயே பயப்படாமல் தங்கியவனை கண்டு வியந்தாள்.

      என்ன தான் பேய் அச்சுருத்தவில்லை என்றாலும் பேய் என்றால் படையே அஞ்சும் அல்லவா. அப்படியிருக்க, இவனின் அன்பு பேயாக அலைபவருக்கு விடுதலை கொடுக்கும் விதமாக, இன்று ஆதியும் அந்தமும் கண்டறிந்துவிட்டான்.
    இதே மற்ற நேரமாக இருந்தால் சபாஷ் அரசு’ என்று பாராட்டியிருப்பாள். காதலில் மூழ்கியதால் கட்டிபிடித்தாலும் ஆச்சரியமில்லை‌. ஆனால் அனைத்திற்கும் காரணம் தன் தந்தை என்றதில் ஆடிப்போய் விட்டாள்.

      தந்தை நன்றாக திடகாத்திரமாக இருந்தவர், திடீரென பக்கவாதத்தில் விழுந்தவர் அதன் பின் பத்து வருடத்திற்கு மேலாக அவருக்கான தண்டனையாக படுக்கையிலேயே உணவு படுக்கையிலேயே மலம் மூத்திரம் பெய்து விடுவது, அதைவிட கொடூரம் தன் மகளே தன்னை பார்த்து கொள்கின்றாளே என்ற வருத்தம் செந்தில் முகத்தில் அவள் கண்டுள்ளாள்.

      இன்று தான் விடைக் கிடைத்தது. திடீரென பக்கவாதம் வந்ததன் காரணம். கொலை செய்தவர்கள் நேரில் வந்ததை பார்த்து பயந்து முடங்கியது முடக்குவாதம்.
     
        இதில் தவறுக்கான தண்டனை என்று எடுத்துக்கொள்வதா? அல்லது எந்த தவறுமே செய்யாத தனக்கும் சேர்த்து தண்டனை தந்து விட்டாரா என்று குற்றவுணர்வில் அரசனை கண்டாள்.‌

        உதித்நாராயணனை கண்டு, கையெடுத்து கும்பிட, “நாளைக்கு காலையில் அரசன் என்னை பிடிச்சி வச்சிக்கலைன்னா எனக்கு இன்று நடப்பது எதுவும் நினைவிருக்காதும்மா. என்ன செய்ய எங்க ஆன்மா எல்லாம் எங்க பையன் கல்யாணம் நடக்கலை என்ற ஒரே காரணத்துக்காக தான் அலைந்துட்டு இருக்கு.” என்றவர், தமிழ்மலர் மீது கையை வைத்து, “உன் பெயர் தமிழ்மலர்ல? சின்ன வயசுல பெயர் வச்சப்ப கண்ணுல தண்ணீரோட கையில் இருந்த குழந்தைம்மா நீ.

       நல்லாயிரு” என்று கூறிவிட்டு உதித்நாராயணன் மகனான அரசனை அழைத்து புறப்படலாம் என்றார்.

    “போகலாம் அப்பா” என்று தமிழரசன் தமிழ்மலரை காணாது சென்றான்.

      தமிழ்மலரின் நெஞ்சமோ அனலில் இட்ட புழுவாக துடித்தது.
     
       இந்த காதல் வராமல் இருந்தாலாவது வலி சற்று குறைவாக இருக்கும். இன்று காதலன் முன்னிலையில் அனைத்தும் தரைமட்டமானதில் வலுவிழந்த கொடியாக அப்படியே சரிந்தாள்.

       இரவு சோறாக்கவில்லை, தந்தைக்கு ஊட்டவேண்டுமென்று எழுந்தாள்.

      அவரோ சாப்பிட மறுத்து விட, தட்டிலேயே கையை கழிவி, “ஒரு குடும்பத்தையே கொல்லணும்னு எப்படிப்பா மனசு வந்துச்சு.” என்று கேட்க, காது மடல் வரை வந்த கண்ணீர் மட்டுமே அவரின் பதில்.
     
         இங்கு  தந்தையின் கைப்பற்றி தமிழரசன், “அப்பா… செய்த தப்புக்கு அவருக்கு தண்டனை என்னவோ குறைவு தான். ஆனா பெத்த பொண்ணு தினமும் சாப்பாடு ஊட்டி விட்டு மலத்தை அள்ளி குளிபாட்டி பாத்துக்கறப்ப அவர் தினம் தினம் இதுக்கு செத்திருக்கலாம்னு தான் துடிப்பார். பக்கவாதம் மட்டும் இல்லாம இருந்தா அவர் சூசைட் பண்ணிருக்க சான்ஸ் உண்டு.” என்று பேச, “கடைசியில் ஒரு குடும்பத்தையே அழிச்சும் அவனும் சந்தோஷமா வாழலை பாரேன் அரசு. இதுக்கு ஒரு வார்த்தை என்னிடம் ஐயா பொண்ணு வீட்ல நகை பணம் கொடுத்து, என்னை வச்சி விஷம் கலக்க சொன்னாங்கன்னு சொல்லிருந்தா அவனை அன்னைக்கு மன்னிச்சிருப்பேன். குடும்பமும் செத்திருக்காது, அவனும் விசுவாசியா வாழ்ந்திருப்பான். இப்ப பாரு யாருமே வாழலை. காலையில் நீ என்ன சொன்ன. அந்த ஓடிப்போன பொண்ணோட கார் ரயில் தண்டவாளத்தில் சிக்கி மூவ் ஆகாம ஸ்பாட் அவுட்னு சொன்ன. பொண்ணோட குடும்பத்துல இருந்தவங்களும் இந்த பத்து வருஷத்துல உடல்நிலை சரியில்லாம இறந்துப் போயிருக்காங்க. இவனுமே வாழலை.

       இந்த உலகத்தில் வாழவும் தெரியலை. யாரையும் வாழவும் விடமாட்டேங்கறாங்க இல்லையா அரசு. ” என்று வருத்தமாய் பேசினார்.

      “அதென்னவோ உண்மை தான் அப்பா… இப்ப இருக்கற உலகத்தில் வாழவும் தெரியலை, நல்லா வாழ தெரிந்தவங்களையும் வாழ விடமாட்டேங்கறாங்க.” என்றவன் கண்ணீர் லேசாய் துளிர்த்தது.

    அதிகாலை எழுந்த போது, பக்கத்தில் உதித்நாராயணன் இல்லை. ஹாலில் வந்து பார்க்க, ஆளாளுக்கு கல்யாண வீட்டில் சந்தோஷமாய் பேசி கிளம்ப, கல்யாண பொண்ணு ஓடிட்டா என்றதும், சோகமாகி பொத்தென்று விழ, ஆளாளுக்கு மறைந்தனர்.

      அதையெல்லாம் பார்த்த தமிழரசனுக்கு, சோர்வாய் மாறினான்.

      எப்பொழுதும் வரும் தமிழ்மலர் வரவில்லை. அவன் வாசலில் எதிர்பார்க்கவும் இவ்லை.
     
        மெதுவாக முகம் அலம்பி பல் விலக்கி, டீக்கடையை நோக்கி விரைந்தான்.
      
      “என்ன சார் இங்க டீ குடிக்க வந்துட்டிங்க. மலர் பால் ஊத்த வரலையா?” என்று கேட்டார் டீக்குடிக்க வந்தவரில் ஒருவர்..

       “எங்க சார் இப்ப எல்லாம் அடிக்கடி பால் ஊத்த வர்றதில்லை. மாடு கண்ணு போட்டதிலயிருந்து நடுவுல நடுவுல சாக்கு போக்கு சொல்லுது.” என்று டீக்கடைக்காரர் புகார் பட்டியலை வாசித்தார்.

      எனக்கும் அவளுக்கும் சம்பந்தமில்லை என்பது போல தமிழரசன் டீ குடித்து பணத்தை வைத்துவிட்டு வீடு திரும்பினான்.

       வீட்டுக்கு வந்து தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சி வளர்ந்திருந்த புற்களை அழகாக வெட்டி பாதையை சீர்ப்படுத்தினான்.

      அப்பொழுது சின்னதாக செருப்பு சப்தம். அது தமிழ்மலரின் காலடி செருப்பு சப்தம் என்று அறிந்துக்கொண்டான்.

      அவளை திரும்பி பார்க்க நினைத்தவனுக்கு, கண் முன் பெரிய வீடும் அதிலிருந்த மனிதர்களும் நினைவுக்கு வர, திரும்பவில்லை.

       உதடுகள் தந்தியடிக்க, கண்கள் குளமாக, பேருந்தில் ஏறி கண்ணீர்‌மடையை சத்தமின்றி உடைத்தாள்.
     
        இப்படியே பல நாட்கள் அமைந்தது. சொல்லப் போனால் இருபது நாட்கள் தாண்டியிருக்கும்.

      தமிழரசன் வீட்டில் தினமும் கல்யாண கோலம் காட்சியளிக்க, மற்றவர்களோடு தானும் அந்த நாடகத்தில் கலந்திட, பட்டுடையுடுத்தி வருவான். எப்படியும் பொண்ணு காணாமல் போனதாக உரைத்து அடுத்தடுத்து மற்ற உறவுகள் சரிந்து மாயமாகி விடுவதை பார்த்து விட்டு தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தான்.

    இதற்கு தீர்வு, என்ன? இந்த வீட்டில் ஒரு திருமணம் அதுவும் அவர்கள் பையனுக்கு நடைப்பெற்றால் மோட்சமடைவாரா?! என்று சிந்தித்தான்.

      தன் மனதில் இருப்பவள் தமிழ்மலர் என்றதும், அவள் இந்த குடும்பத்தில் எந்த தவறும் செய்யவில்லையே. தந்தை செய்த பாவம் அவர்களது பிள்ளையை சேரும் விதமாக அவள் காதல் வலியோடு கொலை பழியையும் நெஞ்சில் வைத்து அல்லாடுகின்றாள்.

       தன்னை பெற்றெடுத்தவர்கள் யாரோ? அவர்கள் செய்த பாவமா தான் அனாதை என்ற இடத்தில் இருக்கின்றோம்‌ அவரவர் தலைவிதி என்று புரிய, எதையும் யோசிக்காமல் அவளை தேடி சென்றான்.‌

    ஆனால் அங்கே கண்ணீரை துடைத்து, மாலைக்கு காசுன்னா, ப்ரீஸர் பெட்டி வேண்டாம். ஏற்கனவே ரொம்ப உடம்பு சரியில்லை. அதனால் எடுத்திடலாம் என்று எதிரே இருப்பவனிடம் பேச, செந்தில் இறந்து கிடப்பதை கவனித்து, மெதுவாக இறந்தவருக்கான மரியாதை செலுத்தும் விதமாக டீக்கடைக்காரர் அருகே தேமேயென நின்று கொண்டான்.‌

    -தொடரும்.

  • அலப்பறை கல்யாணம்-13

    அத்தியாயம்-13

       அதிகாலை பால் கறக்கும் போதே, நெத்து என்னயென்னவோ பேசினான். நானும் பேசினேன். இப்ப என்ன முடிவில் இருக்கானோ? இன்னிக்கு பார்த்து லேட்டா எழுந்து தொலைச்சிட்டேன். அங்க என்ன நடந்ததோ, என்று வேகவேகமாய் பாலை கறந்து அரசன் வீட்டிற்கு வர, கதவு திறந்திருந்தது.
     
       மலர் வரும் நேரம், ‘அடப்பாவிகளா… கண் முன்ன காணாம போகாதிங்கடா. ராத்திரி தூக்கம் வரமாட்டேங்குது.’ என்று நடுக்கமாய் வர, அரசனோ பட்டுயுடுத்திய பெண்மணியை, அணைத்து “அம்மா.. அம்மா.. என்னை விட்டு எங்கயும் போகாத” என்று உலர, “டேய் கண்ணா… கல்யாண பொண்ணு ஓடினா என்னடா. இந்த நிமிஷம் ஒருத்தி உனக்காக வருவா.” என்று அணைத்து ஆறுதலுரைக்க, “சார்.. தமிழரசன் சார்” என்று அழைத்தாள்.

      “ஆங்.” என்று சுற்றி முற்றி பார்க்க, அனைவரும் காணாமல் போயிருந்தனர். அம்மா என்ற கேரக்டர் மட்டும் இருந்தது.
       அதுவும் நகை உடை என்று பணக்கார வீட்டு பெண்மணி போல, நிற்க, லேசாய் கையை விடுவிக்க, அந்த அம்மா மாயமாகாமல் இருந்தார்.

      நிம்மதியுற்றவன் “ஒரு நிமிஷம் அம்மா” என்று பால் வாங்க சென்றான்.

      “ஆடலரசா… என்னடா இது கல்யாணம் என்னாச்சு? அப்பா எங்க? உங்க அக்கா எங்க? இது அதேயிடம் தானே?” என்று பின்னாலே வந்தார்.

       ஏதாவது பேசினால் பால்கார பெண் சந்தேகப்படுவாளென்று அமைதியாக பால் வாங்கினான்.

       “இங்க கல்யாணம் என்னாச்சுனு கேட்கறேன். நீ பால் வாங்கிட்டு இருக்க” என்று தட்டிவிட்டார். பால் பாத்திரம் சிதற, அதில் பாலும் கொட்டியது.

      “சாரிங்க.. கை வழுக்கிடுச்சு. நான் துடைச்சிக்கறேன். நீங்க போங்க” என்று தமிழை அனுப்புவதில் மும்முரமானான்.

      ‘அம்மாடி இந்த பேய் என்ன பாத்திரத்தை தட்டி விடுது. அரசு.. எப்படி சமாளிக்க போறார். ஆண்டவா’ என்று பயந்து திரும்பி திரும்பி பார்த்தாள்.

       “அம்மா… கொஞ்சம் நான் சொல்லறதை கேளு” என்று அமர வைத்து, தான் ஒரு அனாதை என்றும், இந்த வீட்டை விலைக்கு வாங்கி வந்ததிலிருந்து நடக்கும் கூத்தையும் ஒப்புவித்தான்.

      கதையை கேட்டுவிட்டு “அப்ப நாங்க எல்லாமா இறந்துட்டோம்னு சொல்லறியா அரசு” என்று கேட்டார்.

      ”அம்மா… ஏற்றுக்க கஷ்டமாயிருந்தாலும் அதான் நிஜம்.” என்றான்.

       “எ…. எல்லாருமா? உன் கல்யாணத்துக்கு வந்த எல்லாருமா?” என்று அதிர்ச்சியாக கேட்க, அங்கே சுவற்றில் மாட்டிய புகைப்படத்தை எடுத்து, இது நான் வரைந்தது. கனவுல வந்தவங்களை வரையறதா நினைச்சு வரைந்தேன். ஆனா பாருங்க..” என்று கொடுக்க, அரசனை பார்த்து திகைத்து, படத்தை கவனித்தார்.

       “நம்ம குடும்பம் டா. இதுல இருக்கறவங்க எல்லாருமே நம்ம குடும்ப உறுப்பினர்கள்” என்று அதிலிருந்த இருபத்தி மூன்று பேரையும் சுட்டிக் காட்டினார்கள். அதில் மிக நெருக்கமான உறவுகளை சுட்டிக்காட்டினார்.

      நீங்க இப்படி ஆனதுக்கு ஏதாவது காரணம் இருக்கா?” என்று பரிதவிப்பாய் கேட்டான்.

      “நான் இறந்துட்டதா சொல்வதையே என்னால நம்ப முடியலை அரசு‌. இதுல… ம்ம் நான் ஆவியா சுத்தறதுக்கு காரணம் தெரியலைப்பா. முதல்ல நாங்க இறந்ததை என்னால நம்பமுடியலை.” என்று கண்ணீர் உகுத்தினார்.
     
       “உங்க பையன் என்னை மாதிரி இருப்பாரா?” என்று கேட்டதும் அரசனை ஆராய்ந்த பார்வை பார்த்தார் இதுவரை மகன் என்று தானே அணைத்தது, “உன்னை மாதிரினு சொல்ல முடியாது. லேசா… உனக்கு வயசு என்ன?” என்றார்.

    “இருபத்தி எட்டும்மா” என்றான்.

      “என் பையனுக்கு வயசு இருபத்தி மூன்று இருக்கும். ஆனா உன் அளவு வளர்த்தி இருப்பான். 

      ரொம்ப உற்று பார்த்தா கொஞ்சம் வேற மாதிரி இருக்க நீ. சட்டுனு பார்த்தா என் கண்ணுக்கு என் பையனா தெரியற” என்றார்.

      “வேற ஏதாவது உங்க பையனுக்கும் எனக்கும் ஒற்றுமை? இல்லை… ஏதாவது வித்தியாசமா நடந்ததா?” என்று கேட்டான்.
     
      இதில் நடுநடுவே மலர் போனில் அழைக்க, கத்தரித்து விட்டான்.

      “ஹே… அரசன்… உனக்கு ஒன்னும் ஆகலையே. நீ நல்லாயிருக்காயா?” என்று குறுஞ்செய்தி அனுப்பினாள்.

      “பைன். அம்மாவிடம் பேசறேன். நானே கால் பண்ணறேன்” என்று வாய்ஸ் ஒன்றை அனுப்பிவிட்டு “சொல்லுங்கம்மா” என்று கேட்டான்.

      மலரிடம் போனில் பேசவும் லதாங்கி,(பேயோட பெயர்) யோசனை செய்தார்.
     
      “அவன் பெயர் ஆடலரசன்.” என்று கூற, தமிழரசனோ “அம்மா.. என் பெயர் தமிழரசன்” என்று திகிலடைய, “அவனுக்கு கல்யாணம் செய்ய நாயா‌ பேயா பொண்ணு தேடினோம்” என்று கூற, “அம்மா… நானுமே நாயா பேயா பொண்ணு தேடி அலையறேன். யாரும் பொண்ணு தரலை. இப்ப தான் ஒரு லவ் டிராக் போகுது. அவளுமே காதலிக்கறேன்னு வாய் திறக்க மாட்டேங்கறா. ஆனா லவ் பண்ணறா” என்று வெட்கப்பட்டு கூறினான்.

      லதாங்கியோ, “ஆடலரசனுக்கு காதல் எல்லாம் இல்லைப்பா. அவனுக்கு நாங்க தான் பொண்ணு பார்த்தது. கல்யாணம் கூட நாங்க வாங்கின புது வீட்ல தான் வச்சோம். அப்ப இந்த இடத்துல யாரும் வரமாட்டாங்க. ஊருக்கு ஒதுக்குப்புறமான இடம்னு சொன்னாங்க. ஆனா ஆடலரசனோட அப்பா தான் இந்த இடம் போக போக, நிறைய வீடு அதிகமாக அமையும் பேமஸாகும் சொல்லி கட்டினார்.

    புது வீட்ல தான் கல்யாணத்தையும் நடத்த பொண்ணு வீட்ல சம்மதம் வாங்கினோம். ஆனா அந்த பொண்ணு ஓடிப்போயிட்டா. ஆடலரசனுக்கு பார்த்த பொண்ணு ஓடிப்போனதா அரசனோட அப்பா கடைசியா சொன்னார். கல்யாணம் நடந்த எங்க புது வீடு ஒவ்வொருத்தர் கலங்கி போக, சட்டுனு நின்ற இடத்துலயே மயங்கி விழுந்தோம். அதோட எதுவும் நினைவு வரலை.” என்று குறிப்பிட்டு கூறினார்.

      தமிழரசனோ “அப்ப தாலி கட்டும் நேரத்துக்கு முன்ன‌, அதாவது ஏழு டூ எட்டுக்கு கல்யாணம் நீங்க எல்லாம் நாலு டூ ஐந்துக்கு கல்யாணத்துக்கு ரெடியாகிட்டு இருக்க, பொண்ணு காணோம்னு அப்பாவுக்கு தெரிய வந்திருக்கு. அதை சொல்லி வேதனைப்படும் நேரம் நீங்க எல்லாரும் ஒன்னுப்போல ஆறு மணிக்கு இறந்திருக்கிங்க?” என்றதும் அப்படி தான் என்பது போல லதாங்கி கலங்கி நின்றார்.

       “என் பையன் கல்யாணம் நடக்கலை” என்று கலங்கிட, “எனக்கு கூட அப்படி தான்மா. கல்யாண யோகமே அமையலை. பெரிய ஆசையெல்லாம் இல்லைம்மா. பிறந்தப்ப அனாதை என்ற அடையாளமிருக்க, கல்யாணம் முடிந்து வீடு முழுக்க சொந்தம் வேண்டும்னு ஆசைப்பட்டேன்.  பொண்ணு வீட்ல நிறைய சொந்தக்காரங்க வேண்டும் கண்டிஷன் போட்டேன். எல்லாரும் அனாதையை அவங்க குடும்பத்துல ஒருத்தரா ஏற்றுக்க தயங்குறாங்க.” என்றான் கவலையோடு.

      “தங்கமே.. என் தமிழே.. தமிழ் களங்கலாமா? பெயரில் கூட வீரம் கெத்து இருக்கற மொழி ஐயா நம்மளோடது. அந்த மொழியோட பெயரையே வச்சிட்டு களங்கலாமா? தமிழுக்கு யாருமில்லைன்னு யார் சொன்னா. இந்த உலகத்துல எந்த மூலைக்கு போனாலும் தமிழ் இருக்கும்யா. நல்லோர்கள் பரவி கிடக்கற மொழியோட ஆளைமையான பெயரை வச்சிட்டு இப்படி பேசற. நான் உன் அம்மா ஐயா. லதாங்கி உன் அம்மா பேரு. நீ அனாதை இல்லையா” என்று அணைத்துக் கொண்டார்.

    “பேயுங்கன்னா பழிவாங்கும், பயமுறுத்தும், தன் சுயநலத்துக்காக அலையும்னு சொல்வாங்க. நான் பழிவாங்க வரலை, பயமுறுத்த வரலை, என் சுயலமும் இல்லைய்யா. உனக்காக வந்தேன்னு வச்சிக்கோ. அம்மாவா உனக்கு பாசத்தை கொடுக்க வந்தேன்.” என்று தலையை வருடினார்.

      இத்தனை ஆண்டுகள் கிடைத்திடாத தாய்பாசம் தமிழரசனுக்கு கிடைத்திட, அன்னையாக “நான் என் பையனுக்கு டீ போடறேன், சமைக்கறேன். அவனுக்கு இப்ப அம்மா கையால சாப்பாடும் அன்பும் தான் வேண்டும். என்னால இங்க இருக்கற நிமிஷம் வரை அதை கொடுக்கப் போறேன்” என்று ஆனந்த கண்ணீரோடு டீயை போட இஞ்சி தட்டினார்.

      தனக்கிருக்கும் பிரச்சனைகள் அடியோடு மறந்தவனாக, அன்னையின் அன்பில் நனைய துவங்கினான்.‌

        அன்னையின் கையால் சமைத்ததை சாப்பிட்டு அவரோடு புகைப்படம் எடுத்தான்.
      ஆனால் விக்கியை போலவே புகைப்படத்தில் லதாங்கியும் பதிவாகவில்லை.

       ‘அன்னையோடு புகைப்படம் கூட எடுக்க முடியாத வருத்தத்தில் இருக்க, மலர் போன் செய்தாள்.

      கண் கலங்குவதை மறைக்க எழுந்தவன், “போன் பேசிட்டு வர்றேன் அம்மா” என்று தள்ளி சென்றான்.‌ அவனது கலக்கம் அறிந்த லாதங்கியோ, புரிந்துக்கொண்டு மகனுக்கு தன்னால் முயன்றளவு வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு, இனிப்பு காரம் பலகாரம் செய்யும் வேலையில் மூழ்கினாள்.

      அரசன் தான் அம்மா கையால் பலகாரம் உணவு சாப்பிட்டதேயில்லை. ஆசிரமத்தில் சாப்பிட்டது என்று ஏக்கமாய் உதிர்த்தான். அதன் காரணமாய் நளபாகத்தில் மூழ்கினார்.

      “சொல்லு தமிழ்” என்றான்.‌

       “ஆர் யூ ஓகே?” என்றாள்.
      
      “ம்ம்ம். அம்மா டீ போட்டு தந்தாங்க. காலையில் குரும்மா வச்சி இட்லி அவிச்சி தந்தாங்க. நிறைய பேசினோம்.

       என் பெயர்ல ஆடலரசன்னு ஒருத்தன் இருந்திருக்கான். அவனுக்கு கல்யாணம் என்று புது வீட்லயே கல்யாணத்தை முடிவு செய்திருக்காங்க‌. அன்பார்சினிட்லி பொண்ணு ஓடி போகவும் கல்யாணம் நின்றிருக்கு. இதுல எல்லாரும் இறந்துட்டாங்க. எப்படி இறந்தாங்கன்னு அவங்களுக்கு தெரியலை.

      அப்பா தான் பொண்ணு ஓடியதா சொன்னாராம். குடும்பமா இறந்துப்போனப்ப பொண்ணு வீட்டுக்காரங்க யாருமில்லை. எல்லாரும் லாட்ஜில் தங்கியதா சொன்னாங்க. இப்ப அந்த லாட்ஜ் இல்லை. அங்க பஸ் ஸ்டாப் இருக்கு. மற்றபடி வேற விவரம் இல்லை.” என்றான்.‌

      “உனக்கு ஏதும் அவங்களால் ஆபத்தில்லையே?” என்றாள்.

       “இல்லை… அம்மாவால ஆபத்து வருமா?” என்று நெகிழ்ந்து கூறினான்.‌

      ‘இறைவா… இவனை என்னப் பண்ணறது?’ என்று பல்லைக்கடித்து, “மிஸ்டர் தமிழ்…. அவங்க பேய். உன் வீட்ல பேய் இருக்குடா.” என்றாள்.

       “அவங்க பேய் இல்லை. அம்மா… என் வீட்ல பேய்கள் இல்லை. ஒன்ஸ் அப் ஆன் எ டைம் இந்த வீட்ல வாழ்ந்தவங்க. கிட்டதட்ட மூதாதையர்கள். குலதெய்வமா வழிபடலாம் தப்பில்லை. நான் பேயா பார்க்கலை.” என்றான்.‌

      “முட்டாளா நீ… உறவுகள் சொந்தபந்தம் வேண்டும்னு பேயா அலையற. எனக்கு அது புரியுது. ஆனா அதுக்காக பேயையே உறவுகளா ஏத்துக்கற உன் அறிவுத்திறனை கண்டு வியக்கறேன்.” என்று திட்ட தமிழரசன் சிரித்தான்.

      “நான் முட்டாளாவே இருந்துக்கறேன் தமிழ்.
       உன்னை விட இவங்க பெட்டரானவங்க தான்.

    என்னோட தினமும் பேசற, உன் பெயரை கூட சொல்ல மாட்டேங்கற. காதலிப்பதா ஒப்புதல் தரலை. என் வீட்ல பேய்கள் உலாவறது உனக்கு தெரியும். ஆனா ஓரெட்டு என்னனு வந்து பார்க்கறியா? எல்லாமே போன் மூலமா பேசற, ஜஸ்ட் அவ்ளோ தான் உன்னோட பழக்கம். ஆனா பேயா வந்தாலும் எங்கம்மா எனக்காக சமைக்கறாங்க.” என்றதும் தமிழ்மலர் திகைத்து போனாள். என்னயிருந்தாலும் அவள் அக்கறை எல்லாம் இந்த போன் மூலமாக மட்டும் தானே?! அவன் அதை நக்கலாய் சொல்வதில் தப்பில்லையே.

      “ஹலோ ஹலோ..” என்றவன் தன்னவளை காயப்படுத்துவதை உணர்ந்து “சாரி” என்று கூறினான்.

      தமிழ்மலருக்கு அரசனிடம் நேரிடையாக போனில் பேசுபவள் பால்காரியான தான் என அறிமுகமாகிடலாமா? என்று யோசித்தாள்‌.

    -தொடரும்.
        
      
     
      

  • அலப்பறை கல்யாணம்-12

    அத்தியாயம்-12

      வாசலில் நுழைந்தவன், “ஏங்க என்னங்க?” என்று கூப்பிட, “அய்யோ… இவர் எதுக்கு இங்க வந்திருக்கார்” என்று பதட்டமாய் மாட்டு காம்பில் கைவைத்து பால் கறந்தவள் அவசரமாய் எழுந்து “என்ன சார் என்ன வேணும்” என்று நிற்க, “உங்க வீட்ல, உங்கப்பாவிடம் பேசணும்ங்க.” என்றான்.

       தமிழரசிக்கு தூக்கிவாறி போட்டது இவர் எங்கே இங்க?’ என்று முழிக்க, “நான் உங்கப்பாவிடம் கொஞ்சம் பேசணும்ங்க. நான் வாங்கி குடியிருக்கற வீட்ல, இதுக்கு முன்ன யார் இருந்தானு கேட்கணும்.

      அக்கம் பக்கத்துல கேட்டேன். எல்லாரும் சொல்லி வச்ச மாதிரி தெரியலைனு சொல்லறாங்க. இங்க ஐந்து வருஷம் முன்ன தான் இடம் ரீச் ஆனதாகவும். அதுக்கு முன்ன இந்த இடம் எப்படிப்பட்டதுனு தெரியாதுனு சொன்னாங்க. அதோட உங்க வீடு தான் காலம் காலமா இங்க இருக்காம்.” என்று விவரிக்க முனைந்தான்.

      “சார்… எனக்கு விவரம் தெரிந்து, உங்க வீடு இதுக்கு முன்ன பாழடைந்து கிடந்தது. நானே போறவர்றப்ப இந்த வீடு பெரிசா இருக்கு பராமரிச்சு பெயிண்ட் அடிச்சா அழகாயிருக்கும்னு நினைச்சிருக்கேன். அதுக்கு முன்ன யார் இருந்தா என்று தெரியாது.” என்று கூறியவள் தந்தைக்கு ஏதேனும் தெரியுமோ என்னவோ என்று ஒருபக்கம் எண்ணினாள்.

       ஆனால் தந்தையிடம் இவனை பேச விட்டால், அவர் பெயர் செந்தில் என்று அறிந்திடுவாரா, என்று அஞ்சினாள்.

      “உங்களுக்கு தெரிந்தது குறைவா இருக்கலாம்ங்க. உங்க அப்பாவுக்கு தெரியலாம் இல்லையா. அவரிடம் பேசிக்கறேன்” என்று உள்ளே செல்ல அனுமதி வேண்டினான்.
      
      மலரோ வழியை விடாமல், “சார்… தப்பா எடுத்துக்காதிங்க. அப்பாவுக்கு பக்கவாதம் வந்ததுடுச்சு. ஒரு பக்கம் கைகால் செயலிழந்துடுச்சு. பேச்சும் சரியா வராது. அவரிடம் விசாரிக்கறது சுத்த வேஸ்ட். நீங்க வேறயாரிடமாவது விசாரிங்க” என்று செந்திலை காணவிடாமல் துரத்த முயன்றாள்.

       “அட்லீஸ்ட் ஒரெட்டு பார்க்கறேன்” என்று முன்னே வர எட்டுயெடுத்தான்.‌

      “சார்… சொன்னா புரியாது. இந்த வீட்ல நான் அப்பா மட்டும் தான்‌. அப்பா படுத்தபடுக்கையா இருக்கார். இந்த நேரம் நீங்க என் வீட்டுக்குள் வர்றது நல்லதுக்கு இல்லை. அவரால பேச முடியாது. எனக்கு ஏழு வருஷத்துக்கு முன்ன இந்த வீட்ல யார் இருந்தானு தெரியாது. நீங்க இப்ப ஏதாவது கேட்க வந்து வீட்டுக்குள்ள வந்தா இத்தனை நாள் நான் எடீத்து வச்ச பெயர் கெட்டுடும்.” என்று பொரிந்தாள்.

        தமிழரசனோ “தப்பா எடுத்துக்காதிங்க. இதுல என் வாழ்க்கை பிரச்சனை அடங்கியிருக்கு” என்றான்.

      “நானும் அதே தான் சொல்லறேன். இதுல என் வாழ்க்கையோட பிரச்சனைகள் அடங்கியிருக்கு. நான் வயசுக்கு வந்த பொண்ணு. இது சென்னை பட்டணம் இல்லை. காதும் காதும் வச்சி ஊர் ஆயிரம் பேசும். என்னால அதெல்லாம் கேட்டு சகிச்சுக்க முடியாது ஏதாவது பேசினா உங்களுக்கு ஒன்னுமில்லை சார். ஆனா நான் அப்படி எடுத்துக்க முடியாது இல்லையா? என்ன தான் அப்பா கூடயிருந்தாலும் நான் ஒரு தனி மனுஷி. கிட்டதட்ட அனாதை மாதிரி. அனாதைகளை யார் சார் நகை பணம் வசதி சொந்தம் பந்தம் இல்லாதவளை கல்யாணம் செய்வாங்க. அப்படியிருக்க அவப்பெயரும் சோர்ந்துக்கிட்டா… முடிஞ்சளவு நான் யாரையும் நெருங்கவிடாம இருக்கேன்” என்று கூற, தமிழரசன் மெதுவாக தலை கவிழ்ந்து நடந்தான்.

      இரண்டெட்டு நடந்தவன் அங்கே நித்யகல்யாணி மலர்கள் மலர்ந்திருக்க, தமிழ் நினைவு தாக்கியது.

      வழியிலேயே நடந்தபடி தமிழ்மலருக்கு அழைத்தான்.

      அவன் பாதி வழியில் சோகமாய் நடந்து செல்வதையே பார்த்தபடி, “இப்ப என்ன?” என்றாள் தொலைப்பேசியில்…
     
      “தமிழ்… போறயிடமெல்லாம் கதவு அடைபடுது தமிழ். பாதையெல்லாம் முள்ளா இருக்கு.” என்றான். சிம்பாளிக்காக சொல்ல முயன்றான்.

      “ஏன் செருப்பு இல்லை… முள்ளு இல்லாத பாதையில் நடந்துப் போங்க” என்றாள் சிடுசிடுப்புடன்.

      “நக்கலு…‌  உனக்கென்னம்மா… நீயா பேய் கூட இருக்க. நான் தான் இருக்கேன்.” என்று பேச்சு சோகத்திலிருந்து இயல்பானதே.

      “பச்.. இப்ப எதுக்கு கால் பண்ணினிங்க?” என்றாள்.

    “தமிழ்… இந்த ஏரியா கடந்த ஐந்து வருடமா தான் இங்கிருக்கற ஆட்களே வந்திருக்காங்க.
    முன்ன இங்க என்னயிருந்ததுனு தெரியலை. யாரிடமாவது கேட்கலாம்னா எல்லாம் மூனு வருஷத்துக்கு முன்ன வந்தேன். இரண்டு வருஷத்துக்கு முன்ன வந்தேன்னு சொல்லறாங்க. அதுக்கு முன்ன யார் இருந்தா என்ன விவரமும் யாருக்கும் தெரியலை. டீக்கடைக்காரர் தான் பால்கார பொண்ணோட அப்பா இருக்கார் அவரிடம் கேட்க சொன்னாங்க. ஆனா அவர் படுத்தபடுக்கையா இருக்காராம். அந்த பொண்ணு வீட்டுக்குள்ளயே விடலை.” என்றான்.‌

      “அரசன்… நீங்க கேட்டாலும் அவங்க அப்பா பதில் சொல்லிடுவாரா என்ன? அவரால பேச முடியாதே. வேற யாரிடமாவது கேளுங்க.

       இல்லையா.. வீட்டை விற்றுட்டு பேசாம பழைய படி உங்களுக்கு ஏற்ற வேலையை தேடி பொழப்பை பாருங்க.” என்றாள்.

      “ஏன் எனக்கு என்ன? நான் நட்டு வச்ச செடி கொடி எல்லாம் வளருது. பூ பூத்து மொட்டு விட்டு காய் காய்க்க தயாரா இருக்கு. எனக்கு இந்த முழு நேரமும் நான் நிம்மதியா இருப்பது உனக்கு பிடிக்கலையா.

      உனக்கு தெரியுமா? நான் டீம் லீடர் பொசிஸன்ல இருந்தப்ப நான் செய்த பிராஜெக்ட் மொத்தமா கேசவன் டெலீட் பண்ணிட்டான்.
      அதை மீண்டும் சரிப்பண்ணி முழுசா முடிக்க நான் என்ன கஷ்டப்பட்டேன்னு?

       அந்த நேரம் என் கண்ணு முழுக்க லேப்டாப் வேலை மட்டும் தான். நைட்டு தூக்கமில்லை, சரியான சாப்பாடு இல்லை, டீ குடிக்கணும் போல இருக்கும், தொண்டையில் தண்ணி தாகமெடுக்கும். ஏன் பாத்ரூம் வரும் அதுக்கு கூட எந்திரிச்சு போகாம முதல்ல வேலையை முடிக்கணும்னு இருந்த நேரமெல்லாம் கடந்திருக்கேன்.

      புராஜெக்ட் முடிச்சிட்டு அந்த இயந்திர வாழ்க்கையே வேண்டாம்னு கையிலருக்கற பணத்தை சேமித்த பணத்தை வச்சி வீடு வாங்கி தோட்டம் போட்டு மனசு ரிலாக்ஸா இப்ப தான் வாழறேன்.
      இப்ப என்னை சுத்தி பல மனிதர்களோட ஆவிகள் அலையற மாதிரி இருக்கு. என்னை துன்புறுத்தாத என் கல்யாண வாழ்க்கைக்கு அக்கறை செலுத்தற மனுஷங்களுக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி அலையறாங்க? இதை தெரிந்துக்க தான் பேயுக்காக நாயா சுத்தறேன் போதுமா. இந்த நிலைமையில் நீ வேற வீட்டை வித்து திரும்ப ஐடி ஜாபுக்கே போக சொல்லற.” என்று கோபித்துக்கொண்டான்.

       “ஹலோ… நான் நல்லதுக்கு தான் சொன்னேன். உனக்கு ஏதாவது ஆகிடுச்சுன்னா. பேயுனு தெரிதுல” என்றான்.

      “நாளைக்கு நாம செத்தாலும் பேய் தான் மலர்.” என்றான்.

      “ஸப்ப்பபா.. இப்ப எதுக்கு கால் பண்ணின.” என்று மலர் கத்த துவங்கினாள்.

      “ம்ம்ம் ஒரு ஆறுதலுக்கு உனக்கு போன் போட்டேன். ஆனா நீ இருக்கியே… போ டி” என்றான்.

      “என்ன டி போடறிங்க?” என்ற குரலில் துள்ளலிருந்தது. கோபம் முற்றிலும் வடிந்திருந்ததை தமிழ் அறிவான்.

      “ஆமா இனி அப்படி தான். பிடிக்கலைன்னா கட் பண்ணு.” என்றான்.

      பேசிவிட்டு அடிக்கடி கத்தரித்து விட்டாளா என்று பார்வையிட்டான்.

      “உங்களுக்கு வேலை இல்லாம இருக்கலாம். எனக்கு வேலையிருக்கு அதனால சொல்ல வந்ததை சொல்லறேன்.
      நீங்க அந்த குட்டி பையனை பிடிச்சி வச்சது போல யாராவது பெரியவங்களை பிடிச்சி அவங்களிடம் கேளுங்க. ஒருவேளை பதில் சொல்வாங்க. அதைவிட்டு… என்னிடம் பாயறிங்க.” என்றதும் தமிழரசன், “யு ஆர் ரைட் தமிழ். நாளைக்கு பெரியவங்க யாரையாவது பிடிச்சி வச்சிடறேன்.” என்று மலர்வாய் பதில் தந்தான்.

    ‘பேயை பிடிக்கற முதல் ஆளு நீ தான்டா’ என்று எண்ண நகைப்பு உருவானது.

      தமிழ்மலரோ, “அரசன்… எது எப்படின்னு தெரியலை. ஆனா இப்படி சந்தோஷமா இருங்க. தமிழ் எதுக்கும் கலங்க கூடாது. தமிழ் வெற்றியோட அடையாளம். தமிழை அழிக்க எந்த முயற்சி எடுத்தாலும் அழிக்க முடியாது. அப்படி அழிக்க நினைச்சா உலகம் அழியறதுக்கு சமம். புரியுதா? நீ களங்கவே கூடாது. என் எதிர்ல சிரிச்ச மாதிரி இருக்கணும்” என்றுரைத்தாள்.

    ”சரி டி… இனி களங்க மாட்டேன். எனக்கு நீ இருக்க அது போதும்” என்று மகிழ்ச்சியாக போனை அணைத்தான்.

      மலரோ தமிழரசனின் வீட்டை பார்த்து, நான் மட்டும் போதுமா அரசா.” என்று கண்கள் கலங்கி ஆனந்தமாய் வேடிக்கை பார்த்தாள்.

       இப்படி ஒரு வார்த்தை கூறினால் அவள் இந்நேரம் தமிழரசனின் காதலியாக இருந்திருப்பாள். ஏனோ இந்த குடும்பம் என்ற மாயையும் எதிர்பார்க்கின்றானே.’ என்று நினைக்க செந்தில் இரும ஆரம்பித்தார்.

      அப்பா.” என்று ஓடி சென்று அவரை கவனிக்க, அவரோ யார் என்ன என்று சமிக்ஜையில் ஆரம்பித்தார்.
     
       வழக்கமான செய்கைகளுக்கு அர்த்தம் புரிந்தவளோ, “முக்கு தெரு வீட்டை விலைக்கு வாங்கியவர் அப்பா. ரொம்ப நல்ல மனுஷன் தனியா தான் தங்கிருக்கார். தினமும் காலையில் மாலையில் பால் ஊத்த போவேன். ஏதோ..ஏதோ.. அந்த வீட்ல அமானுஷ்யமா இருக்காம். வீடு முழுக்க காலையில் நாலு டூ ஆறு ஏதோ கல்யாண வீட்டுக்கு தயாராகுற மாதிரி பேயுங்க தயாராகுதுங்க. அதான் யாரிடமாவது இதுக்கு முன்ன அந்த வீட்ல யார் இருந்தா? என்று கேட்க இங்க வந்தார்.
       வீட்டை விற்ற ஆளோட அப்பா தான் இதுக்கு முன்ன இருந்தது. வீட்டை விற்றவரோட பையன் வெளிநாட்ல தான் படிச்சார். அதனால் இங்க அப்பா நிலத்தை விற்க வந்துட்டு ஓடிட்டார். யாராவது தெரிந்தவங்க இருந்தா விலாவரியா கேட்க நினைச்சார்.

      இங்க தான் எல்லாம் தாம்பரம் ஈசிஆர்ரோடு, பெருங்களத்தூர் ஊரப்பாக்கம்னு வீடு வாங்கி அங்குட்டு போயிட்டாங்க. இந்த இடத்துல பல வருஷமா இருக்கறது நீயும் நானும் தான்.

      எனக்கு விவரம் தெரிந்து அங்க என்ன நடந்துச்சுனு நினைவில்லை. உனக்கும் பக்கவாதம் வந்து இழுத்துக்குச்சு. வேற யாரிடமாவது கேட்டுக்க சொன்னேன்‌” என்று கூறியவள் மெய்யான வருத்தத்தோடு கூறினாள்.

      செந்திலோ ஏதேதோ சொல்ல வாயெடுத்து வாய் குழறி எச்சி ஒழுக ஆரம்பித்தது. சாதாரணமாய் சில நேரம் கைகள் நடுங்கும் இன்று அதிகமாக நடங்கி ஏதோ சொல்ல வந்தார்.

      ஆனால் அவரால் எதையும் உதிர்க்க முடியவில்லை. 
      ஆனால் கண்ணில் கண்ணீர் வடிய ஆரம்பித்தது.
    அங்கேயே இருந்திருந்தால் மலர் கவனித்து துடைத்துவிட்டிருப்பாள்.
       அவள் இரவு உணவை தயாராக்க மும்முரமானாள்.

        தமிழரசனோ விக்கியிடம், “விக்கி… உனக்கு என்னயென்ன வேண்டுமோ ஆசை தீர சாப்பிடுடா. நாளைக்கு…” என்றவன் பேச்சை விழுங்கினான்.

      நாளைக்கு மறைந்துவிட்டால்… கூடவே வைத்துக்கொள்ள முடியுமா?!

      நாளை வேறு யாரை பிடித்து வைப்பது, என்ற யோசனையில் திளைத்தான்.
       மனதிற்குள் ‘அம்மா’ என்ற ஆனந்தம் பெருகியது.

    -தொடரும்.
     
      இக்கதை எண்டர்டெயின்மெண்ட் பர்பஸிற்காக எழுதப்படுவதே. .

  • அலப்பறை கல்யாணம்-11

    அத்தியாயம்-11

      அதிகாலை மூன்று முப்பதிற்கு அலாரம் வைத்து எழுந்தாள்.

      முகம் கழுவி, வாசலில் சாணி தெளித்து பெருக்கி கோலமிட்டாள்.

      மணி நான்கை தொட நெருங்கியது. சத்தமில்லாமல் போனில் உள்ள டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டு அரசன் வீட்டுக்கு பதுங்கி வந்தாள்.
     
       அவன் வீட்டில் தான் ஏகப்பட்ட ஜன்னல் உள்ளதே. போனை சைலண்டில் போட்டுவிட்டு டார்ச்சையும் அணைத்துவிட்டு, மெதுவாக திரைச்சீலையை தள்ளி கவனிக்க ஆரம்பித்தாள்.

       நான்கு மணி ஆனதும், அரசன் சொன்னது போல, ஹாலில் துகள்கள்  ஒருங்கிணைந்து உருவமாய் மாறி ஆங்காங்கே சிலர் நடமாட, தமிழுக்கு மூச்சு முட்டியது.

      போனில் என்ன தான் அரசன் கூறினாலும், அந்த பையனை பார்த்ததாலும் ஏதோவொன்று சரியில்லையென்று தான் வந்தாள்.

      இப்படி பேய் கும்பலாய் கூட்டமாய் கல்யாணத்திற்கு தயாராகி அழகாய் அலங்காரம் செய்து ஆளாளுக்கு விழாவிற்கு தயாராக, ஆடிப்போனாள்.

    இந்த அரசன் எங்கப்போனான்? என்று வீட்டில் இருப்பவர்கள் பார்த்திடாமல், வெளியே யாராவது பார்த்திடாமல் கவனமாய் இருந்தாள்.

      சத்தம் கொடுத்திடக் கூடாதென்று தன் வாயை தன் கைகளால் மூடிக்கொண்டிருந்தாள். அதிசயம் காண்பது போல விழி விரிந்து காண, கொஞ்சம் கொஞ்சமாய் விடியல் மலர துவங்கியது. இதற்கு மேலும் இங்கேயிருந்தால் வெளியே யாராவது பார்த்து அசிங்கமாக பேச நேரிடுமென திபுதிபுவென வந்த வழியே ஓடினாள்.
    மடமடவென கொஞ்சம் போல பால் கறந்து, அரசனுக்கு மட்டும் கொண்டு வந்தாள்.

    மற்றவர் யாரேனும் கேட்டால் பால் கறக்கவில்லை வேலை பளு என்று ஏதாவது சொல்லிக் கொள்ள நினைத்தாள்.

    காலிங் பெல் அடிக்க, அலறாத குறையாக, அரசன் எழுந்தான்.

      மணி ஐந்தரை ஆகுது. இப்ப யாரு பெல் அடிக்கறது?’ என்று சோம்பல் முறித்தவன் விக்கியையும் எழுப்பி வாசலுக்கு வந்தான்.‌

      “பொறுப்பு இல்லாம இன்னும் இருக்கான் பாருங்க?”

    “கல்யாண பையனே இன்னும் குளிக்கலை. எம்மகன் அவனோட சுத்தறான்” என்று விக்கியின் அம்மா புலம்ப, தூக்க கலக்கத்தில் அம்மாவை தேடாமல் அரசன் கைகளை பிடித்து இமை திறக்காமல் நடந்தான் விக்கி.

    “ஆடலரசா… எங்க போற?” என்று தாத்தா முறையில் இருந்தவரும் கேட்க, “போங்கயா.. நான் யாருக்கும் பதில் சொல்ல மாட்டேன். நீங்களாம் யாரு என்ன பண்ணறிங்க? எதுக்கு இப்படி உலாத்தறிங்க? எது கேட்டாலும் பதில் சொல்லலை. நான் மட்டும் சொல்லணுமாக்கும். எப்படியும் ஆறு மணிக்கு மறைந்து போற மாயாவிங்க தானே. நான் பால் வாங்கிட்டு வர்றேன். உங்களை பார்த்துட்டு இருந்தா எனக்கு டீகாபிக்கு பால் இருக்காது.” என்று கதவை திறந்தான்.

      மலருக்கு நடுக்கம் கூடியது. இந்நாள்வரை யாரோ பெரிய குடும்பம் இங்கே வந்து செல்வதாக நினைத்தாள். இன்று இங்கிருப்பதே எல்லாம் பேய்கள் என்றதும் பயம் இல்லாமலா? நடுக்கத்துடன் பால் ஊற்றினாள். மணி ஆறை தொடவும், ஒவ்வொருத்தராய் மாயமானார்கள். விக்கியை மட்டும் நேற்று போல இறுக்கமாய் பிடித்திருக்க, அவனுமே துகளாக மாயமாகி மீண்டும் உருவத்துடன் அரசனின் கைக்குள் கட்டுண்டு இருந்தான்‌.

          மலருக்கு மயக்கம் வருவது போல தோன்ற, பாலை ஊற்றியவள் தள்ளாடி சரிந்தாள்.

    பாலை அங்கிருந்த ஸ்டூலில் வைத்துவிட்டு, “ஏங்க… என்னங்க.. அய்யோ.. என்ன இந்த பொண்ணு இங்க வந்து மயங்கிடுச்சு. தமிழோட அப்பா மட்டும் இங்க இப்ப வந்தார். என்னையில்ல தப்பா எடுத்துப்பார்.

       இன்னிக்கு பார்த்து நல்லா தூங்கிட்டேன். ஹலோ… இங்க பாருங்க.. பால்கார பொண்ணு.” என்று தட்டினான்.
     
       ப்ரிட்ஜ் திறந்து ஐஸ் வாட்டரை எடுத்து முகத்தில் தெளிக்க, அந்த குளிர்ச்சியில் உடல் சிலிர்த்து மயக்கம் தெளிந்து இமை திறந்தாள் மலர்.

      ”என்னங்க ஆச்சு… ஏதாவது பார்த்திங்களா?” என்று விக்கியை அணைத்து நின்றான்.
    விக்கிக்கு இருந்த தூக்க கலக்கம் மொத்தமாய் மலர் மயங்கவும் களைந்துவிட்டது.

      “இ… இல்லைங்க. நேத்து மாடு கண்ணு போட்டுச்சா. ஓவர் வேலை. அந்த வேலையில் சரியா தூங்காம உடலை‌ கெடுத்துக்கிட்டேன். இங்க வந்து மயங்கிட்டேன்.” என்றாள்.

       ”அம்மா தாயே… உடனே கிளம்பு. என்‌ நெஞ்சுல ஹார்ட் அட்டாக்கே வந்துடுச்சு.” என்று அலறாத குறையாக அனுப்ப முயன்றான். அவள் உருவத்தை பார்த்ததாக கூறினாலாவது உட்கார வைத்து பேசுவான்.

      மயங்கி விழுந்துட்டேன்னு சொல்லறேன். தண்ணி குடிக்க கொடுத்து என்னை அங்க ரெஸ்ட் எடுக்க சொல்றானா? அனுப்ப பார்க்கறான்.’ என்று மெதுவாக நடக்க, “கொஞ்சம் வேகமா நடந்து போங்க.” என்றான்.
     
      மலரோ திரும்பி நின்று முறைக்க, ”என் மாமனார் எங்கயாவது நின்று பார்த்துட்டா, எனக்கு பொண்ணு தரமாட்டான் மா. ஏற்கனவே என் தமிழ் திமிரெடுத்த தமிழச்சியா இருக்கா” என்று முனங்க மலரோ மென்முறுவலிட்டு நடந்தாள்.
       அவள் மயக்கமுற்ற நேரம் இவ்விடமிருந்து விழுந்தடித்து ஓடவேண்டியது. கால்கள் வேரூன்ற மயங்கி சரிந்தாள். ஆனால் தமிழ் பேச இயல்பாகி விட்டாள். இதில் தன் அப்பா பார்த்து பேசுவதாக போனில் உரைத்ததை வைத்து இன்றும் வந்து பார்ப்பாரென நம்பிவிட்டாரே.
      ஆம் அப்பாவிற்காக நான் வந்தது உண்மை தானே. எனக்கு அம்மா அப்பா என்ற இரு பொறுப்புடன் நான் ஒருத்தி சுமக்க வேண்டும். பால் கிண்ணத்தோடு நடந்து சென்றாள்.

       இந்த பொண்ணு எப்பவும் வண்டில வரும். இன்னிக்கு நடந்து வந்துட்டு போகுது.’ என்று விக்கியை அழைத்து உள்ளே வந்தான்.
     
      “நல்லவேளை நீயும் மறைந்து போயிடுவியோனு கையை பிடிச்சேன்.” என்று அணைத்துக் கொள்ள, சிறுவன் அவன் புரியாமல் விழித்தான்.

       அதன் பின் காய் வெட்டி நூடுல்ஸ் தயாரித்தான். இந்த நாலு டூ ஐந்தை பெருசா எடுத்துக்காம நான் பாட்டுக்கு தூங்கி ஆறுமணிக்கு வந்தா அதுக்கு பிறகு பிரச்சனையேயில்லை. பேசாம அப்படியே விட்டுடட்டா?’ என்று சிறுவனிடம் ஆலோசனை கேட்க, ”மாமா நீ பேசறது எனக்கு புரியலை. எனக்கு முதல்ல நூடுல்ஸை போட்டு தா” என்றான் விக்கி.

      “உன் கஷ்டம் உனக்கு.” என்றவன் மலருக்கு அழைத்தான். அவளோ போனில் யார் யார் வீட்டுக்கு பாலூற்ற நினைத்தது எல்லாம் மன்னிப்பு கேட்டு பால் கண்ணுக்குட்டி குடிச்சதாக கூறி தப்பித்தாள்.

      இரண்டாம் கால் பதிவாக அரசனின் அழைப்பு வருவதை கவனித்தவள், வேலைக்கு செல்வதில் மும்முரமானாள்.

        பேருந்து ஏறிவிட்டு பேசலாமென அப்பொழுதும் எடுக்கவில்லை.

       அரசனோ கணினியில் வேலையை பார்க்கும் நேரம், பேருந்தில் ஏறி நிதானமாய் அழைத்தாள்.

       ப்ளூடூத்தை காதில் வைத்து, “அட… கால் பண்ணிட்ட தமிழ். நான் கூட லவ் பண்ணறவன் லவ்வுல உலறினா பரவாயில்லை. பைத்தியம் மாதிரி உலறுவதை கேட்டு இனி கால் பண்ணா எடுக்க கூடாதுனு முடிவெடுத்துட்ட போலனு நினைச்சேன்.‌ நீ என்ன கால் பண்ணிட்ட?” என்றான்.‌ வேலை பார்த்தபடி தான் பேசினான்.

    ”பச்… அரசன்… இன்னிக்கும் அவங்க எல்லாம் வந்தாங்களா?” என்று கேட்டாள். நேர்ல தான் பார்த்தியே இப்படியொரு கேள்வி கேட்கற?’ என்று மனசாட்சி பிராண்டியது.

    “இன்னிக்கு கொஞ்சம் தூங்கிட்டேன். காலையில் அவங்க கிளம்பறப்ப தான் கண்முழிச்சேன். ஆனா வந்துட்டு அவங்க அவங்க வசனத்தை சொல்லி கல்யாண வீட்ல நகை நட்டு போட்டு பட்டு கட்டி டிராமா முடிஞ்சி கிளம்பிட்டாங்க” என்றான்‌ வெகுசாதாரணமாய்.

    “அட பக்கி..‌. பேய் கூட இருக்க. ஒருமையில் சொல்ல முடியாது. பேயுங்க கூட இருக்க. ஆனா கொஞ்சமாவது பயந்து பேசறியா. ஏதோ எல்லாம் வெக்கேஷனுக்கு வந்தவங்க மாதிரி பேசற.

    தூங்கிட்டானாம்… யோவ் லூசு… நானா இருந்தா நிம்மதியா அங்க ஒரு நிமிஷம் கூட இருக்க மாட்டேன். நீ என்ன குடித்தனம் பண்ணற. அதுவும் கூட குட்டி பேயை கூட்டிட்டு ஊர்வலம் போற.” என்றாள்.

      “எம்மா… அதான் சொன்னேனே. இதுக்கு என்ன காரணம் ஏன்‌ வர்றாங்க என் கண்ணுக்கு மட்டும் ஏன்‌ தெரியறாங்க ஒன்னும் புரியலை தமிழ். ஒருவேளை இந்த வீட்ல நான் இருப்பதால் என்‌ கண்ணுக்கு தெரியறாங்களோ என்னவோ?” என்றான்.‌

      அடுத்த வினாடி, “நான் அந்த வீட்ல இல்லையே.‌ என் கண்ணுக்கு எப்படி தெரிவாங்க” என்றாள்.

      “ஏதே…” என்றதும், “அதுவந்து எங்க அப்பா உன் கூடயில்லையே. அவர் கண்ணுக்கு தெரியறாங்களே” என்றாள். சமாளிக்க தெரியாம மாட்டிக்கிட்டு முழிக்க போறப்பாரு மலர் என்றது மனசாட்சி.

       “தெரியலைங்க.. உங்கப்பா கண்ணுக்கு தெரியறதால் விக்கியை கடைக்கு கூட்டிட்டு போனேன். அவன் யார் கண்ணுக்கும் தெரியலை. நேத்து ஒரு மத்திய வயசு பொம்பள பால் ஊத்தும் பொண்ணு இரண்டு பேரும் வீட்டுக்கே வந்தாங்க. அப்ப வீட்டுக்குள்ள வந்து பேசியும் விக்கியை இரண்டு பேருக்கும் தெரியலை. ஏன் டெய்லி அந்த பொண்ணு வருது பால் ஊத்துது அது கண்ணுக்கும் தெரியலை.” என்று வருத்தப்பட்டான்.

      ‘அடேய்… அதெல்லாம் கண்ணுக்கு நல்லா தெரியறாங்க. அதான் ஏன்னு தெரியலை. பங்கஜம் கண்ணுக்கு தெரியலை. டீக்கடைக்காரர் கண்ணுக்கு தெரியாத அந்த குட்டி பையன், என் கண்ணுக்கு தெரிந்தான். பேய் ஏன் என் கண்ணுக்கு தெரியணும்.’ என்று தனக்குள் வருத்தம் கொண்டாள்.

    “நான் உங்கப்பாவை பார்க்கலாமா?” என்றான்.

      “அரசன்… எங்கப்பாவிடம் உங்களை பத்தி பேசமுடியாது. ஆனா உங்க மேல இருக்கற அனுதாபத்தில் சொல்லறேன். அந்த வீட்ல ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்கா? யார் வீடு என்னனு விசாரிங்க. ஏன்னா… அந்த வீடு ரொம்ப பெரிய வீடு. முப்பது லட்சத்துக்கு விற்று இருக்காங்க. அதுவும் வேலை விட்டு நின்ற கொஞ்ச நாளில் வாங்கியிருக்கிங்க.” என்று கூறவும் அரசனிடம் பலத்த அமைதி.

    “ஏங்க…” என்று கூப்பிட, “கேட்குது தமிழ். நான் விசாரிக்கறேன். அப்பறம் என் மேல காதல் இருந்தா பேசு அனுதாபம் எல்லாம் வேண்டாம்.
       அனாதை என்ற கண்ணோட்டத்தில் நிறைய பேர் அனுதாபப்பட்டு இருக்காங்க. யார் யாரோ அனுதாபம் காட்டும் போது வலிக்காது.
     
      நீ அனுதாபம் என்ற வார்த்தை வீசறப்ப, என்னை காயப்படுத்தற மாதிரி இருக்கு” என்றான்.

      “அரசு.. சாரி” என்று மலர் கூற, “வைக்கறேன் தமிழ்” என்று துண்டித்தான்.

       எப்பவும் துள்ளலாக வரும் தமிழரசனின் குரல், ஏதாவது பேசும் போது தன்னை அறியாமல் காயப்படுத்துவதை மலர் உணர்ந்தாள்.

      இத்தனைக்கும் தமிழரசன் படித்து முடித்து சொந்தமாய் வீடு வாசல் வாங்கி தனியாக வாழும் தன்னம்பிக்கை கொண்டவன்.
     
    தமிழ்மலர் படித்திருக்கின்றாளே தவிர நல்ல வேலை என்று சொல்லயியலாது. ஏனெனில் படித்து முடித்தது எல்லாம் தொலைத்தூர கல்வியே.
      ஒரு வேளை சொந்த வீடு என்றும், தந்தையை அடிக்கடி தன் கண்ணுக்குள்  கவனிக்க வேண்டுமென்ற காரணத்தால், இந்த இடத்தை விட்டு அகலாமல், வெளியூரில் வேலை செய்யாமல் குண்டு சட்டியில் குதிரை ஓட்டுகின்றாள்‌

      இதே வீட்டையும் தந்தையும் விடுத்து, தன் படிப்பிற்கான வேலை என்று வெளியிடம் சென்றால் மட்டுமே சம்பளம் அதிகம் கிடைக்க வாய்ப்புண்டு. தமிழரசனை விட வசதி வருமானத்தில் கீழே உள்ளவள் அவன் மீது அனுதாபமிட்டால் எப்படி?

      சொல்லம்போனால் இவ்வுலகில் யாரும் யாரையும் அனுதாபமாக பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
       ஏற்றத்தாழ்வு என்பது மனிதரின் வாழ்வில் பகல் இரவு போல மாறி வந்தால் எல்லாம் மாறும்‌.

        இவ்வாறு சிந்தனையில் தமிழரசனிடம் இனி ஜாக்கிரதையாக மனம் கோணாமல் பேச வேண்டுமென்று முடிவெடுத்தாள்.

       இங்கே தமிழரசன், தனக்கு வீடு விற்றவரை பிடித்து இந்த வீட்டில் அமானுஷ்யம் உள்ளதா என்று விசாரிக்க, “ஏன் தம்பி இப்படி கேட்கறிங்க? எங்கப்பாவோட சொத்து. நான் வெளிநாட்டுக்கு போறதால அவசரத்துக்கு பணிந்த விலையில் உங்களிடம் விற்றுட்டு வந்தேன். இதே மத்தவங்கன்னா அந்த இடத்தை இடிச்சிட்டு அடுக்குமாடில பத்து வீடு கட்டி, அதுல இன்ஞினியருக்கு இரண்டு வீட்டை கொடுத்துட்டு, எட்டு வீட்டை வாடகைக்கு விட்டு, வாடகையா வர்ற வருமானமே வாங்கி கால் நீட்டி வாழலாம்.
       எனக்கு ஏது நேரம். இங்க அமேரிக்கால புள்ளைய பெத்தா க்ரீன் கார்டு கிடைக்கும்னு அவசரமா வேலைக்கு வந்தப்ப நிறை மாச பொண்டாட்டியையும் அழைச்சிட்டு வந்து இருக்கேன். என்னிடம் இப்படி கேட்கறிங்க. வையுங்க தம்பி போனை” என்று கோபமாக வீட்டை விற்ற ஆள் கத்தி அணைத்தார்.

    ”அண்ண..அண்ண…” என்று கத்திவிட்டு மீண்டும் அழைக்க பயந்தான்.

       இந்த நேரத்தில் அழைத்து இவ்வாறு கேட்பது தவறு தான்.
      வீட்டை சுற்றி ஏதேனும் அப்நார்மலாக தென்படுகின்றதா என்று நோட்டமிட்டான்.

      அங்கே இவன் வளர்த்த காய்கறி செடிகள் பசுமையாக வளர்ந்து செழித்திருந்தது. இன்னும் கொஞ்ச காலத்தில் மொட்டு விட்டதில் காய்கறி காய்க்கும்.

      டீக்கடைக்காரரிடம் வீட்டை பற்றி விசாரிக்க, “நான் இங்க டீக்கடை போடறப்பவே இந்த இடம் பாழடைந்து தான் இருந்தது‌ தம்பி. மத்தபடி அதுக்கு முன்ன அந்த இடத்துல யார் இருந்தா, எத்தனை பேர் இருந்தாங்க, எதுவும் தெரியாது தம்பி. ஏழெட்டு வருஷமா மூடியிருப்பதா பேசிப்பாங்க. நான் கடை வச்சது ஐந்து வருஷமாகுது.

       முன்ன இங்கயிருந்தவங்கள்ல யாரிடமாவது விவரம் கேளுங்க.” என்று கூறி டீயை ஆற்றுவதில் மும்முரமாக இருந்தார்.

      வீட்டை வாங்கிட்டு இப்ப வந்து விவரம் கேட்கறார்’ என்று டீக்கடைக்காரன் குழம்பினான்.‌

        அக்கம் பக்கம் எல்லாம் இந்த இடம் இப்ப தான் தம்பி பேமஸாச்சு. அதுக்கு முன்ன இங்க வீடு எல்லாம் கிடையாது. அங்க ஒன்னு இங்க ஒன்னுன்னு தான் கிடக்கும்.
      
      அதோட முன்ன இருந்த ஆட்களில் யாரும் உயிரோட இருக்காங்களா தெரியலை. இப்ப எல்லாம் வயசு புள்ளைங்க தான். அதுவும் வீட்டை தொறந்து வர்றதில்லையே.” என்று கூறினார்கள்.

       ஒருத்தரை மாற்றி ஒருத்தர் இதை தான் உரைத்தார்கள்.

      ஊருக்கு தனியாக இருந்த இடத்திலான வீட்டில் என்ன நடந்ததோ?’ என்று உலவியவன், மாலையில் அந்த வீட்டு வேலிக்குள் நுழைந்தான்.

      -தொடரும்.

  • அலப்பறை கல்யாணம்-10

    அத்தியாயம்-10

          அவசர அவசரமாய் வீட்டுக்கு வந்த மலருக்கு வேலைப்பளு கழுத்தை நெறித்தது. தந்தைக்கு உணவை ஊட்டிவிட்டாள். அதன் பின் மூச்சு விட நேரமின்றி வளர்த்த பசு கத்தி கூச்சலிட்டது.

       அதற்கு பிரசவ வலி என்பதால் கத்திக்கொண்டேயிருந்தது. மலரிடம் மூன்று பசுக்கள் உண்டு. ஒரு பசு மூன்று மாதம் முன் குட்டி ஈன்றது. அப்பொழுது கால்நடை மருத்துவர் ஊரில் இருந்தார்.

    இது மற்றொரு மாடு. இந்நேரம்
    கால்நடை மருத்துவரும் ஊரில் இல்லை. அதனால் நேரத்தை கடத்தாமல் 1962 என்ற நம்பருக்கு அழைத்தாள்.

      அதுவொரு கால்நடை சேவை மையம். வீடு தேடி கால்நடை மருத்துவர்கள் வந்து வைத்தியம் பார்ப்பார்கள். 

      அப்படி தான் உடனடியாக மருத்துவம் பார்த்திட கால்நடை மருத்துவர் வந்து பசுவையும் கன்றையும் காப்பாற்றினார்.

      “ஏம்மா.. இந்த நம்பருக்கு போட்டா, வீடு தேடி கால்நடை மருத்துவம் பார்க்க வருவோம்னு யார் சொன்னா?” என்று பேசியபடி கன்றுக்குட்டியை தடவினார்.

      “பேப்பர்ல படிச்சேங்க. தனியா அப்பாவை விட்டுட்டு வேலைக்கு போறேன். அந்த நேரம் என் குலத்தை செழிக்க வந்த மகாலட்சுமிக்கு பிரசவ வலி வந்துட்டா யாருங்க சார் பார்க்கறது.

      இங்கிருந்த கால்நடை மருத்துவரிடம் கூட ஒருதடவை விசாரித்தேன்.

      அவர் போன் போட்டு கண்டிஷனை சொன்னா வருவாங்கம்மானு சொல்லிருந்தார். அதான்… இந்த நம்பருக்கு போட்டு பசுமாடு பிரசவ வலியில் இருக்க நேரம் கடத்தாம போன் போட்டேன். நீங்களும் வந்துட்டிங்க.” என்று டீ போட்டு கொடுத்தாள்.

      டீயை பெற்றுக்கொண்டு தேங்க்ஸ்மா.” என்றவரிடம் சீமப்பால் வீட்ல குடிப்பிங்கன்னா கொடுத்து விடவா டாக்டர் சார்?” என்று கேட்க, இதெல்லாம் வேண்டாம்னு எந்த மடையனாவது சொல்வானாம்மா. கொடும்மா கொடும்மா.” என்று வாங்கிக்கொண்டார்.

      அதன் பின் இன்று பூப்பறிப்பதை தவிர்த்துவிட்டு மாட்டுக்கு தீவனம் எல்லாம் கவனித்துவிட்டு பாலை ஊற்ற சென்றாள். கூடவே நன்றாக பழகும் சிலருக்கு சீமபாலை தரவும் எடுத்துக்கொண்டாள்.
     
       அதில் அரசனுக்கும் எடுத்து சென்று ஊற்ற காலிங் பெல்லை அழுத்தினாள். கதவு திறந்திருந்தது.

      பால் ஊற்றியபடி, “சீமபால் இருக்கு வேண்டுமா?” என்றாள்.
      
      “இந்தப்பாலே போதும்ங்க” என்றான்.

    மலருக்கு இவனுக்கு சீமபால்னா என்னனு தெரியுமோ தெரியாதா?’ என்று “சார் மாடு கண்ணு போட்டுயிருக்கு. சீமாபால் கருப்பட்டி போட்டு குடிச்சா டேஸ்டா இருக்கும். பாலாடை கட்டி மாதிரி…” என்றதும் அரசனுக்கு லேசாக புரிந்தது.

      “இந்த தி.நகர், தாம்பரம் துணிக்கடைக்கு பக்கத்துல டம்ளரில் இனிப்பு பாலாடை கட்டி மாதிரி விற்பாங்களே அதுவா?” என்றான்.‌

    “ஆங்… அது மாதிரி தான். ஆனா கருப்பட்டி போட்டா டேஸ்ட் அள்ளும். நான் காசுக்கு தரலை. சும்மா தான் தர்றேன், தெரிந்த வீட்ல கொடுக்க கொண்டாந்திருக்கேன்” என்று நீட்டினாள்.

      அப்பொழுதும் வாங்க மறுத்து “எனக்கு அதெல்லாம் செய்ய தெரியாதுங்க” என்றதும் “ஓ அப்படியா” என்று விட்டுவிட்டாள்.

        போகும் பொழுது விக்கியை கவனித்தாள். சின்ன பையன் மட்டும் இருக்கான் போல, மத்தவங்க எல்லாம் கிளம்பிட்டாங்க’ என்று தன் வேலையை கவனித்தாள்.
     
      மற்ற வீட்டுக்கு எல்லாம் பால் ஊற்றி முடித்து, வீட்டுக்கு வந்தாள்.
     
      இரண்டு முறை அரசன் அழைத்து விட்டதாக தவறிய அழைப்பு சுட்டிக்காட்டியது.

    “மிஸ்ட் கால் இருக்கு? என்னவாம் இவருக்கு” என்று அழைத்தாள்.

      “ஹலோ.” என்று அழைக்க, “சாரிங்க.. தப்பா எடுத்துக்காதிங்க.. உங்கப்பாவிடம் நான் பேசணும்.” என்றான்.‌

      ‘அப்பாவிடமா? எதுக்கு பேசணும்? ஒரு வேளை நம்மிடம் பேசறது போதாதுனு நேரா அப்பாவிடம் பொண்ணு கேட்க நினைக்கறாரா?’ என்று, “எதுக்கு? நான் உங்களை பத்தி எந்த அபிப்ராயமும் சொல்லலையே” என்றாள்.

      “நீ சொல்லவேண்டாம்… நான் அதுக்காக உங்கப்பாவிடம் பேச விரும்பலை.
      உங்கப்பா வீட்டுக்கு வந்தப்ப என் வீட்ல ஆட்கள் நிறைந்து இருந்ததா சொன்னார்ல. உங்க அப்பா கண்ணுக்கு அவங்க எல்லாம் தெரிந்தாங்களா?” என்று கேட்டான்
       
       ‘லூசா இவரு அதான் வீடு முழுக்க ஆட்கள் இருந்தாங்களே’ என்று குழம்பினாள்.

      “என்ன உலறுர?” என்றாள் மலர்.

    “ப்ளீஸ் நான் உலறலை. உன்னிடம் எப்படி சொல்லறது? எங்க வீட்ல தினமும் 4 டூ 5 கல்யாண வீட்ல இருக்கற மாதிரி ஆட்கள் நடமாடறாங்க. ஆறு ஆனதும் எல்லாரும் மறைஞ்சிடறாங்க” என்றான்.

      “யோவ்… தமிழே என்னயென்ன பைத்தியம்னு நினைச்சியா? என்னிடம் பேச இஷ்டத்துக்கு கதைவிடற” என்றாள்.

      “ஏய் தமிழ்… நிஜமா கதை விடலை. இங்க வந்ததிலருந்து இது நடக்கு. தினமும் கல்யாண வீட்டு கும்பல் மாதிரி நிறைய பேர். பால் ஊத்தற பொண்ணு வந்து போனதும் மறைஞ்சிடறாங்க. யாரிடமும் சொல்ல முடியலை. இன்னிக்கு அந்த கும்பலிடம் யார் நீங்க என்ன ஏதுனு கேட்க அங்க இருந்த பையன் கை பிடிச்சுக்கிட்டேன். சொன்னா நம்ப மாட்ட.. அவன் யார் கண்ணுக்கும் தெரியலை. மதியம் கடைக்கு கூட்டிட்டு போய் பலூன் வாங்கினேன். யாரும் இவனை பார்த்து யார் இவன் என்ன உறவு எதுவும் கேட்கலை.

       இப்ப கூட உன்னிடம் சொல்ல காரணம். அன்னைக்கு உங்கப்பா அந்த கல்யாண கும்பலை பார்த்ததா நீ சொன்ன. அதான் அவரிடம் பேசி, உங்க கண்ணுக்கு தெரிந்தாங்களானு கேட்க நினைக்கிறேன். கொஞ்சம் போனை செந்திலிடம் கொடேன்” என்று இறைஞ்சினான்.
     
       மலருக்கு இவன் என்ன சொல்லறான், என்று புரிவதற்கே சற்று நேரம் பிடித்தது.
      “அரசன்… நீங்க ஏதோ சொல்லறிங்க. ஆனா எனக்கு சரியா புரியலை. ஏதோ கதை விடற மாதிரி இருக்கு. அதோட அப்பாவிடம் இதை பத்தி என்னால பேச முடியாது. நான் உங்களிடம் பேசறது அப்பாவுக்கு தெரியாது.” என்றாள்.

      “தமிழ் ப்ளீஸ்… என்னை விரும்பறதுக்கு தான் பதில் சொல்லாம ஏய்க்கற. இந்த குழப்பத்தையாவது தீர்வு களைய உதவு. ஏன்னா என்னை சுத்தி பேயுங்க இருக்கா அமானுஷ்யமா சம்திங் சொல்ல தெரியலை.” என்றவன் குரலில் உண்மையான பரிதவிப்பு.

      தன்னிடம் உண்மை உரைப்பதாக தான் மலர் உணர்ந்தாள்.

      போன் பேசிக்கொண்டே சீமபாலில் கருப்பட்டி போட்டு சுடவைத்து வத்தவிட்டவள், “எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. அப்பாவிடம் பேசி பார்க்கறேன்.” என்றாள்.

      “ஏய் தமிழ் நிஜமா நான் உன்னிடம் பேசறதுக்கு சாக்கு வச்சி இப்படி உலறலை. உன்னிடம் பேச நான் எதுக்கு தயங்க போறேன். இது வேற அதனால் செந்திலிடம் பேசிட்டு சொல்லு.” என்றதும் “ம்ம்ம” என்று துண்டித்துக் கொண்டாள்.

       ‘இவரென்ன ஏதோ சொல்லறார். வீடு முழுக்க ஆட்கள் இருப்பதை நான் பார்த்தேன். என் கண்ணு பொய் சொல்லுமா? ஆனா அதே ஆட்கள் சாயந்திரம் போறச்ச இல்லை. அதே போல அந்த பையனை நான் பார்த்தேனே. என்னவா இருக்கும்?’ என்று யோசித்தபடி டிபன் பாக்ஸில் சீமபாலை எடுத்து கொண்டாள்.
      நேரில் ஒருமுறை காண்பது சரியாக தோன்றியது.

       ஆனால் தனியாக அவர் வீட்டுக்கு விளக்கு வைத்தப்பின் சென்றால் நன்றாக இருக்குமா? டிபன்பாக்ஸ் வரை ரெடிசெய்துவிட்டு சூடாக கொடுப்பது தானே என்று மனம் இடித்துரைத்தது.

      ‘பச்… யாராவது பார்த்தா ஏதாவது பேசவா?’ என்று யோசித்தாலும் கால்கள் தானாக வாசலுக்கு அவளை அழைத்து வந்துவிட்டது

      அடிக்கடி தன்னிடம் உரண்டை இழுக்கும் பெண்மணி வரவும், “பங்கஜம் அக்கா… என் கூட அந்த வீடு வரை வாயேன்.” என்று கூப்பிட்டாள்.

      “ஏன்டிம்மா..‌ அந்த வீட்டுக்கு? அங்க ஒரு வயசு பையன் தானே இருக்கான்” என்றார்.‌
     
      “அட ஆமா.. நான் பால் ஊத்தற வீடு தான். மாடு கண்ணு போட்டு சீமபாலை எல்லாருக்கும் தந்தேன். சரி இங்கன இருக்கற வீடு தானேனு அந்தாளுக்கும் தந்தேன். அவருக்கு காய்ச்ச தெரியாது வேண்டாம்னு சொல்லிட்டார். இப்ப வீட்ல எனக்கும் அப்பாவுக்கும் காய்ச்சினேன். உனக்கே தெரியும்‌ அப்பா  தொண்டையில் கொஞ்சூண்டு தான் இறங்கும். அதான் அட்லீஸ்ட் அந்தாளுக்கு கொடுப்போம்னு. ஆனா இந்த நேரம் அங்க தனியா போக பிடிக்கலை. ஏதாவது வேலை வெட்டி இல்லாததுங்க ஏதாவது பேசும். நீ கூட வந்தா யாரும் பேச மாட்டாங்க” என்று கூறவும் பெரிய மனது செய்து பங்கஜம் கூட வந்தார்.

       வழியில் ஏதேதோ பேச எல்லாவற்றையும் சகித்து நடந்தாள். கல்யாணத்தை பத்தி, வேலையை பற்றி என்ன தூண்டி துருவி கேட்க முடியுமோ எல்லாம் கேட்க கடனேயென்று பதில் தந்தாள் மலர்.

        கதவு தட்டி நிற்க, தமிழரசன் கதவை திறந்தான்.

      “என்ன தம்பி வீட்ல தனியா இருக்கியா? வீடெல்லாம் சௌகரியமா இருக்கா? இந்த மலரு வீட்ல மாடு கண்ணு போட்டது. சீமபாலு உனக்கு சுட வைக்க தெரியாதாமே. அதான் உனக்கு கொடுக்க கொண்டாந்தா. தனியா வர புள்ளைக்கு பயமாம். தெரு நாயுங்க அங்கங்க குலைக்குதுங்க. தெருவிளக்கும் சரியா எரியலையே. அதான் துணைக்கு வந்தேன்.” என்று கூற, மலரோ பாலை அவனிடம் கொடுத்தாள்.
      கருப்பட்டி வாசமோ மூக்கை துளைத்தது. “தேங்க்ஸ்ங்க… வீட்டு பிரிப்ரேஷன் செய்த இனிப்பு, மிச்சம் வைக்க மாட்டேன்.” என்று நன்றி கூறி பெற்றுக் கொண்டான். மலரின் பார்வை அங்கிருந்த விக்னேஷ் மீது படிந்து மீண்டது.

       ஆனால் அது யார் குட்டி பையன் என்று கேட்கவில்லை.

      காரணம், “நீங்க தனியா தான் இருக்கிங்களா தம்பி?” என்று பங்கஜம் கேட்க, அரசனோ விக்கியை கண்டு “ஆமாங்க” என்றான்.

       அதில் லேசான சோகம். ஏற்கனவே போனில் அனாதை என்று பேசியது, இதில் சற்று முன் அவன் பேசியது என்றதெல்லாம் மனதில் ஓட, எதையும் பேசி குழப்பாமல் வந்தாள்.

      அவளுக்கு இங்கிருந்து சென்றதும் பங்கஜத்திடம் பையன் யாரையாவது பார்த்திங்களா? என்று கேட்டுவிட்டு, நாளை காலை நான்கு டூ ஐந்து வந்து பார்த்துவிட்டு முடிவெடுக்கலாமென்று நினைத்தாள்.

      லேசான வாட்டத்துடன் அரசனை திரும்பி திரும்பி பார்த்து நடையிட, அரசனோ, “சீம்பால் சாப்பிடறியா விக்கி” என்று கேட்க மறுத்துவிட்டு சாக்லேட் சுவைப்பதில் தீவிரமானான்.

      அரசன் சீமபாலை ருசித்து இமை மூடினான்.‌

      பங்கஜம் வெளியே வந்ததும், “ம்ம்ம் தனியா அந்த தம்பி இந்த வீட்ல இருக்கு. போராடிக்காது வேலைக்கும் போகாம வீட்லயே இருக்கு. வீட்லயே வேலை செய்யுதோ? ஏன்டி உனக்கு ஏதாவது தெரியுமா?” என்று கேட்க, ”அங்க ஒரு குட்டி பையன் இருந்தான் நீங்க பார்க்கலையா” என்று கேட்க, “எவடி இவ எடக்கு மடக்கா?” என்று பேசியவர் “உங்கப்பாவுக்கு உடம்பு எப்படியிருக்கு? ஏதாவது முன்னேற்றம் தெரியுதா?” என்று கேட்டார்.‌

      “எங்க… ஒரு முன்னேற்றமும் இல்லை..‌. ஏதோ கஞ்சி கூழ் இட்லி சூப்பு டீனு குடிக்கறார்.” என்று பேசவும், “சரிடிம்மா என் மருமக சோறாக்கி வச்சியிருக்கும். நேரத்துக்கு சாப்பிடலை, அப்பறம் தட்டை கழுவாமலேயே அடுப்படியில் போட்டுடுவா. நான் போறேன்.” என்று செல்லவும், மலரும் சிந்தனையோடு அரசனின் வீட்டை பார்த்து தந்தைக்கு ரசம் சோற்றை மைய கரைத்தாள்.

       ‘எங்கப் போன’ என்று பார்வையால் செந்தில் கேட்க, “அந்த முக்கு வீட்ல சீம்பால் கொடுத்துட்டு வந்தேன். அவர் தனியாளு சீம்பாலை சுட வைக்க தெரியாதுன்னு சொன்னார். சரி கொஞ்சம் கொடுப்போம்னு போனேன்.” என்றவள் பாத்திரத்தை விளக்க சென்றாள்.

       இரவு விக்கியை அணைத்துக் கொண்டு உறங்க, அவனோ அரசன் கால் மீது காலை போட்டு உறங்கினான்.‌

      எங்கே காலையில் எழுந்தால் காணாமல் போய் இருக்கும் இந்த குட்டி பையனும் சென்றிடுவானோயென கைவளைவில் படுக்க வைத்துக் கொண்டான்.
    ஆனாலும் வாட்சப்பில் “தமிழ்… என் மாமனார் செந்திலிடம் கேட்டியா?” என்று ஆடியோ வாய்ஸ் மெஸேஜை அனுப்ப, “ஓவர் வாய் உங்களுக்கு.. மாமனாரா?

       ஆனாலும் உங்க குழப்பத்தை அதிகரிக்கலை. அப்பா உங்க வீட்டுக்கு வந்தப்ப உங்க குடும்பத்துல நகைகள் பட்டுசேலை போட்டு இருந்த ஆட்களை பார்த்தாராம். கல்யாண வீடு மாதிரி தான் ஆட்கள் இருந்தாங்களாம். ஆனா அவங்களாம் மறைந்ததா நீ சொன்னதை அவர் நம்பலை.” என்று அவளும் கூறினாள்.

    “அப்ப உங்கப்பாவோட காலையில் நீ எங்க வீட்டுக்கு வா. வந்து பாரு… அப்படியே கொஞ்சம் கொஞ்சமா இந்த துகள் துகளா மின்னி மின்னி மாயமா மறைந்திடுவாங்க.” என்று கூற, “ஏதேது பேய் படத்துல வர்ற சீன் மாதிரி சொல்லற” என்று சிரித்தாள்.

        “உண்மையிலேயே பேயா இருப்பாங்களோன்னு டவுட் இருக்கு தமிழ். ஆனா என்னை சின்னதா கூட என்னை காயப்படுத்தலை. சொல்லப்போனா என் கல்யாணம் நடக்க, எல்லாரும் ஆர்வமா தயாராகறாங்க. மத்தபடி என்னை எதுவும் செய்யலை. அதோட என்னை நேத்து பார்த்ததா இன்னிக்கு நினைவில்லை. புதுசா பார்க்கற லுக்கு. கல்யாணத்துக்கு ரெடியாகலையானு என்னிடமே கேட்கறாங்க.” என்றான். அதில் உண்மையான வருத்தம் தோணித்தது.

       “ஒரு விஷயத்தை அதீதமா நினைச்சிட்டே இருக்கிங்க அரசன். மேபீ அதோட தாக்கமா கூட உங்களுக்கு தோன்றலாம்.” என்றாள்.
     
       “நான் அப்படி தான் முதல்ல நினைச்சேன் தமிழ். ஆனா உங்கப்பா பார்த்ததா நீயே சொன்னியே. அப்ப அவங்க என் கனவுல வரலையே. நிஜமா நடமாடறாங்க தானே?!” என்றான்.‌

      தமிழ் லேசாக சிந்தித்து, “மேபீ… அவங்களும் உன்னை போல உன் கல்யாணத்தை பார்க்க ஆவலா இருந்து உயிரை விட்டாங்களோ என்னவோ. அந்த மைண்ட் செட்ல இருந்து நகராம அந்த லூப்ல மாட்டிட்டு இருக்கலாம்.” என்றாள்.
       இதுக்கு அறிவியல்ல ஏதோ பெயர் சொல்வாங்க. பச்… எனக்கு அதை சரியா சொல்ல தெரியல.” என்றாள்.

      “ம்ம்ம். நானும் கேள்விப்பட்டதுண்டு. பெயர் சரியா சொல்ல தெரியலை. நமக்கு நடந்தது ஏற்கனவே நடந்தது மாதிரி இருப்பதும், ஒரு இடத்தை பார்த்தா ஏற்கனவே வந்தது போலவும், சிலரை பார்த்தா ஏதோ ஜென்ம பந்தம் போல, இது மாதிரி ஒரு விஷயம் ரிப்பீட்டட்டா நடப்பதும் உண்டு. ஆனா இவங்க உயிரோட இருக்காங்களா? னக்கும் அவங்களுக்கும் என்ன பந்தம்? இது தான் தெரியலை. அந்த பையன் என்னை மாதிரி சாயல்ல இருப்பானாக்கும்” என்றான்‌.

      செந்தில் வாய் குழைத்து லேசாய் இரும, மலர் பேசலாமென்று வாய்ஸ் மெஸேஜில் பதிவாக கையெடுத்ததில் அவரது இருமல் சந்தமே பதிவாகி சென்று கைப்பட்டு அரசனுக்கு சென்றது.
     
      உடனடியாக, “அப்பா வந்துட்டாரா ஓகே குட் நைட் தமிழ்.” என்று அனுப்பினான்.

      “குட் நைட்” என்று அனுப்பியவள் மனமோ அந்த வீட்ல இருப்பதால் அவருக்கு அந்த உருவங்கள் தெரியலாம். ஆனா எனக்கு ஏன் அவங்க உருவம் தெரிந்தது. பங்கஜம் வந்தப்ப அங்கவொரு பையன் இருந்தானேனு கேட்டா அப்படியாரும் இல்லை என்பதா பேசினாங்க.
      
       தமிழரசனுக்கு பேயுங்களோ யாரோ கண்ணுக்கு தெரியற மாதிரி ஏன் என் கண்ணுக்கும் தெரியறாங்க. தமிழரசனுக்கும் எனக்கும் நடுவுல ஏதோவொரு பந்தம் இருக்கு. அதுயென்ன?” என்றவளுக்கு இரவெல்லாம் உறக்கம் வரவில்லை.

    -தொடரும்.

  • அலப்பறை கல்யாணம்-5

    அத்தியாயம்-5

      “அப்பா…” என்று பதறி மலர் தந்தையை கவனித்தாள். கட்டிலிலிருந்து கீழே விழுந்து வாயில் எச்சி ஒழுகியது.

      ஏதோ பேச வாயெடுத்து காற்று வந்து சேர்ந்தது.

      “எதுக்கு தான் உருண்டு உருண்டு வர்றிங்க. உங்களை நான் நல்லா தானே பார்த்துக்கறேன்.” என்று ஆற்றாமையுடன் தந்தையின் வாயை துடைத்து விட்டு கைத்தாங்கலுடன் மெத்தையில் படுக்க வைத்திட முயன்றாள்.
     
        “உன்னை கஷ்டப்படுத்திட்டேன். என்னை மன்னிச்சிடு” என்று கூறி முடிக்க, அவரால் அகன்ற  முத்திரபையால் கழிவுநீர் வெளியாகி அதை சுத்தப்படுத்த ஆரம்பித்தாள்.

      “தினம் இப்படி ஆயிரம் முறை சொல்லுங்க. இதை கேட்க தான் கஷ்டமாயிருக்கு.

    ஏன்ப்பா… இப்படி பண்ணற‌. கட்டிலில் இருந்து விழுந்தா நீ செத்துடுவியா?

      எனக்கு கஷ்டம் கொடுக்காம நீ சாகணும்னு எத்தனை முறை விழுந்தாலும் அடிதான் படும். சாகமாட்ட. உன்னை நான் சரியா பார்த்துக்கலையா சாக ஆசைப்படற.” என்று கோபமாய் பெனாயில் ஊற்றி துடைத்து விட்டு இப்பொழுது டெட்டால் ஊற்றி இடத்தை சுத்தப்படுத்தினாள்.

       “என்னை குளிபாட்டி சேவகம் செய்து நீ கஷ்டப்படணுமா? இதோ இப்ப கூட பாரு.” என்று சுட்டிக்காட்டினார்.

      தந்தை செந்திலால் தனியாளாக நடக்க முடியாது, உட்கார முடியாது, ஏதோ வார்த்தை தந்தியடித்து பேச்சு வந்துவிடும். சிறுநீர் மலம் கழிக்க கஷ்டமே. இதே ஆண் மகனாக இருந்தால் இந்தளவு வேதனை இருந்திருக்காது. மகளை பெற்றெடுத்து அவளே எல்லாம் செய்யவும், அந்த எமன் அழைத்தால் சென்றிடலாமே என்ற வருத்தம். அதற்கு தான் இறப்பை நாடி முயற்சித்து தோல்வியடைந்து துவண்டுவிடுகின்றார்.

        “நீ செத்துட்டா எல்லாம் சரியாகுமா அப்பா. ஏன் இப்படி சாகறதுக்கு ஆசைப்படற.

    பெத்த பொண்ணு உன்னை குழந்தையா பார்த்துக்க கூடாதா? இதே எனக்கு கல்யாணமாகி நான் உண்டாகி பையன் பிறந்து அவன் உன்னை போல ஜாடையில் இருந்தா எல்லாம் செய்வேன்ல. இப்ப என் பையனா நினைச்சிக்கறேன்.” என்று பேச கண்ணீரை தவிர அவரால் பதில் அளிக்க முடியவில்லை.

    ”உனக்கொரு கல்யாணம் பண்ணணும். அதுக்கு எனக்கு வக்கில்லை. கல்யாண பதிவு செய்யற இடத்துல தானே வேலையில் இருக்க. நீயும்  கல்யாணம் பண்ண உன்னை பத்தி பதிய வைக்கலாமே?” என்று மகள் நலனை கருத்தில் கொண்டு கேட்டார்.

      “என்னத்த.. பதிவு எல்லாம் பண்ணிட்டேன். சாதி மதம் பார்ப்பதில்லைனு போட்டாச்சு. நீ பார்க்கலைன்னா என்னம்மா நான் சாதி மதம் பார்ப்பேன்னு என்னைமத்தவங்க ரிஜெக்ட் பண்ணிடறாங்க.

    இதுல நகை நட்டு சீர்வரிசைன்னு நினைச்சாளே பயமாயிருக்கு‌. வெட்கமேயில்லாம பையனை பேரம் பேசி இம்புட்டு நகை வேண்டும்னு மென்ஷன் பண்ணறாங்க.

      சரி நம்மளை மாதிரி ஆதரவுயில்லாத ஆட்கள் இருப்பாங்கன்னு அவங்களை கல்யாணம் பண்ணுவோம்னு அதுக்கும் முயற்சி பண்ணி எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத அனாதையா கூட கேட்டுப்பார்த்தேன். அவனுக்கும் குடும்பம் வேண்டுமாம்.” என்றவள் முகம் விரக்தியில் சிரிப்பானது.

    “கல்யாணம் செய்ய பதிவு செய்து காத்திருப்பது என்னை மாதிரி பொண்ணுக்கு வேஸ்ட். ” என்று கூறி கைகளை சோப்பு போட்டு கழுவி, மற்ற வேலையை கவனிக்க ஆரம்பித்தாள் நம் நாயகி தமிழ்மலர்.

      தமிழரசனிடம் போனில் பேசி சண்டையிட்டு, இது வேலைக்கு ஆகாது என்று சற்று முன் அவனை பற்றிய நினைப்பையும் உதறியப்படி, அவனது வீட்டை வெறித்தாள்‌.

         பழைய வீட்டை வாங்கி பெயின்ட் அடித்து பளபளப்பாய் வைத்திருந்தான். இங்கிருந்து பார்த்தாலே அவன் வீடு தெரிந்தது.
     
      ‘பரவாயில்லை… வீடு பெரிசா பார்த்து வாங்கியிருக்கான். ஆசையா கல்யாணம் முடிச்சி பெரிய குடும்பமா வாழ நினைக்கிறான். ம்ம்.. ஆனா பொண்ணை கல்யாணம் செய்த வீட்டில் அப்பா அம்மா வேண்டுமின்னா தங்குவாங்க. கூடுவே பெரிய குடும்பம் கேட்கறான். கேனப்பைய… இவனுக்கு வேற சாயந்திரம் பால் ஊத்தணும்.

      ஆனாலும் இவன் எதுக்கா இங்க வந்து வீடு வாங்கியிருக்கான். எங்கயாவது வாங்கலாம்ல? என்னை பத்தி தெரிய வந்திருப்பானா? என்று நினைத்தவளின் மனசாட்சி, ‘ம்கூம்.. உன்னை பத்தி சீக்ரெட் என்னயிருக்கு? பால்காரி அப்பனை வச்சி கஞ்சி ஊத்தறதை தெரிந்து தலைத்தெறிக்க ஓடியிருக்கணும். அவன் நிச்சயம் உன்னை ஆராய வரலை.’ என்று காறி உமிழ்ந்தது.

       அங்கிருந்த பசுமாடு கத்தவும், ‘இவனை பத்தி நினைச்சி வேலைக்கு ஆகாது. நம்ம வேலையை கவனிப்போம்’ என்று வைக்கோலை அள்ளி மாட்டிற்கு தீவினம் போட்டு தன் பணியை கவனித்தாள் தமிழ்மலர்.

         இங்கு நம் நாயகன் தமிழரசன், தன் கனவில் பார்த்த இடங்களை தன் வீட்டில் பொருத்தி பார்த்தான்.‌

      அவனுக்குள் அட இந்த இடத்துல இந்த ஜாடி வச்சா நல்லா தான் இருக்கும்‌. இங்க ஒரு பெயிண்டிங் இருந்ததே. அது போல நம்மளும் இங்க பெயிண்டிங் வச்சி பார்க்கணும். இங்க வெள்ளைநிற ஸ்கீரின் இருந்தது. கடைக்கு போனா அந்த கலர்லயே ஸ்கீரின் வாங்கிடணும்.
       ஒருயிடத்தில் வந்ததும், இங்க கனவில் பெரிய குடும்ப போட்டோ இருந்தது. இங்க என்‌ அப்பா அம்மா போட்டோ கூட வைக்க முடியலை. அப்பா முகம், அம்மா முகம் இது கூட தெரியாம வாழறேன். பெத்தவங்க யாருனு தெரியாம வாழறது எல்லாம் தலைவிதி.’ என்றவன் தன் வலியை மறக்க, தன் கனவில் கண்டதை வரைய ஆரம்பித்தான்.

      தமிழரசனுக்கு ஓவியம் வரையவும் நன்றாக வரும். ஏன் ஓரளவு ஆயக்கலையில் பாதியை அறிந்தவன். எல்லாம் அனாதை ஆசிரமத்தின் புண்ணியம். ஒன்றை மாற்றி ஒன்றை கற்றுக்க கொடுக்க யாராவது வந்தால் சோம்பல் படாமல் அனைத்தும் சமூகப்பணியை செய்ய வருபவரிடம் கூச்சமின்றி கற்றுக்கொள்வான்.‌

      இன்று மனதை மாற்றிட ஓவியம் வரைய துவங்கி மனதை மாற்றிவிட்டான்.
    ‌
       ஆதிகாலையில் கண்டதில் அவனுக்கு பிடித்த புகைப்படத்தை வரைந்தான். ஆம் குடும்ப புகைப்படம்.
     
      கல்யாண கோலத்தில் இருந்தவனை மட்டும் தன்னை போல வரைந்திருக்க மற்றவர்கள் எல்லாம் தன் இஷ்டத்திற்கு வரைந்து முடித்தான்.

       மணமக்கள் முன்னே ஐந்து சிறுவ சிறுமியர் இருக்க, தன் அருகே தாத்தா பாட்டியும், மணப்பெண்ணின் அருகேயும் தாத்தா பாட்டியையும், அதன் அருகே அப்பா-அம்மா, என்று  தோற்றத்திலும் பெரிம்மா, சித்தி என்று தனிதனிக்குடும்பமாக வரைந்து முடித்தான்.

    காலிங்பெல் சத்தம் கேட்டதும், ஓவியத்தூரிகையை காதில் சொருகி, யாரென்று பார்க்க வந்தான்.

      “பால்… அரை லிட்டரா? ஒருலிட்டரா?” என்று கேட்டு மலர் நின்றிருந்தாள்.

      தமிழோ நெற்றிச்சுருக்கி அவளை காண, அவனுக்கு தன்னை தெரியவில்லையோ என்று, “காலையில் டீக்கடையில் பசும்பால் வேண்டுமுன்னு கேட்டிங்களே.” என்று உரைத்தும் முகமாற்றத்தை மாறது பார்க்கவும், “பால் வேண்டுமா?வேண்டாமா?” என்று கோபமாய் மாறினாள்.

      “வேணுமுங்க.. அதுக்காக இப்பவேவா? ஈவினிங் கொடுங்க” என்று கூறவும், தலையிலடித்தாள் மலர்.

    “மணி நாலு முப்பது. இதுக்கும் மேலன்னா? ஆறுமணிக்கா?” என்று கேட்டதும் கடிகாரத்தை கவனித்தான்.

      “அச்சோ.. மணியை கவனிக்கலைங்க. படம் வரைந்தேன். அப்படியே நேரம் போயிடுச்சு. ஒன் மினிட்… ஒன் மினிட்..” என்று ஓடினான்.

    பால் பாத்திரம் எடுத்து வந்து நீட்டியபடி, “காலையில் வரைய ஆரம்பிச்சேன். நேரம் போனதே கவனிக்கலைங்க. மதியம் சாப்பிடக்கூடயில்லை” என்றான்.‌

       ‘பேச்சு வளர்க்கவே கதை கட்டறான்’ என்று பாலை ஊற்றி விட்டு “காலையில் எத்தனை மணிக்கு வேண்டும்?” என்று தன் காரியத்தை பற்றி கேட்டாள்.

      “ஆறு மணிக்குங்க. அதுக்குமுன்ன நல்லா துங்கணும். எழுப்பி விட்டுடாதிங்க” என்று கூறவும் ‘எனக்கு வேற வேலையில்லைப்பாரு. உன்னை வந்து எழுப்ப’ என்று வண்டியை உதைத்து முறுக்கினாள்.

      அந்த டீக்கடைக்காரன் ‘மதியம் சாப்பிட வரலைம்மா அந்த தம்பி. பாலை வேற கொடுக்க. இனி டீ குடிக்கவும் வராது.’ என்று புலம்பியதில், ‘மதியம் சோறு தண்ணி இல்லாம என்னத்தை வரைந்தானோ? பெரிய ரவிவர்மா மாதிரி நினைப்பு. இதுல பெயிண்ட் பிரஷை காதுல சொறுகிட்டு’ என்று சென்றாள்.

      “இந்த பொண்ணு என்ன ஒரு மார்க்கமா பார்க்குது. என்றவன் பாலை அடுப்பில் வைத்து, அச்சோ… செமையா பசிக்கு. மதியம் சாப்பிடாலை. நேர்ததை கூட மறந்திருக்கேன்.’ என்று பாலும் பிரெட்டும் வயிற்றுக்கு திணித்து முடிக்க, முடிவடைந்த பெயிண்டிங்கை காய வைக்க தனியிடத்தில் வைத்தான்.

      அதற்குள் மணி ஐந்தை நெருங்க, தண்ணீர் ஊற்றி செடியை குளிர்வித்துவிட்டு, மேகி செய்ய ஆரம்பித்தான்.
      அடுத்து ஓடிடியில் ரிலீசான படத்தை போட்டுவிட்டு ருசித்தான்.

      நடுவே மசாலா தோசை வாங்கி வீட்டிக்கு வந்து சுவைத்து படுக்க துவங்கினான்.

      கையெல்லாம் வலிக்க, கடிகார முட்கள் வேகமாய் நகர்ந்தது.

      அதிகாலை நான்கு மணிக்கு மீண்டும் அவன் காதில் மங்கல நாதஸ்வர ஒலிகள், ‘அந்த தாலியை மட்டும் கொடுங்கடா. பொண்ணை மட்டும் காட்டுங்க. அவ கழுத்துல கட்டிட்டு முகத்தை மட்டும் பார்த்துக்கறேன்” என்று உச்சரித்ததும், “பொண்ணை விட மாப்பிள்ளை அவசரப்படறார்.”

    “மாப்பிள்ளைக்கு வேஷ்டி சட்டை இந்தா இங்க எடுத்து வச்சிட்டேன்” என்ற குரல், கோவிலுக்கு வேற போகணும் கொஞ்சம் சீக்கிரம் கிளம்ப சொல்லுங்க அவனை” என்ற குரல்கள், அதற்கு பின்னனி இசை கூட்ட, “அந்த நாதஸ்வரம் ஊத சொல்லுங்க. கல்யாண எஃபெக்ட் வரலை‌” என்று கூற, கண்ணை கசக்கி எழுந்தான்.

    நேற்று போலவே ஆளாளுக்கு அங்கும் இங்கும் பரபரப்பாக தோன்ற, ‘இந்த கனவு வேற’ என்று அலுத்துக்கொண்டு படுக்க சென்றவனை, “மாப்பிள்ளை பையன் திரும்ப தூங்கறான். கொஞ்சம் அவனை என்னனு கேளுங்க” என்றதில், தன் பிட்டத்தில் யாரோ அடித்து எழுப்புவதை கண்டு, “கனவு ரியாலிஸ்டிக்கா இருக்கா என்ன வலிக்கு’ என்று எழுந்தவன், இன்னும் கனவு களையலை என்று நேரத்தை பார்க்க, மணி ஆறானது.

    அதே நேரம்‌காலிங் பெல் அடிக்க, எழுந்து கதவை திறக்க சென்றான்.

    தலை முடியெல்லாம் அலங்கோலமாக, மேலாடையின்றி, ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து அவன் கதவை திறக்க செல்ல, ‘கல்யாணப்பையன் பட்டு வேஷ்டி கூட கட்டலை‌ இன்னமும் டவுசரோட சுத்தறான்.‌’ என்ற அலுப்பல் பேச்சை கேட்டு, ‘என்னை தானே சொல்லுங்க’ என்று கதவை திறந்தான்.

    ‘கனவுல பால்காரி எல்லாம் வர்றா’ என்று பாத்திரம் ஏந்தி நின்றான்.

    மலர் தமிழின் அலங்கோலமான வருகையை கண்டு ‘அறிவில்லை டவுசரை போட்டுட்டு நிற்கறான். ஆண்டவா… இந்த கண்றாவி வேற பார்க்கணும்’ என்று அரை லிட்டர் ஊத்த சென்றவள், வீட்ல நிறைய விருந்தாளிங்க வந்திருக்காங்க. எக்ஸ்ட்ரா பால் வேண்டுமா?” என்று கேட்க, “அட நீ வேற அதெல்லாம் கனவுல வர்றவங்க. காணாம போயிடுவாங்க. ஆமா.. நீ ஏன் என் கனவுல வர்ற” என்று கேட்டான்.

    மலரோ தலையிலடித்து ‘நேத்து சனிக்கிழமை தண்ணி அடிச்சிருக்கானா என்ன? போதை தெளியாம பேசறான்.
    மத்தவங்கள்ல யாராவது வந்து பால் வாங்கலாம்ல. அரைகுறையா இவனை அனுப்பிட்டு. மனசுல ஆம்பளை ரேஷ்மிகானு நினைப்பு. சேசே பொண்ணுங்களை ஏன் சொல்லணும்… அந்த முத்தம் வச்சி காஜில சுத்துவானே… ஆங்… அஜய் தேவர் அவன்னு நினைப்பு’ என்று பாலை ஊற்றி திரும்பி பார்க்காமல் சென்றாள்.

    ”என்ன தான் கனவு என்றாலும் பால்காரி முன்ன ஷார்ட்ஸ் போட்டுட்டு வந்திருக்க கூடாது. கனவுல இதை எப்படி மாத்தறது.” என்று புலம்பி பாலை அடுப்பில் வைத்து லைட்டரால் பற்ற வைத்தான்.‌

    “பொண்ணு ஓடிட்டா… பையன் கேஸ் பத்த வச்சி சாக போறான்.” என்ற குரலை கண்டு, திரும்ப யார் யாரோ ஓடி வரவும், அடுப்பில் கை வைத்தவன் லைட்டரை அப்படியே வைத்திருக்க, கை சுட்டது.
    ‘அம்மா’ என்று ஊதியவன், ‘அச்சோ… கனவில்லை’ என்று மற்றவரை காணும் நேரம் ஒவ்வொருத்தராய் மாயமாக மறைந்தனர்.

    ஒவ்வொருத்தராக மறையவும், கண்கள் கசக்கி அதிர்ச்சியாக நின்றான்.

    -தொடரும்.
    பிரவீணா தங்கராஜ்.