புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

எனக்காக வந்தவனே – 10

“செரிப்பட்டு வராது…” என மெதுவாகச் சொல்லிய ஜீவிதன் அமைதியாக தலையசைத்தான்.

“செரி…” என்றவன் அவளிடம் கைநீட்டினான். அவள் ஓரடி பின்னால் நகர்ந்து பின் தயங்கி நிற்க, அவன் கையை இறக்கிவிட்டு அவளை அமைதியாகப் பார்த்தான். “அது நம்ம காதலுக்கு நான் கொடுத்த கடைசி வாய்ப்பு… அதுவும் நீங்க செரிபட்டு வராதுன்னு சொல்றப்ப, நெஜமாவே செரிப்பட்டு வராதுன்னுதான் எனக்கும் தோணுது… இனிமேல் இப்படி எதேச்சையா கூட என்முன்னாடி வராதீங்க… பை…” கடைசியில் அவன் குரல் ஓங்கி ஒலித்திருக்க, அவ்வளவு நேரம் இருவரும் தனியாகப் பேசட்டும் எனத் தள்ளி நின்றிருந்த அபிதன், அக்காவிடம் கத்துகிறான் இவன் என ஓடிவந்தான்.

அவன் பயத்திலும் நியாயம் இல்லாமல் இல்லைதான், காதலித்த பெண் ஆடவனை மறுக்கும்போது அவளிடம் வன்முறையில் இறங்குவதைத் தவறில்லை என ஊக்குவிக்கும் சமுதாயத்தில்தானே இருக்கிறோம்? ஜீவிதன் அப்படிப்பட்டவன் இல்லை என அபிதனுக்கும் நம்பிக்கைதான். இருந்தாலும் காதல் யாரை என்ன செய்யத்தூண்டும் என்பது முடிவற்ற கேள்விக்குறி அல்லவா?

அபிதனுக்கு அவர்கள் பேசிய எதுவும் கேட்டிருக்கவில்லை. அவன் கடைசியாகச் சொன்னது மட்டும்தான் கேட்டது. ஏற்கனவே போனால் போடி என்றவன்தானே என்ற எண்ணமும் சேர்ந்திருந்தது. தன் அக்கா உலகம் சூரியனை விட்டுவிட்டு வேறு எதையாவது சுற்றத் தொடங்கினாலும் ஜீவிதனை மணக்கமாட்டாள் என்பதும் அபிதனுக்குத் திண்ணம். இதை மொத்தமாக முடித்துவிடவேண்டும் என்று நிமிர்ந்தான் அவன்.

கோபமாக ஜீவிதனைப் பார்த்தவன், ” நீங்களே இனி கால்ல விழுந்து கெஞ்சுனாலும் எங்கக்கா உங்க முன்னால வரப்போறதில்ல… வீட்ல மாப்பிள பார்த்துட்டாங்க… முந்தாநேத்துதான் நிச்சயம் முடிஞ்சது. அடுத்த மாசம் கல்யாணம்… வழியப்பார்த்துக் கௌம்புங்க…” என்றான்.

வனபத்ரா அபிதனை அதிர்ச்சியாகப் பார்க்க, ஜீவிதன் அவள் முகத்தைப் பார்க்கவில்லை. அவளது விரலைப் பார்த்திருந்தான். அதில் ஒருவாரம் முன் அவள் அணியாத புதுமோதிரம் ஒன்று இருந்தது. அதைப் பார்த்தவனின் பார்வையில் அடிவாங்கிய உணர்வு தெரிந்தது. அவள் ஏதோ பேசவர, “நிப்பாட்டு…”என்றவனின் குரல் நடுங்கத் தொடங்கியிருந்தது.

“என்னெ வேணாம்ன்னு சொன்ன மூணு நாள்ல நிச்சயம்ன்னா ,சரிபட்டு வரலன்னா கழட்டிவிட்டுட்டு வேற மாட்டிரலாம் ன்னு ஒரு ஸ்டெப்னி வச்சுட்டுதான் என்கூடப் பழகிட்டு இரிந்திருக்க, என்ன? இல்ல இல்ல… நான்தான் அந்த ஸ்டெப்னி… செரியா? உனக்குச் செரிபட்டு வரலன்னவுடனே தேவப்படாதுன்னு தூக்கிப் போட்டுட்ட… அப்படிதான? நீ பயந்து பயந்து சாகறல்ல, புலி சிறுத்தன்னு… அதுங்க மேட்டிங் சீசனுக்கு சீசன் இணைய மாத்தும்… நீ சொன்ன மாதிரி காவியக்காதல் லாம் அதுங்களுக்குக் கிடையாது. பக்கத்துல இருக்கிற எதிர்பாலினம். அவ்ளோதான். ஆனா அதுங்க கூட, அந்தக் குறிப்பிட்ட காலத்துல கூட இருக்கறப்ப அதோட துணைக்கு உண்மையா இருக்கும்… ஆனா நீ? ச்சீ போடி…”

****

அபிதன், அடுப்பில் வைத்திருந்த புளிக்காய்ச்சலைக் கைவிடாமல் கிளறிக்கொண்டிருந்த வனபத்ராவைத்தான் பார்த்தான். மணி நள்ளிரவு ஒன்றே முக்கால். ஜீவிதன் அப்படி பேசிவிட்டுச் சென்றதில் இருந்த நான்கு நாட்கள் கழிந்திருந்தது. வனபத்ரா முன்புபோல சுவரை வெறித்துக்கொண்டு அமராமல் இரவு முழுக்க எதையெதையோ செய்துகொண்டிருந்தாள்.

இப்போது கூடச் சமையலறையில் எதையோ உருட்டும் சத்தம் கேட்கவும் எலி எதுவும் வந்துவிட்டதோ? என்றுதான் அபிதன் எட்டிப்பார்த்தான். ஏற்கனவே எலி இருக்கின்ற தடம் தெரிகிறது என அஞ்சனா சொல்லிக் கொண்டிருந்தார். இப்போது கேட்கும் ஒலியின் கர்த்தா எலி என்றால், அவளது அறையில் வரைந்து கொண்டிருக்கும் அக்காவுக்குக் கேட்டுவிடக் கூடாதே… நாம் அடிக்கப்பார்க்கலாம் எனத் துடைப்பம் சகிதமாக வந்தவன் பார்த்தது வெந்தயத்தை வறுத்துக் கொண்டிருந்த வனபத்ராவைத்தான்.

நட்ட நடுஇரவில் அக்காவைச் சமையலறைக்குள் பார்க்கவும் அபிதனுக்குப் பக்கென்றுதான் இருந்தது, அடுப்பைத் திறப்பதற்குப் பதிலாக சிலிண்டரைத் திறந்துவைத்து பற்ற வைத்துவிடுவாளோ என. வனபத்ராவின் செய்கைகள் சில நாட்களாக அப்படித்தான் இருந்தது.

இரண்டு நாட்களுக்கு முன், வெறித்தபடியே அமர்ந்திருக்கிறவளுக்கு வேலை கொடுக்கிறேன் பேர்வழி என அஞ்சனா சட்னியரைக்கச் சொல்ல, மிக்சி ஜாரை மூடாமல் சுற்ற விட்டிருந்தாள். நல்லவேளையாக அது சூடான பொருட்கள் தேவைப்படாத தேங்காய்ச்சட்னியாக இருந்ததால் பறந்துவந்த பச்சைமிளகாயோடு ஆபத்து முடிந்திருந்தது.

உயிர்ப்பில்லாமல் போன மகள் உடலில்லாமல் வருவது போல வருவதைப் பார்க்கவும் அபிதனிடம் பெற்றோர் விசாரித்தனர்தான். அபிதன் தனக்குத் தெரிந்ததை ஒன்றுவிடாமல் அவர்களிடம் சொல்லியிருந்தான். அதில் அவர்களையறியாமல் அந்த மாப்பிள்ளை பார்க்கும் பேச்சு அன்றோடு நின்றிருந்தது. மூன்று பேருக்குமே ஜீவிதன் மேல் கோபம். 

அஞ்சனாவும் அபிதனும் மாறிமாறி அவனைத் திட்ட, “நிறுத்துறீங்களா ப்ளீஸ்…” என்றிருந்தாள் வனபத்ரா. இருவரும் அவளிடம் கோபத்தைக் காட்டப்போக, பாலமுருகன்தான் நிதானித்து இருவரையும் கண்ணால் அடக்கினார். அவருக்கும் ஜீவிதன் மேல் வருத்தமே. என்ன? வெளியே, குறிப்பாக மகள்முன் காட்டவில்லை.

அபிதனுக்கு இன்னும் மூன்று நாட்களில் கல்லூரி திறந்துவிடும். அவன் நாளை மறுநாள் ஊருக்குக் கிளம்பவேண்டும். வழக்கமாக அவன் விடுமுறைக்கு வரும்போது அம்மாவும் அக்காவும் இப்படி புளிக்காய்ச்சல், இட்லிப்பொடி என அவசரகால ஆயத்த உணவுகள் செய்துதருவது வழக்கம்தான். தனக்காகத்தான் செய்கிறாள் போல என்று பார்த்தவனுக்குச் சோகம்சோகமாக வந்தது. அன்று ஜீவிதன் அப்படி பேசிவிட்டுப் போனபிறகு இன்றுவரை வனபத்ரா அபிதனிடம் ஒருவார்த்தை பேசவில்லை.

“அக்கா…” என்றழைக்க வனபத்ரா அவனைத் திரும்பிப் பார்த்தாள். அவன் ஒன்றும் சொல்லாமல் இருக்க பக்கத்து அடுப்பில் வறுத்த வெந்தயத்தை ஆறுவதற்குக் கொட்டிவிட்டு, காய்ந்த மல்லியைப் போட்டு வறுக்கத் தொடங்கினாள். அந்த வாடை மூக்குக்குள் போக, அபிதனுக்குத் தும்மல் வரவும், காற்றோட்டத்திற்காக வைத்திருக்கும் மின்விசிறியைப் போட்டுவிட்டாள். 

“சாரிக்கா…”

அவனுக்குப் பதில்சொல்லாமல் அமைதியாக வறுத்தவள் மல்லியையும் ஆறக் கொட்டினாள். மீண்டும் அவள் புளிக்காய்ச்சலைக் கிண்டத் தொடங்க அபிதன் முகத்தைப் பாவமாக வைத்தபடி அருகில் நின்றான். அக்கா என அவன் மீண்டும் தொடங்க, அவனை ஒருமுறை பார்த்தவள், வறுத்துவைத்திருந்ததைச் சுட்டினாள், “பரபரன்னு அரைச்சுக் கொடு…”.

அக்கா பேசிவிட்டாள் என்கிற நிம்மதியில் அவள் சொன்னது போல இடித்துத் தந்தவனிடம், “ரொம்பச் சீக்கிரம் கேட்டுட்ட?” என்றாள். அபிதன் திருதிருவென விழிக்க, அவன் கையில் வைத்திருந்ததை வாங்கி செய்துகொண்டிருந்ததில் கொட்டினாள். 

அவள் கலக்கும்போதே உப்பு, புளிக்குப் பதிலாக எலிமருந்து, எறும்பு மருந்து என்று எதையாவது போட்டிருப்பாளோ என்று அபிதனுக்கு இன்னொரு சந்தேகம் வந்து தொண்டையடைத்தது. அவள் இருந்த நிலை அப்படி. நேற்று நிஜமாகவே இரண்டுமுறை உப்புக்குப் பதிலாகச் சோப்புப்பொடியை எடுத்துவிட்டுப் பின் கீழே வைத்திருந்தாள். சமையலறை அருகில் வாஷிங்மெஷின் போடும் இடம் இருந்ததன் புண்ணியம்.

அபிதனுக்கு உள்ளுக்குள் பயமாகத்தான் இருந்தது. அவனல்லவா உண்ண வேண்டும்? ஏதாவது எலியைப் பிடித்துப் போட்டுப் பார்க்காமல் இதை உண்ணக்கூடாது என உறுதியெடுத்தவன் வனபத்ரா உப்புப் பார்ப்பதற்காகக் சுவைபார்க்கப்போக, அவள் கையைப் பிடித்தான்.

அவள் பார்வை என்ன எனக் கேட்டது.

“எலி மருந்து…”

“ஹான்?”

“இல்ல.. கொஞ்சநாளா நீ நீயா இல்லயா… அதான் நீ பாட்டுக்கு உப்புக்குப் பதிலா இதுல எலிமருந்து மாதிரி எதையும் எடுத்துப்போட்டுருப்பியோன்னு சின்னதா ஒரு டவுட்…”

“போட்டுருந்தாலும் போட்டுருப்பேன்.. பரவால.. நீதான சாப்பிடப்போற…” என்றபடியே அவள் உப்புப் பார்த்துவிட்டு இன்னும் கொஞ்சம் உப்பைச் சேர்த்தாள். அதை ஆறவைத்து வெந்நீரில் போட்டெடுத்த கண்ணாடி பாட்டிலில் அடைத்தவள், முகத்தைப் பாவமாக வைத்தபடி நின்ற தம்பியைக் கண்டுகொள்ளாமல் அதை எடுத்தபடி தன் அறைக்குச் சென்றிருந்தாள்.

 அபிதன் பின்னோடே செல்ல, அவளுடைய பொருட்கள்  பெட்டிகளிலும் பைகளிலும் அடக்கப்பட்டிருந்தது. அக்காவை அவன் அதிர்ச்சியாகப் பார்க்க, “பெங்களூருல ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனி வேலைக்குக் கூப்பிடுறாங்க…” என்றவள், “இன்னைக்குக் காலைல ஒன்பது மணிக்கு ட்ரைன்…” என்றாள்.

“அக்கா…” என்றவன் வேகமாகப் பெற்றோரை எழுப்பப்போனான். அவர்கள் விழித்துத்தான் அமர்ந்திருந்தனர்.

“என்னப்பா அக்கா பெங்களூருக்குப் போறேங்குது…” 

“சொன்ன பேச்சு கேட்கற பிள்ளங்களயா நாங்க பெத்து வச்சுருக்கோம்?” அஞ்சனா நொடிப்பாகச் சொல்ல, பாலமுருகன் அவரைப் பார்த்த பார்வையில் லேசான கண்டிப்பு இருந்தது. 

“அவளுக்கு எங்க இஷ்டமோ அங்க போகட்டும் அபி… இதுல என்ன இருக்கு?”

“போகட்டும்… ஆனா, சொல்லாம கொள்ளாம திடுதிடுப்புன்னு ஏன்?  நீங்க பிள்ள வளக்குறது சரியில்லன்னு நானும் சொல்லிட்டே இருக்கேன்… கேட்க மாட்டேங்குறீங்க…”

அவனது பின்னந்தலையோடு சேர்த்து ஒரு அடி விழ, பின்னால் வனபத்ரா நின்றிருந்தாள். “நானும் அதையே தான் சொல்லிட்டே இருக்கேன்… கேட்க மாட்டேங்குறீங்க…” என்றாள் அவளும்.

“ஆமா… ரெண்டு பேரும் பத்துபத்து பிள்ள பெத்து வளர்த்துருக்கீங்க.. நாங்க பிள்ள வளர்க்குறதைப் பத்திப் பேச வந்துட்டீங்க…” அஞ்சனா கடுப்பாகச் சொல்ல, பாலமுருகன் மகளைப் பார்த்தார்.

“அப்பா ஸ்டேஷன் வர வரவாடா?”

“இல்லப்பா… நான் போயிருவேன்… ஸ்கூட்டியையும் சேர்த்துதான் எடுத்துட்டுப் போறேன்.. அதுல போய்க்கிறேன்…” என்றவள் பெற்றவர்களுக்கு இடையில் வந்து அமர்ந்தாள். சிலகணம் அமைதியாக இருந்தவள் எதையோ சொல்லப்போக அபிதன் மீண்டும் இடையில் வந்தான்.

“அக்கா.. நீ கம்பெனில வேல பார்க்கற மாதிரி வேண்டாம்ன்னு தான, பார்த்துட்டு இருந்த எம்.என்.சி வேலைய விட்டுட்டு ஃப்ரீலான்சிங் பண்ண ஆரம்பிச்ச? இப்ப ஏன் திரும்ப?” எனக் கேட்க, அவள் பதிலொன்றும் சொல்லாமல் அன்னையைப் படுக்கச்சொல்லி, அவரைக் கட்டிக்கொண்டு உறங்கியிருந்தாள். 

ஐந்துமணிபோலக் கிளம்பியவள், தம்பியிடம் “உனக்கு ஒரு வேல வச்சுருக்கேன்…” என்றாள். அவள் சொன்னதைக் கேட்ட அபிதனின் விழிகள் விரிந்தன. இருந்தாலும் அவள் சொன்னதைச் செய்யப் போனான்.

மீண்டும் பெற்றோரிடம் வந்தவள், தயங்க, “என்னடா?” என வினவினார்.  பெற்றோரின் முன் அமர்ந்தவள், அமைதியாக ஜீவிதன் திட்டியதற்கு முன் பேசியதைச் சொன்னாள்.

“அது சரிடா.. ஆனா, அதுக்காக அவர் பேசுனதை நியாயப்படுத்த முடியாதும்மா…”

“கண்டிப்பாப்பா… நியாயப்படுத்த முடியாதுதான். ஆனா யோசிச்சுப் பாருங்கப்பா… நீங்களும் சரி, அம்மாவும் சரி… பார்க்கிற வேலைய பிடிச்சுப் பாக்கறவங்க… அவருக்கு அந்த முடிவுக்கு வர்றதுக்கு எவ்ளோ கஷ்டமா இருந்துருக்கும்? நான் அவர் இடத்துல இருந்துருந்தா அந்த முடிவப் பத்தி யோசிச்சுருப்பேன்னு கூடத் தோணலப்பா… ஆப்போசிட் பார்ட்டிய என்ன பண்ணி சரிபண்ணலாம்ன்னு யோசிச்சிருப்பனே தவிர, என் பக்கமிருந்து ஒண்ணைச் செய்யணும், அதுலயும் எனக்கு ரொம்பப் பிடிச்ச ஒண்ணப் பலி கொடுக்க சொல்றதைச் செய்யணும்ன்னு யோசிச்சிருக்க மாட்டேன்.. அப்படி யோசிச்சுருக்காருன்னா அந்த மனுஷனுக்கு என்மேல எவ்ளோ ப்ரியம் இருக்கணும்? அந்தப் பிரியத்துக்காகச் சில வார்த்தைகள மன்னிக்கிறது எனக்கு அவ்ளொ ஒண்ணும் கஷ்டம் இல்லப்பா…”

“யார் கண்டா? ஒருவேள அவனுக்கு அந்த வேல பிடிக்காம இருந்துருக்கலாம். எப்படா விடுவோம்ன்னு பார்த்துட்டு இருந்துருக்கலாம். இந்தக் காலத்துப் பிள்ளங்கலாம் அதத்தான பண்றாங்க.. மாங்குமாங்குன்னு படிச்சு வேலைக்குப் போயிட்டு அந்த வேலைய விட்டுட்டு வெவசாயம் பார்க்குறேன் யாவாரம் பண்றேன்னு வந்து உட்கார்றாங்க…” என்றார் அஞ்சனா நொடிப்பாக.

“ம்மா… பிடிக்காத விஷயத்தை ஜீவிதனைப் பண்ண வைக்க முடியாது. ஜீவிதனோட வேல வேணும்ன்னா எனக்குத் தெரியாம இருந்துருக்கலாம். ஆனா, அவரோட குணம் எனக்கு நல்லா தெரியும்… நீங்க வேணா பாருங்க.. ஒருவேள என்னைப் பார்த்தா கண்டிப்பா இன்னைக்குப் பேசுனதுக்கு முதல்ல மன்னிப்புத்தான் கேட்பாரு…”

மகள் உறுதியாகச் சொன்னதைக் கேட்ட பாலமுருகன், மெதுவாக வினவினார். “பத்ராம்மா… அந்தத் தம்பி சொன்னதுபோலப் பண்ணிப்பார்க்கலாம்தானே?”

வனபத்ரா மறுப்பாகத் தலையசைத்தாள். “மனசுக்குப் பிடிச்ச விஷயத்தை விடச்சொல்லிட்டுப் பண்ற எதுவும் நிலைக்காதுப்பா…நான் எவ்ளோதான் காதலக் கொட்டுனாலும் அவர் இழந்ததுக்கு என்னால காம்ப்ரமைஸ் பண்ண முடியாது. எனக்கு வாழ்நாள் முழுக்க ஒரு குற்றவுணர்ச்சி, அவருக்கு ஒரு ஏக்கம், ரெண்டும் சேர்ந்து வாழ்க்கயே சிக்கலாகிரும்ப்பா…”

ஒருபெருமூச்சொன்றை விட்ட பாலமுருகன், “சரிடா…எதுனாலும் அப்பாம்மா இருக்கோம். மனசுல என்ன நெனச்சாலும் சொல்லு.. தப்பு கிடையாது… சரியா?” என்றார். 

“சரிப்பா…” என்று தந்தையிடம் புன்னகைத்தவள்,  முகத்தைச் சற்றுத் தூக்கிவைத்திருந்த அன்னையின் கன்னத்தில் முத்தமிட்டாள். “வரேன்  அஞ்சு… அந்தப் புலி புடிக்கிறவனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்… அதனால மருமகனுக்கு மரியாத கொடுத்துப் பழகுங்க.. ஓகே?” என்றவள், முறைத்த அன்னையின் மறுகன்னத்திலும் முத்தமிட்டு விட்டுக்கிளம்பினாள். 

தம்பி வரும்வரைக் காத்திருந்தவள், அவன் கையில் இருந்த கூடையைப் பார்க்கவும் கையில் இருந்த பெட்டியை இறுகப் பற்றினாள். அபிதன் அந்தக் கூடைக்குள் இருந்த குட்டிநாயை மெல்ல வெளியே எடுத்தான். வனபத்ரா சட்டென நகர்ந்து தந்தையின் பின்னால் நின்றாள். அதனுடைய கால்காயம் நன்றாக ஆறி இருந்தது. இருந்தாலும் லேசாக நொண்டுவது போலத்தான் நடந்தது.அதுவும் நாளாக நாளாகச் சரியாகிவிடும் என்றார்களாம். மீண்டும் எங்கே தன்னருகே வந்துவிடுமோ என்ற பயத்தோடு வனபத்ரா நிற்க, அவளை அண்ணாந்து பார்த்ததோடு சரி, அருகில் வரவில்லை அது. 

‘உனக்குக் கூட ரோஷம் இருக்கு.. என்ன?’ என்று மனதில் நினைத்தவள், தந்தையை அணையாக வைத்தபடியே வாயிலுக்கு வந்திருந்தாள். மகளை வழியனுப்ப வெளியே வந்த அஞ்சனா வாயிலறையில் இருந்த நாய்க்குட்டியைப் பார்த்துத் திகைத்தார். 

“இது எப்படி இங்க வந்துச்சு?”

“அக்காதான் மா ஹாஸ்பிட்டல்ல இருந்து கூட்டிட்டு வரச் சொல்லுச்சு…” 

“ஹான்?”

“ஆமாம்மா.. எது மேல பயமோ அது பக்கத்துல இருக்கணும்ங்கறதுதான காலம்காலமா எனக்கு சைக்யாரிஸ்ட்ஸ் கொடுத்த சக்ஜஸன்.”

“நீ நாய் வளர்க்கப் போறியா?”

வனபத்ரா வேகமாக மறுப்பாகத் தலையசைத்தாள், “அந்த அளவுக்கு எனக்கு இன்னும் பயம் போகலம்மா.. நீங்க வளங்க…”

“நாங்க ஏன்டி வளர்க்கணும்…”

“வளங்கம்மா… அக்காவையே வச்சு வளர்த்துருக்கீங்க.. ஒரு நாய் வளர்க்க மாட்டீங்களா? ஆமாக்கா… இதுக்கு என்ன பேர் வைக்க?” அபிதன் அந்த நாய்க்குட்டியை ஆசையாகத் தடவிக்கொடுத்த படி கேட்க, அவனை முறைத்தவள், “அபி த செகன்ட் ன்னு வை…” என்றாள். அபிதன் திரும்பி முறைக்க, “அம்மா வரேன், அப்பா வரேன், அபி வரேன்… அபிச்செல்லம்…. அக்கா வரேன்…” என்றாள் பாலமுருகனின் பின்னால் இருந்தபடியே. 

அவள் அபிச்செல்லம் எனவும் அவளை நோக்கி அந்த நாய்க்குட்டி திரும்பவும் “அப்பா.. சூட்கேஸ்…” என்றபடி  வீட்டை விட்டு வெளியே ஓடியிருந்தாள். 

(தொடரும்…)

2 thoughts on “எனக்காக வந்தவனே – 10”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!