புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

எனக்காக வந்தவனே – 16


“தொடாதீங்க ஜீவி… ப்ளீஸ்…” எனவும், பொறுமையாகப் புன்னகைத்தவன் அங்கிருந்த நாற்காலி ஒன்றை எடுத்துப்போட்டு அவள் எதிரில் அமர்ந்தான்.

“இப்போ என்ன?”

“நீங்க தொட்டா எனக்குக் குளிக்கணும் போல இருக்கும்… உங்க பாஷைல குளிக்கணும்… டாக்டர் தலைக்கு தண்ணி ஊத்தாதீங்கன்னு சொல்லிருக்காங்க…”

“சரி… குளிக்கலாம்ன்னு சொல்லவும் சொல்லு…”

அவன் அலட்டாமல் சொல்லவும் அவனை முறைத்தவள், தாளமுடியாத பாவனையில் முகத்தை வைத்தபடி சொன்னாள்.

“ஜீவி.. எனக்குப் பிடிக்கல…”

ஒருகணம் அவளை அமைதியாகப் பார்த்தவன், தொடர்ந்தான். “சரி அதுக்கு என்ன பண்ணலாம்ன்னு சொல்லு… நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை முடிந்த கதை தொடர்வதில்லை ன்னு பாடிட்டுப் பிரிஞ்சு போயிரலாமா?உம் ன்னு சொல்லு.. எங்கம்மா எனக்குப் பெண்ணு பாக்கேன் பாக்கேன்னு சொல்லிட்டுத்தான் இருக்காங்க… நீ சொன்ன மாதிரி நல்ல பெண்ணா பாத்துக் கெட்டிட்டு நிம்மதியாகுறேன்.. நீயும் நல்ல பையனா பாத்துக் கெட்டிட்டு நிம்மதியா இரு… என்ன பண்ணுவோமா?” என்றான் அவளுடைய கண்களைப் பார்த்து.

அவள் கண்ணில் நீர் சேர்ந்திருந்தது. உதடு துடிக்க அவனைப் பார்த்தாள்.

“மொதல்ல இப்படி எதுக்கெடுத்தாலும் அழுகறத நிப்பாட்டு… பொண்ணுங்களுக்கு எவ்ளோ தைரியம் உண்டு? அதுவும் அந்த சிவனையே வந்துபாருன்னு நின்ன காளி பேர வச்சிருக்க உனக்கு எவ்ளோ தைரியம் இருக்கணும்? இதென்ன பழக்கம் ஆனா ஊனா அழுதுட்டு? அப்பறம் பயம் வராம என்ன செய்யும்?”

“ஆமா…நான் அழுமூஞ்சிதான்… பயந்தாங்கொள்ளிதான்… போதுமா? போய் வேலையப் பாருங்க…”

“பத்ரா… ஒரு பிரச்சனை இருக்குன்னா அதுக்கு என்ன தீர்வு, அதிலிருந்து வெளியே வர என்ன பண்ணனும்ன்னு யோசிக்கணும்.. உட்கார்ந்து உட்கார்ந்து அழுதாலோ, நம்ம ரெண்டுபேரும் சண்ட போட்டுட்டே இருந்தாலோ இந்தப் பிரச்சனை தீராது… அப்படி போட்டா தீரும் ன்னா சொல்லு… நானும் ஒத்துழைக்கேன்…”

“அப்ப எப்படா என் கூட சண்ட போடலாம்ன்னு இருக்கீங்க… அப்படிதான?”

“ஏட்டி… ஊர்ல இருந்து வர்றேல்ல மூளய கழட்டி வச்சுட்டு வந்திரிக்கியா? இல்ல முதல்ல இருந்தே அது இல்லயா? நான் என்ன பேசுறேன்? நீ என்ன பேசுற?”

“நீங்க என்ன பேசுறீங்க? என்னைதான் பேசுறீங்க… நான் அழுமூஞ்சின்னு சொல்றீங்க… எனக்கு மூள இல்லன்னு சொல்றீங்க… நான் பயந்தாங்கொள்ளின்னு சொல்றீங்க…”

“நீ பயந்தாங்கொள்ளின்னு எப்ப சொன்னேன்?”

“என் பேருக்கு தைரியம் இல்லன்னா என்ன அர்த்தம்? என்னைக் கேட்டா பேரு வச்சாங்க? வேணும்ன்னா பேர மாத்தி வச்சுக்குறேன்…”

“என்னன்னு மாத்தி வைப்ப?” அவள் பாவமாகவும் கோபமாகவும் சொல்ல, அவனுக்குச் சிரிப்பு வந்திருந்தது. அவள் தீவிரமாகப் பேசி சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது அவன் சிரிக்கவும் அவளுக்குக் கோபம் வந்திருந்தது.

“உங்களுக்குச் சிரிப்பா இருக்குல்ல… அந்த யானக்குத் தந்தம் அவ்ளோ பெரிசா இருக்கு.. அது பக்கத்துல கொஞ்சம் கூட யோசன இல்லாம நிக்கிறீங்க? குத்திருந்தா என்ன பண்றது?”

“மொதல்ல ஆனெய சாந்தப்படுத்தணும். அடுத்து இரத்தத்தை நிப்பாட்ட முதலுதவி பண்ணனும். இதுக்கு முன்னாடி ஆம்புலன்ஸ கூப்பிட்டிருக்கணும்…இதெல்லாம் பண்ணா, க்ரிட்டிகலான இடத்துல குத்தாம இருந்தா காப்பாத்தலாம். இல்லன்னா, இறுதிச்சடங்குக்கு என்ன பண்ணனுமோ அதைப் பண்ணனும்.”

அவன் சொல்லவும் கட்டிலில் அமர்ந்திருந்தபடியே தலையணையை எடுத்து அவனை அடிக்கத் தொடங்கியிருந்தாள். எட்டி அடித்ததில் நிலைதடுமாற அவன் மேலேயே விழுந்திருந்தாள். உடனே தீச்சுட்டதுபோல எழுந்து அமர்ந்தவள், குழந்தை அழுவது போலச் சத்தமிட்டு அழத் தொடங்க, இவளை என்ன செய்வது என்பது போலத் தலையில் கைவைத்துப் பார்த்தான் ஜீவிதன்.

அவள் அழுகையை நிறுத்தாமல் இருக்கவே, தலையில் இருந்து கையை இறக்கியவன்,”பத்து…பத்து…” என்றபடி அவள் புறம் குனிந்தான்.

அவள் பின்னால் சாய, அருகில் வராமல் கீழே மண்டியிட்டு அமர்ந்தவன்,”கைக்கு சானிட்டசைர் போட்டுக்கலாம்தானே?” என்றபடி கையை நீட்ட, விசும்பியபடியே அவனிடம் கையைக் கொடுத்தாள். நீட்டும்போதே அவளுடைய கை நடுங்கத் தொடங்க, ஒன்றும் பேசாமல், அவளுடைய கைகளில் அழுத்தம் மட்டும் கொடுத்தான். அவள் சற்று அமைதியாகவும் , “என்னடா?” என்றான் மென்மையாக.

“அந்த யான உங்கள ஏன் தொடுது?”

இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஜீவிதன் ஒருகணம் திகைக்கத்தான் செய்தான். பின் பொறுமையான குரலில், தன்மையாகப் பதில் சொல்லலானான்.

“தொடுதல் ங்கறது ரொம்ப முக்கியமான மொழிடா… இன்னைக்குச் சில அறிவுகெட்ட ஜென்மங்களால குழந்தைங்க கிட்டயே யாரையும் தொடவிடக்கூடாதுன்னு சொல்லிக் கொடுக்க வேண்டிய கேடுகெட்ட நெலம இருக்கு..

ஆனா, சரியான தொடுதல் கொடுக்கிற அன்பையும் பாதுகாப்பு உணர்வையும் எந்த மொழிச் சொற்களாலயும் கடத்த முடியாதுடா… ஆனெக்கு வேற வேற எந்த மொழியும் தெரியாது… நான் அதுகிட்ட எப்படி நான் உனக்கு நல்லதுதான் பண்ண நெனக்கேன், என்னெ போட்டுச் சவட்டிராதன்னு சொல்லுறது… சொல்லு?

தொடுகையத் தவிர வேற வழி கிடையாது. நான் என்ன மொழில அதுகிட்ட பேசுறனோ, அதே மொழில அதுவும் திரும்பப் பேசுதுடா… அதை எப்படி பேசாத ன்னு சொல்ல? ம்ம்?”

அவன் தன்மையான குரலில் கேட்ககேட்க, அவளது கண்ணில் இருந்து கண்ணீர் மட்டும் வழிந்தபடி இருந்தது.

“எனக்கும் நீங்க தொடுறப்ப அந்த அன்பு, பாதுகாப்பு உணர்வுலாம் தோணுது ஜீவி… ஆனா நீங்க நகர்ந்தபிறகு, அந்தப் புலி, புழு, யான… இதெல்லாம்தான் மனசுல நிக்குது…”

“அதை நீதான சரிபண்ணனும்? ம்ம்?”

“…”

“அந்தப் புலி சரியான வேதனைல இருந்துச்சுடா… எவ்வளவு வேதனைன்னா, எல்லாக் காட்டு விலங்குக்குமே மனுஷன்கிட்ட ஒரு பயமும் ஒரு எச்சரிக்க உணர்வும் இருக்கும்… உனக்கு இருக்க மாதிரிதான்… அந்த பயத்தை எல்லாம் மீறி ஊருக்குள்ள வர்ற அளவு வேதன… உன்னோட பயத்தை மீறி, நீ ஒரு நானூறு புலி நடமாடுற இடத்துக்குப் போகணும்ன்னா உன் மனநிலை எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கும்ன்னு யோசிச்சுப் பாரு…”

அவன் அந்தப் புலியின் பார்வையில் இருந்த அவளை யோசிக்கவைக்கப்பார்க்க, அவள் ஒருகணத்திற்குப்பின் மறுப்பாகத் தலையசைத்தாள்.

“அது எவ்ளோ கொடூரமான விலங்கு… குட்டிகளுக்கு வேட்டையாடக் கத்துக் கொடுக்கும்போது இரையக் கொல்லாம முதுகெலும்ப மட்டும் உடைச்சுவிட்டு அரை உயிர்ல வச்சு இரத்தத்தைக் குடிக்கச் சொல்லி ட்ரைனிங் கொடுக்கும்ன்னு படிச்சுருக்கேன்…” அவள் சொல்லவும் மென்மையாகப் புன்னகைத்தான்.

“கண்ணம்மா… மனுஷன் மட்டும் கொடூரமான விலங்கு இல்லையா? எந்தப் புலியாவது பிடிக்கிற இரை மேல மிளகாப் பொடியத் தூவி ஊறவச்சோ, தீயில போட்டுக் குழம்பு வைக்கவோ கொதிக்க கொதிக்க எண்ணைல போட்டுப் பொரிக்கவோ செய்யுதா? நம்ம அம்மா செய்வாங்கல்ல?அதுக்காக நம்ம அம்மாவ நாம கொடூரமானவங்கன்னு சொல்லிர முடியுமா?

உனக்கு அயிர மீன் குழம்பு பிடிக்கும்தானே? அதை எப்படி செய்வாங்கன்னு பார்த்துருக்கியா? மேடம்தான் அசைவம் சமைக்க மாட்டீங்கல்ல? சின்னசின்னதா இருக்கு, சுத்தப்படுத்த முடியாதுன்னு உயிரோட இருக்க மீனைத் தேங்காப்பால்ல போட்டுருவாங்க, அது அதைக் குடிச்சுக் குடிச்சு உள்ளே இருக்க கழிவ எல்லாம் கக்கிரும். பின்ன உயிரோட எடுத்து உள்ளே போட்டுச் சமைப்பாங்க. அது கொடூரம் இல்லையா? கோழியக் கொல்றதுக்காகவே ஒரு மிஷின் கண்டுபிடிச்சு, உயிரோட உள்ள தூக்கிப்போட்டுத் தோலை உரிக்கிறோமே அது கொடூரம் இல்லையா? 

ஏன், மரம் அது தேவைக்குச் சேர்த்து வச்சுருக்கதத்தான திருடிச் சாப்பிட்டுட்டுப் பழம் நல்லா இனிப்பா இருக்குன்னு சொல்றோம்… அது கொடூரம் இல்லையா? எல்லாம் கொடூரம்தான், அந்த மீனோட பார்வைல இருந்தோ, கோழியோட பார்வைல இருந்தோ, மரத்தோட பார்வைல இருந்தோ பார்த்தா… ஆனா, மனுஷன் மனுஷனோட பார்வைல இருந்து பார்த்தா மட்டும் போதும். இல்லன்னா ஒரு சாப்பாட சாப்பிட முடியாது… 

அதே மாதிரிதான் புலியும். அது அதோட பார்வைல இருந்து மட்டும்தான் பார்க்கும்.  புலிக்கு ரொம்ப சிம்பிள் மைன்ட். நீ என் உணவு, நீ என் உறவு ன்னு பிரிச்சு வச்சு அதுக்கேத்த மாதிரி போய்ட்டே இருக்கும். மனுஷங்க மாதிரி, இன்னும் சில விலங்குகள் மாதிரி காம்ப்ளிகேட் பண்ணிக்காது. அதைப் பொறுத்தவரைக்கும் நாமளும் வேற ஒரு உயிரினம், அதுலயும் அதுக்குச் சாப்பிடப் பிடிக்காத, சாப்பிடலாம்ன்னே தெரியாத, போய்த் தொலையுதுன்னு வேற வழி இல்லாம சாப்பிடற உயிரினம்…

மனுஷங்க பஞ்சத்துல எலியப் பிடிச்சுச் சாப்பிடுற மாதிரிதான் புலி நம்மள சாப்பிடுறது. இதைத்தாண்டி அதுக்கு அதோட உலகத்துல நிறைய பிரச்சன உண்டு. அதுலதான் அதுங்க கவனம் செலுத்தும். நாமளே ஒரு கடுப்புல இருக்கப்ப, இன்னொரு கடுப்பா ஒரு எலி கண்ணுல பட்டா அதை நாம அடிச்சுப் போட்டுட்டுப் போற மாதிரி நம்மள அடிச்சுப் போட்டுட்டுப் போகும்.

இவ்வளவுக்கும் மனுஷங்க கூட வீட்டுக்குள்ள எலியப் பார்த்தவுடனே அடிச்சுத் தூக்கிப் போடுவோம். ஆனா, தன்னோட முழு பலத்துல இருக்கற புலிங்க காட்டுக்குள்ள போற மனுஷங்களக் கூடப் பெரும்பாலும் தாக்காது. பொழச்சுப் போ ங்கற மாதிரி ஒரு லுக் விட்டுட்டுப் போய்ட்டே இருக்கும். நம்மள யாராவது ஏதாவது பண்ணிருவாங்களோன்னு பயத்துல இருக்க புலிதான் தற்காப்புக்குத் தாக்கும்.

 நம்ம அம்மா எப்படி நமக்கு சாப்பாடு செஞ்சு தர்றாங்களோ, அதே மாதிரி அது அது குட்டிகளுக்கு சாப்பாட்டுக்கு வழி பண்ணுது… அதை கொடூரம் ன்னு நாம எப்படிம்மா சொல்ல முடியும்?

புழு… அதுவும் ஒரு உயிரினம்தானடா? நம்ம குடல்ல கூடத்தான் புழு இருக்கும்… நமக்குப் பிடிக்காத உருவத்துல இருந்தா அதுக்கு அது என்ன பண்ணும்? அந்தப் புழுக்குக் கூட மனுஷங்க மூஞ்சிய பாத்தா அருவருப்பா இருக்குமா இருக்கும்… அதை அதுக்கிட்ட கேட்டாதான் தெரியும்…

ஆனெ? அது உன்னெ விட சுத்தக்காரன் தெரியுமா? மூணு வேள குளிக்கும்…”

சில நிமிடங்கள் அமைதியாக இருந்தவள், “என்னால நீங்க சொல்றதைக் கிரகிக்க முடியல ஜீவி…” என்றாள்.

“எதுனாலும் நேரமெடுக்கும் ம்மா… பொறுமை முக்கியம். நீ என்ன நெனக்கன்னு தெரியல.. ஆனா, எனக்குப் பொறுமை கொஞ்சம் நல்லாவே உண்டு வனா…”

“இப்ப பொறுமை இருக்கும் ஜீவி.. இது காதலிக்கிற காலம். எல்லாம் கலர்கலராதான் தெரியும். ஆனா, கல்யாணம்ன்னு ஆன பிறகு, என் மேல கோபம் வரும், எரிச்சல் வரும்…”

“இதெல்லாம் இப்ப உன் மேல வரலன்னு யார் சொன்னது?”

அவள் என்ன சொல்ல என்று தெரியாமல் பார்க்க, “இப்பவும் உன் மேல எனக்கு எரிச்சல், கோபம் லாம் வரத்தான் செய்யுது. கண்டிப்பா, கல்யாணத்துக்கப்பறமும் வரும். ஆனா, அதோட இப்ப இருக்க காதலும் அப்பவும் இருக்கும் வனா. நீ உன்னப் பத்தி என்ன நெனக்க? உன் பயம் மட்டும் நீ இல்ல வனா. உன்கிட்ட எனக்குப் பிடிச்ச விஷயம் நெறய இருக்கு. அந்த விஷயத்தெல்லாம் அடிச்சுத் தூக்கற அளவு உன் பயம் ஒண்ணும் அவ்ளோ பெரிசு இல்ல தங்கமே…”

“…”

“எரிச்சல், கோபம்,பயம், பாசம், காதல் இதெல்லாம் உணர்வுகள், இருக்கத்தான் செய்யும். எது எவ்வளவு இருக்குங்கற விகிதம்தான் கணக்கு. அந்த விகிதம் கல்யாணத்துக்கப்பறம் எப்படி குறையும்ன்னு நெனக்கன்னுதான் எனெக்குப் புரிய மாட்டேங்கு…”

சிலகணம் உதட்டைக் கடித்தபடி அமைதியாக இருந்தவள், “நான் நீங்க தொடும்போது சட்டுன்னு ரியாக்ட் பண்ணுறது, அது நானா… வேணும்ன்னு… பண்ணல ஜீவி… இப்பவே நீங்க எப்படி பொறுமையா இருக்கீங்கன்னு எனக்குத் தெரியல… இதுல யோசிச்சுப் பாருங்க… கல்யாணத்துக்கப்பறம் நீங்க பக்கத்துல வரும்போதெல்லாம் நான் இப்படியே பண்ணிட்டு இருந்தா… உங்களால என்னை சகிக்க முடியுமா ஜீவி?”

“ஏன் முடியாம? சகிப்புக்கு நாம சுகர்கோட் பண்ணி கொடுத்துருக்க பேர்தான்டா அன்பு, எதெல்லாம் நம்மளால சகிக்க முடியுதோ, சகிக்க முடியாத விஷயங்கள எல்லாம் நாம எதை அடிப்படையா வச்சு சகிக்கிறமோ அது மேலல்லாம் நமக்கு அன்பு இருக்குன்னு அர்த்தம். என் மேல உனக்கு அன்பு இருக்கற ஒரே காரணத்தாலதான் நீ இந்த நிமிஷம் நான் உன் கையப் பிடிச்சுட்டு இருக்கறத சகிச்சுட்டு இருக்க. நீ உன் சக்திய மீறி முயற்சி பண்ற வனா, என்கூட இருக்கணும்ன்னு. அது எனெக்குப் புரியாம போகும்ன்னு நீ எப்படி நெனக்க? அவ்வளவு கோட்டிக்காரன்னா நீ என்னெ நெனச்சு வச்சிரிக்க?

அவன் பொறுமையாகக் கேட்க, அவனை அமைதியாகப் பார்த்தாள் வனபத்ரா. பின் மெதுவாக, அவனுடைய வலதுபக்க நெற்றியில் இருந்து கன்னம் வரை விரல் கொண்டு வருடியவள், பின் இரண்டு கைகளாலும் அவனுடைய கன்னங்களைப் பற்றி, மெல்ல குனிந்து அவனுடைய நெற்றியில் முத்தமிட்டாள்.

மென்மையாகப் புன்னகைத்தவன், “நானும் கொடுக்கலாமா?” என, “எனக்கு டைம் வேணும் ஜீவி…” என்றாள்.

“செரி…” என்று அவன் புன்னகைக்கவும் மீண்டும் நெற்றியில் முத்தமிட்டாள்.

“என் பயம் ஒரு பிரச்சனையா இல்லாம உங்ககூட நிம்மதியா வாழ முடியும்ன்னு எனக்குத் தோணனும் ஜீவி.. அப்பதான் கல்யாணம் சரிபட்டு வரும். இல்லன்னா, இல்லன்னா… கல்யாணம் முடிச்சுட்டு நாம சண்டை போட்டுட்டே இருந்து வருத்தப்பட்டுட்டே இருக்கதுக்கு நான் கல்யாணம் பண்ணாமலே இருந்துட்டுப் போயிருவேன் ஜீவி…”

“செரி.. ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணாமலே ஜாலியா இருக்கலாம்…” அவன் சொல்லவும் அவள் அரண்டு விழிக்க, சிரித்திருந்தான். “ஏட்டி… நான் தப்பா சொல்லல… சிங்கிளா ஜாலியா இருக்கலாம்ன்னேன்…பார்ப்பதற்கே அப்பாவி போல் இருக்கும்ங்கற மாதிரி மூஞ்சிய வச்சுட்டு நெனக்கறத பாரு…” என்றவன், அவள் மூக்கைப் பிடித்து ஆட்டப்போக அவள் பின்னால் சென்றாள். பின் அவளே அருகே வந்து மூக்கைக் காட்ட, சிரித்தவன், எழுந்து மேலே அமர்ந்தான்.

“செரி… என் பக்கமிருந்து நான் என்ன பண்ணனும்ன்னு சொல்லு… நான் பண்றேன்…”

“என் முன்னாடி கொஞ்சநாள் வராதீங்க ஜீவி…”

அவன் அமைதியாகப் பார்க்க, “நீங்க என்முன்னாடி இருக்கும்போது எனக்குக் குழப்பமா இருக்கு ஜீவி.. சரியா முடிவெடுக்க முடியல… அவசரத்துலயோ, ஆசையிலயோ முடிவெடுத்துட்டுப் பின்னாடி கஷ்டப்படுவமோன்னு பயமா இருக்கு… நான் நல்லா யோசிச்சுப் பார்க்கறேன், முயற்சி பண்றேன், அப்படியும் என்னால முடியலன்னா நானும் குழம்பி, உங்களையும் போட்டுக் குழப்பாம நான் உங்க வாழ்க்கல இருந்து விலகிர்றேன் ஜீவி. நீங்க உங்க வீட்ல பார்க்கற பொண்ணைக் கல்யாணம் பண்ணிட்டு நிம்மதியா இருங்க… நம்ம விஷயத்துல தப்பு என் பக்கம், உங்க வாழ்க்கய நீங்க வீணாக்க வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது ஜீவி…”

“இதுல தப்பு,சரின்னு…”

“போதும் ஜீவி… உங்ககிட்ட நல்ல சொல்வன்மை இருக்கு… அழகா ப்ரைன்வாஷ் பண்றீங்க.. ஆனா, என் மூளைய நானா கழுவுனாதான் சரிபட்டு வரும். ப்ளீஸ் ஜீவி…”

“நான் பேசுறது உனக்குப் ப்ரைன்வாஷ் பண்ற மாதிரி இருக்கா வனா?”

“அப்பறம் நீங்க பண்ணதுக்குப் பேர் என்ன ஜீவி?”

அவள் கேட்கவும் அவன் அமைதியாக எழுந்து வெளியே சென்றான். ‘போய்ட்டு வாடா பொறுமைக்காரா…’ என முணுமுணுத்தபடி எழுந்து சென்று கதவை அடைத்தவள், குளித்துவிட்டு வந்து மீண்டும் படுத்தாள். மனதில் யோசனைகள் ஓடியபடியே இருக்க, அருகில் கிடந்த தலையணையை எடுத்து அணைத்தபடி படுத்தாள். அது அவனை அடித்த தலையணை என்பது சற்று நேரம் கழித்தே நினைவுவர, சட்டெனத் தள்ளிவைத்தவள், பின் ஒரு சிறு தயக்கத்திற்குப்பின் அதை மீண்டும் எடுத்து அணைத்தபடி உறங்கியிருந்தாள்.

(தொடரும்…)

1 thought on “எனக்காக வந்தவனே – 16”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!