புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

எனக்காக வந்தவனே – 19


அழுதழுது தன் மடியில் உறங்கிப்போயிருந்த மகளைத்தான் அஞ்சனா பார்த்தார். இப்போதுதான் அவள் குட்டியாக அவர் கைகளுக்குள் அடங்கி கியா மியா என்று கத்திக்கொண்டு இருந்தது போல இருந்தது. அதற்குள் இவ்வளவு பெரிய பெண்ணாகிவிட்டாளா என்றிருந்தது. மெல்ல அவள் தலையை வருடிவிட்டவர் எதிரே அமர்ந்திருந்த கணவரையும் மகனையும் பார்த்தார்.

“போய்த் தூங்கப் போங்க… ஏன் என் மூஞ்சியவே பாத்துட்டு இருக்கீங்க?”

அபிதனுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. ஜீவிதன் மேல் கோபமாக வந்தது. எதற்காக, சிறுத்தை, நாய் என்று அக்காவைத் தூண்டிவிட வேண்டும்? அவன் அவளுடன் போ என்றபோது கூட நீ சொல்லி நான் ஏன் கேட்க வேண்டும் என்று தோன்றியதுதான். ஆனால், அக்காவுக்காக என்று வந்தவன், பாதிப்படியில் உடல்நடுங்க அமர்ந்து அழுதுகொண்டிருந்த வனபத்ராவைப் பார்த்துத் திகைத்தான். அவனுக்கே கொஞ்சம் அதிர்ச்சிதான். முன்பும் வனபத்ரா அழுவாள்தான். ஆனால், இவ்வளவு அழுகை இருக்காது. இப்போது இந்தக் காதலில் விழுந்த பிறகுதான் இப்படி ஏதோ உயிர் கரைவது போல அழுகிறாள்.

அவளை எழுப்பி வீட்டுக்குக் கூட்டிவந்தவன், சமாதானப்படுத்த முயற்சி செய்ய, முடியவில்லை. தொடர்ந்த வந்த அன்னை தந்தையைப் பார்த்தவள், “நான் உங்ககூட ஊருக்கு வந்துரேன் மா…” என்றாள் அழுகையும் கண்ணீருமாக. அதைத்தானே அவளுடைய அன்னை சொன்னார், ஒன்று ஜீவிதனை மணக்க வேண்டும், இல்லையெனில் தங்களோடு ஊருக்கு வரவேண்டும்.

பொறுமையாகப் பார்த்த அஞ்சனா, “வந்து?” என்றார். வேறு யாரையாவது திருமணம் செய்து கொள்கிறாயா? என்கிற கேள்வி அதில் தொக்கிநிற்க, வனபத்ராவின் அழுகை கூடியது.

“நீ ஆறு வயசுல அந்த நாய்ங்க கடிக்க வந்த அன்னைக்குக் கூட இப்படி அழுகல… இங்க வா…” என்றார் மகளைப் பார்த்து மென்மையாக. அவரை மடிசாய்த்தவர், “உனக்கு அதிகபட்சம் பதினொரு வருஷம் டைம்…” என்றார்.

அவள் திருதிருவென விழிக்க, “உன் தம்பிக்கு முப்பது வயசாகறதுக்கு…” என்றவர், “அவனுக்கும் கல்யாணம் பண்ணனும்ல? உனக்குப் பண்ணாம அவனுக்குப் பண்ணிவைக்க மாட்டோம்… அதுக்குள்ள மாப்பிள்ளய கல்யாணம் பண்ணிக்க, நீதான் உன் மனச மாத்திக்கணும். நீ சிங்கிள் ன்னா, உன் தம்பியும் சிங்கிள்தான்… அவனா ஓடிப்போய் கல்யாணம் பண்ணாலும் பிரிச்சு விட்டுக் கூட்டிட்டு வந்துருவேன்… அதை மனசுல வச்சுக்கோ… இப்ப தூங்கு…” என்று தட்டிக் கொடுத்தார்.

அன்னை மாப்பிள்ளை என்றதில் அவள் விழிகள் விரிந்தன. கீழேயே அவர்சொன்னார்தான். அவள் கவனம் ஜீவிதனிடம் இருந்ததில் கவனிக்கவில்லை. மகளது பார்வையில் சிரித்தார்.

“குட்டிப்பிள்ளைல கைல வச்சுருக்க எதையாவது பிடுங்குனா அழுவ… திரும்பக் கொடுத்தா, இப்படிதான் பார்ப்ப… க்யூட்டா இருக்கும்… ரொம்ப நாள் கழிச்சு அந்த ரியாக்ஷன பார்க்குறேன்… அதான் ரெண்டுபேரும் கட்டுனா இவங்களத்தான் கட்டுவேன் றீங்கள? கட்டிக்கோங்க… நல்லவேள உன்னை முதல்ல பெத்தேன்.. அபி முதல்லன்னா பாவம் என் பையன், அந்தப் பக்கமும் ஒரே பையன்தான? யாருக்கு என்ன பிரச்சனை? தூங்கு…”

“ஜீவிதன் உங்களுக்கு ஓகேவாம்மா?”

“எங்களுக்கு ஓகே இல்லன்னு யார்டி சொன்னது? நீதான் ஓகே சொல்ல மாட்டேன்னு சுத்திட்டு இருந்த… இழுபறியா இழுத்தா ஒரு குழப்பம் வந்து சலிப்பு வந்துரும்ன்னு நினைச்சேன்… ஆனா, நல்ல வேள அந்தப் பையன் கிட்ட ஒரு தெளிவு இருக்கு… விசாரிச்ச வரைக்கும் நல்ல குடும்பம், நல்ல பையன், பழகிப்பார்க்கவும் நல்லவங்களாதான் இருக்காங்க. அந்தத் தம்பியும் உனக்காகப் பார்க்கறாரு…போதும். நிம்மதியா இரு.. கண்டதையும் போட்டுக் குழப்பாத…இப்ப தூங்கு…”

வனபத்ரா அழுகையை நிறுத்தி, அன்னையின் வயிற்றை இறுக்கமாகக் கட்டிக் கொள்ள, அவளைத் தட்டிக் கொடுத்தபடியே இருந்தார். அன்னையின் வயிற்றில் முகம் புதைத்திருந்த வனபத்ராவுக்கு வேறொன்று உள்ளே ஓடியது.

‘இந்த வயிற்றுக்குள்தானே அவள் இருந்தாள்?அப்போது அவளுக்குச் சாப்பாடு எல்லாம் எப்படி போயிருக்கும்? அன்னை உண்டதுதானே? குழந்தை பிறப்பதே, கழிவு வரும் வழியாகத்தானே? உயிர்ப்பிறப்பே அப்படி இருக்கையில் என்ன அருவருப்பு பார்த்து என்ன செய்ய?’ என்றெல்லாம் தோன்ற, யோசித்தபடியே அன்னையை இன்னும் நன்றாக இறுக்கமாகக் கட்டியபடி உறங்கியிருந்தாள்.

அபிதன்தான் அன்னையைப் பாவமாகப் பார்த்தான், “நெஜமாவே நான் ஓடிப்போனாலும் பிரிச்சுவுட்டுக் கூட்டிட்டு வந்துருவீங்களாம்மா?”

மகளைச் சமாதானப்படுத்தவென்று ஏதோ சொல்ல, மகன் இப்படி கேட்பானென்று நினைக்காத அஞ்சனா ஒருகணம் யோசித்தார்.

“ஓடிப்போறது தப்பா சரியா அபி?”

“தப்பு…”

அஞ்சனா மறுப்பாகத் தலையசைத்தார், “ஒரு பொண்ணு காதலிக்குதுன்னு வச்சுக்குவோம், அந்தப் பொண்ணோட வீட்டுல சாதிவெறியோ மதவெறியோ பிடிச்சு இருக்காங்க, வேற சாதில கொடுக்கறதுக்கு அந்தப் பொண்ண கொன்னுரலாம்ன்னு நினைக்கிறாங்க… அப்ப அந்தப் பொண்ணு ஓடிப்போறது தப்பா, சரியா?”

“தப்புன்னு எப்படி சொல்லமுடியும்?”

“அதுதான், சூழ்நிலைதான் முக்கியம். அதனால நீ ஓடிப்போனன்னா சூழலைப் பார்த்துத்தான் சொல்ல முடியும். ஆனா, ஓடிப்போற ஐடியா வந்தா, ஒரு நிமிஷம் அப்பாம்மாட்ட வந்து, என்ன விஷயம்ன்னு சொல்லு… நீ ஒரு பொண்ண காதலிக்கறன்னு சொன்னா, அம்மாவோ அப்பாவோ உனக்குச் சோத்துல விஷம் வைப்போம்ன்னு நினைக்கிற?”

“ம்மா… என்னம்மா?”

“பின்ன என்னடா? ஒரு பேச்சுக்கு உங்கக்காட்ட சொன்னா, ஓடிப்போனா ன்னு கேட்டுட்டு இருக்க? உனக்கு இன்னும் மேரெஜ்க்கு உரிய லீகல் ஏஜே வரல.. தெரியும்தானே? போ, போய்ப் படி… “

“நைட்டு ஒரு மணிக்கு நான் ஏன் மா போய்ப் படிக்கணும்?”

“அப்ப போய்த் தூங்கு.. போ…ஏங்க.. எனக்கு ஒரு தலகாணிய எடுத்துக் கொடுத்துட்டு நீங்களும் போய்த் தூங்குங்க…”

காலை எட்டரைமணி போலத் தெம்பாகக் காலை உணவை முடித்துவிட்டு, வனபத்ராவிடம் பேசவென வந்த ஜீவிதன் அவன் எதிர்பார்த்ததற்கு மாறாகத் தெளிவான முகத்துடன் அமர்ந்திருந்தவளைப் பார்த்தான். அஞ்சனா, வரவேற்று குடிக்க ஏதாவது எடுத்துவருகிறேன் என்று சென்றார். பாலமுருகன் அமரவைத்து இயல்பாகப் பேசிக் கொண்டிருந்தார். அபிதன்தான் முகத்தைத் தூக்கிவைத்திருந்தான். ஏனோ வனபத்ராவின் முகத்தில் கொஞ்சம் தெளிவு தெரிய, தான் இப்போது பேச வேண்டாம் என்று தோன்றியது ஜீவிதனுக்கு. யோசனையுடனே, “இன்னைக்கு அப்பாம்மாக்கு முப்பதாவது கல்யாண நாள், பதினொரு மணி போலச் சின்னதா ஒரு கேக் மட்டும் கட் பண்ணலாம்ன்னு யோசிச்சேன், எல்லாரும் கண்டிப்பா வரணும்…” என்றான்.

ஒருகணம் பாலமுருகனும் அஞ்சனாவும் ஒருவர் முகம் ஒருவர் பார்த்துவிட்டுச் சரியெனத் தலையசைத்தனர். அபிதன்தான்  வரமாட்டேன் என அடம்பிடித்தான். வனபத்ரா தலையில் ஒரு தட்டு தட்டவும் வந்திருந்தான்.

“கிப்ட்…” என யோசிக்க, “நான் வச்சிருக்கேன்…” என்று காட்டினாள் வனபத்ரா. அதுவும் ஒரு ஓவியம்தான். ஆனால், இதில் ஜீவிதனும் இருந்தான், குழந்தையாக. அவனுடைய ஒருவயதில் எடுத்த புகைப்படம் ஒன்று அவளிடம் இருந்தது. அதையும் அவனுடைய தாய்தந்தையரின் இளமையுருவங்களையும் இணைத்து அழகான ஓவியமாகத் தீட்டியிருந்தாள்.

இரண்டு ஓவியங்களையுமே பார்த்த மனோன்மணிக்கும் பகவதிக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. மகனுக்குத் திருமணமே நடக்குமா? நடக்காதா? என்று தெரியாத வேளையில் தங்களுக்குத் திருமணநாளா என்று சோர்வாக இருந்தவர்கள், வனபத்ராவின் குடும்பம்  அலட்டிக் கொள்ளாமல் அவர்களே இன்னகையுடன் இயல்பாக வந்து பேசியதிலும் வனபத்ரா நேற்று நடந்துகொண்டதற்கு மன்னிப்பு வேண்டியிருந்ததிலும் ஒருவாறு தெளிந்திருந்தனர்.

கேக்கை வெட்டியவர்கள், திருமணநாள் என்பதால், ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டனர். பின் ஒரே மகனுக்கான ஜீவிதனுக்குக் கொடுக்காமல்,”இங்கே வாம்மா…” என்று வனபத்ராவை அழைத்தார் மனோன்மணி. 

அழைத்துவிட்டுதான் நேற்று அவள் செய்தது நினைவுவந்து ஒருகணம் அவர் தயங்கினார்.  “அம்மா… அது ராஜமரியாத… எனக்கு மட்டும்தான். நீங்க கொடுத்தா சாப்பிடுவா… கொடுங்க…” என்றான் ஜீவிதன். கனமான அந்த ஒரு கணம் அவன் கிண்டலாகச் சொன்னதில் இயல்பாகியிருக்க, அவனை முறைத்தாலும் அவர் நீட்டிய கேக்கில் கொஞ்சம் பிய்த்து அவருக்கு ஊட்டிவிட்டு அவர் கொடுத்ததை உண்டிருந்தாள். அதன்பின் கலகலப்பாகத்தான் சென்றது.

கை நனைக்கவா என்று தயங்கிய பாலமுருகனையும் அஞ்சனாவையும் கூட, “நீங்க வேணாம்ன்னு சொன்னாலும் நான்தான் உங்க மாப்பிள.. வேற வழி கெடயாது…” என்று வற்புறுத்த, ஒருவகையில் இந்தத்திருமணம் உறுதியானதுதானே என மதிய உணவைக் கூட உண்டிருந்தனர். அவர்களை அழைத்திருக்கிறேன் என்று ஜீவிதன் சொல்லவுமே, யோசித்திருந்தாலும் உணவுகளைத் தயாரித்திருந்தார் மனோன்மணி. பகவதி உதவி செய்ய, வழக்கமாக உதவும் ஜீவிதன் அருகில் வரவில்லை.

உணவுமேசை நால்வர் மட்டும் அமரும்படி இருக்க, ஒரு மறுப்புக்குப் பின் பெரியவர்கள் முதலில் அமர்ந்து உண்டனர். ஜீவிதனையும் அமருமாறு சொல்ல, “எனக்கு இன்னும் அவ்ளோ வயசாகல…” என்று சிரித்தபடியே மறுத்துவிட்டிருந்தான். வனபத்ராவும் அபிதனும் பரிமாற, ஜீவிதன் தள்ளிநின்று மேற்பார்வை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தான்.

இருவீட்டாரும் ஒருவரையொருவர் எப்போதிருந்து முறை வைத்துக் கூப்பிடத் தொடங்கினர் என்று அவர்களுக்கே தெரிந்திருக்கவில்லை. பகவதி ஆரம்பித்து வைத்திருக்க, நால்வருக்குமே இயல்பாக வந்திருந்தது. 

“ஹோட்டல் மாதிரி போயிருக்கலாம்ல அண்ணி… இல்ல கடைல கூட ஆர்டர் பண்ணிருக்கலாம்.. ஏன் கல்யாண நாள் அதுவுமா கஷ்டப்பட்டு செஞ்சுருக்கீங்க?” என்றார் அஞ்சனா.

“ஐயோ அண்ணி… மீன் சமைக்க மண்டக்காட்டுக்காரிக்கு என்ன கஷ்டம்?”

மனோன்மணி சொல்ல, அஞ்சனாவும் பாலமுருகனும் தங்கள் முன் இருந்த உணவுகளைப் பார்த்தனர். அதில் வெறும் மீன் மட்டும் இல்லை, நண்டு, இறால், என்று சுத்தம் செய்ய கடினமான உணவுகளாக ஒரு கடலுணவு விருந்தே இருந்தது. அவர்கள் வீட்டில் மீன் தவிர பிற கடலுணவுகள் உண்ண மாட்டார்கள். 

அதிலும் அபிதனுக்கு மீனைக் கூட  முள்ளெடுத்துத் தரவேண்டும். அவன் அப்பத்தா தொடங்கிவைத்தது. தந்தையும் தமக்கையும் தொடர, அஞ்சனா இந்த வேலையெல்லாம் பார்க்காதீர்கள், அவனைச் சாப்பிடப் பழக்குங்கள் என்று சொல்லிப்பார்த்திருக்கிறார். கேட்டால்தானே? சில விஷயங்களில் செல்லம் கொடுத்தால்தான், நாளை நம்மை நினைக்க நினைவுகள் நன்றாயிருக்கும் என்று விடுவார் பாலமுருகன்.

மகள் நேற்று செய்ததில் தாங்களும் மறுத்தால் நன்றாயிருக்காது என்று உண்ணத் தொடங்கினர். இதில், பாலமுருகனிடம் பிய்த்துப்போட்ட கோழிக்கறி கூட்டு போல இருந்ததைக் காட்டி, “அத்தான்… இது சிப்பி.. நல்லாருக்கும்…ட்ரை பண்ணிப் பாருங்க…” என்றார் பகவதி.

தயங்கியவர், எதுவும் சொல்லும்முன் வனபத்ரா வைத்திருக்க, வேறு வழியில்லாமல்தான் எடுத்து வாயில் வைத்தார். ஆனால், அதன் சுவை நன்றாக இருக்கவே, நன்றாகவே உண்டார்.

ஜீவிதன் அஞ்சனாவிடம் உண்ணச் சொல்ல, “இல்லப்பா.. எனக்கு மீன் மட்டும் போதும்…”என்று தப்பித்துவிட்டார். “இதுவும் மீன்தான அத்த?” என்று சிரித்தபடியே கேட்டாலும் அவரை வற்புறுத்தவில்லை. பகவதிக்கும் மனோன்மணிக்கும் வனபத்ரா பார்த்துப் பார்த்துப் பரிமாற, அபிதனும் அக்காவைப் பின்பற்றினான்.

பின், அவர்கள் மூவரும் உண்ண அமர, பெரியவர்கள் யோசனையாகப் பார்த்தனர். வனபத்ரா ஜீவிதனுக்கு எதிர்வினையாற்றிய விதத்தை மனோன்மணியும் பகவதியும் யோசித்தனர் என்றால், அபிதனுக்கு என்று பாலமுருகனும் அஞ்சனாவும் யோசித்தனர். ஆனால், “நாங்க சேர்ந்து சாப்பிட்ருக்கோம்  த்த…” என்றாள் வனபத்ரா. ஜீவிதனும் “ஒண்ணும் பிரச்சன இல்லம்மா… நாங்க பாத்துக்கிறோம்…” என்றிருந்தான்.

சரியென ஹாலில் அமர்ந்து அவர்கள் பேசத் தொடங்க, தனக்கு இருபுறமும் எதிரெதிராக உட்கார்ந்திருந்தவர்களை அபிதன்தான் யோசனையாகப் பார்த்தான். ஜீவிதனுக்கு வனபத்ரா பரிமாறப்போக, “நீங்க முதல்ல சாப்பிட்டு முடிங்க…” என்றான். மறுக்காமல் அபிதனுக்கு மட்டும் வைத்தாள். தனக்குப் பரிமாறாமல், ஒரு குழம்பு மீன் ஒன்றையும் மீன் வறுவல் ஒன்றையும் எடுத்து முள்ளெடுக்கத் தொடங்க, அபிதனுக்குத்தான் சங்கடமாக இருந்தது.

“க்கா.. நான் சாப்பிட்டுக்குவேன் க்கா…”

“நீ சாப்பிடுற லட்சணம் எனக்குத் தெரியும். பேசாம சாப்பிடு…”

அவன் வேகமாக விழுங்கத் தொடங்க, ஜீவிதன்” நிதானமா மென்னு கழி மக்கா… அப்பதான் செரிக்கும். ஞெண்டு சாப்பிட்டுப் பாரு… நல்லா இருக்கும்…” என்று எடுத்து வைத்தான். அபிதன் பதில் எதுவும் பேசாமல், உர்ரென்று முகத்தை வைத்தபடி ஒன்றும் சொல்லாமல், அந்த நண்டை உடைக்க முயற்சி செய்ய அவனால் முடியவில்லை. “அதை உடைச்சுக் கொடுங்க…” என்றாள் வனபத்ரா. ஜீவிதன் அந்தக் கட்டளைக்கு இயல்பாகப் பணிய, அபிதன், “அக்கா…” என்றான்.

“ஏன் அபி? நீயும் எனக்கு ராஜமரியாத கொடுக்கலாம்ன்னு இருக்கியா மக்கா?” 

அதெல்லாம் இல்லை என அவன் தலையசைக்கவும், நண்டை உடைத்து, உள்ளிருக்கும் சதைப்பகுதியை எடுத்துக் கொடுக்கத் தொடங்கியவன், “நேத்துலாம் எவ்ளோ அழகா என்னை மாமான்னு விளிச்ச? இன்னைக்கு என்னாச்சு?” என்றான்.

அபிதன் அவனை முறைத்தான். ஜீவிதன் சிரிக்க, “அவரை மாமான்னு கூப்பிடாத…” என்றாள் வனபத்ரா.

ஜீவிதன், அபிதன் இருவருமே இப்போது என்ன என்பது போல அவளைப் பார்க்க, அவள் மீன் வறுவலில் கவனம் வைத்தபடியே நிதானமாக, “அவங்க பக்கம் அத்தான் ன்னு கூப்பிடுவாங்கன்னுதான் சொல்வாரு… மாமாவும் அப்பாவ அத்தான் ன்னுதான் கூப்பிடுறாங்க பாரு… அத்தான்னு கூப்பிடு…” என்றுவிட்டு நிமிர்ந்தாள்.

இருவரது முகத்தையும் பார்த்தவள், விழிக்க, ,”உனக்கு எப்படி பிடிச்சிருக்கோ அப்படி விளி மக்கா…” என்றான் ஜீவிதன்.

“நான் அக்கா சொன்ன மாதிரியே கூப்பிடுறேன்…”

“எங்கெ? கூப்பிடு… பாப்போம்..” என்றான் ஜீவிதன்.

“அ…த்தான்…” அபிதனுக்கு ஏனோ அத்தான் என்று சொல்லும்போதே, வாய் கசப்பதுபோல இருந்தது. அந்தச் சொல்லைப் பெண்கள் கணவரிடம் அழைப்பார்கள் என்றுதான் நினைத்திருந்தான். அப்படி அழைக்கப்பிடிக்கவில்லை. மாமாவில் இருக்கின்ற இலகு உச்சரிப்பு அத்தானில் இல்லாதது போல இருந்தது. ஆனால், ஏற்கனவே இருக்கின்ற குழப்பத்தில் இது ஒரு குழப்பமாகிவிடக் கூடாது என்கிறதில் அவன் அழைத்துவைக்க, அவன் அழைத்த தொனியில் இருவருமே சிரிக்கத் தொடங்கியிருந்தனர்.

“ஹலோ.. என்ன ரெண்டு பேரும் என்னை வச்சு காமடி பண்ணிட்டு இருக்கீங்களா? ஒழுங்கா நீங்க ரெண்டு பேரும் வச்சு சாப்பிடுங்க.. ஏதோ குழந்தைய ரைம்ஸ் சொல்ல வச்சு சோறு ஊட்டுற மாதிரி ரெண்டுபேரும் பண்ணிட்டு இருக்கீங்க?” என்று இருவரிடமிருந்தும் தட்டைப்பிடுங்கியவன், தான் உண்ணத் தொடங்கினான்.

“ஹே… கிண்டல் லாம் பண்ணல… நீ கூப்பிட்டது இந்தப் பழய படத்துலலாம் ஹீரோயின், ஹீரோவக் கூப்பிடுவாங்கல்ல.. அந்தத் தொனில இருந்துச்சு… அதுனால சிரிப்பு வந்துருச்சு…” ஜீவிதன் அபிதனை வாரிக் கொண்டிருக்க வனபத்ரா தங்கள் இருவருக்கும் பரிமாறினாள்.

“மாமா…” என்றான் அபிதன் கோபமாக. அவனுக்கு, ஜீவிதன் மேலிருந்த உண்மைக்கோபம் கரைந்திருந்தது.

“இல்ல… நீ அத்தான் னே கூப்பிடு… கேட்க நல்லா இருந்துச்சு…”

“ஆமாடா… க்யூட்டா அழகா இருந்துச்சு…”

“எங்கெ இன்னொருக்கா சொல்லு பார்ப்போம்?”

“நெஜமா க்யூட்டா இருந்துச்சுடா…”

அபிதனை இருவரும் மாறிமாறி ஓட்டத்தொடங்கி, அவன் சிறுவயதில் செய்ததை வனபத்ரா சொல்ல, அவன் இங்கே இருக்கும் போது செய்த சில குரங்குவித்தையை ஜீவிதன் சொல்ல, இருவரையும் அபிதன் அடக்க முயற்சி செய்ய எனக் கலகலப்பும் சிரிப்புமாகவே அந்த உணவுவேளை கடந்திருந்தது. இருவரும் மாறிமாறி ஓட்டியதில் ஆளை விடுங்கடா சாமி என்று உண்டுமுடித்தவுடன் அபிதன் ஹாலைப் பார்த்து ஓடியிருந்தான். நேற்றிருந்த கனம் இன்று இலகுவாகியிருக்க, சாப்பிட்டு அவள் எழுவதற்காக அமர்ந்திருந்த ஜீவிதனைப் பார்த்தாள் வனபத்ரா.

“எனக்கு ஒரு வாய் ஊட்டிவிடுங்க ஜீவி…”

“அது ஆப்டர் மேரெஜ் டிபார்ட்மென்ட் டா…”

“ஊட்டிவிடுறதா?”

“இல்ல… வாமிட் பண்ணறது…”

“ஜீவி… சாப்பிடும்போது என்ன பேசுறீங்க?”

“நான் ஊட்டிவிட்டா நீ அதைத்தான் பண்ணுவ…”

“அதெல்லாம் பண்ணமாட்டேன்… நீங்க ஊட்டிவிடுங்க…” அவள் பிடிவாதமாகச் சொல்லவும் இரு.. என உள்ளே சென்று கையையும் தட்டையும் கழுவிவிட்டு ஒரு தேக்கரண்டியோடு வந்தான். அவள் உண்டுகொண்டிருந்த இரசஞ்சோற்றைக் கொஞ்சம் அந்தக் கரண்டியில் எடுத்தவன் அவள் வாயருகே கொண்டு செல்ல, “ஸ்பூன்ல இல்ல.. கைல ஊட்டிவிடுங்க ஜீவி…” என்றாள்.

“பத்ரா… உன் ஸ்ப்ரிட் எனக்குப் பிடிச்சிருக்கு… நாம இந்த ப்ராக்டிஸ சாப்பிடாதப்ப வெறும் வயித்துல பண்ணலாம். திருப்தியா சாப்பிட்டுருக்கப்ப வேணாம். எழும்பு…” என்றுவிட்டு சென்றிருந்தான்.

அவன் செல்லவும் தன்னிச்சையாகப் புறங்கையால் நெற்றியைத் துடைத்த வனபத்ரா, பின்தான் தனக்கு முகமெங்கும் வியர்த்திருக்கிறது என்பதை உணர்ந்தாள்.

(தொடரும்…)

1 thought on “எனக்காக வந்தவனே – 19”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!