புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

எனக்காக வந்தவனே – 17


ஏனோ காலை முதல்வேலையாக அக்காவை வெறுப்பேற்றிவிட்டு வந்தது மனதிற்கு இதமாக இருக்க, அபிதனுக்கு ஒரு உற்சாகமான மனநிலை இருந்தது. அந்த மனநிலையிலேயே கல்லூரி செல்வதற்கு வந்த பேருந்தில் ஏறியவன், பேருந்தில் காலியாக இருந்த ஒரு இரட்டைப்பின்னிருக்கை ஒன்றில் அமர்ந்தான். காதுகளில் அந்தப்பாடல் ஒலித்துக் கொண்டே இருக்க, கால்களால் தாளமிட்டபடியேதான் வந்தான்.

இரு நிறுத்தங்கள் கழித்து யாரோ ஏறினார்கள், அவனருகில் அமர்ந்தார்கள். அவன் கவனிக்கவில்லை. அவன் பாட்டுக்குப் பாடலை இரசித்தபடியே வர, அவன் மடியில் வைத்திருந்த விரல்களில் சுருக்கென ஏதோ ஏறியது போல இருந்தது. ஏதோ குத்தியது போல இருக்க, விரலைப் பார்த்தால் அழகாக ஒரு சொட்டு இரத்தம் மட்டும் வெளியே வந்து நின்றது.

என்ன குத்தியிருக்கும்? என்பது போலப் பார்த்தவன், முகத்தை உர்ரென்று வைத்தபடி அமர்ந்திருந்தவளைப் பார்த்தான். இவளை எங்கோ… என யோசிக்கும்போதே, அவளை எங்கே பார்த்தோம் என்பது நினைவு வந்திருந்தது. அவள் கையில் வைத்திருந்த ஊக்கையும் கவனித்திருந்தான். அவள் தான் குத்தியிருக்கிறாள் என்பது புரிய அவனுக்குச் சட்டெனக் கோபம் வந்திருந்தது.

“ஹலோ.. எதுக்கு ஊக்க வச்சுக் குத்துனீங்க?”

“டூ யு ஹேவ் த நெர்வ் டு க்வஸ்டின் மீ?”

“எனக்கு அதெல்லாம் எல்லா நரம்பும் இருக்கு… நீ பீட்டர் வுடாம தமிழ்ல பேசு.. அன்னைக்குத் தமிழ்லதான பேசுன?”

அவனை முறைத்தாள். அவளுடைய வகுப்புத்தோழி ஒருத்தி விளையாட்டாக அடிக்கடி இப்படி கூறுவாள்,’பஸ்ல வயசுப்பசங்கள நம்பி பக்கத்துல உட்கார்ந்துரலாம், தாத்தா, தம்பின்னு தான் எவனையும் நினைச்சு உட்காரக் கூடாது…’ அதை நம்பித்தான் அவனருகில் அமர்ந்தாள். அவளுக்குச் சரியான கால்வலி. நேற்று விடுமுறை என நன்றாக ஊர் சுற்றியிருந்தது. இப்போது வைத்துச் செய்தது. 

அவர்கள் ஊரில் எல்லாம் பெண்கள் யாராவது நின்றபடி வந்தால், ஆண்கள் எழுந்து இடம்தருவார்கள். சிலவேளைகளில் நடத்துநர் கூட எழுந்து இடம்தரச் சொல்வார். இவன் கண்டுகொள்ளாமல் இருக்க, சரி, அப்படி எதிர்பார்ப்பது தவறு, அருகில் அமர்வதில் என்ன இருக்கிறது என அமர்ந்துவிட்டாள், ஆனால் அமர்ந்தபின் ஒருமாதிரி இருந்தது. 

அதிலும் இவனை அவள் ஒருமுறை முன்பு பார்த்திருக்கிறாள். அவனுடைய அக்காவுக்கு அவ்வளவு ஆதரவாகப் பேசிக் கொண்டு வந்தான். நல்லவனாகத்தான் இருப்பான் என நம்பி வர, அபிதன் சுற்றுப்புறத்தைக் கண்டுகொள்ளாமல் சொய்ங்க்… சொய்ங்க்.. என பாடலுடன் ஒன்றியபடியே வந்ததில் அசைந்தது அவளுக்குத் தவறாக நினைக்கத் தோன்றியது. ஊக்கை எடுத்து நன்றாகவே குத்தி விட்டிருந்தாள்.

“எதுக்கு ஊக்க வச்சுக் குத்துன?”

“நீ காட்டெரும மாதிரி இடிச்சா, குத்தாம என்ன பண்ணுவாங்க?”

அபிதனுக்கு இந்தக் குற்றச்சாட்டில் கோபம் கூடியது. அவன் தன்னருகில் யார் வந்து அமர்ந்தார்கள், ஏன்? யாரோ வந்து அமர்ந்தார்கள் என்பதையே கவனிக்கவில்லை. இதில் அவனுடைய நடத்தையைத் தவறாகப் பேசுவது போல அவள் பேசவும், “ஏய்… யார் இடிச்சா? நீயா வந்து உட்கார்ந்துட்டு என்ன பேசுற?”

“நானா வந்து உட்கார்ந்தா? நீ இடிப்பியா? உங்கக்காவ எவனாவது இடிச்சா சும்மா இருப்பியா?”

“தேவயில்லாம எங்கக்காவ எதுக்கு இழுக்கற நீ?”

“அப்பவாவது உனக்கு அறிவு வருதான்னு பார்க்கத்தான், நல்லா யோசிச்சுப் பாரு, உங்கக்கா என் இடத்துல இருந்தாலும் இதைத்தான் பண்ணிருப்பாங்க…”

“எங்கக்கா உன்னை மாதிரி பைத்தியம் கிடையாது. தெரிஞ்சு இடிக்கறதுக்கும், தெரியாம படறதுக்கும் வித்தியாசம் தெரியாம இருக்க,நானும் எங்கக்கா கூட பஸ்ல போயிருக்கேன், ஒண்ணு அது தள்ளிநிக்கும், இல்லையா தள்ளிநிக்கச் சொல்லும். யாரையும் இப்படி அவங்க சுயமரியாதையச் சீண்டுற மாதிரி அவமானப்படுத்தாது.அடுத்த தடவ யாரையாவது ஊக்க வச்சுக் குத்தமுன்னாடி நிஜமாவே உன் திருமுகத்தை அவன் ஒரு தடவையாவது பாத்தானான்னு பாத்துட்டுக் குத்து.. வழிய விடு…” என்றவன், எழுந்து முன்பக்கம் போய் நின்றிருந்தான். 

அவன் செல்லவும் நன்றாக, வசதியாக அமர்ந்தவளுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. இருந்தாலும் ஒன்றும் சொல்லாமல் கல்லூரியை அடைய, அப்போதுதான் அவனும் அதே கல்லூரியில் இறங்குவதைப் பார்த்தாள். அவனும் அவளைப் பார்த்திருந்தான். இருவருமே கல்லூரி அடையாள அட்டையைப் பைக்குள் இருந்து எடுத்து அணிய, “ஸ்கூல் ஸ்டூடன்ட் இல்லையா நீ?அன்னைக்கு யூனிபார்ம் போட்டுருந்த?” என்றான்.

அவனை மீண்டும் முறைத்தாள், “அது யூனிபார்ம் கிடையாது. கலர் ட்ரெஸ்தான். யூனிபார்ம் டிசைன்ல இருக்கும்…”

“ஓஹோ…” என்றபடி அவளது இரட்டைச்சடையைப் பார்த்தவன், “காலெஜ்க்கு ஏன் ரெட்டைச்சட போட்டுட்டு வர்ற?” என்றான்.

“என் ஹேர்ஸ்டைல்… என் இஷ்டம்…” என்றவள்,அவன் தோளைக் குலுக்கிவிட்டு நடக்கத் தொடங்கவும் இணைந்து நடந்தாள். சற்றுத் தொலைவு சென்றதும், “சாரி… நான் உன் காதுல இருந்த ஹெட்செட்ட நீ எந்திரிக்கவும்தான் கவனிச்சேன், பாட்டுக்கு ஆடிட்டு இருப்பன்னு தெரியாது. சும்மா தாளம் போடுறமாதிரி கால் மேல படவும் தப்பா நெனச்சுட்டேன்…” என்றாள் மென்மையாக.

“நானும் சாரி, நான் அது என் செருப்புன்னு நெனச்சேன், நீ என் பக்கத்துல வந்து உட்கார்ந்ததையே நான் கவனிக்கல…”

“…”

“…”

“உன் பேரென்ன?”

“அபிதன்…”

“என்னது?”

“அபிதன்… உன்பேரு?”

“மகாதேவி…”

“எந்த இயர்? என்ன கோர்ஸ்?”

“பர்ஸ்ட் இயர்…டூரிஸம்… நீ?”

“வைல்ட் லைப் பயாலஜி, நான் செகன்ட் இயர், ஒழுங்கா வாங்கண்ணா, போங்கண்ணா ன்னு மரியாதையா பேசிப் பழகு…பை…” என்றவன், அலைபேசியை எடுத்து நோண்டியபடியே முன்னே சென்றுவிட்டான்.

அவனுக்கு இன்றாவது தன் தாய்தந்தையிடம் உண்மையைச் சொல்லிவிட வேண்டும் என்று இருந்தது. அன்றே சொல்லியிருப்பான்தான், ஆனால் வனபத்ராதான் வீராவேச யானைகள் முகாம் பயணத்தில் காய்ச்சல் கண்டு விழுந்திருந்தாளே, அந்தநேரம் ஏச்சுப்பேச்சு வாங்கிவிட வேண்டாம், கொஞ்சம் சரியாகட்டும் என்று காத்திருந்தது. இப்போது சொல்லிவிட வேண்டும் என்று தந்தைக்கு அழைத்தான்.

பாலமுருகனும் அஞ்சனாவும் தங்கள் உடை பாதிக்குமேல் நனைந்திருக்க, சுவரிலும் மிதியடியிலும் தேய்த்து தேய்த்து உருண்டு கொண்டிருந்த அந்த நாய்க்குட்டியைத்தான் பார்த்தனர். முதலில் அதனிடம் நெருங்க அவர்களுக்கும் ஒரு மாதிரிதான் இருந்தது. வனபத்ராவின் அத்தனை ஆண்டுகால ஆதிக்கம் எளிமையானதல்லவே.

அதோடு, தங்கள் பிஞ்சு மகளைக் கடித்துக் குதறப் பார்த்தன என்றதில் இருந்து அந்த இனத்தின் மீது அவ்வளவு நாள் இருந்த நல்லெண்ணம் எல்லாம் போயிருந்தது. அதிகமான தெருநாய்கள் தென்படும்போது மாநகராட்சிக்குப் புகார் அளிப்பவர்களில் முதன்மையானவராக பாலமுருகன் இருப்பார். அப்படிப்பட்டவர், முதல்நாள் கூடைக்குள்ளிருந்து எட்டிப்பார்த்து எட்டிப்பார்த்து உள்ளே குனிந்து கொண்ட இந்த நாய்க்குட்டியை முதலில் யோசனையாகத்தான் பார்த்தபடி இருந்தார்.

அஞ்சனாதான், ‘நாம வளர்த்த ரெண்டும் நமக்குப் பிள்ள வளக்கத் தெரியலன்னு நாய் வளக்கச் சொல்லிட்டுப் போயிருக்குங்கல.. போங்க.. இதை போய் மேச்சுட்டு வாங்க…’ என்றிருந்தார். அதன்பிறகுதான் அதனோடு காலையிலும் மாலையிலும் நடைபயிற்சிக்குச் செல்ல ஆரம்பித்திருந்தார். 

அபிதன், தான் கேட்டு வந்த பராமரிப்பு முறைகளை எல்லாம் தந்தையிடமும் தாயிடமும் மீண்டும் மீண்டும் சொல்லி நச்சரித்துக் கொண்டே இருந்ததில் அஞ்சனா விளையாட்டாக அதை அபி அபி எனக் கூப்பிட்டு வைக்க, இப்போது அபிதனிடம் அபி அபி என்று பேசும்போதெல்லாம் இது திரும்பிப் பார்க்கிறது. 

வனபத்ராவிடம் இதைச் சொல்லிச் சிரிக்க, அவள் காணொளி அழைப்பில் பெயர்சூட்டு விழாவே நடத்தியிருந்தாள். அதற்கு என்ன புரிந்ததோ அது வௌவ் எனவும் அலைபேசியை விட்டுப் பிடித்திருந்தாள் என்பது வேறு. அபிதன் அதற்கு நல்ல பெயராக வைக்க வேண்டும் வேண்டும் எனப் பெயர்பெயராக அலசுவதற்குள், அவன் பெயரையே அதற்கு வைத்துவிட்டிருந்தது அவனுடைய அருமைக்குடும்பம்.

அன்று கூட, சிரித்த பெற்றோரை அபிதன் ஆச்சரியமாகத்தான் பார்த்தான், எத்தனை முறை இதே வீட்டில் இருந்து அபிதன் காணொளி அழைப்பாகப் பெற்றோருடன் பேசியிருப்பான், இதைக் கூடக் கண்டுபிடிக்கத் தெரியாமல் தன் அன்னை என்ன ஆய்வாளராக வேலை பார்க்கிறார் என்றெல்லாம் அவன் வியக்க, இன்று மிக மிக இயல்பாக வனபத்ரா சொல்லிவிட்டுத்தான் சென்றாள் என்றார் அஞ்சனா.

கேட்டவுடன் அபிதனின் விழிகள் விரிய, “சாரிடா” என்றனர் பெற்றோர் இருவரும் இணைந்து.

“உங்கக்காதான் சொல்லக்கூடாதுன்னு மிரட்டிட்டுப் போனா, சரி நாங்களும் நீ எப்படியும் சொல்லுவ.. சொல்றப்ப சொல்லிரலாம்ன்னு இருந்தோம், நீ ஒரு வாரம் கழிச்சுச் சொல்லுவன்னு நாங்க என்ன கண்டோம்?”

“ம்மா.. என்னம்மா சொல்றீங்க? அக்கா சொல்லியும் எப்படி விட்டீங்க?”

“டேய்.. உங்கக்கா சொல்லிட்டுப் போனான்னு சொன்னோம்.. கேட்டுட்டுப் போனான்னு சொல்லல… சொல்பேச்சு கேட்கற பிள்ளைங்களயா நாங்க பெத்து வச்சுருக்கோம்?”

“சரி.. சரி.. சமத்துவத்தாயே… என்னையும் சேர்த்துத்திட்டாதீங்க.. உங்க மக என்ன பண்ணுச்சுன்னு தெரியுமா?” என்றவன் கதைகதையாக நிகழ்ந்ததைக் கூற, அமைதியாக அருகில் இருந்த கல்லிருக்கையில் அமர்ந்திருந்த மகாதேவியும் கேட்டபடி இருந்தாள்.

பேசிமுடித்தவன், வகுப்புக்கு நேரமாவதை உணர்ந்து எழும்போதுதான், சிரித்தபடி அமர்ந்திருந்தவளைப் பார்த்தான். அவளது கையில் ஒரு புத்தகம் இருந்தது. ஆனால், அவள் அதனைப்பார்க்க மட்டும்தான் செய்கிறாள், படிக்கவில்லை என்பது புரிந்தது.

“எம்மா மகாலெட்சுமி… ஒட்டுக் கேட்கறது தப்பான பழக்கம்ன்னு தெரியாதா?”

“என் பேரு மகாலெட்சுமி இல்ல…மகாதேவி. அடுத்தவங்க படிக்கும்போது டிஸ்டர்ப் பண்ற மாதிரி பேசுறது தப்பான பழக்கம்ன்னு தெரியாதா? நீ வீடியோ கால் போட்டுப் பேசுனா என் காதுல விழத்தான செய்யும்.”

“அதுக்காகக் கிண்டலா சிரிப்பியா நீ?”

“வேணும்ன்னு சிரிக்கல… ஆனா, முதுமலைல யான இருக்கும்ன்னு தெரியாம முதுமலைக்குப் போன முதல் ஆள இப்பதான் பாக்கறனா? சிரிப்பு வந்துருச்சு…”

“அது நான் இல்ல… எங்கக்கா…”

“உங்கக்காவத்தான் சொல்றேன்…” என்றவள், அவனுக்குத் தெரிந்துவிட்டது என்றதும் அடக்கிவைத்த சிரிப்பை நன்றாகச் சிரிக்க, அவன் முறைத்தான்.

“ஹே… எங்கக்காக்கு ஜுபோபியா… மத்தபடி எங்கக்கா அவ்வளவு அறிவாளி தெரியுமா? பயப்படாத நேரம் எங்கக்காவ விட தைரியமான பொண்ண நான் பாத்தது கிடையாது.”

“பயப்படாத நேரம் எல்லாரும் தைரியமாதான இருப்பாங்க?” அவள் கேட்டபடியே சிரிக்கவும் அவனுக்கும் கோபம் வந்திருந்தது. அவளை முறைத்துவிட்டு அவன் முன்னே செல்ல, “ஹே..ஹே… சாரி சாரி…” என்றபடி ஓடிவந்தாள் அவள்.

அவன் கோபமாகவே இருக்க, சமாதானப்படுத்துவதற்காகப் பேச்சு கொடுக்க, அதில் சீண்டப்பட்டு அவன் முறைக்க, அவள் சிரிக்க என்று ஒரு நட்பு வெகுநாள் கழித்து அபிதனுக்கு உருவாகியிருந்தது.

*********

வனபத்ரா அலைபேசியை எடுத்து ஜீவிதனுடைய புலனப்பக்கத்தைத்தான் பார்த்தபடி இருந்தாள். அவன் முகப்புப்படமாக வைத்திருந்த புகைப்படம் அவள் எடுத்தது. அவன் புகைப்படம் ஒன்று வேண்டும் என்பதற்காக, அவர்கள் சென்றிருந்த ஒரு மாலில் ஒளியமைப்பு நன்றாக இருக்கிறது, அவளுக்குப் புகைப்படம் எடுக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லி, பின் அவனையும் எடுக்கிறேன் என்று எடுத்தது. 

அவன் அவனுடைய அலைபேசியைக் கொடுக்க, என்னுடையதிலேயே எடுக்கிறேன் என்று எடுத்திருந்தாள். மண்டியிட்டு, கீழே அமர்ந்து என வித்தைகாட்டியெல்லாம் அவள் எடுக்க, புகைப்படத்திற்குச் சிரித்தானோ அல்லது அந்நேர மகிழ்வில் உள்ளார்ந்து சிரித்தானோ அந்தப்படத்தில் அவனது நகுமுகம் அழகாக விழுந்திருந்தது.

அதைப்பார்த்துவிட்டு வெளியே வந்தவளுக்கு, அவனுடைய குறிப்புப்பகுதியில், “വനമേ  ജീവിതം💚” என்று மலையாளத்தில் எழுதிவைத்திருந்ததைப் பார்த்தாள்.

அன்று அவ்வளவு தன்மையாகப் பேசியவனை வெறுப்பேற்றிவிட்டு வெளியே அனுப்பி இன்றோடு நாற்பது நாட்கள் ஆகியிருந்தன. ஜீவிதன் அவள் முன்னால் வரவும் இல்லை, தப்பித்தவறி வந்தால் நின்று பேசவும் இல்லை. கண்டுகொள்ளாமல் கடந்துபோய்க் கொண்டே இருந்தான். ஆனால், அன்றிரவே வெறுமனே ஆங்கிலத்தில் அவேலபிள் என்றிருந்த இந்தக் குறிப்புப்பகுதி மட்டும் இப்படி மாறியிருந்தது. 

என்ன என உற்றுப் பார்க்க, அதிலிருந்த ஜீவியைப் பார்த்தவுடன் அவளால் கண்டுகொள்ள முடிந்தது. ஆனால், பிற எழுத்துக்களில் கொஞ்சம் சந்தேகமாக இருக்க, கூகுள் ட்ரான்ஸ்லேட்டில் போட்டுப் பார்த்தாள்.

 வழக்கமாக எசகுபிசகாக மொழிபெயர்க்கும் கூகுள் இம்முறை சரியாக, “வனமே வாழ்க்கை” என்று மொழிபெயர்த்துக் கொடுத்திருக்க, “வனமே ஜீவிதம்” என்று எழுதிவைத்திருக்கிறான் என்பது புரிந்தது.

அவனையும் மலையாளத்தையும் அறிந்தவர்களுக்கு, அவனுடைய வேலை தொடர்பாக வைத்திருக்கிறான் என்று தோன்றும். ஆனால், அவன் எதற்காக வைத்திருக்கிறான் என்று புரிந்த வனபத்ராவிற்கு நிஜமாகவே அந்த உணர்வை எப்படி விவரிப்பது என்று புரியவில்லை. 

தங்களுடைய காதலில் தான் மதில் மேல் பூனையாகத்தான் இருக்கிறோம் என்று வனபத்ராவுக்கு நன்றாகவே தெரிந்தது. அவளால் ஜீவிதனைத் தவிர, இன்னொருவனை மணக்க முடியாது என்பது அவளுக்கு உறுதி. அதே வேளை, ஜீவிதனை மணந்து நிம்மதியாக வாழ முடியும் என்பதில் அந்த உறுதி இல்லாததுதான் பிரச்சனை. 

அவர்களுடைய காதலைப் பொறுத்தவரையில் வெற்றி சதவீதம் முப்பதுதான். தோல்விக்குத்தான் எழுபது சதவீதம் வாய்ப்பு இருக்கிறது என்று தோன்ற, தன் மேல் எரிச்சல், கோபம் வரும் என்றவனுக்கு இன்னும் வரட்டும் என்றுதான் அன்று வெறுப்பேற்றிவிட்டாள். அது ஒருவேளை தங்கள் காதல் தோல்வியில் முடிந்தால், ஜீவிதன் கரையேறக் காரணங்களில் ஒன்றாக இருக்கட்டும் என்றுதான். 

பொதுவாக, ஒன்று கிட்டாது என்று ஆகிவிட்டால், வெட்டென மறந்துவிடலாம். ஆனால், இரு… எடுத்துத் தருகிறேன், இரு… ஏணி போடுகிறேன், இரு… படி கட்டுகிறேன், இரு.. விமானம் விடுகிறேன்… என்றெல்லாம் உருட்டிவிட்டுப் பொத்தெனக் கீழே தள்ளினால் தாங்க இயலாது. அதை ஜீவிதனுக்குச் செய்துவிடக் கூடாது என்றுதான் நினைத்தாள். 

ஆனால், அவனுடைய வாழ்க்கையிலிருந்து விலகினாலும் விலகுவேன் என்று சொல்பவளிடம் நீதான் என் வாழ்க்கை என்று கூறுபவனை எப்படி விலக்க? மீண்டும் அழுகைதான் வந்தது. அவன் அழுமூஞ்சி என்றானே, முன்பெல்லாம் இப்படி அழமாட்டோமே, என்று அழுவதற்கும் ஒரு அழுகை வந்தது.

அழைப்புமணி ஒலிக்க, முகத்தை நன்றாகக் கழுவிவிட்டு எழுந்துசென்று கதவைத் திறந்தாள். அவள் எதிர்பார்த்ததைப்போல ஜீவிதன்தான் நின்றிருந்தான்.

“வாங்க…” என்று அழைத்தவள், அந்த ஓவியத்தைக் காட்டினாள்.

“நான் கேன்வாஸ்ல வரைஞ்சு ரொம்ப நாளாச்சுன்னு யோசிச்சேன்தான், ஆனா நல்லாதான் வந்திருக்க மாதிரி இருக்கு.. ஏதாவது கரெக்ஷன் இருந்தா சொல்லுங்க… மாத்தித் தரேன்…” என்றபடி அவள் காட்ட, அவனுக்குள் அவள் திறமையில் ஒரு பிரமிப்பு.

அவனுடைய தாய்தந்தையரின் ஓவியத்தைத்தான் வரைந்துதர இயலுமா என்று கேட்டிருந்தான், அபிதன் வழியாக. அபிதனுடன் ஏற்கனவே ஜீவிதனுக்கு ஒரு நட்புண்டு. அது இன்னும் வலிமையாகியிருந்தது. என்ன? அவனை என்ன என அழைப்பதெனத் தெரியாமல் ங்க ங்க என்று சுற்றிக் கொண்டிருக்கிறான். அவனுடைய பெற்றோரின் திருமணக் காணொளியில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்ப்பது போல ஒரு இடம் அழகாகப் பதிந்திருக்கும். அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்தால் சரியாக வரவில்லை.உடைந்திருப்பதுபோலக் காட்டும். அபிதனிடம் பேச்சுவாக்கில் இதைச் சரியாக யாராவது கணினியில் தெளிவான புகைப்படமாக எடுத்துத் தருவார்களா தெரியுமா என்று கேட்டிருந்தான்.

அவன்தான், எங்கக்கா ஆர்ட்டிஸ்ட்டுலே என்று கிண்டலடித்தபடியே வரைந்துதரச் சொல்கிறேன் என்று சென்றான். ஜீவிதனுக்கு யோசனைதான். அவள் திறமைக்காரிதான், அதில் சந்தேகமே இல்லை. அவள் செய்துகொடுத்திருக்கிறேன் என்று ஒன்றிரண்டு மிகைபுனைவு திரைப்படக் காட்சிகளைக் காட்டியிருக்கிறாள், அலைபேசி விளையாட்டுக்களின் பாத்திரங்களைக் காட்டியிருக்கிறாள். அவ்வளவு அழகாக இருக்கும்தான். நன்றாக இருக்கும் என்று தோன்றியதுதான். 

ஆனால், அவளுடைய வேலைக்குத் தான் கேட்கின்ற உதவி எளிமையானது. கணிதப் பேராசிரியரிடம் சென்று பன்னிரெண்டாம் வாய்ப்பாடு எழுதித்தரச் சொல்வதைப் போல. அவள் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டாள் என்றுதெரியும்தான். அவனுக்குத்தான் அவளுடைய திறனைப் பயன்படுத்திக் கொள்வதைப் போலக் கொஞ்சம் யோசனையாக இருந்தது. ஆனால் என்ன அளவில் வேண்டும்? போன்ற விவரங்களைப் புலனத்தில் கேட்டவள், ஒரு குறிப்பிட்ட தொகையைச் சொல்ல, கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

அன்றே அனுப்பியிருந்தான். அவன் ஒரு மாதம் முன்பாகவே கேட்டிருக்க, மூன்று வாரங்கள் கழித்து, இன்று வந்து திருத்தங்கள் சொன்னால், சட்டமிட்டுத் தருகிறேன் என்றாள். வந்து பார்த்தவன், அசந்திருந்தான். புகைப்படமாக எடுத்துச் சட்டமிட்டிருந்தால் கூட இவ்வளவு தத்ரூபம் இருக்காது. ஓவியமும் ஒளிப்படமும் ஒன்றையொன்று உறிஞ்சிக் கொண்டதைப் போல ஒரு கலைத்திறனில் அவ்வளவு அழகாக இருந்தது.

அவனுடைய கண்ணில் தன் திறமைக்கான பாராட்டுதல் பிரமிப்பாகத் தெரிய வனபத்ராவுக்கு உள்ளே குளுகுளுவென்றிருந்தது. அதற்காகத்தானே அவ்வளவு கவனமெடுத்து வரைந்தாள், அவள் தந்தை ஏதோ ஒரு சங்க இலக்கியப் பாடலைச் சொல்லிக் கொண்டே இருப்பார், ஒரு நாளில் எட்டுத்தேர் செய்கின்ற தச்சன், ஒரு மாதம் செய்த தேர்ச்சக்கரம் போல என்று ஒரு உவமை வரும் என. அதைப் போலப் பார்த்துப் பார்த்து வரைந்திருந்தாள்.

“ஏதாவது மாத்தணுமா?”

மறுப்பாகத் தலையசைத்தவன், “உன் சிக்னேச்சர் எங்க? பொதுவா, ஆர்ட்டிஸ்ட்லாம் படத்துக்குக் கீழே போடுவாங்கதானே?” என்று கேட்டான்.

“இல்ல… இது நீங்க போட்டாவாதான கேட்டீங்கன்னு அபி சொன்னான், அப்ப குறுக்கால என் சைன் எதுக்குன்னு இருந்துச்சு… இது ஒண்ணும் பிரச்சனை இல்ல.. நான் பெரும்பாலும் போர்ட்ரைட் வரைய மாட்டேன். அனிமேட் பண்றதுக்குக் கீழே என்ன கையெழுத்தா போட்டுட்டு இருக்கேன், இருக்கட்டும்…”

“இல்ல போட்டுக்கொடு…” எனவும் உள்ளே சென்று வண்ணக்கலவையையும் தூரிகையையும் எடுத்து வந்தவள், மண்டியிட்டு அமர்ந்து அந்த ஓவியத்தின் வலது ஓரத்தில், வனபத்ரா எனத் தன் பெயரை அழகாக எழுதி ர வின் காலையும் த் இல் இருந்த காலையும் ஒன்றாகப் பிணைத்துப் பேருக்குக் கீழ் ஒரு கோடாக இழுத்தாள். வரைகிறாளா? எழுதுகிறாளா? என்றே தெரியாத நளினத்தில் அவள் கை அசைந்தது. அன்றுபோல் இன்றும் ஒரு அம்பர்லா கட்டிங் சுடிதார்தான் அணிந்திருந்தாள். இன்று கருநீல வண்ணம். அந்தத் தூரிகைக்காரியே ஒரு ஓவியம் போலத்தான் இருந்தாள். அந்த மச்சம் வேறு இன்றும் அழகாகத் தெரிய, ஒருகணம் மறந்து நின்றிருந்தவன், அவள் எழவும் சட்டெனப் பார்வையைத் திருப்பியிருந்தான்.

“ப்ரேம் போட்டுட்டு நான் கீழே வந்துத் தர்றேன்…”

“இல்ல… இங்கேயே இருக்கட்டும். திங்கக்கெழமதான் அப்பாம்மாக்கு ஆனிவர்சரி, நாளைக்கு இங்க வர்றாங்க. கீழே இருந்தா சர்ப்பரைஸ் போயிரும். நான் அன்னைக்கு எடுத்துக்கறேன்…”

“சரி…”

அவனும் ஒரு தலையசைப்புடன் நகர்ந்திருந்தான். இப்படிதான் நாற்பது நாட்களாகச் சென்று கொண்டிருந்தது. அவன் தேவைக்குமேல் பேசவில்லை. வனபத்ராவுக்குத்தான் அவன் பெற்றோர் வருகிறார்கள் எனவும் கொஞ்சம் பதற்றமாக இருந்தது. வாசல் வரைப்போயிருந்தவனை அழைத்தாள்.

“ஜீவி…”

அவன் நின்று திரும்பி மட்டும் பார்த்தான்.

“என்னைப் பத்தி சொல்லியிருக்கீங்களா?”

“என்னன்னு சொல்ல?”

அவள் பதில் பேசாமல் நின்றாள்.

“நீ யோசிச்சுட்டுச் சொல்றேன் ன்னு சொல்லிருக்க, யோசிச்சு என்னன்னு சொல்லன்னு சொல்லு…அதுக்கப்பறம் சொல்லணுமா வேணாமான்னு நான் யோசிக்கேன்…”

(தொடரும்…) 

1 thought on “எனக்காக வந்தவனே – 17”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!