(இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்❤️)
நிலவைப் பார்த்து வானம் சொன்னது.. என்னைத் தொடாதே… என்று நடிகர் திலகம் சிவாஜிகணேசன் வானைப் பார்த்துப் பாடிக் கொண்டிருக்க, “அம்மா சேனல மாத்துங்கம்மா…” என்றான் ஜீவிதன் எரிச்சலாக.
ஏனோ சவாலே சமாளி என்று வருகின்ற அந்தப் பழைய படத்தைச் சிறுவயதிலிருந்தே அவனுக்குப் பிடிக்கவே பிடிக்காது. ஆனால், அவன் அம்மாவுக்கு அது ரொம்பவும் பிடிக்கும். அந்தப் படம் என்று இல்லை, படித்த பெண், அதனால் திமிர்பிடித்த பெண் அவளை அடக்குகிற ஆண் என்கிற கதையமைப்பில் வருகின்ற எந்தப்படமுமே அவனுக்குப் பிடிக்காது. அவன் தாய் அந்தப் பெண்ணின் பார்வையும் அதில் காட்டப்படுகிறது என்று மல்லுக்கு நிற்பார்,
பல தலைவர்கள் நா வறள வறளப் பேசிக் கொண்டுவருகின்ற கொஞ்சநஞ்ச பாலின சமத்துவத்தையும் அதுபோன்ற கதையமைப்பில் வருகின்ற படங்கள் பின்னுக்குத் தள்ளிவிடும் என்று வாதாடுவான், ஒருநாள், “நான் இத பார்க்கணும், இத பார்க்கக்கூடாதுன்னு நீ சொல்றது ஆதிக்கம் இல்லயா ஜீவா?” எனவும் இப்படி சொல்வதை விட்டிருந்தான்.
ஆனால், இன்று வேறு காரணத்திற்காக இந்தப் பாடலைக் கேட்டால் எரிச்சல் வந்தது. எப்போதுமே, தன்னைக் கண்டாலே பிடிக்காத ஒருத்தியைப் பந்தயத்தில் மணந்து விட்டுவந்து, இன்று நமக்கு முதலிரவு என்று வசனம் பேசி அந்தப் பெண் தொடாதே என்று சொல்லிவிட்டாள் என்பதற்காக உருகிப் பாடும் ஆண் என்ற சூழலில் வருகின்ற இந்தப்பாடலைக் கேட்டால் அவனுக்குச் சிரிப்புதான் வரும். ஆனால் இன்று வனபத்ராவை நினைவூட்டியதில் எரிச்சலாக வந்தது.
மகனது தொனியில் தொலைக்காட்சியை அணைத்திருந்தார் மனோன்மணி. பின் ஒரு செம்பில் தண்ணீரை எடுத்துவந்து அவனிடம் நீட்டியவர், “ஏன்டா வள்ளுன்னு விழுற? வேலை பார்க்கும்போது எதுவும் கடிச்சுக்கிடிச்சு வச்சுருச்சா என்ன?” என்றார்.
“ம்மா…” என்றபடி தண்ணீரைக் குடித்தவனுக்கு, “ஆமா… அது என்னடா மேல்வீட்டுப் பொண்ணு அவ்ளோ அழகா இருக்கு… பொண்ணு லட்டு மாதிரி இருக்கு…”என்கிற அன்னையின் வர்ணனையில் செரசல் ஏறியிருந்தது.
பெற்றவர்கள் என்ன பேசினாலும் திருத்தத் தோன்றுகின்ற ஒரு காலகட்டத்தில் இப்படி சொல்லாதீர்கள் என அன்னையிடம் வாதாடியிருக்கிறான். அவன் அன்னை “வருத்தப்படாதடா.. வேணும்ன்னா உனக்குப் பொண்ணு பாக்கப் போகும்போது என் பையன் லட்டு மாதிரி இருப்பான்னு சொல்லிப் பொண்ணு கேக்கேன்…எதுக்கெடுத்தாலும் பாடம் எடுத்துக்கிட்டு இருக்காத.. போ…” என்று விரட்டிவிடுவார். ஆனால், அவன் அன்னை அடிக்கடி சொல்லிச்சொல்லி, வனபத்ராவைப் பார்க்கவும் அவனுக்குள் தோன்றிய முதல் எண்ணம் இதுதான். இதையே அவன் அன்னையும் சொல்ல, தானாகப் புரையேறியிருந்தது.
“பாத்துக் குடிடா…” என்றபடி அவன் முதுகை அவர் தடவிவிட, வாசல் அழைப்புமணி அடித்தது.
“இரு.. நான் பாக்கேன்…” என்றபடி அவர் செல்ல, தன்னை நிலைப்படுத்தியவனுக்கு உள்ளே வந்தவளைப் பார்க்கவும் நின்ற செரசல் மீண்டும் ஏறுவதைப் போல இருந்தது.
“என்ன விஷயம்ங்க?” என்றபடி எழுந்தான். “ஒண்ணுமில்ல.. நான் கொஞ்சம் வெளியே போறேன்… அபி வந்தா சாவி கொடுக்கணும்…” என்றவளுக்கு இந்த வீட்டுக்காரர் இன்னொரு சாவி போட்டுக் கொடுத்தால்தான் என்ன என்றிருந்தது. அதை வாசலிலேயே கொடுத்திருக்கலாமே என்ற கேள்வி அவன் முகத்தில் தொனிக்க, அவள் அவன் அன்னையைப் பார்த்தாள்.
அவரும்”நான்தான் டா வரச்சொன்னேன்.. இரிம்மா…” என்றார்.
“ம்மா.. அவங்க ஏதோ வேலையா கௌம்பிருக்காங்க…”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல ஆன்ட்டி…”
“கேட்டுட்டுத்தான்டா கூப்பிட்டேன்… ஒண்ணுமில்ல மக்கா… பிரசாதம் கொடுக்கத்தான் கூப்பிட்டேன். ஒரு நிமிஷம் மா…” என்றபடி அவர் உள்ளே செல்ல, கன்னத்தில் கை வைத்திருந்தான் ஜீவிதன்.
“நாங்க திருப்பதி போய்ட்டு வந்தோம் ம்மா…” என்று அவர் லட்டை நீட்டினார்.
“எனக்கு லட்டு பிடிக்காது…” ஜீவிதன் வனபத்ராவுக்காகச் சொன்னான். உடைந்திருந்த லட்டைப் பார்த்து, அவன் உண்டுவிட்டு வைத்தது என்று அவள் சுத்தம் பார்த்துவிடக் கூடாதே?
“உனக்காரு கொடுத்தா? நீ எடுத்துக்கோம்மா…” என்றார் அவர்.
“எனக்கும் சாதாரண லட்டு பிடிக்காது ஆன்ட்டி. ஆனா, பிரசாத லட்டு பிடிக்கும்…”
“அதான… திருப்பதி லட்டு பிடிக்காம யாரிருப்பா? என் பையன் ஒரு வினோத ஜந்து…” அவர் சொல்ல, சிரித்தவள், லட்டை எடுத்துக் கொண்டாள்.
“அப்படியே எடுத்துக்கோம்மா… வீட்ல இருக்கவங்களுக்கும் கொடுப்பதானே?”
“தம்பி மட்டும்தான் இங்க இருக்கான் ஆன்ட்டி, அவனும் ஒரு வினோத ஜந்துதான்…”
அவள் சொல்லவும் சிரித்தவர், மீண்டும் ஒரு நிமிடம் என்றார். சொன்னது போலவே ஒரு நிமிடத்தில், அவர் தேநீரோடு வரவும் ஜீவிதனுக்கு அன்னை எப்படியோ தன் காதலைக் கண்டறிந்துவிட்டார் என்று தெரிந்தது. மனோன்மணி எல்லாரிடமும் நல்லபடியாகத்தான் பேசுவார், இருந்தாலும் அறிமுகமற்றவர்களை உடனே வீட்டுக்குள் அழைத்து விருந்தோம்பும் அளவு அப்பாவி அல்ல.
அவர் தேநீரை நீட்டவும் வனபத்ரா ஒருமுறை மிடறு விழுங்கினாள்.
அதைப்பார்த்துவிட்டு,”ம்மா…” என்றான் அவன்.
“என்னடா?”
“அவங்க குடிப்பாங்களா என்னன்னு கேட்காம ஏன்மா போட்டு எடுத்துட்டு வர்றீங்க?”
“நான் குடிப்பேன் ஆன்ட்டி…நன்றி…” என்று எடுத்துக் கொண்டாள். அவள் குடிக்கவும் தொடங்க, ஜீவிதன் வியப்பாகப் பார்த்தான்.
“அதான, ஏன்டா, உன்னை மாதிரி எல்லாரும் மாட்டுப்பால்ன்னா குடிக்க மாட்டாங்கன்னு நெனச்சியா?” என்றார் அவர்.
வனபத்ரா விழித்தாள். ஜீவிதன் பால் குடிப்பான். அவளுடனே தேநீர் அருந்தியிருக்கிறான்தானே? இவர் என்ன சொல்கிறார்? ஒருவேளை தனக்குத்தான் தெரியவில்லையோ, என அவள் சந்தேகம் கேட்டாள்.
“மாட்டுப்பால் குடிக்க மாட்டாங்கன்னா வேற என்ன … எதுவும் வீகன் ஆல்ட்டர்னேட்… அந்த மாதிரியா?”
“அதெல்லாம் இல்லம்மா… இப்ப குடிப்பான், சின்ன பிள்ளலதான் பசும்பால் நேரடியா கறந்து வாங்குனா குடிக்க மாட்டான், என்னமோ பாக்கெட் பால் லாம் ஏதோ மிஷின் தானா போடுற மாதிரி நெனச்சுட்டு, மாட்டுப்பால், மாட்டுப்பால் ன்னு குடிக்க மாட்டான்… உங்கிட்ட சொல்லலயாடா?”
“ம்மா…” என்று அவன் சிரிக்கத் தொடங்கியிருக்க, அவன் சிரிப்பிலேயே மகன் கண்டுகொண்டான் என்பதைக் கண்டுகொண்டவர், “நீயா சொல்லிரு மக்கா…” என்றார்.
என்ன சொல்லணும்? என்பது போல வனபத்ரா விழிக்க, ஜீவிதன் சொன்னான்.
“பேர் வனபத்ரா, வயசு 24. வேலை விஎப்எக்ஸ் ஆர்ட்டிஸ்ட், ப்ரீலான்சிங் பண்ணிட்டு இருக்காங்க. அப்பா அகில இந்திய வானொலி ல நிகழ்ச்சித் தொகுப்பாளர், அம்மா போலிஸ் இன்ஸ்பெக்டர், ஒரே தம்பி, இங்கதான் வைல்ட் லைப் பயாலஜி செகன்ட் இயர் படிச்சுட்டு இருக்காரு…அவங்க வீட்ல சொல்லிட்டாங்க. எங்களுக்குள்ள கொஞ்சம் பிரச்சனைகள், என்ன பிரச்சனைன்னு கேட்காதீங்க.. சொல்ல மாட்டோம். அதெல்லாம் தீந்தப்பறம் சொல்லலாம்ன்னு இருந்தேன். நீங்க கெண்டுட்டீங்க…” என்று சொல்லிக் கொண்டு போக, அவன் தொடங்கும்போதே தேநீரை ஒரே மூச்சில் குடித்து முடித்த வனபத்ராவும் நிமிர்ந்து அமர்ந்தாள்.
“மக்கா… உனக்கு இந்த வினோத ஜந்துவப் பிடிக்குமாம்மா?”
அவர் கேட்ட விதத்தில், இருந்த படபடப்பு லேசாகத் தணிய, “பிடிக்கும் ஆன்ட்டி…” என்றாள் மெல்லிய புன்னகையுடன். அவள் குரல் மெலிதாகத்தான் ஒலித்தது. ஆனால், அதில் உறுதி தொனித்தது.
“ம்மா.. நீங்க எங்கிட்ட கேட்கணும், பிடிக்குமான்னு…”
“வள்வள்ளுன்னு விழுந்துட்டுருந்த உன் முகத்துல இந்தப் பிள்ளய பாக்கவும் எரிஞ்ச பல்ப வச்சுதான் என் சந்தேகம் உறுதியே ஆச்சு…”
“சந்தேகம் எப்படி வந்துச்சு?”
“தாயறியாத சூல் கெடயாதுடா… எனக்கு ரொம்ப நாளாவே உன் முகத்தைப் பார்த்து ஒரு சந்தேகம்தான், பாப்பா வேற நான் மேல போய் யாரு என்னன்னு சொல்ல முன்னாடியே வாங்க ஆன்ட்டி… ஒரு நிமிஷம்ன்னு போய் சாவிய எடுத்துட்டு வந்துச்சா…” எனவும் வனபத்ராவுக்கு ஐயோ என்றுதான் இருந்தது. இப்படி ஒரு சின்ன கவனக்குறைவில் சிக்குவாள் என்று நினைத்திருக்கவில்லை. ஜீவிதனின் அம்மாவை அவளுக்குத் தெரியும். அவன் அவளிடம் தன் பெற்றோரது ஒளிப்படத்தைக் காட்டியிருக்கிறான். ஆனால், அவளுக்கு அவரைத் தெரியும் என்று அவருக்குத் தெரியாதுதானே? அதை யோசிக்காமல் என வனபத்ரா நாக்கைக் கடித்தாள்.
இருவரும் திருதிருவென விழிக்க, சிரித்தார்.
“உங்க வீட்ல வந்து பேசலாமாடா?” அவர் கேட்கவும் வனபத்ரா பாவமாக முகத்தை வைக்க, “அம்மா… எங்களுக்குள்ள கொஞ்சம் பிரச்சனன்னு சொன்னேன்.. கவனிச்சீங்களா இல்லையா? நீ போ பத்ரா…” என்றான் ஜீவிதன்.
“என்ன பிரச்சன?”
“சொல்ல மாட்டோம்ன்னு சொன்னேன்…”
“ஜீவி… எனக்குக் கொஞ்சம் ஜுபோபியா இருக்கு ஆன்ட்டி…” என்றாள்.
“ஜுபோபியா ன்னா? ஜு(Zoo)க்குப் போகப் பயப்படுவியா மக்கா?”
“அது… நார்மலா எல்லா விலங்கு, பறவை, பூச்சி, எதைப் பக்கத்துல பாத்தாலும் பயமா இருக்கும் ஆன்ட்டி…”
அவள் சொல்லவும் அவ்வளவு நேரம் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்த மனோன்மணி திகைத்துப் போய் மகனைப் பார்க்க, அவன் தன் முன்னால் இருந்த பிரசாதத்தை எடுத்துக் கொஞ்சம் வாயில் போட்டு மெல்லத் தொடங்கினான். என்ன பேசுவது என்று தெரியாமல் ஒரு சங்கடமான மெளனம் நிலவ, “நான் வரேன் ஆன்ட்டி…பை…” என்றுவிட்டு வெளியேறியிருந்தாள் வனபத்ரா.
அன்று முழுவதும் மனோன்மணி ஜீவிதனைக் குடைந்தெடுத்துவிட்டு, “வேற வீடு வேணா மாறிர்றியா ஜீவி?” என்றார்.
“மாறி? அவ எனக்காகத்தான் இங்கேயே வந்திரிக்கா ம்மா…” என்றவன், தங்கள் காதல்கதையைச் சுருக்கமாகச் சொன்னான்.
“இது ஒத்து வருமாடா?” என்றார் யோசனையாக.
“வரும்போது வரட்டும் ம்மா…” என்றான் அவன்.
“வரலன்னா?”
ஒரு பெருமூச்சு ஒன்றை விட்டவன், “ம்மா… ப்ளீஸ்.. இந்த விஷயம் வெளியே காட்டிக்கலன்னாலும் என்னை ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆக்குது… இதைப் பத்திப் பேசாதீங்க…வரலன்னா ன்னு நான் இப்போதைக்கு யோசிக்க விரும்பல.. எதுனாலும் வர்றப்ப பாத்துக்கலாம்… இப்ப அப்பா எப்ப வர்றாரு?” என்று பேச்சை மாற்றியிருந்தான்.
அதன்பிறகுதான் மனோன்மணி மகனது முகத்திலிருந்த சோர்வைச் சரியாகக் கவனித்தார். அவனுடைய வேலை எப்போதும் அலைச்சல் நிறைந்ததுதான். அதிலிருக்கின்ற களைப்பு என்று எண்ணியிருந்தார். இப்போது அது இல்லையோ என்று தோன்றியது. அந்தப் பெண்ணின் முகத்திலும் ஒரு உயிரோட்டமில்லை.
“உன்னை யாருடா காதலிக்கச் சொன்னது?” என்றார் மகனிடம் கோபமாக.
“அடுத்த தடவ உங்ககிட்ட பெர்மிஷன் வாங்கிட்டுப் பண்றேன் ம்மா…” என்று அவன் நக்கலாகச் சொல்லிச் சென்றிருந்தான். மனோன்மணி அடுத்தநாள் வந்த கணவரிடமும் புலம்பிக் கொண்டே இருந்தார். முந்தைய நாள் அலைபேசியில் ஆரம்பித்தது, இன்றும் நிற்கவில்லை. அவருக்கும் இந்தச் சிக்கலை என்ன செய்வது என்று தெரியவில்லை. அவர் வந்தது இருக்கின்ற வேலைப்பளுவில் கொஞ்சம் மகனோடு நிம்மதியாக இரண்டு நாட்கள் இருந்துவிட்டு வரலாம் என்றுதான். ஆனால், அவ்வளவாக எதற்கும் அலட்டிக் கொள்ளாத மகன் காதல் விஷயத்தில் இவ்வளவு மென்மையானவனாக இருப்பான் என்று பகவதியுமே எண்ணியிருக்கவில்லை.
அன்று இரவு முழுவதும் இருவரும் மாறிமாறி மகனிடம் பேச அவன் பிடி கொடுக்கவில்லை. அப்போதே ஒரு சிறுத்தை ஒன்று அருகிலிருந்த கிராமத்தில், ஒரு வீட்டுக்குள் புகுந்துவிட்டது என்று அழைப்பு வர, அடுத்தநாள் இரவு பத்து மணி போலத்தான் நேராக வந்தான். அவன் அணிந்திருந்த வனத்துறை சீருடையே மண்ணும் அழுக்குமாக இருக்க, வாயிலில் இருந்த குளியலறையில் கால், கை கழுவியவன், வாயிற்படியில் கால் வைக்கும்போதே, வீட்டுக்குள் தெரிந்த வனபத்ராவைப் பார்த்துத் திகைத்தான். இவள் இந்நேரத்தில் இங்கே என்ன செய்கிறாள்? தங்களுடைய பெற்றோரும் இந்த வார இறுதியில் தங்களைப் பார்க்க வருவதாக அபிதன் முன்பே கூறியிருக்க, ஜீவிதன் அவளை இங்கே எதிர்பார்க்கவில்லை. அலைபேசியை எடுத்துப்பார்க்க, அவளிடமிருந்து அழைப்புகளும் குறுஞ்செய்திகளும் குரல்பதிவுகளும் வந்திருந்தன. காதுக்கு நல்லதல்ல என அவசரத்தைத் தவிர, அவன் அவ்வளவாகப் பயன்படுத்தாத ஹெட்செட்டை எடுத்துக் காதில் மாட்டியவன், அவளுடைய குரல்பதிவுகளைக் கேட்டுவிட்டுத்தான் உள்ளே நுழைந்தான்.
உள்ளே அவளுடைய பெற்றோரும் இருந்தனர். எதையும் முகத்தில் இன்முகமாகவே வரவேற்றான். அபிதனையும். பின், “வா பத்ரா…” என அவளையும் சொல்ல, அவள் அவன்பக்கம் ஒரு மாறாத புன்னகையுடன் திரும்பினாள். ஆனால் முகம் பார்க்கவில்லை. அது வெட்கம் என நினைக்குமளவு ஜீவிதன் முட்டாளில்லை.
சேலையில் இருந்தாள். ஏனோ அவளைச் சேலையில் பார்த்த அன்று நடந்த நிகழ்வுகள் நினைவுவர, ஆடையால் நிகழ்கிறது என நினைப்பது தவறான நினைப்பு என அதை ஓட்ட முயற்சி செய்தபடி, அன்னை தந்தையைப் பார்த்தான். உண்மையில் அவர்கள் சந்திக்க நினைக்கவில்லை. முதலில் ஜீவிதன் விடுப்பு எடுத்து மூவருமாய் ஊர் சுற்றுவதாய் இருந்தது. அவன் வேலை ஒத்துழைக்காமல் போகவே, தாய்தந்தையரை மட்டும் சென்றுவரச் சொன்னான். தான் பிறப்பதற்கு முன் இருந்ததைப் போல நினைத்து நிம்மதியாக இருங்கள் என்றும் சொன்னான்தான். ஆனால், அவன் பெற்றோருக்குத்தான் நேற்று அவன் குழப்பிவிட்டிருந்ததில் குட்டையாய் இருந்த மனநிலையில் எங்கும் செல்லத் தோன்றவில்லை.
வனபத்ராவுக்குமே வீட்டில் அவள் அன்னை அடிக்கடி மந்திரித்துக் கொண்டேதான் இருந்தார். என்னவோ மகள் அவனுக்காக இங்குவரை தேடிவந்து இருப்பது என்பது அவருக்குச் சரியானதாகத் தோன்றவில்லை. சரி, கொஞ்சம் விட்டுப்பிடிக்கலாம் என்று நினைத்திருக்க, அவளை விட்டால் பிடிக்க முடியாது என்பது போல நடந்துகொண்டிருந்தாள். அதில் இன்று நேராக வந்தவர், திட்டுதிட்டு திட்டெனக் கட்டி இறங்க, கீழ போய்ப் பேசுங்க… அவரையே கட்டிக்கறேன்…” என்றிருந்தாள்.
“நாங்க எப்படிடி பேசமுடியும்? பையன் வீட்ல இருந்துதான கேட்டு வரணும்? பேசிக் கேட்டு வரச்சொல்லு…” என்றார் அஞ்சனா. பாலமுருகன், “அஞ்சனா…” என்றதை அவர் கேட்கவில்லை. அன்னையை முறைத்தவள், ஜீவிதனை அழைக்க, அவனுக்குத் தொடர்பு கிடைக்கவில்லை. கோபத்தில், கீழே செல்கிறேன் என்றுவிட்டு இறங்கிவந்தாள். அவளைச் சமாதானப்படுத்த எனப் பின்னோடு பாலமுருகன் வர, எதிரே மனோன்மணியும் பகவதியும் வந்திருந்தனர்.
பின் அப்படியே அங்கேயே நின்று பேசி, அவர்களைத் தேடி அபிதன், அஞ்சனா என்று வந்து, பின் வீட்டுக்குள் சென்று பேச ஆரம்பித்திருந்தனர். யார் கேட்டாலும் உறுதியாக ஜீவிதனை மணந்துகொள்கிறேன் என்றாள் வனபத்ரா. அஞ்சனாவுக்கே ஒருமாதிரி ஆகியிருந்தது. தனியாக மகளிடம் கேட்க, “இல்லம்மா… உங்களுக்காகலாம் சொல்லல… நான் நிஜமாவே ஜீவிய மேரெஜ் பண்ணிக்கிறேன்…” என்றாள் தன்மையாகவே. அவனுக்கும் ஒரு குரல் பதிவாகக் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டிருந்தாள்.
மனோன்மணியும் பகவதியும் அவளிடம் மீண்டும் மீண்டும் கேட்டனர். அவள் உறுதியாகப் பதிலளிக்க, அவர்களுக்கும் மகிழ்ச்சியே. மகன் வராமல் பெரிய பேச்சு எதுக்கும் போகவில்லை. ஆனால், ஜீவிதன் மறுக்கமாட்டான் என்பதில் அவர்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. சொல்லப்போனால், மகிழ்ச்சியில் மலரும் மகனது முகத்தைப் பார்ப்பதற்காகக் காத்திருந்தனர். பின்னர், இரண்டு நாட்களாக எப்படி வாதாடினான்? அவள் இல்லாவிட்டால் வேறு யாரையும் மணந்துகொள்ளமாட்டேன் என்றான்தானே? என்றெல்லாம் நம்பியிருந்தவர்கள், விஷயத்தை அவனிடம் சொன்னார்கள்.
“இந்த மாசமே நல்ல முகூர்த்தம் நிறைய இருக்கும் மக்கா. நல்லநாளா பாத்து, பூவச்சு நிச்சயம் பண்ணிருவோம். சித்திரல கல்யாணம் வச்சுக்கலாம்… உனக்குச் செரிவரும்தானே ஜீவி?” தன் தந்தை கேட்க, சில நிமிடங்கள் அமைதியாக இருந்தவன், “இவ்ளோ நேரம் ஆச்சு? எல்லாரும் சாப்பிட்டீங்களா?” கேட்டுவிட்டு, பேன்ட் பாக்கெட்டில்வைத்திருந்த சானிட்டசைரை எடுத்து நன்றாகக் கையில் தேய்த்தான். பின், அங்கே ஹாலிலேயே ஓரமாக இருந்த வாஷ்பேசின் ஒன்றில், சோப்புப் போட்டு நன்றாகக் கையைக் கழுவினான்.
எவ்வளவு முக்கியமான கேள்விக்கு என்ன பதில் பேசுகிறான், என்ன செய்கிறான் என, பாலமுருகனுக்கும் அஞ்சனாவுக்கும் சுருக்கென்றிருந்தது. பாலமுருகன்தான் சுதாரித்து, “நிச்சயம் ஆக முன்னாடி கை நனைக்கக்கூடாது தம்பி…நாங்க வீட்ல போய்ச் சாப்பிட்டுக்குவோம்…” என்றார் இயல்பான குரலிலேயே.
“பிரசாதம் சாப்பிடலாம்தான அங்கிள்?” என்றவன், குளிர்சாதனப்பெட்டியைத் திறந்து, அன்னை வைத்திருந்த லட்டை எடுத்தான். உடன் வேலை பார்ப்பவர்களுக்கு என வைத்திருந்த முழு லட்டை அவன் எடுக்க, மனோன்மணி அதைச் சொல்ல வந்துவிட்டு வாயை மூடினார். இவர்களை விட முக்கியமானவர்கள் யார்?
சமையலறைக்குச் சென்று ஒரு தட்டு ஒன்றை எடுத்து வந்தவன், அந்த முழு லட்டை இரண்டாகப் பிய்த்தான். பின், அதை இன்னும் சிறுசிறு துண்டுகளாகப் பிய்த்துப் போட்டான், அவனுடைய பார்வை வனபத்ராவின் முகத்திலேயே தான் இருந்தது.
முதலில் அருகில் இருந்த அஞ்சனாவிடம் தட்டை நீட்ட, அவர் மனதுக்குள் இறைவனை வணங்கிவிட்டு, பிரசாதத்தை எடுத்துக் கொண்டார். அபிதன், “என்ன மாமா அக்கா காபி கொடுக்கறதுக்குப் பதிலா நீங்க லட்டு கொடுக்கிறீங்க?” என்று கிண்டலாகக் கேட்டபடியே எடுத்துக் கொண்டான். பிடிக்காது என்றாலும் அவன் கொடுத்தது என்பதற்காகவே அவனும் உண்ண, பாலமுருகனும் எடுத்துக் கொண்டார். இரவு நேரத்தில் இனிப்பு வேண்டாம் என ஒரு வாழைப்பழம் உண்ண விடாத மகன் ஏன் லட்டு கொடுக்கிறான் என்று புரியாமல் மனோன்மணியும் பகவதியும் எடுத்துக் கொண்டனர். கடைசியாக வனபத்ராவிடம் வந்தவன், அவளை ஒருமுறை ஆழப்பார்த்துவிட்டு “எடுத்துக்கோ வனா…” என்றான்.
“இல்ல…” என அவள் மறுப்பாகத் தலையசைக்கப் போக, “பத்ரா… பிரசாதத்தை வேணாம்ன்னு சொல்லக் கூடாது, அதுலயும் மாப்பிள கொடுக்கறாரு… எடுத்துக்கோ…” என்றார் அஞ்சனா அழுத்தமாக.
வனபத்ராவின் பார்வை ஒருகணம் ஜீவிதனின் கைகளைப் பார்த்துவிட்டு, லட்டைப் பார்த்தாள், பின் அவன் உடையைப் பார்த்தாள், லட்டைப் பார்த்தாள்.
பின் இரு ஆழ்மூச்சுகளை எடுத்துவிட்டு எடுக்கப்போக, “இன்னைக்கு நான் ஒரு சிறுத்த…” என்றான் அவன்.
அவள் நீட்டிய கையைத் தொடராமல் இருக்க, ” ஒரு வீட்டுக்குள்ள புகுந்துருச்சு…நாயப் பிடிக்கறதுக்காக ஊருக்குள்ள வந்துருக்கும்போல…” எனவும் கையைக் கீழே இறக்கியிருந்தாள்.
அவன் அவள் கண்களையே ஆழப்பார்க்க, அவள் மிடறு விழுங்கினாள். “உனக்குத்தான் பிரசாத லட்டு பிடிக்கும்ல வனா.. எடுத்துக்கோ…” என்றபடி ஒரு சிறு துண்டை எடுத்து, அவள் வாயருகே கொண்டுவந்தான். அவன் கை அருகில் வரவுமே, மூர்க்கமாக அவனைப்பிடித்துத் தள்ளியிருந்தாள்.
அசராமல் நிலைப்படுத்தி கையிலிருந்த தட்டோ அதில் இருந்த லட்டோ கீழே விழாமல் இரண்டடி பின்னால் நகர்ந்தவனுடைய லாவகத்திலேயே அவன் இதை எதிர்பார்த்திருந்தான் என்று தெரிந்தது. பின் என்ன செய்தோம் என்கிற அதிர்ச்சியும் அழுகையுமாக அவள் யார் முகத்தையும் பார்க்காமல் வீட்டை விட்டு வெளியேறி மேலே ஓட, “அபி.. கூடப் போ…” என்றான் அபிதனைப் பார்த்து. அபிதனும் செல்ல, ஜீவிதன் அமைதியாக அங்கிருந்தவர்களைப் பார்த்தான்.
“நான் வனாவத் தவிர யாரையும் கலியாணம் கெட்ட மாட்டேன்…அவளும் என்னத் தவிர யாரையும் கெட்ட மாட்டா.. ஆனா, நாங்க கொஞ்சம் தெளிவாக எங்களுக்குக் கொஞ்சம் நேரம் வேணும்… அப்படி நாங்க தெளிவானாலோ, இல்ல எங்களுக்குத் தெளிவே கிடைக்காதுன்னு தெளிஞ்சாலோ கண்டிப்பா உங்ககிட்டதான் வருவோம்… அப்ப இந்தக் கல்யாணப் பேச்சப் பேசுங்க… தயவுசெஞ்சு தப்பா எடுத்துக்காதீங்க…” என்று அவன் கையெடுத்து வணங்க, “புரியுது தம்பி…” என்றபடி பாலமுருகன் எழுந்தார், அஞ்சனாவும் எழுந்திருக்க, பகவதியும் மனோன்மணியும் உடன் எழுந்தனர். பாலமுருகனையும் அஞ்சனாவையும் மூவரும் வாயில் வரை வந்து வழியனுப்ப, “அத்த… அவளத் திட்டிராதீங்க…” என்றவன், அவர் பார்வையில், “ப்ளீஸ்…” என்றான். அவர் ஒரு தலையசைப்பை மட்டும் பதிலாகக் கொடுத்துவிட்டு மேலே செல்ல, பாலமுருகனும் அதையே செய்தார். உள்ளே வந்து, தன் தாய்தந்தையிடம் திரும்பியவன், “என்னையும் திட்டிராதீங்க… ப்ளீஸ்… சாரிம்மா… சாரிப்பா…” என்றவன், பொம்மை போலக் குளித்துவிட்டு வந்து கட்டிலில் விழுந்தான்.
(தொடரும்…)

Interesting👍