கோபத்தில் மேலே வந்துவிட்ட வனபத்ராவுக்குக் கதவை அடைக்கவும் அவளைச் சூழ்ந்திருந்த நிசப்தம் பயமுறுத்துவதைப் போல இருந்தது. வீட்டில் இருந்த எல்லா விளக்குகளையும் தேடி எரியவிட்டவள், ஒரு அறைக்குள் சென்று ஹீட்டர் சுவிட்சையும் தேடிப் போட்டாள். அதன்பின்னும் கூட அவளுக்குப் பயமாகத்தான் இருந்தது. எதுவுமே இல்லாமல் இருந்த அந்த அறையை நன்றாக மீண்டும் ஒருமுறைப் பரிசோதித்தவள், அறைக்கதவையும் இறுக்கமாகப் பூட்டினாள்.
அப்படி தனியாக இருப்பதும் உள்ளே உருளத் தொடங்க, இறைவனிடம் கையேந்துங்கள் பாடலை விடாமல் மீண்டும் மீண்டும் ஒலிக்கும்படி அமைத்து ஒலிக்கவிட்டாள். நாகூர் ஹனிபாவின் ஈடு இணையற்ற கம்பீரக்குரல் உச்சபட்ச சத்தத்தில் ஒலிக்க, கொஞ்சம் ஆசுமாசமடைவது போல இருந்தது.
படுத்தாலும் உருண்டாலும் உறக்கம் வராது என்பதை அறிந்தவள், தன்னுடைய வேலையைப் பார்க்கத் தொடங்கினாள். அவ்வபோது பக்பக்கென்று இருந்ததுதான். இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக வேலையைப் பழக்கப்படுத்தியிருந்தாள்.
சிறிதுநேரம் கழித்து ஜீவிதன் புலனத்தில் “Nyt..” என்று அனுப்பியிருந்தான்.
‘நான் என்ன பகல்ன்னா சொன்னேன்… ஒரு மெசேஜ்ல கூட ஒரு குட் வரமாட்டேங்குது..’ என்று மனதிற்குள் சொல்லியவள், அவனது குறுஞ்செய்தியைப் புறக்கணித்துவிட்டு வரையத் தொடங்கினாள்.
அலைபேசி எண்ணைப் பரிமாறிய நாளிலிருந்தே அவன்மீது ஒரு ஈர்ப்பு இருந்திருக்க, திருமணம் முடிந்தபின், கணவன் என்று அவன் எண்ணைப் பதிய வேண்டும் என்று ஒரு அற்ப ஆசை. அதை அவனிடம் சொல்லவில்லை.
அவன் பதியவில்லையா என்று கேட்டபோது “உங்க பெயரைக் கொஞ்சம் ஸ்பெஷலா பதியணும்…கொஞ்சநாள் ஆகட்டும்..” என்று மட்டும் சொல்லியிருந்தாள். ஏதோ புரிந்திருந்தவனாக ஜீவிதனும் புன்னகையைத் தவிர, வேறு பதில் கொடுக்கவில்லை.
இப்போதும் அவன் எக்ஸ் எனப் பதிந்துகொடுத்துவிட்டுச் சென்றிருந்ததை அவள் மாற்றவும் இல்லை. அவன் எண்ணைப் பதியவும் அவனுடைய ஸ்டேட்டஸ் தெரிய ஆரம்பித்திருந்தது. தினமும் யானை, பூனை என்று ஏதாவது விலங்கு நாள் என அவன் ஸ்டேட்டஸ் வைத்து, அதைப் பற்றிய தகவல் எனப் போட்டுக் கொண்டிருந்தான்.
‘ஒழுங்கா நம்பர பதிஞ்சுருக்கலாம்.. இந்தத் தினம் ஒரு தகவல அப்போவே பார்த்திருக்கலாம்…’ என்று ஏனோ அவளுக்குத் தோன்றவில்லை. நல்லவேளை பதியவில்லை என்று தோன்ற, அவளுக்கே கொஞ்சம் வியப்புதான்.
கணவனாக வரப்போகிறவனுக்கு அவள் பெரிய எதிர்பார்ப்பெல்லாம் வைத்திருக்கவில்லை. அழகாய் இருப்பவர்களிடம் வருவது காதல் என்பதை விட, அழகாய்த் தெரிபவர்களிடம் வருவது காதல் என்பதில் அவள் திடம்.
எவன் கண்ணுக்கு எந்த விலங்கும் அழகாய்த் தெரியாதோ, அவன்தான் தன் கண்ணுக்கு அழகாய்த் தெரிவான் என்பது வனபத்ராவின் உறுதியான நம்பிக்கை. ஜீவிதன் வனப்பாளன்தான். அந்த வனப்பு அவளை முதல்முறை கவர்ந்து பார்க்கவும் தூண்டியதுதான். ஆனால், அந்தப்பார்வை காதல் வரை கொண்டுபோகக் கூடியது அல்ல.
அவனுக்கு விலங்குகள் என்றால் பிடிக்காது என்பதுதான் அவளுடைய காதலின் வேர். குறைந்தபட்சம் அப்படிதான் அவள் நினைத்திருந்தாள். வேர் ஆழமாக இருக்கிறதே என்கிற எண்ணத்தில், அவள் விழுதுகளை செழிப்பாகப் படரவிட்டிருக்க, அந்த வேர் ஆட்டங்கண்ட போதும் அவளுடைய காதல் ஆலமரமாக அசையமறுத்தது.
ஜீவிதன் இருக்கின்ற திசை கூட திரும்பாமல் இருக்க, அவளுக்கு அந்த ஒரு காரணம் போதும். அதனாலேயே முதலில் தீர்க்கமாக மறுத்தாள். ஆனால், நேரம் செல்ல செல்ல, அவனில்லாமல் ஏதோ ஒரு வெறுமை படர்கின்ற உணர்வை உணராமல் இருக்க இயலவில்லை. அது இதென்று நன்றாக யோசித்துத்தான் இங்கு வந்திருந்தாள்.
யோசித்து எடுக்கின்ற முடிவுகளை வனபத்ரா மாற்றுவதில்லை. என்ன? அவளுடைய பயம்தான் அவளைப் பயமுறுத்தியது. பழகிப்போன அவளுடைய பயம் ஒருபக்கம் என்றால், அதைவிடப் பெரிய பயமாக எங்கே ஜீவிதன் அவளை வெறுத்துவிடுவானோ என்பது புதிதாக முளைத்தது.
இப்போது காதல் மயக்கம் வாழ்வைக் கொண்டுசெல்லலாம். ஆனால், ஒரு கட்டத்தில் மனதிற்குப் பிடித்த விஷயத்தைக் கூடச் சுதந்திரமாகச் செய்ய முடியவில்லை, அப்படி என்ன இவளோடு வாழ்ந்தாக வேண்டும்? என்கிற கேள்வியை அவனுள்ளே எழுப்பிவிடுமோ என்பதுதான் அவளது பேரச்சம். அதைச் சரியாக நாடிபிடித்து அவன் கேட்டுவிட, ஆம் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டாள்.
நெருங்கியவர்களிடையே உண்மையே புரைதீர்ந்த நன்மை என்பதுதான் வனபத்ரா கடைபிடித்துவரும் கொள்கையும் கூட. அபிதன் விலங்குகள் விஷயமாகச் சொன்ன முதல் பொய்யை பொய் எனக் கண்டறிந்த அன்று தனக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்தது என்பதை மனதில் வைத்திருந்து, என்னவென்றாலும் மனதுக்கு நெருங்கியவர்களிடம் உண்மையைத்தான் பேசுவாள். குடும்பத்தைத் தவிர்த்து, ஜீவிதனை விட அவள் மனதை நெருங்கியவர்கள் யார்?
அவனிடம் ஏன் பொய் சொல்ல வேண்டும் என உண்மை சொல்லிவிட்டு வந்திருக்க, இப்படி தன்னைத் தனியாக இருந்துகொள்வாயா என்று கூட ஒரு வார்த்தை கேட்காமல் முகத்தைத் தூக்கிக் கொண்டு இருப்பான் என்று எதிர்பார்த்திருக்கவில்லை.
சிறிதுநேரம் கழித்து அலைபேசியை எடுத்தவள், கோபமாக அவனுக்கு அழைத்தாள். அழைப்பு போனதால், பாடல் நின்றிருக்க, நிசப்தமாகியிருந்தது வேறு பயமாய் இருந்தது. அந்த இடத்தை விட்டு மெல்ல வெளியே வந்தவள், அலைபேசி சத்தம் அவளது வீட்டிற்கு வெளியே கேட்பதைப் போல இருக்கவும், ஜீவிதன் அதை எடுக்காமல் இருக்கவும் பயமாக இருந்தது. மீண்டும் அழைத்துப் பார்த்தாள். அலைபேசி சத்தம் வெளியேதான் நன்றாகக் கேட்கவும், மெல்ல கதவைத் திறந்தவள், மெல்ல எட்டி மட்டும் பார்த்தாள்.
வாயிலருகே, ஒரு நாற்காலியைப் போட்டு ஜீவிதன் அமர்ந்திருந்தான், ஸ்வெட்டர், மப்ளர், ஸ்கார்ப், கனமான கம்பளி இரண்டு சகிதம் அவன் நாற்காலியில் சம்மணமிட்டு, அப்படியே உறங்கியிருந்தான். திகைத்தவள், வெளியே வர, ஹீட்டரில் இருந்தவளுக்குச் சட்டெனப் பட்ட குளிர் உடலை நடுக்கியது.
“ஜீவி…ஜீவி…” என அவனை உலுக்கி எழுப்பினாள். அலட்டாமல் பொறுமையாக எழுந்தவன், “பனில என்ன பண்ற? உள்ளுக்கப் போ…” என்றான்.
“அதை நான் கேட்கணும்… நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?”
“நான் பிறந்த ஊரும் மலையும் மழையுமாதான் இருக்கும்… அங்க அடிக்கிற மழைல கூடப் படுத்துத் தூங்கிருக்கேன், காட்டுல எத்தனையோ தடவை வேலை விஷயமா போனப்ப இதைவிட குளிர்ல எல்லாம் தங்கிருக்கேன்…”
“ப்ச்.. எதுனாலும் உள்ளே வாங்க…” அவள் சொல்லவும் ஒருகணம் யோசித்தவன், அந்த நாற்காலியை எடுத்தபடி உள்ளே சென்றான்.
“ஹீட்டர் உள்ளேதான் போட்டுருக்கேன்…வாங்க…” என்றவள், அவனுடைய கையைப் பிடித்துப் பார்த்தாள். சில்லிட்டுத்தான் இருந்தது.
“அறிவுகெட்ட மனுஷன்…” என்று முணுமுணுத்தபடியே அவனுடைய கைகளைப் பற்றி அவள் தேய்த்துவிட, ஜீவிதன் அவளை ஆச்சரியமாகத்தான் பார்த்தான்.
அவனுடைய கைகளைத் தேய்த்தவள், அமரவைத்து, அவனுடைய பாதங்களையும் தேய்த்துவிடப்போனாள்.
“ஷு போட்டுத்தான் இருந்தேன்.. கை வெளியே இருந்ததனாலதான்…” அவன் சொன்னதைக் கேட்காமல் காலையும் தேய்த்துவிட்டவள் பின் கிருமிநாசினியை எடுத்துத் தன் கைகளில் தேய்க்கத்தான் செய்தாள்.
“எனக்கும் கொஞ்சம் கொடு.. இன்னைக்கு ஒரு ஆனெயப் பார்த்துட்டு வந்தேன்… போட்டனா என்னன்னு ஞாபகம் இல்ல…” எனவும் ஒருகணம் அரண்டு பார்த்தவள், அவன் கைகளில் அளவுக்கதிகமாவே ஊற்றியிருந்தாள்.
அவன் தேய்த்து முடிக்கவும் “மேலே வந்த ஆளுக்குக் கதவத் தட்டுறதுக்கென்ன? அப்படி என்ன வெட்டி ரோஷம்?” அவள் சூடாகக் கேட்க, “அந்த வெட்டி முறிக்கிற ரோஷம் இருந்துருந்தா நீ ஏச ஏச ஏன் கேட்டுட்டு நிக்கேன்?” என்றான் அவனும்.
“ஏச ஏச வா? அப்படி என்ன உங்களத் திட்டிட்டாங்க பெரிசா? ரெண்டு வார்த்த… அந்த ரெண்டு வார்த்தைக்கு உங்களுக்கு இவ்வளவு கோபமும் கோபமும் ரோஷமும் வருது… என்னை என்னலாம் பேசிட்டீங்க ஜீவி?” உடைந்த குரல்தான், கண்ணீர் வழிந்ததுதான், ஆனால் அவள் தெளிவாகக் கேட்க, ஜீவிதனுக்கு உள்ளே என்னவோ செய்தது. அவன் வலிக்க நிற்க, அவள் தொடர்ந்துகொண்டிருந்தாள்.
“ஸ்டெப்னி வச்சுருக்கேன்… ஸ்டெப்னியா வச்சுருக்கேன்… லாயல்டி இல்ல… அன்னைக்கு என்ன சொன்னீங்க? நீங்க சொல்றதைக் கேட்கணும்ங்கற அடிப்படை மரியாத கூட இல்லயான்னு கேட்டீங்கல்ல? உங்களுக்கு என் மேல கொஞ்சமாச்சு மரியாதன்னு ஒண்ணு இருந்துருந்தா, என் கேரக்டர அசஸினேஷன் பண்ற மாதிரி பேசிருப்பீங்களா ஜீவி? நான் நல்ல மனுஷனைக் காதலிச்சேன்னு நெனச்சேன்…”
அவள் பேசத்தொடங்கும்போதே தணிந்திருந்த ஜீவிதன் “வனா…” என்றபடி அருகில் வர, “இன்னொரு தடவை வனான்னு கூப்பிட்டீங்கன்னா நெஜமாவே செருப்பால அடிப்பேன்…” என்றாள் கடுமையாகவே.
“அடிச்சுக்கோ…” என்றான் அவன்.வனபத்ரா இதை எதிர்பாராமல் திகைத்தாள். அவள் அறிந்த ஜீவிதனுக்கு சுயமரியாதை நிறையவே உண்டு. அன்று கோவிலில், வீட்டில் என அவள் பதற்றத்தில் குரலை உயர்த்தியதற்கே கண்டிக்கத்தான் செய்தான். இப்போது கூட விடைத்துக்கொண்டான்தானே? அப்படிப்பட்டவன், செருப்பால் அடித்துக் கொள் எனவும் அவள் என்ன பேசுவது எனத் தெரியாமல் ஒருகணம் விழிக்க, அதை ஜீவிதன் சாதகமாக்கியிருந்தான்.
கோபத்தில் நின்றவளை அருகே வந்து அணைத்திருந்தவன்,”நெஜமாவே சாரி வனா… அன்னைக்குப் பேசுனது தப்புன்னு அன்னைக்கே எனக்குப் புரிஞ்சுருந்துச்சு… கூப்பிட்டுச் சாரி கேட்கலாம்ன்னா வேணாம் வேணாம்ன்னு போற பொண்ணை ஏதோ லவ் டார்ச்சர் பண்ற மாதிரி இருந்தது… இப்ப கூட உன்னைப் பார்க்கவும் சாரி கேட்டுட்டன் தானே?” என்றான்.
“ஆமா… நான் தேடி வந்தா சாரி கேட்பீங்க… நான் தேடி வந்தா ஆடி ஆஃபர் மாதிரி ஆப்ஷன் கொடுப்பீங்க… ஆனா நீங்களா வரமாட்டீங்க.. நான் தேடி வந்து அழைச்சாலொழிய ஊட்டிக் குளிர்ல வெளியே உட்கார்ந்துருப்பீங்களே தவிர வந்து சமாதானப்படுத்த மாட்டீங்க… அப்படி வந்தா ஜீவிதன்ல இருக்க கொம்பு உடைஞ்சு ஜிவிதன் ஆகிரும்.. அப்படிதான?”
“…”
“என் தம்பி சின்ன வயசுல இருந்து ஒரு ஊஞ்சல் விளையாடலாம் வாக்கா, பார்க்குக்குப் போகலாம்ன்னு கூப்புடுவான்.. போகமாட்டேன், அங்க இருக்க மரத்துல இருந்து ஏதாச்சும் விழுந்துருமோ, ஏதாவது பறவை வந்து கொத்திருமோன்னு பயமா இருக்கும். ஆனா, நீங்க அந்த ஊர்ல இருந்தா மனசுக்கஷ்டமா இருக்கும்போது அங்க போவேன்னு சொல்லிருந்த ஒரே காரணத்துக்காகத்தான் அங்க வந்தேன்… அங்க வர்றதுக்கு எனக்கு எவ்ளோ கஷ்டமா இருந்துச்சு தெரியுமா?”
“…”
“இல்ல நான் வந்தபிறகும், நான் வந்தேன்னு பார்த்த பிறகும் சாமியார் மாதிரி உட்கார்ந்துருந்தீங்கல்ல ரெண்டுமணிநேரமா… உங்கள நெருங்கறதுக்கே அவ்வளவு யோசனையா இருந்துச்சு… அதெல்லாம் தாண்டித்தான வந்தேன்… அப்படி பேசுறீங்க?”
அவனுடைய அணைப்பில் இருக்கிறோம் என்பதையே உணராதவளாக, அவள் படபடவென மொழிந்திருந்தாள். அவள் நிறுத்தவும், “சாரிடா… சாரி…” என அவளது தலையைத் தடவிக் கொடுத்தவன், “அன்னைக்கு நீயா தேடி வந்தது தெரிஞ்சதனாலதான் நீ வாய்விட்டுச் சொல்லலன்னாலும் நான் யோசிச்சு வச்சுருந்ததைச் சொன்னேன்.. ஆனா, நீ அதுக்கும் செரிபட்டு வராதுன்னவும் என் மூள வேல செய்யாம பேயிருச்சு… தப்புதான்… மன்னிச்சுடு…” என்றவனது குரலும் ஒருமாதிரிதான் இருந்தது.
கொஞ்சம் கொஞ்சமாகக் கோபம் அடங்க நின்றவள், அவனுடைய நெஞ்சில் சுகமாகச் சாய்ந்திருப்பதை உணரவும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அப்படி ஒன்றும் அவளுக்கு அருவருப்பாகவோ, அச்சமாகவோ இல்லை. இன்னும் நன்றாகச் சாயப்போனவளுக்கு, அவன் ஒரு யானையைப் பார்த்துவிட்டு வந்தேன் என்றதும் அதைத் தொடர்ந்து அன்று பார்த்த காணொளியும் நினைவுவரச் சட்டெனப் பின்னால் நகர்ந்தாள். அவளது முகத்தைப் பார்த்தே புரிந்துகொண்டவன், புன்னகைத்தான்.
“உங்கள மன்னிக்கலாம் முடியாது… நீங்களா தப்பா எடுத்துக்காதீங்க.. நான் ஒண்ணும் உங்களுக்காகலாம் இங்க வரல… நான் என் போபியா போக்கறதுக்காகத்தான் வந்தேன்… அப்பதான் என் பியான்சே கூடக் கல்யாணம் முடிஞ்சபிறகு நிம்மதியா ஹனிமூன் போக முடியும்… ஒழுங்கா கீழே போய்த் தூங்குங்க… நான் தூங்கிக்குவேன்…”
“நான் வேல முடிஞ்சு வந்ததுமே மேல் கழுவிட்டேன்…” என்றான்.
அவள் சம்பந்தமில்லாமல் இதை எதற்குச் சொல்கிறான் என்பது புரியாமல் பார்க்க, அவள் விரித்துவைத்திருந்த மெத்தையில் படுத்திருந்தான்.
“என்ன பண்றீங்க? கீழே போய் படுங்க..இல்லயா வெளியவே போய் படுங்க… உங்க சிங்கக் கதையெல்லாம் நான் ஒண்ணும் நம்பல…”
“இங்க சிங்கம்தான் வராது… சிறுத்த வரும்… “
அவன் சொல்லவும் அவள் அதற்குமேல் ஒன்றும் சொல்லாமல் பாவமாக முகத்தை வைத்தபடி அவளுடைய மெத்தையையும் அவனையும் மாறிமாறிப்பார்த்தாள். அவள் அதில்தானே தினமும் தூங்க வேண்டும்?
“நன்றி.. ரொம்ப தூக்கம் வருது…” என்றபடி நன்றாக நீட்டிப் படுத்தவன், செய்வதறியாமல் பார்த்துக் கொண்டிருந்தவளின் கையைப் பற்றி இழுத்தான். அவள் அவன் மேல் வந்துவிழ, அவளைச் சுவர் பக்கம் மாற்றியவன், இருவருக்கும் இடையில் ஒரு தலையணையை வைத்தான்.
மடித்துக்கிடந்த கம்பளியை அவள் இடை மேல் போட்டவன், தன் கையை அந்தக் கம்பளி மேல் வைத்து அவளை அணைத்தான். இருந்த தலையணை இடைவெளியில் அவன் முகத்தை நன்றாகவே பார்க்க முடிந்தது.
“சாரி வனா…” என்றான் கலங்கிய குரலில்.
ஒருகணம் அமைதியாக இருந்தவள், “நான் உங்கள இன்னும் மன்னிக்கல…” என்றபடி, இடையில் இருந்த தலையணையை எடுத்துவிட்டு அவனை ஒட்டிப்படுத்தாள்.
அவன் ஆச்சரியமாகப் பார்க்க, “குளிச்சுக்குவேன்…” என்று முணுமுணுத்தாள். பின் மீண்டும், “திரும்பவும் சொல்றேன்.. நான் உங்கள இன்னும் மன்னிக்கல.. நான் இங்க வந்துருக்கது நிஜமாவே என் போபியா போறதுக்குத்தான்…” என்றாள்.
சிரித்தவன், “தண்ணி பார்த்துட்டுக் குளி… முதல்ல மேல் மட்டும் கழுவு…” என்றான்.
“எங்க ஊர்ல அதுக்குப் பேரும் குளிக்கறதுதான்…”
“எங்க ஊர்ல தலைக்குத் தண்ணி ஊத்துனாதான் குளிக்கிறது…”
“இந்த விளக்கம் இப்ப ரொம்ப முக்கியம்…”
அவள் முகத்தைத் தூக்கிவைத்தபடி சொல்ல, “குளிக்கத்தான போற?” என்றபடி அவளது நெற்றியில் முத்தமிட்டான். அவள் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், அவளுடைய உடல் விறைத்தது.
வனபத்ராவுக்கு அவஸ்தையாக இருந்தது. ஒருபுறம் அவன்… என்கிற ஆவல், காதல், எதிர்பார்ப்பு, கதகதப்பு. மறுபுறம் அவன்ன்ன்… என்கிற அச்சம், அருவருப்பு. இரண்டும் கலந்துகூட்ட அவளைப் புரிந்தவனாக நன்றாக அணைத்து, அவளது தலையின்மேல் தனது நாடியை வைத்தான்.
அவளது முன்னுச்சியில் மீண்டும் மென்மையாக முத்தமிட்டவன், அவன் அவளுடைய தலையை மெதுவாகத் தடவிவிடத் தொடங்க, விறைப்பாக இருந்த அவளுடைய உடல் மெல்ல மெல்ல தளர்ந்து இயல்பானது. ஒருகணம் தயங்கிவிட்டு அவனுடைய நெஞ்சத்தில் முகம் புதைத்தாள்.
சிறிதுநேரம் கழித்து நிமிர்ந்தவள், “மத்த விலங்குகளுக்கும் இப்படிதான் தடவிக் கொடுப்பீங்களா?”என்றாள் மென்மையான குரலில்.
“ம்ம்…” என்றான்.
“ஆனானப்பட்ட யானையே தடவிக்கொடுத்தா அடங்கிருது.. இவ மாட்டாளாங்கற தெம்புதான?” என்றாள் முறைத்தபடி.
“ஆனெயா இருந்தாலும் எல்லாரையும்லாம் தொட விடாதும்மா… அதுக்குப் பிடிச்சவங்கள மட்டும்தான் தொட விடும்…”
அவள் முறைக்க, மீண்டும் அவள் முன்னுச்சியில் முத்தமிட்டான். “இது உனக்கு மட்டும்தான்… சின்னபிள்ளைல கேட்கறவங்களுக்கெல்லாம் கொடுத்துருப்பனா இருக்கும்… இப்ப உனக்கு மட்டும்தான்…”
இருவரும் அதற்குமேல் ஒன்றும் பேசாமல் அமைதியாகியிருக்க, அப்படியே உறங்கியிருந்தனர்.
(தொடரும்….)

Interesting😍😍