புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

எனக்காக வந்தவனே – 11

முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் இருந்த வயதான யானை ஒன்றைப் பரிசோதித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தான் ஜீவிதன். முப்பதுக்கும் மேற்பட்ட கொண்டை ஊசி வளைவுகளில் வண்டியை ஓட்டியபடி வந்தவனுக்குக் கவனம் தப்பக்கூடாது என்பது கவனத்தில் இருந்தாலும் அடிக்கடி மனதில் வந்து நின்றாள் வனபத்ரா.
வேலையைப் பற்றி யோசிக்கலாம் என்றாலும் கூட அவளது நினைவு வரத் தன்மேலேயே கொஞ்சம் கடுப்பானது ஜீவிதனுக்கு. இவன் இப்போது பார்க்கப்போன யானைக்கு, முதுமை காரணமாக ஏற்பட்டிருந்த உடல்நலக்கோளாறுதான். நீண்ட தந்தமும் உயரமுமாக இன்னமுமே கூட அதன் தோற்றத்தில் ஒரு கம்பீரம் இருக்கும். இளமைக்காலத்தில் தீரா ஆளுமையுடன் திகழ்ந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
ஜீவிதனுக்கு இப்போது அந்த யானையைப் பற்றி யோசிக்கும்போது வேறொன்று தோன்றியது. முந்தைய காலத்தில் ஆண்யானைகளைப் பிடிக்க, பெண் யானைகளைப் பயன்படுத்துவார்கள். இப்போது தேவைகளுக்காக யானைகளைப் பிடிப்பதும் இல்லை. அதற்காக பெண்யானைகளைப் பயன்படுத்துவதும் இல்லை. அப்படி பிடிபட்ட யானை இது. எவ்வளவு ஆளுமையுடன் இருந்தாலும் இணை என்று வந்தால் தழைந்துவிடுமா? என்று யோசித்தவனுக்கு உள்ளே நக்கலாக ஒரு நகைப்பும் கூடத் தோன்றியது.
இணை? வனபத்ரா அவனுடைய மனைவியாக மாறுவதற்கு இருக்கின்ற வாய்ப்பு 0.01 சதவீதம் கூட இல்லை என்று தோன்ற மனதில் ஒரு இருள் சூழ்ந்தது. அதை விரட்ட முயன்றபடி தன்னுடைய வீட்டின்முன் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றவன் திகைத்தான். வீட்டின் உள்ளே இருந்த வாயிற்படியில், தன்னுடைய பையைக் கட்டிப்பிடித்தபடி கண்ணை இறுக மூடியபடி அமர்ந்திருந்தாள் வனபத்ரா. அருகே ஒரு பெட்டியும் வேறு சில பைகளும் இருந்தது.
இவள் எப்படி இங்கே? அவனுடைய மனைவியாக வனபத்ரா மாறுவதற்கு இருக்கின்ற வாய்ப்பு 0.01 சதவீதம் என்றால், இவள் இங்கே வருவதற்கான வாய்ப்பு எதிர்மறை மதிப்பீட்டில் அல்லவா போகும்? இது என்ன ஏதோ படத்தில் எல்லாம் காதலி போலத் தெரிவதாகக் காட்டுவார்களே அதுவா? அவனுக்கு முற்றிவிட்டதா?
அவன் திகைத்தே நிற்க, எங்கிருந்தாவது ஏதாவது புலியோ, சிறுத்தையோ, கரடியோ, மானோ, எருமையோ, யானையோ வந்துவிடுமோ என்ற பயத்தோடே அமர்ந்திருந்த வனபத்ரா, அரவம் கேட்கவும் சட்டென நிமிர்ந்தாள்.
வந்துநிற்பவன் ஜீவிதன் எனவும் ஆறுதல் பாதி, அவனைப் பார்க்க நேர்ந்த அவஸ்தை பாதி என கலவையானஉணர்வு வந்தது. சரி, அவனைப் பார்க்கத்தானே வந்தாள், பார்த்துத்தானே ஆக வேண்டும்? என்றபடி அவள் எழுந்துநிற்க, அவன் அவளுடைய விரலையே பார்த்தான். அதைப் பார்க்கவும் வந்த உணர்வுகள் எல்லாம் பின்னால் போக, “மேல் வீட்டு சாவி வேணும் சார்…” என்றாள்.
ஜீவிதனுக்கு அவளைப் பேசிவிட்டு வந்தது அன்றிலிருந்து உறுத்திக் கொண்டேதான் இருந்தது. அதில் என்முன் வராதே என்று விட்டு வந்திருந்தாலும் அவளைப் பார்க்கவுமே மன்னிப்புதான் கேட்கத் தோன்றியிருந்தது.
“சாரி பத்ரா. அன்னைக்கு நான் அப்படி பேசிருக்கக் கூடாது. உங்க சிச்சுவேஷன் அப்படி இருந்துருக்கலாம். நான் புரிஞ்சுக்காம பேசிருக்கக்கூடாது. மன்னிச்சுருங்க… என்ன கோபம் இருந்தாலும் சொன்ன வார்த்தைகள் தப்பு. நீங்க அப்படிப்பட்டவங்க இல்லன்னு எனக்குத் தெரியும்…”
அவள் அவன் சொன்னதையே காதில் வாங்காதது போல, “சாவி..” என்றாள்.
அவளுடைய விரலைப் பார்த்தால் அந்த மோதிரம் அப்படியேதான் இருந்தது. அதைப் பார்க்க அவனுக்காக வந்திருக்கிறாள் என்று மகிழவும் முடியவில்லை. இங்கு ஏன் வந்திருக்கிறாள் என்று குழம்பியபடியே உள்ளே சென்று சாவியை எடுத்துவந்தான்.
சாவியைப் பெற்றபின்னும் அவள் முகம் இறுக்கமாகவே இருக்க, அந்த மோதிரத்தை மீண்டும் பார்த்தவனுக்கு அவன் சொன்ன வார்த்தைகளே மீண்டும் காதில் ஒலிக்க, மண்டைக்குள் பல்பு எரிவதைப் போல இருந்தது. வனபத்ரா அப்படிப்பட்டவள் இல்லை. நிச்சயம்? அது நடந்ததாக அவள் சொல்லவில்லையே? அவளிடம் சாவியைக் கொடுத்தவன், இயல்பாகப் பேச்சுக் கொடுத்துப் பார்த்தான்.
“அபி எங்கெ?” அவன் கேட்டதற்கு அவள் பதில் சொல்லவில்லை. ஒன்றும் சொல்லாமல் மேலே செல்லப்போக, அவள் கஷ்டப்பட்டுத் தூக்கிக்கொண்டிருந்த பெட்டியை மேலே தூக்கிச்சென்றான்.
“இங்கே எதுக்கு வந்த?”
“எனக்கு மேரெஜ் பிக்ஸ் ஆகிருக்குல்ல… ஹனிமூன் ஸ்பாட் சூஸ் பண்ண வந்தேன்…” அவள் நக்கலாகச் சொல்லியதில் அனலடிக்க, ஜீவிதன் அமைதியாக மேலே ஏறினான்.
அவள் வீட்டைத் திறக்கும்வரை அமைதியாகக் கூட நின்றவன், அவள் உள்ளே செல்லப்போகும்போது அவளுடைய கையைப் பற்றினான். அந்த மோதிரத்தைப் பார்க்க. தூரத்தில் இருந்து பார்க்கும்போது தங்கத்தின் பளபளப்புடன் தெரிந்தது அருகில் பார்க்கும்போது சற்று பழைய மோதிரம் போலத்தான் தெரிந்தது.
“நிச்சயம்லாம் நடக்கலதானே?” அவன் கண்ணில் ஒரு உயிர்ப்பு வந்திருந்தது.
“செருப்பு பிஞ்சுரும்…”
ஜீவிதன் அதிர்ச்சியாகப் பார்த்தான். அவனுடைய கை தானாக வனபத்ராவின் கையை விட்டிருந்தது. வனபத்ரா அவனிடம் பேசும்போது எப்போதுமே ஒரு மரியாதை இருக்கும். நான்கு வயது பெரியவன் என்பதால் வயதிற்குரிய மரியாதை கொடுத்துத்தான் பேசுவாள். காதலர்களுக்கிடையில் நண்பர்களுக்கிடையில் என்பது போல வாடா, போடா வாப்பா, போப்பா என்று கூடப்பேசியதில்லை. அப்படிப்பட்டவள் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்க ஜீவிதன் திகைத்திருந்தான். ஒரு மாதிரி ரோஷம் வர, விறுவிறுவெனக் கீழே இறங்கியிருந்தான்.
“ஆமா.. பெரிய ரோஷம்… நீ பேசுன பேச்சுக்கு நான்தான்டா படணும் ரோஷம்…” என்று அவள் சொல்லவும் பாதிப்படி இறங்கியிருந்தவன் மீண்டும் மேலே ஏறிவர, அவள் வீட்டுக்குள் சென்று கதவை அடைத்திருந்தாள்.
“பத்ரா…” என்றழைத்தபடி அவன் கதவைத் தட்ட அவள் திறக்கவில்லை.
பதிலும் வராமல் இருக்கவே, “சில நேரம் பூட்டிருக்க வீடா இருந்தாலும் ஜன்னல் கின்னல் திறந்துருந்தா ஏதாவது உள்ள போயிருந்துருக்கலாம். செக் பண்ணாம உள்ளே போகக் கூடாது பத்ரா…” எனவும் சட்டெனக் கதவைத் திறந்திருந்தாள். அரண்டுபோயிருந்த அவளுடைய முகத்தைப் பார்க்கவும் சிரிக்கக் கூடாது என்று நின்றிருந்தாலும் சிரிப்பு வந்திருக்க, மீண்டும் கதவை அவன் முகத்துக்கு நேராக அறைந்து சாற்றியிருந்தாள்.
சாற்றிவிட்டுத் திரும்ப, விளக்குகளற்ற வீடு கொஞ்சம் பயமுறுத்தத்தான் செய்தது. சட்டென அலைபேசி விளக்கை ஒளிரவிட்டவள், மின்னிணைப்பைத் தேடி, விளக்கையும் ஒளிரவிட்டிருந்தாள். இருள் கொடுத்த அச்சுறுத்தலை வெளிச்சம் விரட்டியிருக்க, நன்றாக ஒருமுறை சுற்றிப்பார்த்து எதுவும் இல்லை என்று உறுதிப்படுத்தியபின் வேண்டிய துணியை எடுத்துக்கொண்டு குளியலறையைத் தேடிச்சென்றாள். குளியலறை இருந்த படுக்கையறைக் கதவைத் திறக்கும்முன் அவன் சொன்னது நினைவு வர, நன்றாக ஆழ்மூச்சை எடுத்துவிட்டுவிட்டுத்தான் கதவைத் திறந்தாள். லேசாகக் கதவைத ்திறந்து எட்டிப்பார்த்தவள், அந்த அறை முழுவதும் ஒன்றும் இல்லை என்றாகவும்தான் உள்ளே சென்று குளியலறைக் கதவைத் திறந்தாள்.
அவளுடைய அருமைத்தம்பி அபிதன், தனியாகத்தானே இருக்கிறோம் என்கிற மிதப்பில், ஒட்டடையும் அடிக்காமல் ஒன்றும் அடிக்காமல் விட்டுவைத்திருக்க, அந்தக் குளியலறையில் அவன் நிற்கின்ற உயரத்தைத் தாண்டி ஒட்டடை தான் படர்ந்திருந்தது.
இதையறியாமல் வனபத்ரா வீராப்பாகச் சென்று கதவைத ்திறக்க, அவளது நேரம், ஏதோ ஒரு சிலந்தி கலைத்திறன் முழுதும் செலுத்திக் கஷ்டப்பட்டு பின்னியிருந்த அந்த நூலாம்படை அழகாகக் கலைந்து ஒரு நடனக்காரனின் நளினத்தோடு வளைந்து வளைந்து கீழே விழ, ஏதோ விழுந்தது என்றுமட்டும் பார்த்த வனபத்ரா அதில் நயத்தையும் பார்க்கவில்லை, கலையையும் பார்க்கவில்லை, என்ன விழுந்தது என்றும் பார்க்கவில்லை. ஏற்கனவே அடக்கப்பட்ட பயத்துடன் இருந்தவள் அலறியடித்தபடி வெளியே ஓடியிருந்தாள்.
கதவை மீண்டும் திறப்பாளோ எனச் சில நிமிடங்கள் நின்றுபார்த்துவிட்டு, அவள் திறக்கவில்லை எனவும் கீழே சென்றிருந்த ஜீவிதன், அலறல் சத்தம் கேட்கவும் பதட்டமாக வெளியே வர, பார்த்தது அரண்டுபோய் அலறிய வேகத்தில் படியிறங்கியிருந்த வனபத்ராவைத்தான். விட்டால் வெளியேயே ஓடியிருப்பாளோ என்னவோ ஜீவிதனைப் பார்க்கவும் நின்றிருந்தாள்.
”என்னம்மா?” அவனும் பதற்றமாகக் கேட்க, ”பாம்பு…” என்றாள் கண்ணீருடன்.
”பாம்புதான? இரு.. பாக்கேன்…” என்றபடி அவன் மேலே செல்லப்போக, அவனது முழங்கையை இறுக்கமாகப் பற்றியிருந்தாள் வனபத்ரா.
”என்னடா?”
”வே…ணாம் ஜீவி…”
”ஒண்ணுமில்லடா… நான் போய் பாத்துட்டு வரேன்…”
”ப்ளீஸ்…ப்ளீஸ்…ப்ளீஸ்… ப்ளீஸ்…” அவள் கெஞ்ச, ”செரி.. ” என்று அரைமனதாகச் சொன்னவன், ”உள்ளுக்க வா…” என்றான். மற்ற நேரமாக இருந்திருந்தால், அவர்களுக்கிடையில் இருந்த ஊடலுக்கு நிச்சயம் வனபத்ரா சென்றிருக்கமாட்டாள். பாம்பு எனவும் பத்தும் பறந்திருந்தது.
உள்ளே நுழைந்தவள், கதவை இறுக்கமாகச் சாற்றித் தாழிட ஜீவிதன் ஒன்றும் சொல்லவில்லை. இது அவனும் செய்வதுதான். ஆனால், அந்தக் கதவில் மேல் பகுதியில் இருந்த தாழ்ப்பாளையும் போட்டவள், கதவணைப்பாக இருக்கும் தாழ்க்கோலையும் எடுத்து மாட்ட, ”பாம்பு என்ன கதவையா உடைச்சுட்டு வரப்போகுது?” என்று கேட்காமல் இருக்க ஜீவிதனால் இயலவில்லை.
ஆமால்ல.. என்பது போலப் பார்த்தவள், சுற்றுமுற்றும் எதையோ பார்வையால் தேடிவிட்டுத் தான் அணிந்திருந்த துப்பட்டாவைக் கழற்றி கதவுக்குக் கீழே இருந்த பகுதியில் நீளமாக அடைத்தாள். ”ஏன்? இரு, நா ஏதாவது பழய சாரம் இருக்கான்னு பாக்கேன்…” அவன் சொன்னதைக் கண்டுகொள்ளவில்லை. நன்றாக அடைத்துவிட்டாலும் ஏதாவது இடைவெளி இருக்கிறதா எனத் தரையில் கன்னம்சாய அவள் பார்க்க, ”வனா… எழும்பு… இது ஊட்டி.. வெறுந்தரையில…” என்றபடி அவளை எழுப்ப முயன்றான்.
அவளை நிமிர்த்தி அமரவைத்தவனை ஒரு அலைப்புறுதலோடு பார்த்தவளுக்கு, அவன் கழுத்தைச் சுற்றி அணிந்திருந்த ஸ்கார்ப்தான் கண்ணில் பட்டது. அதை அவனைக் கேளாமலே உருவியவள், இடைவெளி இருக்கிறது என்று தான் நினைத்த இடத்தில் அதையும் சொருகிவிட்டுதான் நிமிர்ந்தாள். அதன்பின்னரே ஜீவிதனின் முகம் பார்த்து, என்ன செய்தோம் என்பதும் நினைவு வர, ”வேற ஏதாவது துணி இருக்கா?” என்றாள்.
”இல்ல… இதே இருக்கட்டும்…மொத எழும்பிச் சேர்ல இரி…” எனவும் தான் தரையின் குளிரே உறைப்பதுபோல இருந்தது அவளுக்கு. சட்டென எழுந்தவள், அவன் காட்டிய நாற்காலியில் அமரவில்லை. மாறாக, அந்தப் பாம்பு? கீழே வருவதற்கு ஏதாவது வழி இருக்கிறதா? என்று சுற்றும்முற்றும் பார்த்தாள். ஜன்னல் எதுவும் திறந்திருக்கவில்லை. வேறு ஓட்டைகளும் இருப்பதுபோல இல்லை என உறுதிப்படுத்தியபின்தான் அமர்ந்தாள். அப்போதும் கூட, ஒரு சுவரை ஒட்டி நாற்காலியைப் போட்டவள், கால்களை நன்றாக மேலே தூக்கிவைத்துத்தான் அமர்ந்தாள்.
அவள் செய்வதையெல்லாம் பார்த்தபடி இருந்த ஜீவிதன் ஒன்றும் சொல்லவில்லை. ஹீட்டரை மட்டும்போட்டுவிட்டு ஒரு நாற்காலியில் அமர்ந்தவன், எதுவும் செய்யவும் இல்லை. அவள் சற்று ஆசுவாசமடைவது போலத் தெரியவும்தான் மெதுவாகக் கேட்டான்.
”என்ன பாம்புன்னு தெரிஞ்சுச்சாப்பா?”
”செரிம்மா… எப்படியிரிந்திச்சு? நீளம் எவ்ளோ இரிந்திச்சு? கலர் எப்படி இரிந்துச்சு? தோல்ல ஏதாவது வடிவம் மாதிரி இரிந்திச்சா?”
”அதெல்லாம் என் கவனத்துல பதியல ஜீவி…”
”செரிடா.. செரிடா… ஒண்ணுமில்ல… ” என்றவன், சமையலறைக்குள் சென்று மிதமான சூட்டில் நீரை எடுத்து வந்தான்.
”கொஞ்சம் தண்ணி குடி…” என, அவள் அதனை வாங்கவில்லை. அவள் வேண்டாம் எனத் தலையசைக்க, அமைதியாக அமர்ந்து அவனே அதைக் குடித்தான்.
”அபி எங்கெ? அவன் மாடிக்குப் போயிரக் கூடாதுதானே பாம்பு இருக்குன்னா?”
”ஊர்ல இருக்கான்… நாளைக்கழிச்சுதான் வருவான்…”
”நல்லது…” என்றவன், சிலநிமிடங்கள் கழித்து, ”பத்ரா…” என்று மென்மையாக அழைத்தான்.
“என்கிட்ட ப்ரொடக்டிவ் வியர் இருக்கு… பாம்புகளை ட்ரீட் பண்ணும்போது அதைப் போட்டுட்டுத்தான் பண்ணுவோம்.. க்ளவுஸ், பேஸ் மாஸ்க்ன்னு… நான் அதைப் போட்டுட்டு மேல போய்ப் பார்க்கட்டுமா? கடிச்சாலும் ஒண்ணும் ஆகாது…”
அவன் தன்மையாகக் கேட்க, அவள் வேகமாக மறுத்துத் தலையசைத்தாள். முதலில் வனமீட்புக்குழுவினரை அழைக்கலாம் என்று நினைத்திருந்தவன், அவள் கவனத்தில் பதியவில்லை என்றதும் நிதானித்தான். அவள் பாம்பைத்தான் பார்த்தாளா? என்னும் ஐயம் அவனுக்கு வந்திருந்தது. அதைக் கேட்கவும் விரும்பாமல் அமைதியாக அமர்ந்திருந்தான். அவள் குளியலறையில் பார்த்தேன் என்று சொன்னதால் பாம்பாக இருக்கலாம் என்ற எண்ணமும் கூட.
இன்னும் கொஞ்சம் நேரம் கழித்துக் கேட்டுப் பார்க்கலாம் என்றபடி அமர்ந்திருந்தவன், அவள் கால்களைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருப்பதைப் பார்க்கவும், ”குளிருதாடா? ஸ்வெட்டர் எதுவும் வேணுமா?” என்று கேட்டான்.
அவள் வேண்டாமெனத் தலையசைத்தாள். சில நிமிடங்கள் அமைதியாக இருந்தவன், ”எதுவும் வேணும்ன்னா கூப்பிடு…” என்று விட்டு, அறைக்குள் சென்றுவிட அவனைப் போகாதே என்று சொல்லவந்த வனபத்ரா சொல்லவில்லை. இன்னும் நன்றாகக் கால்களைக் கட்டிக் கொண்டவள், ஒருமுறை நன்றாகச் சுற்றிப் பார்த்துப் பாம்பு எதுவும் வரவில்லையென உறுதிப்படுத்தியபடி பின் தான் வரையவேண்டிய வேலையொன்றை மனதில் எண்ணியபடி அப்படியே உறங்கியிருந்தாள்.
ஒரு அழைப்பு ஒன்றை முடித்துவிட்டு வந்த ஜீவிதன் அவளை ஒருகணம் நின்று பார்த்தான்,
”ஊர்தேடி வந்து ஏசுறல்லட்டி?” என்று முணுமுணுத்தவனுக்கு ஒன்று தோன்ற, சத்தம் காட்டாமல் பாதுகாப்பு கையுறையை மட்டும் எடுத்து அணிந்துவிட்டு வெளியே வந்தான். கதவை மெல்ல திறந்தவன், கீழே இருந்த துப்பட்டாவையும் ஸ்கார்ப்பையும் ஒருகணம் பார்த்துவிட்டுக் கையில் எடுத்தான். அவற்றை வெளிவாயில் வழியே அடைத்தவன், மாடிக்கு ஏறினான். அவள் கதவை அப்படியே திறந்துபோட்டுவிட்டு வந்திருப்பதைப் பார்த்தவன், கவனமாகவேதான் உள்ளே சென்றான். எதற்கும் இருக்கட்டும் என வீடுமுழுவதையும் ஒருமுறை கவனமாகப் பார்வையால் அலசிவிட்டுத்தான், குளியலறையை அடைந்தான். அங்கே பாம்பை எதிர்பார்த்துக் கதவைத் திறந்தவன், கருஞ்சாம்பல் நிறத்தில் ஒயிலாக விழுந்துகிடந்த ஒட்டடையைப் பார்த்துவிட்டு இடுப்பில் கைவைத்தான்.
(தொடரும்…)

2 thoughts on “எனக்காக வந்தவனே – 11”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!